செய்தி : “பாரதீய ஜனதா தேர்தல் பிரசாரக்குழு தலைவராக மோடி நியமிக்கப்பட்டு உள்ளதும், அவருக்கு நெருக்கமான அமித் ஷா, உத்தர பிரதேச, பா.ஜ., பொறுப்பாளராகநியமிக்கப்பட்டு உள்ளதாலும், லோக்சபா தேர்தலில், அந்த மாநிலத்தில், பா.ஜ.,வுக்கு பெருவாரியான வெற்றி கிடைக்க வாய்ப்பாக அமைந்துள்ளது’ என, உ.பி., அரசியல் ஆய்வாளர் கூறுகின்றனர்.
நீதி : வெறுங்கையாலே முழம் என்ன ஆட்சியையே பிடிப்போம் என பாஜகவிற்கு சொறிந்து விடும் இந்த ‘ஆய்வாளர்’ வேறு யாருமல்ல, தினமலர்தான்.
_____
செய்தி : “அரசியல் சட்டத்தின், 370-வது பிரிவை ரத்து செய்ய வேண்டும். அப்போது தான், ஜம்மு – காஷ்மீர் மாநிலம், இந்தியாவுடன் முழுமையாக ஒருங்கிணையும்” என, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.
நீதி : காஷ்மீர் மக்களை ஒட்டு மொத்தமாக கொன்று விட்டு மாநிலத்தை முழுமையாக இந்தியாவுடன் இணைப்பது இன்னும் சுலபமல்லவா!
_____
செய்தி : நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கெட்டுப் போன பிரசாதம் விற்கப்படுவதைத் தட்டிக் கேட்ட மாவட்ட இந்து முன்னணி தலைவரும் வழக்குரைஞருமான டி.எஸ்.சங்கரை தாக்கிய பிரசாதக் கடை உரிமையாளர் வைத்தீஸ்வரன் என்கிற வைத்தியநாதன் கைது செய்யப்பட்டார்.
நீதி : கெட்டுப் போன பிரசாதத்திலெல்லாம் இந்து தர்மத்தைக் கண்டுபிடித்துக் காப்பாற்ற சண்ட மாருதம் செய்யும் இந்து முன்னணி, ஊசிப் போன சங்கராச்சாரியை குப்பையில் போடாமல் மோந்து பார்ப்பது ஏன்?
______
செய்தி : நெய்வேலி நிறுவனப் பங்குகளை விற்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
நீதி : இதே போல தனது கட்சி எம் எல் ஏக்களை விலை கொடுத்து வாங்க வேண்டாம் என்று போயஸ் தோட்டத்திற்கு மனுக் கொடுத்தும், மன்றாடியும் ‘அம்மா’ அசைந்து கொடுக்கவில்லை.
_____
செய்தி : கர்நாடகத்தில் உள்ள கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து மேட்டூருக்கு காவிரியில் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
நீதி : திறந்து விட்டது கருநாடகம் அல்ல, தென் மேற்கு பருவக்காற்று மழை!
______
செய்தி : உத்தர்கண்டில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று பார்வையிட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல், உத்தர் காசிக்குச்சென்றுள்ளார்.
நீதி : நிவாரணப் பணிகளை விட விஐபிகளை வரவேற்று பராமரிக்கும் வேலைகள்தான் அதிகம் எனும் போது ராகுல் காந்தி செய்வது உதவியல்ல, உபத்திரவமே!
______
செய்தி : பிரதமரின் வருகையைக் கண்டித்து காஷ்மீரில் ஹூரியாத் உள்ளிட்ட அமைப்புகள் முழு அடைப்பு நடத்துவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நீதி : இந்திய இராணுவத்தின் ஆட்சியில் மற்ற நாட்களில் மட்டும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லையா என்ன?
______
செய்தி : மேம்பாட்டு திட்டங்களின் போது இயற்கையையையும் பாதுகாக்கும் வகையில் செயல்படவேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா தெரிவித்துள்ளார்.
நீதி : எப்படி? கூடங்குளத்திலும், நர்மதா பள்ளத்தாக்கிலும் ‘பாதுகாத்தது’ போலவா?
_____
செய்தி : புழல் சிறையில், தொழில் அதிபர் மகன் ஷாஜியிடம் செல்போன் பறிமுதல்செய்யப்பட்டது. சோதனையில் வெளிநாட்டு சிகரெட்டுகளும் சிக்கின.
நீதி : காரோட்டி சிறுவனைக் கொன்ற இந்த சிகாமணிக்கு முதல் வகுப்பு வழங்கினார் நீதிபதி! அதை நட்சத்திர விடுதியாக மாற்றி விட்டார் ஷாஜி!
_____
செய்தி : மாநிலங்களவைத் தேர்தலில் திமுக., வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவு அளிப்பது எனகாங்கிரஸ் முடிவு செய்திருப்பதை அடுத்து, கனிமொழி மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு கூடியுள்ளது.
நீதி : திமுகவுக்கு வெட்கமில்லை, காங்கிரசும் இதை கருணையினால் கொடுக்கவில்லை, ஏமாந்த தேமுதிகவும் யோக்கியனில்லை.
______
செய்தி : அதிமுகவுடன் கூட்டணி இல்லை, தொகுதி உடன்பாடு மட்டுமே என்றார் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி
நீதி : கூட்டணியில் தொகுதி உடன்பாடு கிடையாதா, இல்லை தொகுதி உடன்பாடென்றால் கூட்டணிதான் இல்லாமல் போய்விடுமா? சந்தர்ப்பவாதத்திற்கு தன்னிலை விளக்கம் தேவையா டாக்டர் அவர்களே?
_____
செய்தி : உத்தரகண்ட்டில் மீட்பு பணியின் போது ஹெலிகாப்டர்விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவிஅளிக்கப்படும் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
நீதி : அரசு செலவில் இலவச விளம்பரம்! பிரதமர் பதவிக்கு மக்கள் பணத்தில் தந்திரம்!
______
செய்தி : நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கிக் கொள்ள தயாராக இருக்கிறது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
நீதி : அன்னிய நிதி நிறுவனங்களின் சூதாட்டத்திற்காக விற்கப்படும் பொதுத்துறை பங்குகளை தமிழக அரசிடம் தருவதற்கு மத்திய அரசு தயாராக இல்லை என்பது ஜெயலலிதாவுக்கு தெரியாதா என்ன!
_______
செய்தி : மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடம் உதவி கேட்கும் திமுக ஈழபிரச்னையை மறந்துவிட்டதா? என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
நீதி : ஈழப்பிரச்சினையை நீங்கள் ஞாபகம் வைத்திருந்து என்ன கிழித்து விட்டீர்கள் அன்புமணி அவர்களே?
_______
செய்தி : கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்து 16 கி.மீ. சுற்றளவில் கன்னியாகுமரிமாவட்டத்துக்கு உள்பட்ட கிராமம் எதுவும் இல்லை என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் இந்திய அணுசக்திக் கழகம் தெரிவித்துள்ளது.
நீதி : 16 கி.மீ சுற்றளவில் இருந்த 50 கிராமங்களை அழித்து விட்டார்களா? முழு யானையையே சோற்றில் மறைப்பதை அணுசக்திக் கழகத்திடம்தான் கற்க வேண்டும்!
_______