Wednesday, April 23, 2025
முகப்புகட்சிகள்இதர கட்சிகள்அவன் இதயத் துடிப்பில் நிறைய உணர்ச்சியுண்டு !

அவன் இதயத் துடிப்பில் நிறைய உணர்ச்சியுண்டு !

-

இளவரசன் அம்மகொலையா? தற்கொலையா?
எதற்கடா ஆராய்ச்சி!
அவன் சாவுக்கு காரணம்
வன்னிய சாதிவெறி கவுச்சி!

அடுக்கடுக்காக
வாழ விட்டதா சாதிய வன்மம்!

திவ்யா தந்தையை ‘தற்கொலை’ செய்து
அவர் பிணத்தை வைத்தே காலனி எரித்து
சேர்ந்து வாழ்ந்த ஜோடியைப் பிரித்து,
குடும்பங்களை சின்னா பின்னமாக்கி
கடைசியில்,
சாதி தாண்டி சிந்தித்தவனை
மூளை சிதைய பிணமாக்கி…
இந்த கேவலங்களைச் செய்வதற்கு
சாதிப் பெருமை என்ன இருக்கு?

எல்லா சாதிக்கும் பசிக்கும்
எல்லா சாதிக்கும் வலிக்கும்
எல்லா சாதிக்கும் காதல் வரும்

எங்க சாதி தான் ஒசத்தியென்று…
எவர் ரத்தத்திலும் எழுதவில்லை…
இந்த ஆரம்ப அறிவே இல்லாதவனுக்கு
ஆண்ட பரம்பரை பெருமை எதுக்கு?

ஓ! சந்தேகமேயில்லை!
கொலையை மகிழவும்
பிணத்தை ரசிக்கவும் முடிந்த நீ
உண்மையிலேயே ‘ஆண்ட’ பரம்பரைதான்டா?

சந்தேகம் ஒன்று
சாதிப் புழுவாய் நெளிவதற்கு
மனிதப் பிறவி ஏன்டா?

என்ன குற்றம் செய்தான் இளவரசன்?

காதலித்தவளையே கரம்பிடிப்பதும்
கவுரவமாக இல்லறம் காண்பதும்
உன் சாதிக்கு ஒவ்வாது என்பதை விட
ஒழுக்கக்கேடு வேறு உண்டா?

எல்லோரையும் போல
அவனும் வாழ விருப்பமுள்ள, இளைஞன்,
விரும்பிய பெண்ணை மணமுடிக்க
அவனுக்கும் ஆசையுண்டு… உரிமையுண்டு,

குடும்பப் பாசமுண்டு
வேலைதேடும் குறிக்கோள் உண்டு,
நிறுத்தப்பட்ட அவன் இதயத்துடிப்பில்
திவ்யாவுடன் மட்டுமல்ல,
இந்தச் சமூகத்துடனும் பகிர்ந்துகொள்ள
நிறைய உணர்ச்சியுண்டு…

பிடித்த மனைவியை
பிரித்த போதும்
கண்ணியம் காத்த இளைஞனை
காவு வாங்கி விட்டு
வன்னியப் பெருமையென
பட்டாசு கொளுத்தி
கொண்டாடுபவனை விட
பயங்கரவாதி யாருண்டு?

சேர்ந்து வாழ்ந்தவன்
முகத்தைப் பார்க்கவும் முடியாமல்
வாழ்வின் காரணங்கள் நெருக்க
உயிரோடு அறுக்கப்படுகிறாள் திவ்யா,

சேர்ந்து வாழ்வோம் எனும் நம்பிக்கையில்
ஆவி ஆடங்கி,
சாவுக்கான காரணம் தேடி
பிணமாக அறுக்கப்படுகிறான் இளவரசன்.

குருத்துவிடும் வாழையை
குலைக்கும் எருமையை
எங்கள் வீட்டு பெருமை என்று
எவனும் இழுத்து வைத்து கொஞ்சுவதில்லை!

இளைய வாழ்வை
அவலமாக்கிய அயோக்கியர்களை
சொந்த சாதி என்று அணைக்க
உனக்கு வெட்கமாய் இல்லை?

வன்னியரை
மனித இனத்துக்கே
அன்னியராக்கும் சாதிவெறி!
வந்து அதை பற்ற வைப்பவன்
உன் வர்க்க எதிரி!

உன் அக்கினி குண்டத்தின் பெருமையை எடுத்து,
சொந்த சாதி அயோக்கியத்தனத்தை
சுட்டு எரி!

தாழ்த்தப்பட்டவர்
தான் ஜீன்ஸ் பேண்ட் போட்டதையும்,
கூலிங்கிளாஸ் அணிந்ததையும் கூட
தாங்க முடியாமல்,

ஊருக்கு ஊர்போய் ‘நாடகக் காதல்’
‘நாடகத் திருமணம்’ என உசுப்பிவிட்டு
ஊரையே கொலையில் இழுத்து விட்டு
இப்போது சொல்கிறார்கள்
இந்த யோக்கியர்கள் “காதல் தனிப்பட்ட பிரச்சனை”
பிணத்தைப் போட்டு தாண்டுவதில்
பா.ம.க.வுக்கு உலகில் எந்தப் பொய்யன்
ஈடு இணை!

இளைய சமூகமே!
பறிகொடுத்திருப்பது
யாரோ ஒரு பையனை அல்ல,
ஒரு புதிய தலைமுறையை!
சுற்றி நின்று வேடிக்கைப் பார்க்கவோ
நாம் இத்தனைப் பேரும்…

புலரும் விடியல் அனைத்தையும்
சாதிவெறிக்கு பழியாக்கும்
ஆதிக்க சாதிவெறி கொடூரத்தை
தேசமே திரண்டெழுந்து ஒழிப்போம்!

– துரை.சண்முகம்