என் பார்வையில் வினவு – 21 : ஜீவா
ஆறாம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும் வினவுத் தோழர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
வினவு எனக்கு இணையத்தில் அறிமுகமாகி நான்கு அல்லது ஐந்து வருடங்கள் இருக்கும். ஆனால் நிஜத்தில் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் அறிமுகமானது விவசாயிகள் விடுதலை முன்னணி என்ற பெயரில். நான் பிறந்து வளர்ந்தது உசிலம்பட்டி அருகில் உள்ள கிராமத்தில். அங்கு தோழர்கள் குருசாமி, சிவகாமு மற்றும் பலர் வி.வி.மு இயக்கத்தை நடத்தி வந்தார்கள். என்னுடைய பள்ளி பருவத்தில் ம.க.இ.க தோழர்கள் எங்கள் கிராமத்திற்கு வந்து கலை நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். அப்பொழுதெல்லாம் ஏதும் புரியாது அனால் எதோ புதுசா இருக்குனு பார்ப்பேன்.
கல்லூரி காலத்தில் ஊரில் வெட்டியாக கிரிக்கெட் விளையாடி சுற்றிக் கொண்டிருந்தபோது தோழர்கள் சிவகாமு மற்றும் குருசாமி எங்கள் ஊர் இளவட்டங்களிடம் வி.வி.மு பற்றி பேசினார்கள். வைகை அணையில் இருந்து தண்ணி வரும்போது ஊர் கால்வாயை வெட்ட, ஊரில் உள்ள மற்ற பிரச்சினைகளை தீர்க்க/அறிய எங்களை அதில் ஈடுபடும்படி செய்தார்கள். அதில் எங்களின் ஈடுபாட்டை பார்த்து எங்களுக்கு கம்யூனிசம் பற்றி வகுப்பு எடுக்க அனுமதி கேட்டார்கள். நாங்களும் சரி என்று சொல்லி வைத்தோம். அன்றிலிருந்து வார இறுதி நாட்களில் தோழர் சிவகாமு எங்களுக்கு மூன்று மணிநேர வகுப்பு எடுப்பார்.
அவர் எங்களிடம் கேட்ட முதல் கேள்வி, இரும்பு தண்ணீரில் மிதக்குமா? நாங்கள் எல்லோரும் “மிதக்காது” என்றோம். அவர் மிதக்கும் என்று சொல்லி அதற்கு “மிதத்தல் தத்துவத்தை” பயன்படுத்தி விளக்கம் கொடுத்தார். அப்பொழுதுதான் புரிந்தது அறிவியல் வெறும் பாடம் அல்ல அது வாழ்க்கை என்று எனக்கு. பிறகு நிலபிரபுத்துவம், முதலாளித்துவம் மற்றும் பொதுவுடமை பற்றி மிக விளக்கமாக் சொன்னார். அந்த வயதில் பாதி புரியாவிட்டாலும் ஒரு அடிப்படையை கற்றுக் கொடுத்தது. அடுத்து நான்கு வருடம் அவர்களுடன் இணைந்து ஊரின் நீர்பாசனத்தை ஒழுங்கு படுத்தல் , சாக்கடை பிரச்சினை, ரேஷன் கடை போன்ற வேலைகளில் ஈடுபட்டோம். நான் அவர்களிடம் நிறைய கம்யூனிச புத்தகங்களை வாங்கி மாடு மேய்க்கும் போதும், வீட்டில், வயல் காட்டில் என பல இடங்களில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிப்பேன். எல்லாம் புரிந்தது எனச் சொல்லமுடியாது, ஆனால் ஓரளவுக்கு கம்யூனிசம் என்றால் என்ன? பொதுவுடமை என்றால் என்ன? பொருள் முதல்வாதம் என்றால் என்ன? போன்ற என்றால் என்ன கேள்விகளுக்கு பதில் சொல்லும் அளவுக்கு எனது அறிவை வளர்த்துக்கொண்டேன்.
எனக்கு ஓட்டுப் போடும் வயது வந்து முதன் முதலில் ஓட்டுப் போடலாம் என்று நினைத்த போது “ஓட்டு போடாதே புரட்சி செய்” என்ற முழக்கத்தை கேட்டு ஓட்டை போடாமல் தவிர்த்தேன். இன்னும் நான் ஒரு தேர்தலில் கூட ஓட்டுப் போட்டதில்லை. எனக்கு அரசியல் சொல்லிக் கொடுத்தது வி.வி.மு, அதிலும் குறிப்பாக தோழர்கள் சிவகாமு மற்றும் குருசாமி. குருசாமி எங்கள் ஊர் அதனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரிடம் விவாதம் செய்ததுண்டு.
