என் பார்வையில் வினவு – 6 : மா சிவகுமார்
என் வீடு, என் குடும்பம், என் உறவுகள், என் நட்பு வட்டம் என்று வாழும் வாழ்க்கையில் மூச்சு முட்டும் போது கிடைத்த விடுதலைதான் இணையம். மடற்குழுக்கள் என்று ஆரம்பித்து, விவாத மையங்கள் என்று கிளை பிரிந்து, வலைப் பதிவுகள் என்று வளர்ந்து, பேஸ்புக், டுவிட்டர் என்று கூர்மையாகி நிற்கின்றன இணையத்தின் ஊடான கருத்துப் பரிமாற்றங்கள். இவை அனைத்தையும் செலுத்துவது பரந்து விரிந்த மானுடப் பரப்புடன் நம்மை இணைத்துக் கொள்ளும் துடிப்புதான் என்று தோன்றுகிறது. மூன்று வேளை சோறு, 10 மணி நேர வேலை, 8 மணி நேர தூக்கம், 6 மணி நேர கேளிக்கை என்று ஏன் இருந்து விட முடியவில்லை?
150 ரூபாய் கொடுத்து வெயில் காலத்திலும் 1 கிலோ ஆப்பிள் வாங்க முடிகிறது. வாங்கிய ஆப்பிளின் மீது வாஷிங்டன் என்று பெயர் ஒட்டியிருக்கிறது. எங்கோ அமெரிக்காவில் விவசாயின் உழைப்பில் உருவான ஆப்பிளை நாம் சாப்பிடுகிறோம். சீனாவில் ஏதோ ஒரு வியர்வைக் கூடத்தில் உருவான பொருட்களை தினமும் பயன்படுத்துகிறோம். நாம் செய்யும் அலுவலக வேலை ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஒருவருக்கு பலன் அளிக்கிறது.இப்படியாக, உலகம் முழுவதிலும் உள்ள மக்களிடமிருந்து தூரம், மொழி, பண்பாட்டாலும் பிரிக்கப்பட்டிருந்தாலும், சமூக அளவில் கோடிக்கணக்கான மக்களின் உழைப்பின் படைப்புகள் நம்மோடு தினமும் நேரடியாக உறவாடிக் கொண்டிருக்கின்றன; நமது உழைப்பின் படைப்புகள் பல லட்சம் பேரின் வாழ்வைத் தொட்டுச் செல்கின்றன. நாம் அதை நேரடியாக பார்க்க முடியா விட்டாலும் அந்த உணர்வு நம்மில் பரவியிருக்கிறது. நான், என் பணம் என்று குறுக்கிக் கொள்ள முடியாமல் ஒரு சமூக மனிதனாக என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியை எழுப்பி துரத்துகிறது.
அந்தத் தேடலில் தேங்கி விடுவதோ அடுத்தடுத்த வளர்ச்சிக் கட்டங்களில் நகர்ந்து செல்வதோ நமது தேர்வு. ஆனால், அந்தத் துடிப்பை சந்திக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். குறிப்பாக நடுத்தர வர்க்க, படித்த, வெள்ளை சட்டை வேலை பார்க்கும் அனைவருக்கும் இந்தத் துடிப்பு வாழ்வின் இளைய பருவத்தில் எப்போதாவது எட்டிப் பார்க்கும்.
அந்தத் தேடலின் மூலம்தான் வலைப்பதிவுகள் அறிமுகமாயின. ஆரம்பத்தில் தயக்கமான தொடக்கம், கடல் அலையில் கால் நனைப்பது போல நெருங்கி வருதல், அடுத்து இறங்கி ஆடி மகிழ்தல், அதன் பிறகு, சலித்துப் போய் வெளியில் வந்து உடலை துவட்டி விட்டு அடுத்த வேலையை பார்க்கப் போய் விடுதல் என்று பெரும்பாலானோர் ஒதுங்கி விடுகிறோம். நமது வாழ்க்கையின், உலகப் பார்வையின் சட்டகங்கள் ஆழ் கடலில் மூழ்கி அந்த உலகை ஆய்வு செய்வதற்கான தயாரிப்புகளை நமக்கு கொடுத்திருப்பதில்லை.
