இரண்டு வாரங்களுக்கு முன்பு வினவு தளத்தில் எட்வர்ட் ஸ்னோடன் பற்றிய பதிவு இப்படி ஆரம்பித்திருந்தது “திரு எட்வர்ட் ஜோசப் ஸ்னோடன். அமெரிக்கரான இவர் இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்து சர்வதேச கவனம் பெறுவார். விரைவில் அமெரிக்காவின் மிக முக்கிய எதிரி என அறிவிக்கப்படுவார். பின் லாடனை விட மோசமான தீவிரவாதியாகவும், அமெரிக்க மக்களின் உயிர் பறிக்கும் அரக்கனாகவோ அல்லது பெண் பித்தர், மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் குற்றம் சாட்டப்படலாம்.”
இப்போது அது நடந்து கொண்டிருக்கிறது.
உலக மக்களுக்கு எதிரான அமெரிக்க அரசின் கிரிமினல் உளவு நடவடிக்கைகளை அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடன் ஞாயிற்றுக் கிழமை ஹாங்காங்கிலிருந்து மாஸ்கோவுக்கு பயணமானார்.

அரசு சொத்துக்களை திருடியது, தேசிய பாதுகாப்பு தகவல்களை அனுமதியின்றி அனுப்பியது, ரகசிய உளவுத் தகவல்களை அனுமதி வழங்கப்படாத நபர்களுக்கு தெரிவித்தது போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் ஸ்னோடன் மீது அமெரிக்க அரசு வழக்கு பதிவு செய்த தகவல் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இந்த வழக்கு ரகசியமாக ஜூன் 14-ம் தேதியே தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. வெளிப்படைத் தன்மைக்கு ‘பேர் போன’ அமெரிக்க அரசு, ஹாங்காங் அரசிடம் ஸ்னோடனை ஒப்படைக்கும்படி கேட்பதற்காக இரண்டு வாரங்களுக்கு பிறகு வேறு வழியில்லாமல் தகவலை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து ஹாங்காங் நிர்வாகத்திடம் ஸ்னோடனை கைது செய்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தும்படி வேண்டுகோள் அனுப்பியது; சனிக் கிழமை ஸ்னோடனின் பாஸ்போர்டை ரத்து செய்தது.
இங்கிலாந்து அரசோ ஹாங்காங்கிலிருந்து கிளம்பும் அனைத்து விமான நிறுவனங்களுக்கும், ஸ்னோடனை ஏற்றிக் கொண்டு இலண்டனுக்கு வரக்கூடாது என்று சுற்றறிக்கையே அனுப்பியிருக்கிறது. தற்போதைய செய்தியின் படி அமெரிக்க என்.எஸ்.ஏவுக்கு போட்டியாக இங்கிலாந்து உளவுத்துறையும் உளவு பார்த்த செய்திகள் கார்டியன் பத்திரிக்கையில் வந்திருக்கின்றது. ஜேம்ஸ்பாண்ட் நாட்டின் அரசு மக்களுக்கு அளித்திருக்கும் பேச்சுரிமையின் இலட்சணம் இதுதான்.
இதற்கிடையில் ஹாங்காங்கிலிருந்து வெளியாகும் சவுத் சைனா மார்னிங் போஸ்ட் நாளிதழுக்கு ஸ்னோடன் வெளியிட்ட தகவல்களின் படி :
- ஹாங்காங்கில் செயல்படும் பேக்நெட் என்ற பைபர் ஆப்டிக் நெட்வொர்கை அமெரிக்க அரசு சட்ட விரோதமாக உடைத்து உளவு பார்த்திருக்கிறது. பேக்நெட் ஆசிய பசிபிக் வட்டாரத்தின் முக்கியமான இணைய இணைப்பு தடங்களை இந்த நிறுவனம் நிர்வகித்து வருகிறது
- சீனாவின் பெருமை வாய்ந்த சிங்ஹூவா பல்கலைக் கழகத்தின் பிரதான கணினிகளை உடைத்து அவற்றில் உள்ள தகவல்களை அமெரிக்க உளவுத் துறை வேவு பார்த்திருக்கிறது.
