இந்த ஆண்டு (2013-14) மின்கட்டண உயர்வுக்கான மனுவினை மின்வாரியம், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது. இந்த மனுவின் மீதான மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் கடந்த மே மாதத்தில் நடத்தப்பட்டன. குடிசை இணைப்புகளுக்கும் விவசாயத்துக்கும் மட்டும் தமிழக மின்வாரியம் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனையும் மானியமாகத் தந்துவிடப் போவதாக அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் நிலுவையில் உள்ள கட்டண உயர்வுக்காக ஒதுக்கப்பட்டுள்ள கடனாகிய ரூ. 19,571 கோடியில், ஒரு குறிப்பிட்ட பகுதியை கட்டண உயர்வாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிக்க வேண்டிய நிலையில் உள்ளது. இதனால் வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியின் வெற்றி பாதிக்கப்படும் என்பதால் பெயரளவில் ஒரு கட்டண உயர்வை அறிவித்து – அதாவது ரூ. 973 கோடி – அதனை அரசு மானியமாக நேர்செய்வதுமாக இந்தக் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மின்வாரியம் இந்த கட்டண உயர்வை அறிவிக்காமல் இருந்திருந்தால், மின்சாரத் தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி ஆணையமே தனது சுய அதிகாரத்தின் மூலம் கட்டண உயர்வை அறிவித்திருக்கும்.

கடந்த 2012-13-ம் ஆண்டிற்கு தமிழகத்துக்கு 7078 கோடி யூனிட்டுகள் தேவை என்று ஆணையம் மதிப்பிட்டது. இதில் விற்றுவரவாக 5886 கோடி யூனிட்டும், இழப்பாக – அதாவது, நட்டமாக 7874 கோடி யூனிட்டும் இருக்குமென்றும் கூறி, இதை ஈடு செய்யவே கடந்த ஆண்டு கட்டண உயர்வை ஆணையம் அறிவித்தது. ஆனால் மின்வாரியமோ, 2012-13-ஆம் ஆண்டில் மொத்தத்தில் ரூ. 17,593 நட்டமாகியுள்ளதாகவும், நடப்பாண்டாகிய 2013-14-இல் இது மேலும் ரூ. 10,334 கோடி அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கிறது. மொத்தத்தில் கடந்த 2010 நவம்பர் முதல் நடப்பாண்டில் ஏற்படும் நட்டம் உள்ளிட்டு மொத்த நட்டம் ஏறத்தாழ ரூ.39,744 கோடி ஆகும். இதனை அடுத்த ஆண்டு(2014-15) முதலாக மக்கள் தலையில் சுமத்த வேண்டும் என்கிறது மின்வாரியத்தின் கட்டண உயர்வுக்கான மனு.
தனியார் மின் நிறுவனங்களிடமிருந்து கூடுதல் விலைக்கு மின்சாரத்தை வாங்கியதால்தான் மின்வாரியத்துக்கு இந்த நட்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டில் ஜி.எம்.ஆர்., சாமல்பட்டி, பி.பி.என்., மதுரை ஆகிய தனியார் நிறுவனங்களிடமிருந்து 271.4 கோடி யூனிட்டுகளை ரூ. 2962 கோடிக்கு மின்வாரியம் வாங்கியுள்ளது. ஆனால் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இப்படி தனியாரிடமிருந்து வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்திய போதிலும் அதை மீறி வாங்கியுள்ளது. ஒரு யூனிட்டின் சராசரி விலை ரூ. 10.91 ஆகும். இந்த மின்சாரத்தின் விலையானது சாதாரணப் பயனீட்டாளர் முனைக்கு வரும்போது ரூ. 18.78 ஆகிறது. கம்பி இழப்பு போக இதனை விற்று வருகின்ற வரவு யூனிட்டுக்கு ரூ. 5 என்ற கணக்கில் ரூ. 1058 கோடிகளாகும். ஆக ரூ. 2962 கோடிக்கான கொள்முதலில் நட்டம் என்பது ரூ. 1904 கோடிகளாகும்.