மூத்த வலைப்பதிவர்கள், முதிய வலைப்பதிவர்கள், முந்தைய வலைப்பதிவர்கள், முன்னாள் வலைப்பதிவர்கள் என்று வருவதும் போவதும் நடந்து கொண்டே இருக்கிறது. வெகு சிலர் மட்டும் தொழில் முறை காரணங்களுக்காக தமது வலைப்பதிவுக்கும் அவ்வப்போது ஓரிரு இடுகைகள் மூலம் உயிர் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், வலைப்பதிவையே ஒரு சமூக இயக்கமாக மாற்றிய விரல் விட்டு எண்ணக் கூடிய அல்லது ஒரே வலைப் பதிவு வினவு தளம் என்று சொல்லலாம்.
முதன் முதலில் வினவு தளம் எனக்கு அறிமுகமானது, லீனா மணி மேகலை பற்றிய சர்ச்சையின் போதுதான். லீனா மணிமேகலையின் கவிதையில் என்ன தவறு என்று தோன்றியது, அதற்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம், அவரை வாயடைக்கச் செய்வதில் என்ன மும்முரம் என்று நியாயம் பேச வந்தது. எல்லா காலத்துக்கும், எல்லா இடத்துக்கும் பொருந்தும் உலகப் பொது அறங்களின்படி, அப்படி ஒரு கவிஞரின் கவி பாடும் உரிமையை முடக்கியது கோபத்தை ஏற்படுத்தியது. ஆனால், கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய் என்பது போல எந்த ஒரு விஷயத்தையும் அதன் வரலாற்று பின்னணி, அதன் பின் இருக்கும் அரசியல் இவற்றையும் சேர்த்து புரிந்து கொள்ள வேண்டும் என்று பின்னர் புரிந்தது.
எல்லோரும் சரிதான், நான் என்னளவில் முடிந்ததை செய்கிறேன், நானும் சரிதான், அம்பானி அவரளவில் முடிந்ததை செய்கிறார் அவரும் சரிதான், யார் யாரை குறை சொல்ல முடியும் என்ற மொக்கை பதிவுலக வாதம் கைவந்திருந்தது. ஆனால், அது மனதுக்குள் கசப்பையும், ஏமாற்றத்தையும்தான் தந்தது. எல்லாரும் சரியாக எப்படி இருக்க முடியும்? பல ஆயிரக் கணக்கான மக்களை அவர்களது வாழ்விடங்களிலிருந்து துரத்தி விட்டு சுரங்கம் தோண்டி அலுமினியத் தாது எடுக்க முயற்சிப்பவரும், அவர்களால் வீடும், வாழ்வும் இழந்து நாடோடிகளாக விடப்படுவர்களும் சரிதான் என்றால் அது என்ன முட்டாள் தனம்?
அடுத்த மாத வாடகைக்காக, அரிசி வாங்குவதற்காக, குழந்தையின் படிப்புச் செலவுக்காக, நோக்கியா தொழிற்சாலையில் வேலைக்குப் போகும் அம்பிகா என்று தொழிலாளியும் சரிதான், அம்பிகாவின் உடல் கன்வேயரில் சிக்கித் துடிக்கும் போதும், உற்பத்தியை இழக்க விரும்பாத மேலாளரும் சரிதான், தனது லாப வளர்ச்சிக்காக அவரை இயக்குவிக்கும் நோக்கியா நிறுவனமும் சரிதான் என்றால் அது என்ன விதமான நியாயம்?
