என் பார்வையில் வினவு – 18 : சீனிவாசன்
எனது பார்வையில் வினவு என்பதை விட எனது வாழ்க்கையில் வினவு என்பதுதான் பொருத்தமாக இருக்கும். தற்பொழுதெல்லாம் இணையத்தில் இருக்கும் பொழுதெல்லாம் வினவை திறந்து புதிய கட்டுரைகள் இருக்கிறதா என பார்ப்பதும், ஏற்கனவே உள்ள கட்டுரைகளுக்கான மறுமொழி என்ன வந்திருக்கிறது? என பார்ப்பதும் அனிச்சை செயலாகவே மாறிவிட்டது. ஊர் நூலகத்தில் வார இதழ்களும், சுஜாதா, பட்டுகோட்டை பிரபாகர், சு.பா, பால குமாரன் என பொழுது போக்கு நாவல்கள் படித்து கொண்டிருந்த பொழுதுதான் இணையத்தின் வலைப்பூக்கள் பிரெளசிங் சென்டர் வழியே எனக்கு அறிமுகமானது. கணிணி திரையில் தமிழ் காணும் பொழுது மகிழ்ச்சியாக இருந்தது, ஏற்கனவே இருந்த வாசிப்பு அனுபவத்தின் காரணமாய் மொக்கையாய் இருந்த பதிவுலகமோ, எனக்கு சொர்க்கமாய் இருந்தது. பின்னர் நானும் அந்த உலகத்தில் கலக்கும் பொருட்டு, சில ஆண்டுகள் கழித்து வெளிநாட்டு வாழ்க்கையின் பயனாய் 2009-ல் மடிக்கணிணி வாங்கும் பொழுதுதான் வினவு எனக்கு அறிமுகமாகியது.
அதுவரை விகடன், குமுதத்தில் மட்டும் அரசியல் கட்டுரைகள் படித்திருந்த எனக்கு, வினவு படிக்கும் பொழுது அதிர்ச்சி, ஆச்சரியம், பயம் என குழப்பமான பல கலவைகள் ஏற்ப்பட்டன. எப்படி? இப்படி எழுதுறாங்க என யோசித்ததுண்டு. மேலும் பின்னூட்டங்களின் வாயிலாக பல தோழர்களின் வலைப்பூக்களை படிக்கும் வாய்ப்பும் வினவின் வழியே கிடைத்தது. வாசிக்கத்தக்கது எது? தேவையற்றது எது? என்பதை வினவின் வழியாகத்தான் முதன் முதலில் கற்றுக் கொண்டேன். வினவு இல்லாவிடில் இந்நேரம் ஏதேனும் ஒரு பதிவர் கும்பலில் இணைந்து இந்நேரம் மூத்த பதிவராக கூட ஆகி ஒரு வேளை ஓய்வும் பெற்றிருக்கலாம். நல்ல வேளை பதிவுலகம் பிழைத்தது…
வினவின் வழியாக நான் கற்றுக்கொண்டவற்றை சில முக்கியமான கட்டுரைகளின் வாயிலாய் பகிர்ந்து கொள்வது சிறப்பாய் இருக்குமென நினைக்கிறேன்.
சுஜாதாவும், பால குமாரனும் படித்து கொண்டிருந்த பொழுது, ஜெ.மோ,சாரு, எஸ்.ரா போன்றோர் எனக்கு என் நண்பர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு இலக்கியம் என்பது இதுதான் என்று போதனையும் அளிக்கப்பட்டது. புலம்பலும், ஒப்பாரியும், பாலியல் சொற்களும்தான் இலக்கியம் என்று நினைத்து கொண்டிருந்த பொழுது, ஜெயமோகன் சுந்தர ராமசாமி குறித்து வந்த கட்டுரைகள் எழுத்தாளர்களின் தரம் பற்றிய நல்ல புரிதலை கொடுத்தன. அதிலும் இதயத்தை ஈரமாக்குவது இலக்கியமா, அரசியலா எனும் கட்டுரை இலக்கியம் குறித்த நல்ல புரிதலை கொடுத்தது. வெறுமனே வருந்தி பின்னர் நம் உணர்வுகளை நீர்த்துப்போக செய்யும் விதமான விசயங்கள் இலக்கியமல்ல எனும் புரிதல் அந்த கட்டுரையின் வாயிலாகவே எனக்கு ஏற்ப்பட்டது.
