மரணமடைவதற்கு முன் இளவரசன் எழுதிய கடிதம் கிடைத்திருப்பதாகவும், அவரது குடும்பத்தினருக்கும், திவ்யாவுக்கும் எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில் தனது சாவுக்கு யாரும் காரணம் அல்ல என்று அவர் எழுதியிருப்பதாக தருமபுரி காவல்துறை கண்காணிப்பாளர் ஆஸ்ரா கர்க் தெரிவித்திருக்கிறார். அக்கடிதம் இளவரசன் எழுதியதுதான என்பதை உறுதிப்படுத்தும் பணியும் நடைபெற்று வருவதாக அவர் கூறியிருக்கிறார்.
இளவரசன் கிடந்த இடத்தில் போலீசுக்கு முன்பாகவே சென்றவர்கள் அக்கடிதத்தை எடுத்திருப்பதாகவும், பின்னர் விசாரணையில் கடிதம் கிடைத்திருப்பதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சரி, இதன்படி இளவரசன் தற்கொலையே செய்திருப்பதாக முடிவு செய்வோம். இதனால் இளவரசன் மரணத்திற்கு காரணம் பாமக சாதிவெறியர்கள்தான் என்ற முடிவில் மாற்றமில்லை. மாறாக நமது குற்றச்சாட்டு உண்மை என்பதையே இளவரசனது முடிவும், கடிதமும் நிரூபிக்கின்றன. இளவரசன் கொலை செய்யப்பட்டோ இறந்திருந்தாலோ இல்லை தற்கொலையோ செய்திருந்தாலும் அதற்கு காரணம் பாமகவினர்தான் என்று இதற்கு முன்னர் எழுதிய பதிவுகளில் தெரிவித்திருக்கிறோம்.
இளவரசன் திவ்யா திருமணம் முடிந்த பிறகு பாமக சாதிவெறியர்கள் திவ்யாவின் தந்தையை மனம் குறுகும் வண்ணம் கேலி செய்து, விமரிசனம் செய்து, குத்திக் காட்டி, சாதி கௌரவம் இவரால் போனது என்றெல்லாம் பலவாறாக பேசுகிறார்கள். இதை முந்தைய மாதங்களில் திவ்யாவே சில பத்திரிகை பேட்டிகளில் கூறியிருக்கிறார். அவர் கூறவில்லை என்றாலும் அதுதான் உண்மை. அந்த கேலி, கிண்டல், அவதூறு பொறுக்க முடியாமல் திவ்யாவின் தந்தை நாகராஜன் தற்கொலை செய்கிறார்.
மேலும் இந்த தற்கொலை எப்போது நிகழும், அதற்கு பின்னர் தலித் மக்களின் ஊர்களில் ஆள் சேதமில்லாமல் குடியிருப்பு, பொருட்களை எப்படி அழிக்கலாம் என்று வன்னிய சாதிவெறியர்கள் பாமகவின் தலைமையில் திட்டத்தோடு காத்திருந்தனர். அதன்படி நாகராஜன் மரணம் நடந்த சில மணிநேரங்களில் நத்தம் காலனி மற்றும் அருகாமை தலித் ஊர்கள் சூறையாடப்படுகின்றன.
பிறகு ராமதாஸ் ஏனைய ஆதிக்க சாதிவெறி தலைவர்களோடு ஊர் ஊராக சென்று “நாடகக் காதல்” எதிர்ப்பு என்ற பெயரில் தலித் மக்கள் மீதான துவேசத்தையும், வெறுப்பையும் கிளப்புகிறார். இந்த பின்னணியில் திவ்யா மட்டும் இளவரசனோடு வாழ்ந்தால் தமது வன்னிய கௌரவம், சாதிவெறி, மற்றும் பாமகவின் இமேஜ் பாதிக்கும் என்று இந்த சாதிவெறியர்கள் கொலைவெறியில் இருக்கிறார்கள்.
அதன்படி இந்த கிரிமினல்கள் திட்டமிட்டு திவ்யாவை இளவரசனிடமிருந்து பிரிக்கிறார்கள். அதன் பிறகு திவ்யாவின் தாய் தேன்மொழி போட்டிருந்த ஆட்கொணர்வு வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது பாமக சாதிவெறியர்கள் புடை சூழ திவ்யா கைது செய்யப்பட்டது போல நீதிமன்றம் வருகிறார். பிறகு அவரை அழுது கொண்டே “நான் இளவரசனோடு இனி எப்போதும் சேர்ந்து வாழ முடியாது” என்று பேசவைக்கிறார்கள். அவர் கூற்றில் முக்கியமானது தனது தாய், தம்பி இருவருக்கும் ஏதாவது ஆகிவிடக்கூடாது என்பதுதான். அதன்படி இந்த சாதிவெறியர்கள் எப்படியெல்லாம் மிரட்டியிருப்பார்கள் என்பதை யாரும் புரிந்து கொள்ளலாம்.