சுதந்திரம், சமத்துவம், தன்முனைப்பு இந்த மூன்றும்தான் தேவை, அதை வைத்துக் கொண்டு யார் வேண்டுமானாலும் உழைத்து முன்னேறி விடலாம், முன்னேற முடியவில்லை என்றால் சோம்பேறித்தனமும், முட்டாள்தனமும்தான் காரணமாக இருக்கும் என்ற சந்தைப் போட்டி பொருளாதார வாதமும் நிறைய பிடித்திருந்தது. ஆனால், நோக்கியா தொழிற்சாலைக்கு 2000 ரூபாய் சம்பளத்தில் வேலைக்குப் போக வேண்டும் என்ற சுதந்திரம் அம்பிகாவுக்கும், அம்பிகாவின் உயிரை வாங்கியாவது லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற சுதந்திரம் நோக்கியாவுக்கும் இருக்கிறது என்றால் அதில் என்ன சமத்துவம் இருக்கிறது? விருப்பம் இல்லை என்றால் நோக்கியாவை விட்டு விட்டு அருகில் இருக்கும் சாம்சங் தொழிற்சாலையில் வேலைக்குப் போவதுதான் சுதந்திரமா?
ஏன் நம்ம நாடு மட்டும் இப்படி இருக்கு? ஏன் இத்தனை குழந்தைகள் பட்டினியால் சாகிறார்கள், அதே சமயம் பளபளக்கும் மால்கள் புதுசு புதுசா உண்டாகுதே? என்ன காரணம்?
இப்படி எண்ணற்ற கேள்விகளை கேட்கத் தூண்டியது வினவு. வினவு, வினை செய் என்று வினவின் முகப்பில் இருந்த முழக்கமும் வினவு பேசும் அரசியலும், சிந்தனை முறையும் கேள்வி கேட்பதோடு நிற்காமல் கிடைத்த விடையை மாற்றுவதற்கான வினையாற்ற வேண்டும் என்ற ஊக்கத்தையும் அளித்தன.
படிக்கும் பழக்கத்தையே மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். சின்ன வயதில் படிப்பு என்றால் ஒரு வரி விடாமல் எல்லாத்தையும் படித்து புரிந்து கொள்ளணும் என்பது வரையறையாக இருந்தது. ஆனால் ராஜேஷ் குமார் நாவலையும், சுஜாதா கதையையும் அப்படி படித்து மனதில் இருத்திக் கொள்ள தேவை இல்லாமல் போய் விட, போகப் போக படிப்பது என்பதே நுனிப்புல் மேய்வது என்று மாறி விட்டது. படிப்பதை படிக்கிறோம், ஒட்டுவது ஒட்டும், அதுதான் நான், அதுக்கு மேலே வேணும்னா வேறு யார்கிட்டேயாவது பேசுங்க என்று திமிர்தான் அதற்கான நியாயப்படுத்தல். அத்தகைய நியாயப்படுத்தல் ஒரு முட்டாளின் சொர்க்கத்தில் வாழ கற்றுக் கொடுத்தது. அந்த சொர்க்கத்தை உடைத்து வெளியில் வரக் கற்றுக் கொடுத்தது வினவு.
வேறு எந்த ஒரு கருவியையும், உறுப்பையும் போல பழக்கப் பழக்க மாறுவதுதான் நமது மூளையும். ஆழ்ந்து படித்து, படித்ததை அசை போட்டு, அசை போட்டதை எழுதிப் பார்த்து, எழுதிப் பார்த்ததை இன்னொருவருக்கு விளக்க முடிவதுதான் வாசிப்பு. அதற்கு தகுந்தவற்றை வாசிப்பதுதான் வாசிப்பு. சுஜாதாவும், சாண்டில்யனும், சாரு நிவேதிதாவும் படிப்பதற்கு முயற்சி தேவைப்படாத எழுத்துக்களாக இருக்கலாம். அவற்றை மட்டுமே படித்தால் மழுங்கிப் போன மூளையின் வடிவில் அதற்கான விலையையும் நாம் கொடுக்கிறோம்.
மனித வரலாற்றின் மகத்தான சிந்தனையாளர்களின் படைப்புகளை, பல ஆண்டுகள் உழைத்து, பல ஆண்டுகள் சிந்தித்து அவர்கள் உருவாக்கிய படைப்புகளை படிப்பதற்கு அதே அளவு உழைப்பை செலுத்தும் ஒழுக்கம் வேண்டும். ஒரு கட்டுரையின் ஒரு வார்த்தையைக் கூட உருவி எடுத்து விட முடியாத படி இறுக்கமான உரைநடைகளை படிக்கும் போது, உடற்பயிற்சியில் முறுக்கேறும் தசைகளைப் போல மூளையின் நரம்பிணைப்புகள் துடிப்படையும். அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும், வாழ்நாள் முழுவதும் செய்ய வேண்டும், மூச்சு விடுவதை நிறுத்தும் வரை செய்ய வேண்டும்.