மொக்கை என்பதன் விளக்கமும், மொக்கை பதிவு உடல் நலத்திற்க்கு கேடு என்பதன் வாயிலாகவே கிடைத்தது. எதை படிப்பது? ஏன் படிக்க வேண்டும்? எனும் கேள்விக்கு தோழர் மருதையனின் பாப்கார்ன் தலைமுறையும் பாமரர்களின் விடுதலையும் சிறந்த பதில் தரும் கட்டுரை. இந்த கட்டுரையை மட்டும் கணக்கற்ற முறைகள் படித்திருப்பேன், அலுவலகத்தில் புதிதாய் வரும் தமிழ் நண்பர்களிடத்தும் இதை பகிர்ந்து கொண்டு கட்டாயம் படிக்க சொல்லியிருக்கிறேன்.
வினவின் சிறுகதைகள், கவிதைகள் அனைத்தும் சிறப்பான அரசியலை சொல்லிக்கொடுத்திருக்கின்றன. குறிப்பாய் மட்டப்பலகை குட்ட குட்ட குனியாதே எனும் முக்கியமான கருத்தை என்னுள் விதைத்தது. அலுவலகம் என்றாலே டார்ச்சர் இருக்கும்,அதை பொறுத்துதான் செல்ல வேண்டும் என்ற என் மனநிலையும் மாற்றம் பெறத்துவங்கியது.
எவ்வளவு பெரிய ரவுடியாக இருப்பினும், அமைப்பாய் நாம் திரளும்போது நம்மை அவர்களால் ஒன்று செய்ய இயலாது என ஜேப்பியார் கல்லூரியில் தொழிற்சங்கம் உருவான கதை உணர்த்தியது. சுதந்திரம் என்ற பெயரில் உதிரியாய் இருந்து வீணாய் போவதை விட, அமைப்பில் இருந்து சமூகத்தை உயர்த்தி தானும் உயர வேண்டும் என்பதை அறிவாளிகளின் அந்தரங்கம் அழகாய் உணர்த்தியது. எந்த ஒரு அமைப்பிலும் இணைந்து செயல்படாத அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் குறித்து நான் கொண்டிருந்த பிம்பமும் கலைந்தது.
உழைப்பே உயர்வென்பதில் உள்ள அபத்தத்தையும், கல்வியென்பது மக்களின் அடிப்படை உரிமை என்பதை நடிகர் சூர்யா நமக்கு முன்மாதிரியா? நன்கு புரிய வைத்தது. கல்விக்கு உதவச்சொல்லும் நபர்களிடமும், சினிமா நடிகர்களின் விளம்பரத்தை சேவையாக்கி பரப்பும் நபர்களிடமும் முக்கியமாக நான் படிக்க சொல்லும் கட்டுரை இது.
மெய்யுலகில் நான் கண்ட தோழர்களின் வாழ்க்கையும், மெய்நிகர் உலக வினவின் வார்த்தைகளையே உறுதிப்படுத்தியது. எனது ஊரில் பெட்டிக்கடை வைத்திருக்கும் தோழர் ஒருவர் பன்னாட்டு குளிர் பானங்களை கடையில் விற்க மறுத்தும், தோழரை பற்றி அறியாமல் அக்குளிர்பானங்களை கேட்போரிடமும் அவர் அந்நிறுவனங்களின் சுயரூபத்தை வெளிப்படுத்தி அரசியல் பேசும்விதமும், சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடற்ற தன்மையை கொண்ட தோழர்கள் இவர்கள் என உணர்த்தியது.
