புவி வெப்பமடைதலைத் தடுப்பதற்கு, மரபு சாராத, புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வளங்களின் மூலம், தூய்மையான மின்சாரம் தயாரிக்கப்பட வேண்டும் என்று சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதில் முன்னணியில் உள்ள ஏகாதிபத்தியங்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன. தூய்மையான மின்சாரம் என்ற பெயரில்தான் அமெரிக்கா தனது காலாவதியான அணு உலைகளை நம் தலையில் கட்ட முயற்சிக்கிறது.
அணு மின்சக்தியில் மட்டுமின்றி, சூரிய ஒளி மின்திட்டங்களிலும் சுயசார்பு நிலையை எட்டவிடாமல், காலாவதியான தங்களது தொழில் நுட்பத்தைத்தான் இந்தியா வாங்க வேண்டும் என அமெரிக்க அரசு நிர்ப்பந்தித்து வருகிறது. உள்நாட்டு சூரிய மின் கருவித் தயாரிப்பாளர்களுக்கு இந்திய அரசு முன்னுரிமை அளிப்பதாகவும், இது காட் ஒப்பந்தத்துக்கு எதிரானது என்றும் கூறி, இந்தியாவுக்கு எதிராக உலக வர்த்தகக் கழகத்தில் அமெரிக்க அரசு வழக்கும் தொடுத்திருக்கிறது.

2022-ஆம் ஆண்டிற்குள் 22 ஆயிரம் மெகாவாட் சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்க வேண்டும் என்பது மத்திய அரசு நிர்ணயித்திருக்கும் இலக்கு. கடந்த 6 மாதங்களில், ஐந்து மாநிலங்களில் மட்டும் 6 ஆயிரம் மெகாவாட் அளவிற்குப் புதிய சூரிய ஒளி மின்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழக அரசு மட்டும் மூன்றே ஆண்டுகளில் 3 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செயப் போவதாக அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் அறிவிக்கப்படுகின்ற இந்த சூரிய மின்சக்தித் திட்டங்கள் சுயசார்பானவையா என்றால், இல்லை. ஜவஹர்லால் நேரு தேசிய சூரியசக்தி மின்சாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் நிறுவப்பட்டிருக்கும் சூரிய மின்சக்தி நிலையங்களில் 60 சதவீத நிலையங்கள் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கருவிகளை நம்பியே இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, சூரிய மின்சக்தி உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் மாநிலம் என்று கூறப்படும் குஜராத் முழுவதும் அமெரிக்க இறக்குமதியை நம்பியே இருக்கிறது. குறிப்பாக ஆசியாவிலேயே மிகப் பெரியதென்று கூறப்படும் 600 மெகாவாட் சூரிய ஒளிப் பூங்காவை சன் எடிசன் என்ற அமெரிக்க நிறுவனம்தான் குஜராத்தில் நிறுவி இயக்குகிறது.
சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கப் பயன்படும் போட்டோ வோல்டாயிக் சோலார் செல்களில் இரண்டு வகை; உண்டு. ஒன்று, கிரிஸ்டலைன் செல்கள்; இரண்டாவது வகை, தின்-பிலிம் செல்கள். கிரிஸ்டலைன் செல்கள் எனப்படுவதே நவீன தொழில் நுட்பம். இதில் உலகிலேயே சீனா முன்னிலை வகிக்கிறது. தின்-பிலிம் என்பது உற்பத்தி திறன் குறைந்த தொழில்நுட்பம்; அதன் ஆயுளும் குறைவு. அமெரிக்க கம்பெனிகள் இதையே உற்பத்தி செய்கின்றன.
