Monday, April 21, 2025
முகப்புசமூகம்சினிமாசினிமா ஒரு வரிச் செய்திகள் - 24/6/2013

சினிமா ஒரு வரிச் செய்திகள் – 24/6/2013

-

மசாலா : தேர்வுக்காக மட்டுமே மாணவர்கள் படித்து வரும் ஔவையாரின் ஆத்திச்சூடியை “வாழ்க்கைக்காக படியுங்கள்; இதுதான் உலகின் சிறந்த இலக்கியம்; வாழ்க்கைத் தத்துவம்; எவரும் எளிதில் பின்பற்றக்கூடிய போதனை!” என்று நெருங்கிய நண்பர்களிடமெல்லாம் சிபாரிசு செய்து கொண்டிருக்கிறார் ‘தல’ அஜித்.

மருந்து : தல அல்லாத்துக்கும் மட்டன் பிரியாணி போட்டதா போன சினிமா வெளம்பரத்துக்கு பேசுன பயலுவ இப்ப ஆத்திச்சூடிய அவுத்து வுட்டிருக்கான். இதப் பாத்த நம்ம தமுஎகச (சிபிஎம்) பயலுவ தலகிட்ட நைசா டாஸ் கேப்பிட்டலை தள்ளி வுட்டு புரட்சி பண்ணலாம்னு யோசிக்கானாம். பாவம்டே மார்க்ஸ்!

_____

மசாலா : மணிரத்தினத்தின் ‘கடல்’ ரசிகர்களின் வரவேற்பைப் பெறாததற்கு காரணம் என்ன என்ற கேள்விக்கு எழுத்தாளர் ஜெயமோகன் பதில்: “ஒரு படத்தை ஆத்மார்த்தமா எடுக்கத்தான் முடியும். ஏன் வரவேற்பைப் பெறலைன்னு பல சமயம் சொல்லவே முடியாது”.

மருந்து : ஓய் ஜெயமோகன் உம்ம தத்துவம் ஓடாத படங்களுக்கு மட்டுமா, இல்லை ஓடுற படங்களுக்கு மட்டுமா? இது ஓடாத படங்களுக்கு மட்டுமுனா பெறவு உம்ம தத்துவம் கூட கோஷ்டி வெச்சுகிட்டு சமயத்துக்கு ஏத்த மாதிரி டான்ஸ் ஆடும் சரக்காயிரும், பரவாயில்லையா?

_____

மசாலா : சாந்தனு தன் வீட்டில் நான்கு பாக்கெட் சைஸ் நாய்க்குட்டிகளை வளர்க்கிறார். அத்தனையும் வெளிநாட்டுப் பசங்க. வீட்டில் இருக்கும் போது இந்த செல்லப் பிராணிகளோடு சண்டை போடுவதுதான் சாந்தனுவுக்கு ஒரே சந்தோஷம்!

மருந்து :  சினிமா மார்க்கெட் டவுணாயி வூட்டுல சும்மா இருக்காங்கிறதயே என்னமா பில்டப் கொடுத்து வுடுதான் பாத்துக்கிடுங்க!

______

மசாலா : நடிகர் ராம்கி ஜாதகத்தின் மீது அபார நம்பிக்கை உள்ளவர். இதன் மீது ஏற்பட்ட தீவிர ஈடுபாட்டால் சொந்தமாகவே ஜாதகம் கணிக்கும் வித்தையைக் கற்றுக் கொண்டிருக்கிறார். இப்போது ராம்கியின் கையில் பலரின் ஜாதகம் தவழ ஆரம்பித்திருக்கிறது.

மருந்து : மார்கெட் போய் 15 வருஷத்துக்கு பெறவும் இப்படி ஒரு நியூஸ் வருதுன்னா அது ராம்கி அண்ணாத்தேவோட ஜாதகம் நல்லா இருக்குண்ணு அர்த்தம் இல்லடே! சினிமா நிருப்பக்கமாருக்கு கவரோ கட்டிங்கோ வெட்டிருக்கான்!

_____

மசாலா : வந்த வேகத்திலேயே விறுவிறு நடிகையாக முன்னேறி வருவதால் தெய்வத்திற்கு ஏதாவது காணிக்கை செய்ய வேண்டும் என அம்மா சொன்னாராம். ஸோ நான்வெஜ் சாப்பிடுவதை அறவே நிறுத்தி விட்டார் ஹன்சிகா. எல்லாம் நேர்த்திக் கடன்தான்.

மருந்து : சாமிக்கு நேத்திக் கடன்னா மொட்டையப் போடு, அல்லாங்காட்டி இனி சம்பளத்துல பாதிய சாமி உண்டியலுல போடு! இன்னமோ பரம்பர சொத்த அனாதை இல்லத்துக்கு எய்திக் குட்த்த மேறி என்னா பில்டப்பு!

_____

மசாலா : பிரகாஷ்ஜா இலக்கத்தில் “சத்யகிரஹா டெமோக்ரசி அண்டர் ஃபயர்” படத்தில் அன்னா ஹசாரேயின் ஜந்தர் மந்தர் உண்ணாவிரதக் காட்சிகளைப் போன்று நடித்துக் கொடுத்துள்ளார் அமிதாப். ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரே இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களையும் படத்தின் கேரக்டர்களாக வடிவமைத்து திரைக்கதை தயார் செய்யப்பட்டுள்ளதாம்.

மருந்து : சரி நைனா, பெருசு அண்ணா ஹசாரேவும், மார்க்கெட்டிங் தல அர்விந்த் கேஜ்ரிவாலும் அட்சிக்கிணு ஆளுக்கொரு தனிக்கடை போட்டாங்களே, அந்த ஆக்ஷன் சீன் உண்டா நைனா?