“ என்ன தோழர் வீட்டை பாக்காம அமைப்பு வேலை ஜெயிலுன்னு போறீங்க, கோர்ட்டுக்கும் போக வேண்டியிருக்கு, உங்க குடும்பத்தை யாரு பாப்பா?” என்ற என் கேள்விக்கு…
“என்ன தோழர் இது! ரவுடி,கட்ட பஞ்சாயத்துக்காரன்,சாரய வியாபாரி இவனுங்க எல்லாம் ஜெயிலுக்கு போறாங்க, இவங்க எதுக்காச்சும் வெட்கப்படுறாங்களா? நம்ம மக்களுக்காக போராடுறம் தோழர்.. நம்ம எதுக்கு தோழர் வெட்க்கப்படனும்? தயங்கனும்?” என அவர் சொன்ன பதிலில்… உண்மையில் இவர்கள்தான் நம் நாட்டுக்காய் போராடுபவர்கள் என்ற எண்ணமும், என் கேள்வி குறித்து எனக்கே வெட்கமும் ஏற்பட்டது. எங்கள் பகுதியில் செயல்படும் தோழர்களின் செயல்பாடுகளை பார்த்த பின்பு வினவின் மீதான மரியாதை இன்னும் கூடியது.
மற்ற எழுத்தாளர்களின் வாசகர்களாய் இருப்பதில் பிரச்சனை ஒன்றுமில்லை. படித்தோமோ போனோமா என்று இருந்துவிடலாம். வினவு வாசகர்கள் அப்படி இருக்க முடியாதென்றே நினைக்கிறேன், குறைந்தபட்சம் தன் சொந்த வாழ்க்கையை மாற்றிக்கொள்ள இயலாத குற்ற உணர்ச்சியாவது அவர்களை வாட்டும். வினவு படித்ததின் விளைவாய் என்னுடைய வாழ்க்கையிலும் பண்பாட்டுத்தளத்தில் மாற்றம் நிகழ்ந்தது.
சாதி, சடங்குகள், தாலி மறுத்து எனது திருமணம் எளிய முறையில் நடந்தது. எனது திருமணத்திற்க்கான அழைப்பிதழை வினவுக்கு அனுப்பியபொழுது அது ஜெயமோகன் கட் அவுட்டை மிஞ்சும் கீ-போர்ட் கட்டுரையின் இறுதியில் வந்தபொழுது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நானும் உலகின் அழகிய மணமக்களில் ஒருவரானேன். திருமணத்திற்கு முன்பும் பின்பும் சரி ஏராளமான முறை மகிழ்ச்சியின் தருணங்கள் படித்துள்ளேன். ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் புதிய சிந்தனையையும், புத்துணர்ச்சியையும் செய்யவேண்டிய பணியையும் நினைவூட்டும் கட்டுரை இது. இன்னும் நான் தோழராய் உயரவில்லை, நேரடியான அரசியலிலும் இதுவரை பங்குபெறவில்லை. என் வெளிநாட்டு வாழ்க்கைக்கு சீக்கிரம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, தோழராய் அரசியலில் உயர்வதே வினவை நான் தொடர்ச்சியாய் படிப்பதற்க்கு சிறந்த அடையாளமாய் இருக்கும்.
வினவின் தொடர்ச்சியான வாசகனாய் இருப்பதால் சினிமா, மதம், ஈழம், பதிவுலம் மற்றும் தொழில்நுட்பம் என பரந்து பட்ட தளங்களில் என்னுடைய அறிவு மேம்பட்டிருக்கிறது. வினவிடம் முற்றும் முழுதாக முரண்படும் கட்டுரை ஒன்றும் உண்டு, அது ஸ்ரேயா கோஷல் பிடிக்குமா?