- சீனாவின் மொபைல் நிறுவனங்களின் கணினிகளுக்குள் புகுந்து சீன மக்கள் தங்களுக்குள் அனுப்பிக் கொள்ளும் குறுஞ்செய்திகளை அமெரிக்க உளவுத் துறை திரட்டியிருக்கிறது.
இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமை சீனாவின் அதிகார பூர்வ ஷின்ஹூவா செய்தி நிறுவனம் இது குறித்து அமெரிக்க அரசு சீனாவுக்கும் மற்ற உலக நாடுகளுக்கும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரியிருக்கிறது. சீனா தனது கணினிகளை தாக்கி வருவதாக நீலிக் கண்ணீர் வடித்த அமெரிக்காதான் இத்தனை ஆண்டுகளாக உலகின் அத்தனை நாடுகள் மீதும் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியிருக்கிறது என்பதை அது சுட்டிக் காட்டியிருக்கிறது.
இந்த நிலையில் ஞாயிற்றுக் கிழமை காலை ஸ்னோடன் மாஸ்கோவுக்குச் செல்லும் ஏரோஃப்ளோட் எஸ்யு 23 விமானத்தில் ஏறி விட்டதாக செய்தி வந்தது. அவர் புறப்பட்ட 1 மணி நேரத்துக்குப் பிறகு, “ஸ்னோடன் வழக்கமான, சட்டபூர்வமான வழியில் தனது பயண ஏற்பாடுகளை நிறைவு செய்து மாஸ்கோவுக்கு கிளம்பி விட்டதாக” ஹாங்காங் அரசு அறிவித்தது. அமெரிக்க அரசு சமர்ப்பித்த ஆவணங்கள் முழுமையாக இல்லாததால் அவற்றின் அடிப்படையில் ஸ்னோடனை தடுக்க முடியாது என்று தெரிவித்தது. கூடவே, ஹாங்காங்கில் உள்ள கணினிகளை உடைத்து புகுந்தது குறித்து விளக்கம் அளிக்குமாறு அமெரிக்க அரசிடம் கேட்டிருக்கிறது. ஹாங்காங் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாப்பதற்கு இதை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றும் சொல்லியிருக்கிறது.
அமெரிக்க அரசோ தாங்கள் ஸ்னோடனின் பாஸ்போர்ட்டை ரத்து செய்து விட்ட நிலையில் அவரை பயணம் செய்ய அனுமதித்து அழுகுணி ஆட்டம் என்று கண்ணைக் கசக்குகிறது. தான் 54 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான இஸ்லாமியர்களை எந்த ஆவணங்களும் இல்லாமல், எந்த சட்டங்களையும் பொருட்படுத்தாமல் கடத்துவதையும் சித்திரவதை செய்வதையும் நடத்தியது என்பதை உலக மக்கள் மறந்திருப்பார்கள் என்று அமெரிக்க அரசு நினைத்திருக்கலாம்.
விக்கிலீக்ஸ் அறக்கட்டளையின் ஊழியர் சாரா ஹேரிசன் ஸ்னோடனுடன் பயணம் செய்திருக்கிறார். ஸ்னோடனுக்கு ஒரு பாதுகாப்பான நாட்டில் புகலிடம் பெற உதவப் போவதாக விக்கிலீக்ஸ் அறிவித்தது. விக்கிலீக்சை உருவாக்கிய ஜூலியன் அசாஞ்சே அவரை ஸ்வீடனுக்கு நாடு கடத்த முயலும் யுகே அரசின் முயற்சிகளுக்கு முறியடித்து லண்டனில் உள்ள ஈக்வேடார் தூதரகத்தில் கடந்த ஒரு ஆண்டாக தங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்கிலீக்சுக்கு தகவல்களைக் கொடுத்ததாகக் குற்றம் சுமத்தி, பிராட்லி மேனிங் என்ற இளம் இராணுவ வீரரை அமெரிக்க அரசு பேச்சுரிமைக்கு வாய்ப்பூட்டு போடும் வகையில் சிறையில் அடைத்து வைத்திருக்கிறது. அமெரிக்க பயங்கரவாத அரசின் மனித விரோதச் செயல்களை அம்பலப்படுத்தும் ஸ்னோடன், அசாஞ்சே போன்ற ஜனநாயகத்துக்கான போராடுபவர்கள் அமெரிக்காவிடம் அகப்பட்டால், அவர்களது நிலை பிராட்லியைவிட மோசமாகும் என்பது உறுதி.