______

மசாலா : “குமுதம் மிகப் பெரிய நிறுவனம். என்னுடைய வளர்ச்சிக்கு குமுதம் முக்கிய காரணமாக இருந்து வருகிறது. குமுதம் என்னை வளர்த்தது என்று கூட சொல்லலாம். சில வருடங்களுக்கு முன்பு “என்றென்றும் விஜய்” தொடரை வெளியிட்டு….என்னை பெருமைப்படுத்தினீர்கள். இப்போது “விஜய் ஸ்பெஷல்” புத்தகத்தை வெளியிட்டிருக்கிறீர்கள். இதற்கு நான் என்ன  கைம்மாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை” – விஜய்.

மருந்து : கைமாவோ இல்ல ஃபுல் பாயிலோ எதுவும் வேணாம். சினிமாக்காரனப் பத்தி எழுதுனாத்தான் குமுதம் விக்கும். குமுதம் மாதிரி பத்திரிகை மாமாக்கள வைச்சுத்தான் சினிமாக் காரனுக்கு விளம்பரம் கிடைக்கும். இதுல ரெண்டு பயபுள்ளைகளும் என்னமா ஐஸ் வெக்கிறான் பாரு!

_____

மசாலா : பில்கேட்ஸின் குட் புக்கிலும் இணைந்து விட்டார் அமீர்கான். இது சம்பந்தமாக தன் ட்விட்டர் பக்கத்தில் ட்விட்டியிருக்கும் பில்கேட்ஸ்  ”பாலிவுட் நடிகரும், சமூக சேவகருமான அமீர்கானை சந்திக்க நான் காத்துக்கொண்டிருகிறேன். யுனிசெப்பின் குழந்தைகள் ஊட்டச்சத்து திட்டத்தின் தூதராக உள்ள அவரின் பணியை குறித்துக் கேட்டு தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இந்தியா சந்தித்து வரும் சில முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதம் நடத்திய ”சத்ய மேவ ஜெயதே” நிகழ்ச்சி பற்றியும் அவரிடம் கேட்க விரும்புகிறேன்” எனகூறியுள்ளார்.

மருந்து : ஆமடே, அப்பிடியே ரஜினிகிட்ட இமயமலை ஆன்மீகம், கமலுகிட்ட விஸ்வரூபத்துல தீவிரவாதிய எதிர்த்து சண்டை போட்டது, விஜய் கிட்ட அயர்னிங் மிஷன் பரிசு கொடுத்தே பிறந்த நாளுக்கு பில்டப் போட்டது, அகரம் பவுண்டேசன்ல கல்வி ஃப்ரீன்னு ஊரை நம்பவைச்ச சூர்யான்னு அல்லா பயபுள்ளைகளையும் சந்திச்சு சமூக சேவையில கொடி கட்டிப் பறக்கிறது எப்படின்னு கத்துக்கலாம்டே! ஆனா ஒண்ணு, இந்த பில்கேட்ஸ், ஜார்ஜ் புஷ்ஷை விட நம்ம ஹீரோக்கமாருக்கு கொஞ்சமாவது அறிவு உண்டு!

_______

மசாலா : நம்ம ஊரு நாயகர்கள் சூர்யா, சிம்பு, விஷால், பரத் வரிசையில் அக்கட பூமியானஆந்திர தேசத்து நாயகன் ஜூனியர் என்.டி.ஆரும் ‘சிக்ஸ் பேக்’ வைத்துள்ளார்.

மருந்து : சிக்ஸ் பேக்கை பெருமையா படம் போட்டு விளம்பரத்துப் படுத்தும் நடிகருங்க, தங்களோட ஸ்விஸ் பேங்க் கணக்கை மட்டும் ஏம்லே ரகசியமாக வெச்சுக்கிடுதானுக?

_______

மசாலா : கணேஷ் வெங்கட்ராம் நடித்த பனித்துளி படத்தை இயக்கியவர் நட்டிகுமார். இவர், முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கையை படமாக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவாக இருந்தது. அது இப்போது நினைவாகப் போகிறது என்றுகூறுகிறார்.

மருந்து : ராகுலு அடுத்த பிரதமரு, சோனியா காங்கிரசோட தலைவரு, பிரியங்கா பிரச்சாரத்துல லீடருன்னு அல்லா காந்தி வம்சமும் பீக்குல இருக்கும்போது இந்திரா காந்தின்னு படம் எடுக்கிறதுல என்ன கஸ்டம்டே! காஸ்ட்லியான முதுகுல சொறிஞ்சுதான் பொழைக்கணும்னு வந்த பெறவு அதுல காந்தி என்ன, நேரு என்ன?

______

மசாலா : ரூ.1.20 கோடி மோசடி புகார் தொடர்பாக தயாரிப்பாளர் சித்திரை செல்வனைபோலீசார் கைது செய்துள்ளனர். சசிகலாவின் உறவினர் பாஸ்கரன் நடித்துள்ள படம் தலைவன். இப்படத்தின் தயாரிப்பாளராக சித்திரை செல்வன் உள்ளார்.

மருந்து : பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்குல அப்ரூவரா மாற மாட்டேன், போங்காட்டம் ஆடமாட்டேன்னு சசிகலா குரூப்பு என்னதான் அடம்பிடிச்சாலும் அம்மா சேப்டிக்காக அப்பப்ப ஒண்டு ரெண்டை உள்ள வைக்கிறாங்க. அதுல மாட்டுனதுதான் இந்த சித்திரை. சசிகலாவுக்குத்தான் எத்தன பினாமிங்க, தள்ள தள்ள வந்துகிட்டே இருக்காணுவளே!

____________________________________
– காளமேகம் அண்ணாச்சி
____________________________________