Monday, April 21, 2025
முகப்புஉலகம்அமெரிக்காமுதலாளித்துவத்தின் சாதனை - டெட்ராய்ட் நகரம் திவால் !

முதலாளித்துவத்தின் சாதனை – டெட்ராய்ட் நகரம் திவால் !

-

மெரிக்காவின் வாகன உற்பத்தியின் சின்னமாகவும், மிகப் பெரிய பணக்கார நகரமாகவும் திகழ்ந்த டெட்ராய்ட் நகரம் தற்போது திவாலாகி விட்டிருக்கிறது. அகலமான சாலைகள், பிரம்மாண்டமான கட்டிடங்கள், மகத்தான அமெரிக்க கார் உற்பத்தி தொழிற்சாலைகள் என்று கொழித்த டெட்ராய்ட் நகரம் இன்று சோர்ந்து போய் முடங்கி கிடக்கிறது.

டெட்ராய்ட் சுவர்கள்
உதவி கேட்டு கதறும் டெட்ராய்ட் நகர சுவர்கள். படம் : நன்றி கார்டியன்.

டெட்ராய்ட், 20-ம் நூற்றாண்டில் உலகின் சாலைகளில் ஓடுவதற்காக விதவிதமான கார்களை இரவு பகல் பாராமல் உற்பத்தி செய்த நகரம். அமெரிக்காவிலேயே அதிக அளவு தனி நபர் வருமானம் கொண்ட நகரம் இன்று போரில் சீரழிந்த நகரம் போல் காட்சியளிக்கிறது. ஒரு காலத்தில் 20 லட்சமாக இருந்த மக்கள் தொகை இன்று வெறும் 7 லட்சமாக சுருங்கி விட்டது. சுமார் 78,000 கட்டிடங்கள் பாழடைந்து கிடக்கின்றன. வீதிகள் வெறிச்சோடி உள்ளன. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது; வீதிகளில் பாதிக்கும் அதிகமான தெருவிளக்குகள் எரிவதில்லை. 60 சதவீத ஆம்புலன்ஸ் சேவை முடங்கியுள்ளது, குற்றச் செயல்கள் நாட்டின் சராசரியை விட ஐந்து மடங்கு அதிகமாகியுள்ளன. போலீசை தொலைபேசியில் அழைத்தால் அவர்கள் உங்கள் அழைப்பை ஏற்கவே 1 மணி நேரம் ஆகிறது.

டெட்ராய்ட்டில் நகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவோ, ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வுதியம் கொடுக்கவோ நிதி இல்லை. நகரத்தின் கடன் சுமை 18 பில்லியன் டாலர்கள் (1 லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய்) ஆகி விட்டது. மார்ச் மாதம், நெருக்கடிகளை சமாளிக்க இது போன்ற திவால் நிலைமையை சமாளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற ஸ்னைடர் அண்ட் கெவின் ஆரை நகர மேயர் நியமித்தார்.

அமெரிக்க பொருளாதார கோட்பாட்டின்படி டெட்ராய்ட் சுயேச்சையான நிதி ஆளுமை கொண்ட நகரம். நகரத்தின் நிதி தேவைகளை பெரும்பாலும், வரி, வாடகைகள், மூலம் ஈட்ட வேண்டும். அந்த அடிப்படையில் டெட்ராய்ட் நகரம் தொழில் ரீதியாக துடிப்பாக இருந்த காலத்தில் பணக்கார நகராட்சியாக இருந்தது. டெட்ராயிட்டின் பொருளாதாரம் அங்கு குவிந்திருந்த வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் இவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது. அமெரிக்காவின் மிகப் பெரும் நிறுவனங்களான ஃபோர்ட், ஜெனரல் மோட்டார்ஸ், க்ரைஸ்லர் போன்ற நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கின.

1970-களில் உலக முதலாளித்துவத்தை பீடித்த பொருளாதார சுணக்கத்தின் நடுவில் ஜப்பான், கொரியா ஜெர்மனி நாட்டு நிறுவனங்கள் அமெரிக்கா உள்ளிட்ட வாகனங்களுக்கான உலகச் சந்தையில் வெற்றிகரமாக நுழைந்தன. அடுத்த 20-30 ஆண்டுகளில் ஃபோர்ட், ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் தமது உற்பத்தி தளங்களை மெக்சிகோ, சீனா, இந்தியா போன்ற நாடுகளுக்கு மாற்றி டெட்ராயிட்டில் இருந்த தொழிற்சாலைகளை இழுத்து மூடின. இதனால் டெட்ராய்ட்டில் வேலை வாய்ப்புகள் பெருமளவு குறைந்தன.