பிறகு திவ்யாவை இப்படி வலுக்கட்டாயமாக பிரிப்பதற்கு தேன்மொழி சார்பில் வக்கீலாக பாமகவின் பாலுதான் ஆஜராகியிருக்கிறார். அடுத்து திவ்யா இப்படி பிரிந்து விட்டார் என்று எச்சில் ஊற வன்னிய சாதிவெறியுடன் பாமகவின் இணைய கோயாபல்சு அருள் தொடர்ந்து பதிவுகள் போடுகிறார். அதில் பார், நாங்கள் திவ்யாவை பிரித்து விட்டோம், திவ்யா வாயாலேயே பேசவைத்துவிட்டோம் என்ற காட்டுமிராண்டித்தனம் அப்பட்டமாக நெளிகிறது. இது போல திவ்யாவைச் சுற்றி தீவட்டி தடியர்களாக பல பாமகவினர் நின்றார்கள்.

திவ்யா சென்னையில் பாமக ஏற்பாட்டில், பாமக குண்டர்கள் புடைசூழத்தான் தங்க வைக்கப்பட்டு நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படுகிறார். இதிலெல்லாம் பாமக சம்பந்தப்படவில்லை என்று யாராவது சொன்னால் அது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பதை விட பயங்கரமானது. அடுத்து பாமக வழக்கறிஞர் பாலு ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் யார் கூப்பிட்டாலும் வாதாட போவார், அதை வைத்து இது பாமக சதி என்று கூறக்கூடாது என்று சிலர் லா பாயிண்ட் கேட்கிறார்கள். சரி, ஒரு பறையர் இளைஞன், ஒரு வன்னிய பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் வழக்கில் தனக்காக வாதாடுமாறு இந்த பாலுவை கூப்பிட்டால் வருவாரா? இல்லை இதுவரை எந்த காதல் கதைகளில் இவர் தலித் இளைஞர்களுக்காக வாதாடியிருக்கிறார்?
ஆனால் இணைய கோயாபல்ஸ் அருளே இவர் பாமக வழக்கறிஞர் என்பதால்தான் வாதாடினார் என்பதை ஒத்துக் கொண்டிருக்கிறார். ஆக நாகராஜின் தற்கொலை முதல் திவ்யாவின் நீதிமன்ற வாக்குமூலம் வரை பாமகவின் சதிக்குற்றத்தினை ஆதாரத்தோடு பார்த்து விட்டோம்.
அடுத்த நாள் தினத்தந்தியில் திவ்யாவின் வாக்குமூலத்தை பார்த்து இளவரசன் மனம் உடைகிறார். அவரது கடைசி நம்பிக்கையும் பொய்த்துப் போனதாக சோர்ந்து போயிருக்கிறார். பாமக எனும் கட்சி, வன்னியர் சங்கம் எனும் கூட்டம், இவர்களை ஒரு எளிய தலித் இளைஞன் எதிர் கொண்டு வாழ முடியாது என்று அவருக்கு தோன்றியிருக்கலாம்.
தன்னை ஆழமாக நேசித்து காதலித்து மணம் முடித்த தனது மனைவியையே இப்படி மிரட்டி பேசவைத்துவிட்டார்களே என்ற ஆதங்கம் அவரை அலைக்கழித்திருக்கிறது. இனி எந்நாளும் சேர முடியாது என்று அவர் முடிவு செய்கிறார். இந்தப் போக்கில் அவர் தற்கொலை செய்து கொள்கிறார்.
ஆக, தான் வாழ முடியாது, திவ்யாவுடன் சேர முடியாது, திவ்யாவை பாமக சாதிவெறியர்கள் இருக்கும் வரையிலும் திரும்பப் பெற முடியாது என்ற உண்மைதான் இளவரசனை தற்கொலை செய்ய வைத்திருக்கிறதே அன்றி வேறு எதுவும் அல்ல. ஒரு இளைஞன் தான் இந்த சமூகத்தில் வாழமுடியாது எனும் நிலை எடுக்க வேண்டுமென்றால் அது பாரதூரமான காரணங்களாலேயே இருக்க முடியும்.
