Monday, April 21, 2025
முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்நீலப்பட படைப்பாளிகள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கூகிள் கிளாஸ் !

நீலப்பட படைப்பாளிகள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கூகிள் கிளாஸ் !

-

கவல் தொழில்நுட்பமும், தகவல்தொடர்பு சாதனங்களின் வளர்ச்சியும் கற்பனைக் கதைகளாக இருந்தவற்றையும் கூட நடைமுறையில் நிகழ்த்திக்காட்டி வருகின்றன. எண்பதுகளில் (1980) இணையம் உருவாகி வளர்ந்து உலகத்தின் தகவல்களனைத்தும் மேசை விளிம்பிற்கு– கணினி திரைக்கு- வந்தன. பின்னர் கைபேசிகள் அறிமுகமாகி, அவை ஸ்மார்ட் போன் என வளர்ந்த போது உலகமே விரல்நுனியில் வந்து சேர்ந்ததாக கருதப்பட்டது.

கூகிள் கிளாஸ்
கூகிள் கிளாஸ்

இன்றைய நவீன தொழில்நுட்பமோ தகவல்களை கண் அசைவில் கொண்டுவந்து சேர்த்து விடுமளவு வளர்ந்திருக்கிறது. ஆனால் அவை என்ன தகவல்களை தேர்வு செய்து கொண்டு வருகிறது என்பது விமரிசனத்திற்குரியது. மனிதர்கள் அணிந்து கொள்ளும் மூக்குக் கண்ணாடி வடிவிலான சிறு கணினியை கூகிள் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த கூகிள் ’கண்ணாடி’ (Google Glass) நாம் விரும்பும் தகவல்களை நம் கண்களுக்கு அருகில் ஒளிஊடுருவும் மெய்நிகர் திரையில் (Virtual Transparent Screen) காட்டும்.

கூகிள் கிளாசானது தன்னுள்ளே ஒரு செயலி (processor), புவியிடங்காட்டி (GPS), கம்பியில்லா வலை இணைப்பு (Wi-Fi), ஒலி வாங்கி, வெளியீட்டு கருவி (mike, speaker), ஒளிப்படக்கருவி (Camera) இவற்றுடன் ஒரு ஒளிப்படக்காட்டி (Projector) மற்றும் இவையனைத்தும் செயல்பட மின்கலத்தையும் கொண்டுள்ளது.

நாம் பார்க்கும் காட்சிகள் கண்களில் கருவிழியின் வழியே ஒளியாக சென்று விழித்திரையில் (Retina) செய்தியாக மாற்றப்பட்டு மூளையை சென்றடைகிறது. கூகிள் கிளாசில் இருக்கும் புரஜெக்டரானது நேரடியாக ஒருவரது விழித்திரைக்குள் மெய்நிகர் ஒளிஊடுருவும் திரை போன்ற ஒன்றில், தகவல்களை காட்டும். இந்த மெய்நிகர் திரையானது நாம் நேரில் காணும் நிஜக்காட்சிகளை பாதிக்காதவாறு அதன் மீது மெல்லிய அடுக்காக தோன்றும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது உங்கள் கணினி திரையையோ, கைபேசி திரையையோ பார்க்கவேண்டியதற்கு பதிலாக நேரடியாக உங்கள் கண்களின் விழித்திரைக்குள்ளேயே தகவல்களை பார்த்துக்கொள்ளலாம்.

கூகிள் கிளாஸ் பெண்
கூகிள் கிளாஸ் அணிந்த பெண்

கூகிள் கிளாசை குரல் கட்டளைகள் மூலம் நேரடியாக கட்டுப்படுத்தலாம். இந்த கண் கணினியை ஸ்மார்ட் கைபேசியுடன் ஒருங்கிணைப்பதன் மூலம், தேவையான எந்த தகவலையும் உடனடியாக கண் விழிகளுக்குள்ளேயே பெறலாம். மேலும் இதிலுள்ள காமிராவின் உதவியால் தன் நோக்கு நிலையில் (first person view point) படங்களை எடுக்கவும், அவற்றை உடனுக்குடன் இணையத்தில் பகிரவும் முடியும்.

