ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கும் ரயில் போக்குவரத்து துறைக்கு, ரயில் பெட்டிகளை தயாரிக்கும் பணியையும் தனியாருக்கு தாரைவார்க்கும் வேலைகள் வேகமடையத் துவங்கி விட்டன.

கடந்த பிப்ரவரி 13 அன்று, ஐ.சி.எப் (சென்னை) மற்றும் ஆர்.எப்.சி (கபூர்தலா) தொழிற்சாலைகளின் பொது மேலாளர்களுக்கு, ரயில்வே வாரியம் அனுப்பிய கடிதத்தில், தனியார் நிறுவனங்களின் மூலம் தயாரிக்கவிருக்கும் பல்வேறு வகையான ரயில் பெட்டிகளின் வடிவமைப்பு மற்றும் வரைபடங்களை அந்நிறுவனங்களுடன் பகிர்ந்துக் கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
ஐ.சி.எப்-க்கு சொந்தமான தொழில்நுட்ப களஞ்சியங்களான ரயில் பெட்டிகளின் வடிவமைப்பு மற்றும் வரைபடங்கள் மீதான தன்னுரிமைகள், ஐந்து ஒப்பந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்படப்பட்டுள்ளது. இந்நிறுவனங்கள் 610 கோடி ரூபாய் செலவில் 400 ரயில் பெட்டிகளை தயாரிக்கப் போவதாக ஒப்பந்தத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் இயங்கும் மூன்று தனியார் நிறுவனங்களான தீத்தகர் வேகன்ஸ் – 99 குளிரூட்டப்பட்ட மின்சார வண்டிகள், பெஸ்கோ – 8 மின்சார வண்டிகள், ஜெசப் – 59 குளிரூட்டப்பட்ட மின்சார வண்டிகள் தயாரிக்க உள்ளன. பெங்களூரில் உள்ள பொதுத்துறை நிறுவனமான பாரத் எர்த் மூவர்ஸ் – 72 குளிரூட்டபட்ட மின்சார வண்டிகளையும் 160 மின்சார வண்டிகளையும் தயாரிக்கப் போவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
10 வருடங்களுக்கு முன், ஜெர்மன் உற்பத்தியாளர்களிடமிருந்து ஐ.சி.எப் மற்றும் ஆர்.சி.எப் நிறுவனங்கள், 160 கோடி ரூபாய் செலவழித்து எல்எச்பி டிசைன் எனப்படும் ரயில் பெட்டிகளின் வடிவமைப்பு மற்றும் வரைபடங்களை வாங்கியுள்ளன. இப்போது இவற்றின் மதிப்பு 1500 கோடி ரூபாயாகும்.
தனியார் நிறுவனங்களுடனான ரயில்வே வாரியத்தின் உடன்படிக்கையின்படி வரைபடங்களை அச்சிடுவதற்கான செலவு, முத்திரை வரி மற்றும் பதிவு கட்டணம் என்பதைத் தாண்டி வேறு எந்தவிதமான கூடுதல் வருமானமும் இல்லாமல், தனியார் முதலாளிகளுக்கு இந்த ஆவணங்களை இலவசமாக வாரி வழங்கவுள்ளது.
இதை எதிர்க்கும் ஐசிஎப் ஊழியர்களின் கூட்டு நடவடிக்கை குழுவைச் சேர்ந்த ஆனந்தராஜ், “1500 கோடி ரூபாய் மதிப்புடைய ஐ.சி.எப்’ன் அறிவுசார் உடமைகளின் உரிமைகளை இலவசமாக தனியார் நிறுவனங்களுக்கு வாரிவழங்குவது, ஐ.சி.எப் நிறுவனம் மட்டுமல்ல தேச நலனுக்கே எதிரானது” என்று தெரிவித்திருக்கிறார்.

கூட்டு நடவடிக்கை குழுவின் பிரதிநிதிகள், ரயில்வே வாரியத்தின் திட்டத்தின் பின்புலத்தில் சந்தேகத்திற்குரிய நோக்கங்கள் இருக்கின்றன என்றும் ஒப்பந்த நிறுவனத்திற்கு ஸ்டீல் மூலப்பொருட்கள், சக்கர தொகுப்புகள், மின்கலன்கள் மற்றும் மின் இழுக்கை(Traction) சாதனங்களை, ரயில்வே துறை வழங்கவதாக ஒப்பந்த அறிக்கையில் இருக்கும் பட்சத்தில், அரசாங்கத்திற்கு இதனால் பெரும் நஷ்டமே என்றும் கூறுகின்றனர்.