சூரிய மின்சக்தி திட்டத்தின் முதல் கட்டத்தை 2011-இல் அறிவித்த மத்திய அரசு, கிரிஸ்டலைன் செல்களை உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து மட்டுமே வாங்க வேண்டும் எனக் கட்டுப்பாடு விதித்திருந்தது. இந்தக் கட்டுப்பாடு சீன இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது. தின்-பிலிம் செல்கள் என்ற அமெரிக்க தொழில்நுட்பத்தின் இறக்குமதிக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை. அமெரிக்க இறக்குமதிக்கு வழிசெய்யும் வகையில் அது பற்றி வேண்டுமென்றே குறிப்பிடாமல் விடப்பட்டிருந்தது.
இத்தகைய சாதகமான நிலைமையிலும்கூட, சீனத் தயாரிப்புகளையும், இந்திய சூரிய ஒளி மின்கருவிகளையும் நேருக்கு நேர் போட்டியில் சந்திக்கும் ஆற்றல் அமெரிக்க முதலாளிகளுக்கு இல்லை. இதற்காக அமெரிக்காவின் எக்ஸ்போர்ட்-இம்போர்ட் வங்கி மற்றும் ஓவர்சீஸ் பிரைவேட் இன்வெஸ்ட்மென்ட் வங்கி ஆகிய இரண்டு வங்கிகளையும் அமெரிக்க அரசு களமிறக்கியது.
அமெரிக்கத் தயாரிப்புகளை வாங்குபவர்களுக்கு 3% ஆண்டு வட்டியில் முழுத்தொகையும் கடனாகத் தரப்படுவதுடன், கடனைத் திருப்பிச் செலுத்தும் தவணைக்காலமும் 18 ஆண்டுகள் என்று கூறி மின் கருவிகள் வாங்குவோர் அனைவரையும் அமெரிக்க நிறுவனங்கள் கவர்ந்திழுத்தன. அதே நேரத்தில் இந்திய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட சோலார் செல்களை வாங்குவற்கான கடனுக்கு இந்திய வங்கிகள் விதிக்கும் வட்டியோ 14% ஆக இருந்தது. தவணைக்காலமும் குறைவு.
மேற்படி அமெரிக்க வங்கிகளால் மட்டும் எப்படி இத்தனை குறைந்த வட்டிக்குக் கடன் தர இயலுகிறது என்று துருவி ஆராய்ந்த அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் என்ற தில்லியைச் சேர்ந்த தன்னார்வ நிறுவனம், அமெரிக்காவின் கீழ்த்தரமான மோசடியை வெளிக்கொணர்ந்துள்ளது.
இவ்விரு வங்கிகளும் தங்களுடைய சொந்தப் பணத்தைக் கடனாகக் கொடுக்கவில்லை, மாறாக, ஐ.நா.வின் ‘பாஸ்ட்-பார்வர்டு’ நிதியை இதற்காக இந்த வங்கிகள் பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டு கோபன்ஹேகனில் நடந்த ஐ.நா.வின் உலக தட்பவெட்ப மாற்றங்கள் குறித்த உச்சி மாநாடு, 2011-12 ஆண்டுகளில் ஏழை நாடுகளில் மாற்று எரிசக்தித் துறையின் வளர்ச்சிக்காகச் செலவிட 3 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்களை ஒதுக்கியது.
இந்த நிதியையே தங்களது வங்கியின் கடன்கள் என்ற பெயரில் வழங்கியது மட்டுமன்றி, கடன் வேண்டுமென்றால், குறிப்பிட்ட சில அமெரிக்க நிறுவனங்களின் சோலார் செல்களை வாங்க வேண்டும் என்று நிர்ப்பந்தப்படுத்தி, காலாவதியான அமெரிக்கத் தொழில்நுட்பத்தை இந்திய வாடிக்கையாளர்களின் தலையில் கட்டியதுடன், ஏழை நாடுகளின் மாற்று எரிசக்தி வளர்ச்சிக்காக என்ற பெயரில் ஒதுக்கப்பட்ட நிதியை அமெரிக்க கம்பெனிகள் திருடித் தின்றிருக்கின்றன.