ஏனெனில் தற்கொலை செய்து கொள்ளும் நபர் அந்தக் கணத்தில் தனது உயிரினைத் துறக்கும அதீத தைரியத்தை பெறுகிறார். அதாவது தனது உயிரை ஒருவன் துறக்கிறான் என்றால் அவனுக்கு இந்த வாழ்க்கையில் கிஞ்சித்தும் வழியில்லை என்ற யதார்த்தமே அப்படி தள்ளுகிறது.
அந்த வகையில் பாமக சாதிவெறியர்கள்தான் இளவரசனை தற்கொலை செய்ய வைத்த முதன்மையான குற்றவாளிகள். அந்த வகையில் தற்கொலையை நிறைவேற்றியவர்கள் என்ற வகையில் இவர்கள் கைது செய்யப்பட்டு உரிய பிரிவுகளில் வழக்கு தொடுக்க வேண்டும். அதன்படி இளவரசனது தந்தை கொடுத்திருக்கும் புகாரின் படி ராமதாஸ், அன்புமணி, காடுவெட்டி குரு, டாக்டர் செந்தில், வழக்கறிஞர் பாலு அனைவரும் கைது செய்யப்படவேண்டும். மேலும் தருமபுரி உள்ளூர் அளவில் உள்ள பாமக தலைவர்களும் கைது செய்யப்பட வேண்டும்.
திவ்யாவின் தாயார் தேன்மொழியை சந்தித்து குறுக்கு விசாரணை செய்யும் எவரும் மேற்கண்ட உண்மைகளை சுலபமாக வெளியே கொண்டு வரலாம். தனது தந்தை, மற்றும் கணவனைக் கொன்றுவிட்டவர்கள் யார் என்பதை அறிந்த திவ்யாவும் உண்மைகளை பேசினால் வேறு எந்த ஆதாரமும் தேவையில்லை.
ஆனால் இளவரசனது மரணத்திற்கு காரணமான பாமக சாதிவெறியர்களை தப்புவிக்கும் முகமாகவே அரசு செயல்பட்டு வருகிறது. தன்னை எதிர்த்துப் பேசியதால் பாமக தலை முதல் வால் வரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்திருக்கும் ஜெயா அரசு, இத்தகைய சமூக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையில் வாயே திறக்கவில்லை. அவர் நியமித்திருக்கும் நீதிபதி விசாரணை கூட இளவரசன் குடும்பத்திற்கு ஏதாவது நிவாரணம் என்று மட்டுமே முடியும்.
தருமபுரி வந்து விசாரித்து சென்றிருக்கும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கூட அதைத்தான் சொல்லியிருக்கிறது. மேலும் அனைத்து ஓட்டுப் பொறுக்கி கட்சிகளும், தலைவர்களும் கூட “நடந்தது நடந்து விட்டது, இனி சமாதானமாகவே வாழ்வோம்” என்று நடந்த குற்றத்தை மறைக்கவே செய்கிறார்கள். தாழ்த்தப்பட்டோர் விடுதலை என்று அரசியல் செய்யும் விடுதலைச் சிறுத்தைகளும் இளவரசன் மரணத்துக்குக் காரணமான பாமக குற்றவாளிகளை கைது செய் என்று கோரவில்லை. ஏனெனில் பாமகவுடன் சுமுக உறவு வைத்திருந்தால்தான் விடுதலைச் சிறுத்தைகளும் அரசியலில் காலம் தள்ள முடியும். மாறாக, வட தமிழகத்தில் பல்வேறு வன்னியர் பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு வன்னியர்களைத் திரட்டியிருக்கும் எமது மகஇக மற்றும் தோழமை அமைப்புகள்தான் பாமக சாதி வெறியர்களுக்கு எதிரான பிரச்சாரம் செய்து வருகிறோம்.
எனவே, தமிழகம் சாதி வேறுபாடுகளின்றி சமத்துவ உரிமையுடன் மக்கள் வாழவேண்டுமென்றால் பாமக சாதி வெறியர்கள் ஈவிரக்கமின்றி தண்டிக்கப்படவேண்டும்.
ஒரு தலித் இளைஞன் காதலித்தால் அவன் வாழ முடியாது என்று இந்த சாதிவெறியர்கள் விதித்திருக்கும் பத்வாவை ஒழிக்காமல் அப்படி பத்வாவை விதித்திருக்கும் இந்த காட்டுமிராண்டிகளை தண்டிக்காமல் நாம் நாகரீக உலகில் வாழ்கிறோம் என்று யாரும் சொல்ல முடியாது.
எனவே இளவரசனது கொலையை விட தற்கொலை என்பது பாரிய அளவில் பார்க்கப்பட வேண்டும். அதற்கு காரணமாக பாமக சாதிவெறியர்கள் தண்டிக்கப்படவேண்டும்.