கண் விழித்திரைக்குள்ளேயே ஒளியை பாய்ச்சுவது கண்களுக்கு தீங்கை விளைவிப்பதுடன், கண்களின் புலனுணர்வு திறனை பாதிக்கும் என்ற சர்ச்சை கிளம்பியுள்ளதையடுத்து, கூகிள் தனது கண்ணாடி கணினியை குழந்தைகள் மற்றும் கண்களில் பிரச்சனையுள்ளவர்கள் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதை ஆய்வு செய்த வல்லுநர்கள் “கூகிள் கண்ணாடி அற்புதங்களை நிகழ்த்தும். ஆனால் அது தனிக்கவனம் செலுத்தும் மனிதத் திறனை ஒழிக்கும்” என்று கூறியுள்ளனர். நாம் பெறும் ஒவ்வொரு தகவலும் நமது மூளையில் அறிவாக சேமிக்கப்படுவதில்லை. மாறாக பெறப்படும் தகவல்கள் நடைமுறையில் சோதித்தறிந்து உறுதி செய்யப்பட்ட பின்னரே மூளையில் சேமிக்கப்படுகிறது. இந்த வகை கணினிகளால் அனைத்து சாதாரண தகவல்களுக்கும் கூட கணினிகளையும், இணையத்தையும் பயன்படுத்துவதால் மூளையின் சிந்திக்கும் ஆற்றல் குறைந்து விடக்கூடும் என்று விஞ்ஞானிகளில் சிலர் எச்சரித்துள்ளனர்.

மறுசாரார் கூகிள் கிளாஸ் போன்ற அணிந்து கொள்ளக்கூடிய கணினிகளால் தேவையான தகவல்களை உடனுக்குடன் இணையத்தில் பெற முடியும் போது, அதை நமது மூளைக்குள் சேமித்து வைக்கவேண்டிய அவசியம் குறைகிறது. அதனால் மூளையில் குறிப்பிடத்தகுந்த அளவு நியூரான்கள் விடுவிக்கப்படுகின்றன. அவற்றை மற்ற திறன் மிக்க செயலகளுக்கு சிந்திப்பதற்கு பயன்படுத்துவதன் மூலம் மனிதனின் செயல்பாடுகள் புதிய பரிணாமத்தை எட்டும் என்று வாதிடுகின்றனர்.

கூகிள் எப்போதும் இல்லாத வகையில் அடுத்தவர்களின் அந்தரங்கத்தை பாதிக்கும் சாதனத்தை வெளியிட்டுள்ளதாகவும், இந்த வகை கருவிகளின் உதவியால் அடுத்தவர்களை மறைமுகமாக புகைப்படமெடுக்கவோ, வீடியோ எடுக்கவோ முடிவதுடன் அவற்றை இணையத்தில் உடனடியாக பரவவிடவும் முடிவதால் தனிநபர் உரிமைகளுக்கு எதிரானது என ஒருசாரார் குற்றம் சாட்டுகின்றனர். நடைமுறையிலிருக்கும் செல்போன் காமிராக்களே எப்படி பெண்களை படமெடுத்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்க பயன்படுத்தப்படுகின்றன என்பதை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

கூகிள் நிறுவனர் செர்ஜி பிரின்
கூகிள் நிறுவனர் செர்ஜி பிரின்

பொருளாதார நெருக்கடியை அடுத்து தற்போது அனைத்து நாடுகளின் உளவுத்துறைகளும் பாசிசமயமாகி மக்களனைவரையும் வேவுபார்ப்பது அம்பலமாகியிருக்கிறது. கூகிள் கிளாஸ் போன்ற கருவிகள் ஒவ்வொரு தனி நபரின் புகைப்படம் உட்பட அனைத்து தகவல்களையும், உடனுக்குடன் இணையத்தில் கிடைக்கச் செய்வதன் மூலம் உளவு நிறுவனங்களின் வேலையை மேலும் எளிதாக்கும். யாரைப் பற்றிய தகவல்களையும் கூகிள் போன்ற நிறுவனங்களிடம் அரசு – உளவு நிறுவனங்கள் கோரிப் பெறவும் முடியும் என்ற நிலையில் இவ்வகை கருவிகள் மக்களின் அரசியல் சுதந்திரத்தை குழிதோண்டி புதைப்பதற்கும் பயன்படும். ஸ்னோடன் அம்பலப்படுத்தலிலேயே இணையம், செல்பேசி எல்லாம் அமெரிக்க கட்டுப்பாட்டில் இருப்பதை பார்க்கும் போது கூகுள் கிளாஸ் அதை மேலும் பரவலாக்குகிறது.