வெளி நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலையை கொடுத்து வாங்குவதற்கு முக்கியமான காரணம் செலவுகளை குறைப்பதுதான். ஆனால் ரயில்வே துறை அமலாக்கவிருக்கும் இத்திட்டத்தின்படி, ஐ.சி.எப்-ன் மூலம் ஆகக்கூடிய உற்பத்தி செலவுகளை விட, 120 – 160 கோடி ரூபாய்க்கும் மேல் அதிகமாக செலவழியும் என்று தெரிவிக்கிறார் ஐ.சி.எப்-ன் மேற்பார்வையாளர்.
கூடுதலாக செலவழியவிருக்கும் இப்பணத்தின் ஒரு பகுதியை கொண்டே, சென்னை, கபூர்தலா மற்றும் ரேபரேலியில் இருக்கும் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளின் உற்பத்தியின் அளவை பல மடங்கு உயர்த்தமுடியும் என்றும் அவர் கூறுகிறார்.
ரயில் பெட்டிகளின் உற்பத்தியில் பற்றாக்குறை காரணமாக ரயில்வே வாரியம் இம்முடிவினை எடுக்கவில்லை, ஐ.சி.எப் மற்றும் ஆர்.சி.எப் ஆகிய இரண்டு தொழிற்சாலைகள் இணைத்து செயல்பட்டால், குறைந்த செலவில் கூடுதலாக 400-க்கும் அதிகமான ரயில் பெட்டிகளை தயாரிக்கும் அளவிற்கு திறம்படைத்தவை.
சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப் ரயில் பெட்டி தொழிற்சாலை, இந்திய ரயில்வேக்கு ரயில் பெட்டிகள் தயாரிக்கும் முதன்மையான உற்பத்தி பிரிவாகும். இத்தொழிற்சாலை 1955-ல் அமைக்கப்பட்டது. இந்நிறுவனத்தில் சுமார் 13,000 தொழிலாளிகள் பணிப்புரிகின்றனர். உள்கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் இயந்திரங்கள் நவீனமயமாக்கல் மூலம் வருடத்திற்கு 1,700 க்கும் அதிகமான, பல விதமான தேவைகளுக்கான ரயில் பெட்டிகள் இங்கு தயாரிக்கப்படுகின்றன. மேலும் தாய்லாந்து, பர்மா, தாய்வான், சாம்பியா, பிலிப்பைனஸ், டான்சானியா, உகாண்டா, வியட்நாம், நைஜீரியா, மொசாம்பிக், வங்கதேசம், அங்கோலா, இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் ரயில் பெட்டிகள் இங்கு தயாரித்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தனது 50 ஆண்டுக்கால அனுபவத்தில் 45,000 ரயில் பெட்டிகளுக்கு மேல் உருவாக்கியிருக்கும் ஐ.சி.எப். நிறுவனம், இதுவரை தனது வருடாந்திர இலக்கினை தவற விட்டதில்லை
ஐ.சி.எப் தொழிற்சாலையைப்போல, இந்திய ரயில்வேயினால் நிறுவப்பட்ட இரண்டாவது ரயில் பெட்டி தொழிற்சாலை ஆர்.சி.எப் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கபூர்தலாவில் இயக்கப்படுகிறது.
1986-இல் துவங்கப்பட்ட இத்தொழிற்சாலை, 16,000 பயணிகள் பெட்டிகள், 51 க்கும் அதிகமான தானியங்கி உந்திச் செல்லும் பயணிகளின் ரயில்களை தயாரித்துள்ளது. இந்திய ரயில்வே வாரியத்தின் 35% ரயில் பெட்டிகள் இங்குதான் தயாரிக்கப்படுகின்றன.
2500 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை உத்திரபிரதேசத்தின் ரேபரேலியில், 2012 ஆம் ஆண்டு சோனியா காந்தியால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. வருடத்திற்கு 2500 ரயில் பெட்டிகள் தயாரிக்கும் அளவிற்கு இத்தொழிற்சாலையின் திறனை உயர்த்தப்போவதாக ரயில்வே திட்டமிட்டுள்ளது.