தற்போது இந்த உண்மைகள் எல்லாம் வெளியே வந்து சந்தி சிரித்து விட்டன. சூரிய சக்தி மின்கருவிகளைத் தயாரிக்கும் பெல் நிறுவனம், டாடா உள்ளிட்ட தரகு முதலாளித்துவ நிறுவனங்கள் மற்றும் சிறு உற்பத்தியாளர்களால் அமெரிக்காவின் போட்டியைச் சமாளிக்க முடியவில்லை. பலர் முற்றிலுமாகவே தமது தொழிலை இழுத்து மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டதால் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கினர். இதன் காரணமாகத் தேசிய சூரிய மின்சக்தித் திட்டத்தின் இரண்டாவது கட்ட அறிவிப்பை 2012-இல் வெளியிட்ட போது, தின்-பிலிம் செல் தொழில்நுட்பத்துக்கும் சேர்த்துக் கட்டுப்பாட்டை அறிவித்தது இந்திய அரசு.
இந்தியாவைப் போன்றே கனடா, பிரான்ஸ், மலேசியா, துருக்கி போன்ற நாடுகள் சோலார் செல் இறக்குமதிக்குப் பல்வேறு தடைகளைப் போட்டுள்ளன. அவ்வளவு ஏன், சீனா தனது நாட்டு சோலார் உற்பத்தியாளர்களுக்கு அதிகமாக மானியம் வழங்குகிறது என்று கூறி சீன இறக்குமதிகள் மீது கடுமையாக வரி விதித்திருக்கிறது, அமெரிக்கா.
இருப்பினும், இந்திய அரசு தனது உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் பொருட்டு ஒரு தலைப்பட்சமான முடிவை எடுத்திருப்பதாகவும், இச்செயல் காட் ஒப்பந்த விதிகளை மீறுகிறது என்றும் கூறி உலக வர்த்தகக் கழகத்தில் இந்தியாவிற்கு எதிரானதொரு வழக்கை தொடுத்திருக்கிறது, அமெரிக்கா.
சூரிய மின்சக்தி என்பது எதிர்காலத்தின் மிக முக்கியமான ஆற்றல் மூலம். இத்தொழில் நுட்பத்தில் மேலாண்மை செலுத்த வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்க, ஐரோப்பிய அரசுகள் இது தொடர்பான ஆராய்ச்சிக்குப் பல்லாயிரம் கோடிகளை ஏற்கெனவே செலவிட்டிருக்கின்றன. இருப்பினும், இத்துறையில் சமீபத்தில் நுழைந்த சீனா, கிரிஸ்டலைன் செல்களின் உலகச் சந்தையில் மேலாண்மை பெற்று விட்டது.
சீனாவுடன் இந்தத் துறையில் போட்டியிட்டு வெல்ல முடியாத அமெரிக்கா, ஏகாதிபத்தியத்துக்கே உரிய முறையில் கையை முறுக்கிக் காரியம் சாதிக்க முனைந்திருக்கிறது. அதுதான் உலக வர்த்தகக் கழகத்தில் அமெரிக்கா தொடுத்திருக்கும் வழக்கு. இந்திய அரசு இதற்கு எதிராக ஒருபுறம் வாய்ச்சவடால் அடித்துக் கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகள் அறிவிக்கும் சூரிய மின் உற்பத்தி திட்டங்கள் மத்திய அரசின் கொள்கை அறிவிப்பின் படி, பெல் போன்ற உள்நாட்டு நிறுவனங்களுக்குத் தரப்படுவதில்லை. அவற்றை வழக்கம் போல அமெரிக்க நிறுவனங்கள்தான் கைப்பற்றி வருகின்றன. தாமிரவருணித் தண்ணீரை புட்டியில் பிடித்துத் தருவதற்கே “கோக்” கின் தொழில்நுட்பம் தேவைப்படும்போது, சூரிய வெப்பத்தை மின்சாரமாக்கித் தருவதற்கு அமெரிக்க தொழில்நுட்பம் தேவைப்படுவதில் வியப்பென்ன இருக்கிறது?
– தனபால்
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூன் 2013
________________________________________________________________________________