கல்லூரிப் படிப்பும், வாசிக்கும் வசதியும் கிடைத்த சிறுபான்மையினரில் ஒரு பகுதியான நமக்கு அந்தக் கடமை இருக்கிறது. நமக்காக சேற்றில் காலை வைத்து நெல்லை விளைவிக்கும் விவசாயிக்கும், நமக்காக ரத்தத்தையும், உயிரையும் சிந்தி பொருட்களை உற்பத்தி செய்து தரும் தொழிலாளர்களுக்கும் நாம் கொடுக்க வேண்டிய பண்டமாற்று இதுவாகத்தான் இருக்க முடியும். இதற்குக் குறைவான எதுவும், சமூக உறவில் நம்மை விட பலவீனமான நிலையில் இருப்பவர்களை ஆதாயம் எடுத்துக் கொண்டு, குறைந்த உழைப்புக்கு மாற்றாக அவர்களது அதிக உழைப்பை திருடுவதற்கு சமமாகி விடும்.
எதற்காக படிக்க வேண்டும்? நாம் எதைப் படிக்கிறோமோ, நமது வாழ்க்கையை எப்படி நடத்துகிறோமோ அதன் மூலம் நமது எண்ணங்களும் உணர்வுகளும் வடிவம் பெறுகின்றன. அந்த எண்ணங்களும் உணர்வுகளும் நமது வாழ்க்கையை உருவாக்குவதில்லை. இருந்தாலும், நமது படிப்பும், தத்துவமும், கோட்பாடும் என்னை அறிதல், இந்த உலகத்தை அறிதல், இந்த சமூகத்தை அறிதல் என்ற அறிவுத் துறை சுய திருப்தியோடு நின்று விடுவது மேலே சொன்ன குறைவான உழைப்பை விட மோசமான திருட்டுத்தனம். நமது வாசிப்பும், உழைப்பும் சமூகத்துக்குப் பயன்படும்படி அமைய வேண்டும். சமூகத்தை மாற்றி அமைக்கும் திசையில் செலுத்தப்பட வேண்டும்.
அதற்கு இந்த உலகத்தை புரிந்து கொள்ள வேண்டும், மூலையில் உட்கார்ந்து, அல்லது காட்டுக்குள் அலைந்து திரிந்து, அல்லது ஏற்காட்டில் வட்டம் கூட்டி உருவாக்க முயற்சிக்கும் மன ஒளியில் மட்டும் அந்த ஞானோதயத்தை பெற்று விட முடியாது. நடந்தவற்றை வரலாற்றிலிருந்தும், கடந்த கால படைப்புகளிலிருந்தும், நடப்பவற்றை சமகால பதிவுகளிலிருந்தும் தெரிந்து கொண்டு, அந்த தகவல்களிலிருந்து உண்மையை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். உண்மை என்பது ஒன்றுதான். அது நடைமுறையினால் உண்மை என்று நிரூபிக்கப்படுகிறது. நடைமுறை தவறென்று நடந்தால் உண்மையும் மாறிக் கொள்ள வேண்டும்.
எல்லா காலத்துக்கும் எல்லா இடத்துக்கும் பொருத்தமான உண்மை என்பது இருக்க முடியாது. மனிதர்களின் வாழ்க்கையும், நடைமுறையும் மாறும் போது உண்மைகளும் மாறுகின்றன. இந்த காலத்தில், இந்த சமூக சூழலுக்கு எது உண்மை என்பதை கண்டறிந்து புரிந்து கொள்வதும் மற்றவர்களுக்குச் சொல்வதும் நமது கடமை.
வினவின் ஊடாக தினமும் அந்தக் கடமையை, சமூக பரிமாற்றத்துக்கான அடிப்படை நேர்மையை கற்றுக் கொள்கிறேன்.
– மா சிவகுமார்