ரஷ்ய அதிபரின் செய்தித் தொடர்பாளர், டிமிட்ரி பெஸ்கோவ், ஸ்னோடன் மாஸ்கோவில் தங்கப் போவதாகவோ, ரஷ்ய அரசிடம் புகலிடம் கேட்டதாகவோ தன்னிடம் தகவல் இல்லை என்று தெரிவித்திருக்கிறார். ரஷ்யாவின் நாடாளுமன்றமான டூமாவின் அயலுறவு விவகாரங்களுக்கான குழுவின் தலைவர் அலக்செய் புஷ்கோவும், நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ஷ்லேகலும் ஸ்னோடனுக்கு ரஷ்யா புகலிடம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
இதற்கிடையில் அமெரிக்க அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், உளவுத் துறை இயக்குனர், ஃபாக்ஸ் நியூஸ் போன்ற செய்தி ஊடகங்கள் ஸ்னோடன் உலகின் எந்த மூலைக்குப் போனாலும் அவரை விட மாட்டோம் என்று மார் தட்டுகின்றனர். சீனா, ரஷ்யா, வெனிசுவேலா, கியூபா போன்ற நாடுகளிடம், அவருக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் கிங் “இந்த ஆள் ஒரு துரோகி என்பதை அமெரிக்க மக்கள் புரிந்து கொள்வது முக்கியமானது. அவர் எதிரியின் கையாள், ஒரு ஹீரோ இல்லை என்று மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மேலவை உறுப்பினர் ராண்ட் பால் அவரை அமெரிக்க ராணுவ ஹீரோ ஜெனரல் கிளாப்பருடன் ஒப்பிட்டதாக அறிகிறேன். இது மிகவும் கேவலமானது” என்று வாயில் நுரை ததும்ப பொங்கியிருக்கிறார்.
ஞாயிற்றுக் கிழமை மாலை மாஸ்கோ விமான நிலையத்தில் இறங்கிய ஸ்னோடன், அவரிடம் ரஷ்யா விசா இல்லாததால் விமான நிலையத்திலேயே தங்கியிருக்கிறார். அவரை சந்திப்பதற்கு ஈக்வேடார் நாட்டு தூதர் விமான நிலையத்துக்கு வந்திருக்கிறார். ஸ்னோடன் ஈக்வேடார் நாட்டில் தஞ்சம் கேட்டிருப்பதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை இப்போது அறிவித்திருக்கிறது. ஸ்னோடன் மாஸ்கோவிலிருந்து ஹவானாவுக்கு போகும் விமானத்தில் பயணிக்கவிருக்கிறார்.
நியூயார்க்கில் செப்டம்பர் 2001-ல் நடந்த தாக்குதல்களைத் தொடர்ந்து, ‘நீங்கள் எங்கள் பக்கம் அல்லது எதிரிகளின் பக்கம்’ என்று உலக நாடுகளை அச்சுறுத்தி ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிஸ்தான் என்று தொடர்ந்து உலகெங்கும் தனது சட்ட விரோத, பயங்கரவாத நடவடிக்கைகளை நடத்தி வருகிறது அமெரிக்க அரசு. ஆனால், அவை ஒவ்வொன்றாக வெளி வந்து அது உலக மக்கள் முன்பு அம்பலப்பட்டு நிற்கிறது.
அமெரிக்காவிலேயே ஒரு சில அரசியல்வாதிகளும், மக்களில் பெரும்பான்மையினரும் மக்களது அரசியல் உரிமைகளை பறித்து, ஒரு போலீஸ் அரசாக மாறிக் கொண்டிருக்கும் அமெரிக்க அரசை கண்டிக்கின்றனர். ஜனநாயகம், குடிமக்கள் உரிமை, பேச்சுரிமை, தனிநபர் சுதந்திரம் என்று பசப்பி வந்த அமெரிக்க அரசின் போலித்தனத்தை எதிர்த்து உலகெங்கிலும் உள்ள ஜனநாயக சக்திகள் போராட வேண்டும்.
– அப்துல்
மேலும் படிக்க