வன்னிய சாதி ஆதிக்க வெறிக்குத் துணை போகும் சூளகிரி- அஞ்செட்டி போலீசு!
போலீசு சுவரொட்டியைக் கிழித்ததாம் ! அடடே… சுவரொட்டியோ போலீசை கிழித்தது!

தமிழக அரசே,
இராமதாசு, அன்புமணி, காடுவெட்டி குரு, முதலான பா.ம.க சாதி வெறியர்களை வன்கொடுமை கொலைக் குற்றத்தின்கீழ் கைது செய்!
வன்னிய சங்கத்தை உடனே தடை செய்!
உழைக்கும் மக்களே,
சாதிவெறியர்களை ஒழித்துக்கட்டுவோம்!
சாதியை மறுத்து உழைக்கும் வர்க்கமாய் ஒன்றிணைவோம்!
மேற்கண்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் அதன் தோழமை அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணியின் சுவரொட்டி முழக்கத்தினைக கண்ட போலீசின் ‘அற’ச்சீற்றமே சுவரொட்டி கிழிப்பு மற்றும் தோழர்கள் மீதான பொய்வழக்கு!
தமிழகம் முழுவதும் பரவலாக ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., வி.வி.மு., மற்றும் பெ.வி.மு. ஆகிய அமைப்புகளால் மையமான இந்த முழக்கத்தின் கீழ் சுவரொட்டி இயக்கம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அஞ்செட்டி, சூளகிரி போலீசுக்கு மட்டும் இது கிழிக்கவேண்டிய சுவரொட்டியாகத் தெரிகிறது.
உலகறிய நடந்த ஒரு மரணத்திற்கு காரணமான வன்னிய சாதி வெறிக் கிரிமினல்களைக் கைது செய் என்று ஜனநாயக வழிமுறையில் கோருவதைக் கூட சகிக்கமுடியாத அளவிற்கு ஒருசிலர் புகார் கொடுக்கின்றனர் என்றால் அவர்களைப் பிடித்து சிறையில் தள்ள வேண்டிய போலீசு முந்திக் கொண்டு அவர்களின் ஏவலாள் போல சுவரொட்டியைக் கிழித்ததேன்?
பா.ம.க.வின் வன்னிய சாதிவெறியை இளவரசனின் மரணம் திரைகிழித்தது என்றால், இளவரசனின் மரணத்திற்கு நீதி கேட்டு ஒட்டிய சுவரொட்டி போலீசுக்குள் மறைந்துள்ள பா.ம.க.வினரை அடையாளம் காட்டியுள்ளது!
சுவரொட்டியின் வெற்றி!!
தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி