Monday, April 21, 2025
முகப்புஉலகம்ஈழம்ஏதிலி என்பது எங்கள் குற்றமா ?

ஏதிலி என்பது எங்கள் குற்றமா ?

-

09-uravu-1கதிகள் மனச்சுமை
தாங்கிடு நிலமே! – எங்கள்
தலைமுறைக் கண்ணீர்
தாங்கிடு கடலே…

எங்கள் சோகத்தின் ஆழம்
சுரந்திடு ஊற்றே!
ஈழ அகதிகள் வேலியை
முறித்திடு காற்றே…

முடங்கிய வாழ்வின்
வதைபடு வெம்மையில்
கதிரே நீயும் கருகாதே…
ஏதிலி என்பது
எங்கள் குற்றமா?
ஏன் முகாமிற்குள் அடைபட்டோம்?
நின்று பதில் சொல்!
நிலவே நீயும் நழுவாதே…

கூடு திரும்பும்
பறவைக்கூட்டம் பார்க்கும் போதெலாம்
நாடு திரும்பும் ஏக்கம்
எங்களை வாட்டும்!

சிறகின் ஆசை
வானை அளக்கும்…
சின்ன விதையின் ஆசை
மண்ணில் முளைக்கும்…
நீரின் ஆசை
நிலத்தின் தாகம் சேரும்…
வேரின் ஆசை
இலை, தழையாய் மாறும்…
எங்கள் வாழ்வின் ஆசை
என்று தாய்மண் சேரும்?

புகலிடம் என்றுதான்
பிழைத்து வந்தோம்
இது எம்மை
இகழிடம் எனத் தெரிந்திருந்தால்,
இப்படி…
இந்திய நடைபிணமாய் சாவதற்கு
ஈழப்பிணமாய் வீழ்ந்திருப்போம்…
தாழப் பறக்கும்
தட்டானுக்கும்
வாழ ஆசை…
ஈழ அகதிகள்
எங்களுக்குக் கூடாதா?

நாங்கள் குடியிருப்பது
கூரையில்…
கொன்று போடும் சவக்கிடங்கு…
எங்களைத் தகிக்க வைப்பது
கொளுத்தும் கோடை  அல்ல,
குற்றவாளியாக்கி — எந்நேரமும்
எம்மீது குறுகுறுக்கும்
போலீசின் சுடுபார்வை!

அரசே சந்தேகித்தால்
யார் தருவார் வேலை?
அத்துக் கூலியாய்
அலையும் நாங்கள்
ஆறு மணிக்குள் அடைபட வேண்டுமாம்
கேம்ப்புக்குள்!
கொடிய பாம்புக்கும் உண்டோ
இப்படியொரு வாழ்நிலை!

பாம்புக் கடிக்கோ,
பாழும் நோய்க்கோ
மருத்துவம் இல்லை…
இறந்தவர் பெயரை
எழுதிப் பழகும்
எம் பிள்ளைகள்
மேற்படிப்புக்கு கல்வி உரிமையுமில்லை.

ஒரு இழவுக்குப் போகவும்
அனுமதி வாங்க
ஆயிரம் தொல்லை…
ஈழமே சுடுகாடு
எதற்குத் தனியே? என
எங்களைப் புதைக்க
போதிய இடமுமில்லை…

09-uravu-2நாளை நாளை என்று
நாடு போக நம்பியிருந்தோம்.
அதையும் கெடுத்தது இந்தியா
என்பது அனுபவமானதனால்,
அஞ்சுகிறோம்.
ராஜபக்சேவை விடவும் கொடியவர்கள்
நடமாடும் அரசு இது.
உரிமையில்லா வாழ்வு
சாவினும் கொடியதால்,
உயிர் பற்றிக் கவலையின்றி
ஓடுகிறோம் தப்பித்து கடலுக்கு.

ஈழப்பிணங்களை வைத்து
அரசியல் வாழும்
ஈழம் வாங்குவதாய்
தேர்தல் அணிகள் சேரும்.
மாவீரர்களே…
முதலில்
முகாமிலிருந்து எங்களை மீட்க
முடியுமா உங்களால்?