பாலக்காட்டில், காஞ்சிகோடு ரயில்வே பெட்டி தொழிற்சாலை அமைக்கும் திட்டமும், ஐ.சி.எப்-யை விரிவாக்கம் செய்ய இரண்டாவது தொழிற்சாலையை அமைக்க 250 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ள திட்டமும் இன்னமும் பரிசீலனையில் உள்ளன.
இப்படிப்பட்ட விரிவான உட்கட்டமைப்பு வசதிகளும், அனுபவமிக்க தொழிலாளர்களும் இருக்கும் போது ரயில் பெட்டி உற்பத்தியை தனியார்வசம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் துளியும் இல்லை. ஆனால் நாட்டு நலனை விட முதலாளிகளின் நலனே முக்கியமாகிப்போன உலகமய சூழலின் விகிதங்களோ தலைகீழாக மாறியிருக்கின்றன.
2011-ம் ஆண்டு, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முகுல் ராய் ரயில்வே அமைச்சராக இருந்தபோதே இந்த தனியார்மயமாக்க திட்டத்தின் தயாரிப்புகள் துவங்கின. 2011-12 வரை சுற்றுக்கு விடப்பட்டிருந்த டெண்டர்கள், பிப்ரவரி 2013-ல் இறுதி செய்யப்பட்டன.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, மேற்குவங்க அரசாங்கத்தினாலே தகுதியற்றவை என்று ஒதுக்கப்பட்ட மூன்று தனியார் நிறுவனங்கள்தான் ஒப்பந்த உற்பத்தியில் இணைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. புதிய தொழில்நுட்ப வசதிகளை ஏதுமில்லாமல் தான் இந்த மூன்று தனியார் தொழிற்சாலைகளும் இயங்கிவருகின்றன. இந்நிலையில் ஒப்பந்தத்தில் குறிப்பட்ட ரயில் பெட்டிகள் தயாரிப்பை எண்ணிக்கையிலும், நல்ல தரத்திலும் மூன்று மாத காலத்திற்குள் செய்துமுடிப்பது என்பது கேள்விக்குறியே.
மேற்கு வங்க முதல்வர் ம்ம்தா பானர்ஜி (திரிணாமூல் காங்கிரஸ்) ரயில்வே துறையில் செய்து வந்த ஆதிக்கத்திற்கும், அத்துறையை தன் கண்காணிப்பிலேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் நடத்திய நாடகங்களுக்கும், இம்மூன்று மேற்குவங்க நிறுவனங்கள் ரயில்பெட்டி தயாரிப்பில் திடீரென நுழைந்தற்குமான உறவு தற்செயலானதன்று.
ஒவ்வொரு ஆண்டும், உற்பத்தியில் சாதனைகள் செய்துவரும் ஐ.சி.எப். நிறுவனம் 2012 – 2013 ஆண்டிலும் கூட, தன்னுடைய இலக்கையும் தாண்டி 1,620 ரயில் பெட்டிகள் தயாரித்து அடுத்த சாதனைக்கு தயாராக உள்ளது. ஏனைய பொதுத்துறை நிறுவனங்களை சொத்துக்களோடு மலிவாக தனியார்வசம் ஒப்படைத்து அழித்தது போல ரயில் பெட்டி தயாரிக்கும் துறையையும் அழிப்பதற்கான தயாரிப்புகள் ஆரம்பித்திருக்கின்றன. ரயில்வே துறையையே தனியார்வசம் ஒப்படைக்க இது ஒரு வெள்ளோட்டமே.