இணையம் உருவான போது அது பல சாதனைகளை நிகழ்த்தும், விண்ணையும் மண்ணையும் புரட்டிப் போட்டுவிடும் என்று பரவலாக பிரச்சாரம் செய்தார்கள். மனித குலத்தின் அறிவு வளர்ச்சிக்கும், கல்விக்கும் பெருமளவு உதவும் என்று அறிஞர்கள் கனவு கண்டனர். இவற்றையெல்லாம் ஒரு முதலாளித்துவ கட்டமைப்பில் வாழும் உலகில் சாத்தியமா என்பதை கணினி வல்லுநர்களும், பயனோரும் சிந்தித்துப் பார்க்கவேண்டும். அப்படி சாத்தியமாகும் என்று நம்புவோரும் அதன் வரம்பு மிகவும் குறுகியது என்பதை ஒப்புக் கொள்வர்.

மேலும் நிதி சூதாட்டத்திற்கே இணையம் அதிக அளவில் பயன்படுகிறது. இதற்கு இணையாக இணையத் தொழில் நுட்பத்தை போர்ன்(பாலுறுவு தொழில்) துறைக்கு பயன்படுத்தி 97 பில்லியன் டாலர் (சுமார் ரூ 5.3 லட்சம் கோடி) ஆன்லைன் ஆபாசப்பட தொழிலாக வளர்த்து வைத்திருக்கிறது முதலாளித்துவ உலகம். சில போர்ன் துறை நிறுவனங்கள் கூகிள் கிளாஸ் கொண்டு உயர் தரமான ஆபாசப்படங்களை தன்நோக்கு நிலையிலிருந்து எடுக்க முடியுமென்பதால் அது சந்தைக்கு வருவதை எதிர்நோக்கியுள்ளதாக கருத்து தெரிவித்திருந்தன. மேலும் கூகிள் கிளாசினால் மிக எளிமையாக படமெடுக்க முடியுமென்பதால் தயாரிப்பு செலவு குறையுமென்றும் அதனால் கூகிள் கிளாஸ் போர்ன் துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்துமென்றும் தொழில் முறையில்லாத தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர். கடைசியில் கூகுள் கிளாஸை ஆவலோடு எதிர்பார்ப்பவர்கள் பிட்டுப் படங்களை எடுப்பவர்கள் என்றால் என்ன சொல்ல!

ஆபாச படங்களால் ஏற்படும் சீரழிவு என்ற ஒரு எல்லையை தாண்டிப்பார்த்தாலும், இன்றைய இணையத்தின் கலாச்சார தாக்கத்தை குறைத்து மதிப்பிடமுடியாது. இணையம் என்றாலே பேஸ்புக் என்றாகி, மெய்நிகர் உலகே வாழ்க்கையென சமூக வலைத்தளங்களின் போதையில் வீழ்ந்து கிடக்கும் வண்ணம் நம்மை பயிற்றுவிக்கிறார்கள். சிந்திப்பது, உரையாடுவது, ரசனை, விருப்பம் அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்கள் தீர்மானிப்பதாக இருக்கிறது. அந்தவகையில் இந்த கூகிள் கிளாசும் பேஸ்புக்கில் நிமிடத்திற்கொருமுறை ஸ்டேடஸ் பகிர்ந்து கொண்டு மேலும் மெய்நிகர் உலகினுள் அர்த்தமற்ற முறையில் மூழ்கிக்கிடக்கத்தானே உதவும்? ஒருவேளை அதனால் நேரடி போராட்டம் இன்னபிற நல்ல விசயங்களை படம்பிடிக்கலாம் என்றால் அது விதிவிலக்காக இருக்குமே அன்றி பொது போக்காக இருக்காது.

வேண்டுமானால் இன்று தமிழ் இணையத்தில் அதிகம் பேசப்படும் விசயம் தமிழ் சினிமா சார்ந்ததாகவே இருக்கிறது என்ற உண்மையினை பரிசீலித்துப் பாருங்கள். நாம் பேசும் அரசியல் விசயங்களின் வீச்சை விட சினிமாவிற்கே பரப்பளவு அதிகம்.

இந்நிலையில் நவீன தொழிநுட்பத்திற்கும், கூகிள் கிளாஸ் போன்ற கருவிகளுக்கும் மனிதனின் அபரிதமான ஆற்றலை வெளிக்கொணரும் திறன் இருப்பதாக வாதாடும் நுகர்வுக் கலாச்சார பயங்கரவாதிகளுக்கு எப்படி புரியவைக்க முடியும்?

– மார்ட்டின்

மேலும் படிக்க :