சனத்தோடு சேர்ந்து வாழ
சம்மதிக்காத
உங்கள் சட்டங்களால்
இனத்தை மீட்கப் போவதாய்
இன்னுமா கழுத்தறுப்பது?
எங்கள் முழு நிலத்தையும்
பங்கு போட
அங்கு சேர்ந்து கொள்ளும்
முதலாளிகள்…
இங்கே
கணவன், மனைவி, பிள்ளைகளும்
கலந்து வாழ மறுக்கும்
முள்வேலி முகாம்கள்…

எங்கள் உரிமை நிலத்தில்
எம்.ஆர்.எஃப், டி.வி.எஸ் டயரின்
வக்கிரப்பதிவுகள்..
சகலத்தையும் பிடுங்கிக்கொண்டு
சந்தேகக் கேசுகளாய்
எஞ்சியிருக்கும் எங்களிடம்
கைரேகைப்பதிவுகள்…

எங்கள் மூச்சுக்காற்றில்
உங்கள் ரிலையன்ஸ்,
ஏர்டெல்லின் ஆக்கிரமிப்புகள்…
இங்கே முள்வேலிக்குள்
நாங்கள் மூச்சு விடவும்
விதிமுறைகள்!

எம் வயல்வெளிக் காற்றின்
வாசம் இழந்து…
பனை மர நிழலின்
பாசம் இழந்து…
கண்காணாத தூரத்தில்
எங்கள் காந்தள் மலரின்
நிறமிழந்து…
புல் இழந்து… பூ இழந்து
புழங்கும் உறவுகளின்
சொல் இழந்து…
கல் என இறுகிய
இதயம் சூழவோ
கடைசியில் இங்கு வந்தோம்!

முள்வேலி மேல்
காய்ந்து துடிப்பது பழந்துணியல்ல,
கந்தலாண
எங்கள் இதயம்.

உழைக்கும் உறவுகளே…
ரத்தத்தின் நிறம் மட்டுமல்ல
நம் வர்க்கத்தின் நிறமும்
சிவப்புதான்
புலமிழந்து… நிலமிழந்து
வளமிழந்தது
ஈழ அகதிகள் மட்டுமா?
உலகமயத்தின்
கொத்துக்குண்டுகளால்…
புலமிழந்து நீங்களும் கூட
அகதிகளாக தேசமெங்கும்.

நாட்டை முன்னேற்றுவதாய்
நடக்கும் போரில்
நிலங்களை இழந்து
ஏதிலிகளாய்…
அடைபட்டுக் கிடப்பது
நாம் அனைவரும் தான்.

வன்பறிப்புக்குள்ளான
வன்னி நிலமும்…
அன்னியக் கம்பெனியால்
ஆக்கிரமிக்கப்பட்ட
சென்னை நிலமும்…
வடிவத்தில் வேறு…
வர்க்கத்தில் ஒன்று!

பேரினவாதத்தால் பறிக்கப்பட்ட
எம் பிள்ளைகள் கல்வியும்,
தனியார்மயத்தால்
பறிக்கப்பட்ட
உங்கள் பிள்ளைகள் கல்வியும்,
பாடத்திட்டத்தால் வேறு
பறிக்கப்பட்டதில் ஒன்று!

ராணுவத்தால் குதறப்படும்
எம் பெண்களின் தசையும்,
மூலதனத்தால் கழிக்கப்படும்
உங்கள் பெண்களின் தசையும்,
கருவிகளால் வேறு,
ஒடுக்கம் வர்க்கத்தால் ஒன்று.

எத்தனையோ பேச
எங்களுக்கும் ஆசை…
இடையில்
முள்வேலி முறிந்தால்
இணையலாம்
வர்க்கமாய்ப் பேச!

– துரை. சண்முகம்
________________________________________________________________________________
புதிய கலாச்சாரம் – மே 2013
________________________________________________________________________________