வினவுக்கு சில ஆலோசனைகள்
- வினவுக்கான வாசகர் வட்டம் கட்டுவது, மாதந்தோறும் கூட்டங்கள் நடத்துவது
- மூத்த தோழர்களின் வாழ்க்கை அனுபவங்களை வெளியிடுவது,
- சுரண்டலற்ற புதிய சமூகம் எப்படி இருக்கும் என்பதற்கு பாராளுமன்றத்துக்கு சென்ற பால்காரம்மா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அதுபோன்று அன்றைய சோவியத் ரஷ்யாவின் சமூக நிலைகள், போராட்டங்கள் குறித்து அதிகமான கட்டுரைகள் வெளியிடலாம்.
- தமிழ் மக்கள் இசைவிழா, வினோதகன் மருத்துவமனை போராட்டம், கோக்கோ கோலா போராட்டம், திருவையாறு தமிழிசை போராட்டம், கருவறை நுழைவு போராட்டம், இறால் பண்ணை அழிப்பு போராட்டம் என அமைப்பின் பழைய போராட்ட வரலாறுகளை கட்டுரைகளாக வெளியிடலாம்.
- இணைய வானொலி உருவாக்கலாம்.
- கலையரசன் முதலான மற்ற தோழர்களின் மற்றும் மற்ற தளங்களின் முக்கியமான கட்டுரைகள் நிறைய வெளியிடலாம், தற்பொழுது அது குறைந்து விட்டது.
- வாசிப்பு அனுபவங்கள் அதிகம் இல்லாதவர்கள், வினவு கட்டுரைகளை படித்து புரிந்து கொள்வது சிரமாமக உள்ளது எனவே அவர்களுக்கு புரியும் விதமான எளிய பாடல்கள், நாடகங்கள் வழியாக கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் சிறப்பாக இருக்கும். சிறந்த உதாரணம் : சொன்னாரு கலாம் சொன்னாரு.
- தினமும் அரைமணி நேரமோ அல்லது ஒரு மணிநேரமோ அன்றைய செய்திகளை, சிறிய விமர்சனத்துடன் காணொளியாக வெளியிடலாம்.
- குழந்தைகளுக்கான தனிப்பகுதி ஒன்று ஆரம்பிக்கலாம்.
- கல்வி குறித்த ஆய்வுக்கட்டுரைகள் அதிகம் வருவதில்லை, அதை அதிகப்படுத்தலாம்.
- மார்க்சிய கல்வி, கேள்வி பதில், நண்பர்களை தோழர்களாக தரம் உயர்த்துவது பற்றி நீங்களே சொல்லி உள்ளீர்கள். இதில் மார்க்சிய கல்விக்கு சற்று முக்கியத்துவம் கூடுதலாய் கொடுத்தால் நலமென தோன்றுகிறது.
- முன்பெல்லாம் பின்னூட்ட பங்களிப்பில் நிறைய தோழர்கள் காத்திரமான கருத்துக்கள் இடுவர், பின்னூட்டங்கள் வழியாகவும் நிறைய கற்று கொள்ள முடிந்தது. ஆனால் தற்சமயம் தோழர்களின் பங்களிப்பு கிட்டத்தட்ட நின்றுவிட்டது. வருத்தமளிக்கிறது. தோழர்களை பின்னூட்டத்தில் பங்களிக்க இதன் வாயிலாய் கேட்டு கொள்கிறேன்.
இறுதியாய் மிகச்சரியான பண்பாட்டையும், அரசியலையும் என் வாழ்வில் அறிமுகப்படுத்தியதற்கு வினவிற்க்கு என் நன்றிகள், சமூக மாற்றத்திற்க்கான புரட்சிகர அரசியலை தொடர்ந்து முன் எடுத்து செல்ல வினவிற்கு என் வாழ்த்துக்கள்.
– சீனிவாசன்