வேலை இல்லை, சம்பளம், இல்லை, அரசுக்கு வரி இல்லை, பொருட்கள் வாங்க காசு இல்லை, வங்கிகளில் போட பணமில்லை, வங்கிகள் காற்றாடின. அரசுக்கு நிதி வருவாய் குறைய தொடங்கியது. டெட்ராய்ட்டை முதலாளித்துவ பொருளாதாரம் படிப்படியாக கைவிட ஆரம்பித்தது.

கைவிடப்பட்ட ரயில் நிலையம்
பாழடைந்த ரயில் நிலையம் முன்பு உள்ள ஒரு வீட்டுச் சுவரில் படம் வரையும் ஓவியர்கள் (படம் : நன்றி கார்டியன்)

டெட்ராய்ட்டின் இந்த நிலைமைக்கு அங்கு தலைவரித்தாடும் ஊழலும் ஒரு காரணமென்று சிலர் கூறுகின்றனர். இதற்கு முன்பிருந்த மேயர் ஊழல் குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்டது அப்படித்தான் பெரிதாக்கப்படுகிறது. ஆனால், நகரத்தின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் முதலாளித்துவத்தின் இயங்கு முறைதான் என்று தெளிவாக தெரியும் போது அதை ஊழல் நிர்வாகம் என்று சுருக்குவது அபத்தமானது; இது போன்று நகரங்களையும், ஊர்களையும் சுரண்டி கொழுத்து விட்டு அடுத்த இடத்துக்கு நகர்ந்து விடும் முதலாளிகளுக்கு முட்டுக் கொடுப்பது.

இப்பொழுது டெட்ராய்ட் அவசர நிலை பிரகடன்ம் செய்யப்பட்டது போல காட்சியளிக்கிறது. கடனை அடைக்கவும், நிதி நெருக்கடியை சமாளிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நகராட்சி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு நிதி வெட்டப்பட்டுள்ளது. வருமான வரி உயர்த்தப்பட்டுள்ளது. பலர் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர்.

இதை பற்றி கருத்து தெரிவித்த நகராட்சி ஊழியர்கள் சங்கத் தலைவர் அல் கேரட்டி,”டெட்ராயிட் நகரத்தை மீண்டும் கட்டமைக்க ஆகும் செலவுகளை அப்பாவி தொழிலாளர்கள் மீது ஏற்றிவிட கூடாது” என்கிறார். ஆனால் முதலாளித்துவ நெருக்கடி நிலை மீட்சிக்கு வேறு வழி இல்லை. வரிகளை உயர்த்தி பணக்காரர்களை பகைத்துக் கொள்ள முடியாது அல்லவா?

வியாழக்கிழமை (ஜூலை 18-ம் தேதி) டெட்ராய்ட் நகராட்சி திவாலாகிவிட்டதாக அறிவிக்க கோரியும், அதற்கு மத்திய அரசு நிதி உதவி செய்ய வேண்டும் என்று திவாலுக்கான மத்திய நிதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது டெட்ராயிட் நகராட்சி. ஆனால் நீதிமன்றம் மனுவை நிராகரித்துவிட்டது.

டெட்ராய்ட்டின் இந்த வீழ்ச்சி உலக மக்களுக்கு முதலாளித்துவ நடைமுறையை புரிய வைக்கும் ஒரு பாடம். உலகின் வாகன உற்பத்தியின் தலைமையிடமாக அறியப்பட்ட டெட்ராயிட்டிற்கே இந்த நிலை என்றால், துணித் துறையில் கொழித்த திருப்பூர் வீழ்ந்தது புரிந்து கொள்ளக் கூடியதே. இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று போற்றப்படும் பெங்களூருக்கும், பளபளக்கும் கட்டிடங்களால் நிரம்பி வழியும் சென்னையின் ஐடி காரிடாருக்கும் முதலாளித்துவம் தயாரித்துக் கொண்டிருக்கும் எதிர்காலம் என்ன என்று இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

டெட்ராயிட்டின் இன்றைய நிலையை சற்றே கேலியாக விளக்கும் வீடியோ

– ஆதவன்