மின்சார வாரியத்தின் வல்லூர் மின்நிலையம் உற்பத்தியைத் தொடங்கியிருந்தால் 225 கோடி யூனிட் கிடைத்திருக்கும். குத்தாலம், வழுதூர்1, வழுதூர் 2 ஆகிய மூன்று எரிவாயு நிலையங்களை முறையாகப் பராமரித்திருந்தால் ஏறத்தாழ 140 கோடி யூனிட் கிடைத்திருக்கும். ஆனால் ஏற்கெனவே உள்ள உற்பத்தியையும், புதிய உற்பத்தியையும் முடக்கி வைத்து விட்டுத் தனியார் மின் உற்பத்தியாளருக்குச் சாதகமாகவே மின்வாரியம் செயல்பட்டுள்ளது. இவை மட்டுமின்றி, தனியார் காற்றாலை நிறுவனங்கள் மூலம் உற்பத்தியாகும் மின்சாரம் பற்றிய கணக்கெடுப்பில் தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாக கணக்கியல் துறை ஊழலிலும் மோசடியிலும் ஈடுபடுகின்றது. இத்துறையின் மோசடியால் மின்வாரியத்துக்கு ஏறத்தாழ ரூ. 4000 கோடிக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த உண்மைகளை விளக்கி, பொறியாளர் சா.காந்தியைத் தலைவராகக் கொண்ட தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பு துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் (2013-14) ஏற்படும் ரூ. 10,344 கோடி நட்டத்தில், அரசு ஏற்கும் கட்டண உயர்வு மானியமான ரூ. 973 கோடி போக எஞ்சிய ரூ. 9371 கோடியை எதிர்கால கட்டண உயர்வுக்கான கடனாக அடுத்துவரும் நிதியாண்டிலிருந்து(2014-15) மக்கள் தலையில் சுமத்தப்படும் என்பது நிச்சயமாகிவிட்டது. இதற்காகவே, மின் கட்டண உயர்வுக்காக ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்சார வாரியம் சமர்ப்பித்துள்ள மனு மீதான மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் கடந்த மே மாதம் 3,8,10,17 ஆகிய தேதிகளில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் நடைபெற்றன.

8.5.2013 அன்று திருச்சியில் மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடந்தபோது, கணக்கு காட்டுவதற்காகவும் மின் கட்டண உயர்வை நியாயப்படுத்திப் பேசுவதற்காகவும் மின்வாரிய ஊழியர்களைப் பொதுமக்கள் போல கொண்டுவந்து மண்டபத்தை நிரப்பியிருந்தனர். சுற்றிலும் போலீசையும் நிறுத்தியிருந்தனர். மின் கட்டண உயர்வுக்கான இக்கருத்துக் கேட்பு கூட்டத்தைத் தனியார்மய எதிர்ப்புக் கண்டனக் கூட்டமாக மாற்றின புரட்சிகர அமைப்புகள்.
மின்சார ஒழுங்குமுறை ஆணையம்தான் மின்கட்டண உயர்வைத் தீர்மானிக்கிறது; மாநில அரசுக்குக்கூட அந்த அதிகாரம் இல்லை; இதில் மின்வாரியத்தின் பங்கு என்ன? எதற்காக இந்த கருத்துக்கேட்பு நாடகம்? – என்று கேள்வி எழுப்பிய ம.க.இ.க, பு.மா.இ.மு, பெ.வி.மு. மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த தோழர்கள், 2003 வரையில் இலாபகரமாக இயங்கிவந்த மின்வாரியம், இன்று நட்டம் ஏற்பட்டுள்ளதற்குக் காரணம் தனியார்மயம்தான் என்பதைப் புள்ளிவிவர ஆதாரங்களுடன் விளக்கினர்.
அரசு மின் உற்பத்தி நிலையங்களை இயக்காமல் முடக்கிவிட்டு, தனியார் மின் நிறுவனங்களிடம் கூடுதல் விலைக்கு அதிகமாக மின்சாரம் வாங்குவதன் மர்மம் என்ன? மின்சார ஒழுங்கு முறை ஆணையமே, தனியார் மின்னுற்பத்தி நிறுவனங்களிடமிருந்து கூடுதல் விலைக்கு மின்சாரத்தை வாங்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ள போதிலும், அதை மின்வாரியம் மீறுவது ஏன்? பிள்ளை பெருமாள் நல்லூரிலுள்ள அப்பல்லோ மருத்துவமனைக்குச் சொந்தமான தனியார் மின்னுற்பத்தி நிலையத்திடமிருந்து மின்சாரமே வாங்காமல் நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபாய் வீதம் சுமார் ஒரு வருட காலத்திற்கு நிலைக்கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதே, அது ஏன்? மின்வெட்டால் தமிழக மக்கள் இருளில் தத்தளிக்கும்போது, பன்னாட்டு நிறுவனங்களுக்கு மலிவு விலையில் தடையின்றி மின்சாரம் வழங்குவது ஏன்? – என்று பலமுனைகளிலிருந்தும் அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பினர். அதிகாரிகளோ இவற்றுக்கு விளக்கமளிக்க முடியாமல் திணறி மழுப்பினர்.
தனியார்மய – தாராளமயத்தை எதிர்த்தும், தனியார் முதலாளிகளின் கொள்ளைக்கு மின்வாரிய அதிகாரிகள் துணை நிற்பதையும் அம்பலப்படுத்திய தோழர்கள், தனியார் மின்னுற்பத்தி நிலையங்களை அரசு கையகப்படுத்த வேண்டும்; பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்குத் தடையின்றி மின்சாரம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்பதைத் தீர்வாக முன்வைத்தனர். திரண்டிருந்த உழைக்கும் மக்கள் உண்மைகளைப் புரிந்து கொண்டு ஆரவாரத்துடன் வரவேற்ற இக்கூட்டம், தனியார்மயக் கொள்ளைக்கும் ஊழலுக்கும் எதிரான பிரச்சாரக் கூட்டமாக அமைந்தது.
– பு.ஜ.செய்தியாளர்கள்
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூன் 2013
________________________________________________________________________________