ரயில்வே வாரியத்தின் இவ்வறிக்கையின் விளைவாக, ஐ.சி.எப் ஊழியர்கள் மத்தியில் கிளர்ந்தெழுந்த அதிருப்தி, கருவிகளை கையில் எடுக்காத வேலை நிறுத்தமாக மார்ச் 6 அன்று வெளிப்பட்டது. 12 பேரைக்கொண்ட கூட்டு நடவடிக்கை குழுவின் செயற்குழு தலைமையில், 12,000 ஊழியர்களின் பங்கேற்ற இப்போராட்டம் சில மணி நேரம் நடந்தது அதன்பிறகு ஐ.சி.எப். இன் அறிவுசார் உடமைகள் மற்றும் ஊழியர்களின் நலன்கள் கண்டிப்பாக பாதுகாக்கப்படும் என்று நிர்வாகம் அளித்த உத்தரவாதத்தின் பெயரில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
எனினும், மீண்டும் ரயில்வே வாரியம் தனியாரை ஊக்குவிக்க ஆர்வம் காட்ட துவங்கிவிட்டது. அவர்களுடன் ஒப்பந்தம் போட்டபின் அதிலிருந்து பின் வாங்க முடியாது என்று கூறி வருகிறது.

கடந்த மே மாதம் 4 ஆம் தேதி அன்று, இது தொடர்பான பேச்சுவார்த்தையை ரயில்வே போர்டின் உயர் அதிகாரிகள், தொழிலாளர்களின் பிரதிநிதிகளுடன் நடத்தினர். ஆலோசனைகளின் மூலம் பிரச்சினையை தீர்த்துக்கொள்ளலாம் என்று முறையில் நடந்த சந்திப்பு அதிகாரிகளுக்கு தோல்வியைத்தான் தந்தது.
ஊழியர்கள் போராட்டப் பாதையை மீண்டும் தேர்ந்தெடுப்பதை தவிர வேறு வழியில்லை என்று கூட்டு நடவடிக்கை குழு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ”எங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, ரயில்வே வாரியம் இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக கேட்டிருப்பதால் தான், நாங்கள் போராட்ட நடவடிக்கைகளை ஒத்திவைத்துள்ளோம்” என்று ஐ.சி.எப் ஊழியர் குழுவின் உறுப்பினர் தெரிவித்திருக்கிறார்.
போராடும் ஐ.சி.எப் மற்றும் ஆர்.சி.எப் ஊழியர்களை கட்டுப்படுத்த கண்துடைப்பு நடவடிக்கையாக இவ்வொப்பந்தங்களை மத்திய புலனாய்வு துறையிடம் (சிபிஐ) ஆய்வு செய்ய வலியுறுத்தியதோடு அப்போதைய ரயில்வே அமைச்சர் பவன் குமார் பனசலிடம் பேச்சுவார்த்தையும் நடத்தி அவரின் பதிலையும் பதிவு செய்து ரயில்வே வாரியத்துக்கு அனுப்பியிருக்கிறார் ராஜ்ய சபை உறுப்பினர் ரங்கராஜன். ஆனால் அமைச்சர் பவன் குமாரே மச்சானை வைத்து கோடிகளில் ஊழல் செய்யும் பெருச்சாளி என்பது தற்போது அம்பலத்திற்கு வந்திருக்கிறது.
இந்நிலையில் ஒப்பந்தங்களைப் பற்றி முன்பே அறிந்திருந்தும், எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமலிருந்த ரயில்வே நிலைக் குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு ரயில்வே போர்டின் ஒப்பந்தத்தை இப்போது ரத்து செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
கூட்டு நடவடிக்கை குழுவின் பிரதிநிதிகள் தங்கள் தரப்பு நியாயத்தை தனியார்மயத்தை தாயுள்ளத்துடன் நாட்டு மக்களின் மீது இறக்கிவரும் ஆளும் வர்க்கப் பிரதிநிதிகளான மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் மற்றும் குருதாஸ் தாஸ்குப்தா ஆகியோரிடமும் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயாவிடமும் தங்கள் கோரிக்கையை எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
ஆனால், புரட்சிகர தொழிற்சங்கங்கள் தலைமையில் மக்களோடும் ஏனைய தொழிலாளர்களோடும் இணைந்து போராடுவதே இந்தத் தனியார்மயப் பேயை விரட்ட ஒரே வழி!
__________________________________
– ஜென்னி
__________________________________
மேலும் படிக்க
- ICF workers want outsourcing contracts to be cancelled
- Workers against ICF sharing know-how with private players
- Employees smell rat in coach outsourcing deal
- Railway board wants Integral Coach Factory to share coach design, workers refuse
- ICF workers to stage massive protest against outsourcing move
- TUs cry foul over railway deal with three sick Bengal firms
- Railway board in fresh row over outsourcing move in ICF