2000-ல் நடந்த தஞ்சை “தமிழ் மக்கள் இசை விழாவுக்கு” தோழர்களுடன் சென்றிருந்தேன். அதுதான் முதன் முதலில் பார்த்த அரசியல்/விழிப்புணர்வு மேடை. அங்கு பெரியார்தாசன் வேதங்களை பற்றி மிக விரிவாக பேசினார். அப்பொழுதான் எனக்கு இந்து மதத்தின் கொடுமைகள் தெரியவந்தன. சாதிக் கொடுமைகளை நான் நேரிலே பார்த்திருந்தும் அங்கு சில தோழர்கள் சொன்ன விஷயம் கண்ணீரை வரவழைத்தது. அங்குதான் முதன் முதலில் மாட்டுக்கறி சாப்பிட்டேன். எனக்கு அரசியல், சாதி மதம் பற்றிய விழிப்புணர்வு, உலக வரலாற்றை படிக்கும் முறை என இச்சமூகத்தை எனக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர் வி.வி.முவின் தோழர்கள். அதன் விளைவாக விவசாய கூலி வேலை செய்து வரும் காசில் மதுரை சென்று சினிமா பார்த்துக் கொண்டிருந்த என்னை புத்தகங்களை வாங்கி படித்தேன். வேலை கிடைத்த பிறகு இணையத்தில் நிறைய படிக்கிறேன். நான் தோழர்கள் சிவகாமு/குருசாமியின் மாணவன் என்று பெருமையுடன் சொல்வேன்.
தலித்துக்களை எங்கேயும் எதற்கும் மதிக்காத எங்கள் ஊரில் அவர்களை விவிமு இயக்கத்தில் இணைத்து எல்லோருடனும் சமமாக நடத்தியவர்கள் தோழர்கள். இன்றும் உசிலம்பட்டி விவிமு சார்பாக போராட்டம் நடக்கும் போதெல்லாம் அவர்கள் இருக்கும் போட்டோவை வினவில் பார்க்கும் போது ஒரு வித பெருமை எனக்கு உருவாகும் அதே நேரத்தில் அங்கு நான் இல்லையே என வருத்தமாகவும் இருக்கும்.
நான் என் வாழ்க்கையை தீர்மானிக்கும் போது எனது குடும்பம் எனது சமூகம் (சாதி, ஊரில் சிறுபான்மை வகுப்பை சேர்ந்தவன் என்னதான் படித்தாலும் எவனும் மதிக்க மாட்டான், அதற்கு ஒரே தீர்வு பணம் என்று நினைத்தேன். இப்பொழுது மதிக்கிறார்கள் அனால் எனக்குதான் திருப்தி இல்லை.) தலையிட்டு நான் கட்டயாமாக ஒரு பெரிய வேலைக்கு போகணும் என்று தீர்மானித்தது. அதன் விளைவு தான் நான் இன்று கணிப்பொறி வல்லுநர். தொழில் நிமித்தமாக ஊரை விட்டு, தோழர்களை விட்டு நாடு நாடாக சுற்றிய போது எனக்கு இணையத்தில் வினவு அறிமுகமானது. வினவின் மூலம் என்னுடைய தோழர்கள் என் அருகில் இருப்பதாகவே உணர்கிறேன். இப்பொழுதெல்லாம் தினமும் குறைந்தது நாலு முறை வினவை படிக்கிறேன். எனது போனில் நான் அதிகமாக கேட்கும் பாடல்கள் ம.க.இ.க பாடல்கள் தான், அதிலும் குறிப்பாக பாரதிதாசன் பாடல்கள் மற்றும் காவி இருளில் “சொல்லாத சோகம்….” தோழர் கோவனின் குரலில் கேட்கவே உணர்ச்சிகள் பொங்கும்.
வினவு என்னுடைய தோழன், நான் தினமும் வாசிக்கும் புத்தகம். எனக்கு இச்சமூகத்தை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்.
என்னுடைய வேண்டுகோள்கள் :
1. தோழர்களின் உரைகள், பாடல்களை internet radio என்ற முறையில் ஒளிபரப்ப வேண்டும்.
2. கம்யூனிச ஆசான்களின் வரலாறு, எழுத்துகளை தொடர்களாக எழுத வேண்டும்.
3. பலர் கூறுவது போல் ஒரு சில கட்டுரைகள் மிக காட்டமான வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது, தேவையெனினும் அதனை குறைக்கலாம்.
இணைய வசதி இல்லாத தோழர்களின் எழுத்தை, கட்டுரையை என்னிடம் கொடுத்தால் தட்டச்சு செய்து கொடுக்கிறேன். வேறு எதாதவது கணிப்பொறி வேலை இருந்தால் கொடுங்கள் செய்து கொடுக்கிறேன். என்னால் இயன்ற பங்களிப்பை செய்கிறேன்.
வினவு மேலும் வளர எனது வாழ்த்துக்கள். நன்றி.
– ஜீவா
_____________________
என் பார்வையில் வினவு – 22 : பரமேசு

நேர்மையான செய்திகளின் தேவையை நாம் குறைத்து மதிப்பிட்டு விடுகிறோம். உணவு, நீர், உறைவிடம், கல்வி, வேலைவாய்ப்பு, தரமான வாழ்நிலை என்ற அத்தனை உரிமைகளுக்கும் இணையானதாகவும், மேற்சொன்ன உரிமைகளையும் பெறப் போராடத்தூண்டும் பொறியாகவும் இருப்பது நேர்மையான செய்திகள் தாம். அநேக வியாபாரச் செய்தி நிறுவனங்கள் ரகசிய அஜெண்டாக்களுடன் தான் இயங்குகின்றன.
சமீப நிகழ்வுகளிலேயே எத்தனையோ உதாரணங்களை நம்மால் எடுத்துக்காட்ட முடியும். கூர்மையான சாதி சமூக பிரச்சினைகளைக் கூட எப்படி வசதியாக முனை மழுங்கடிக்கிறார்கள் என்பதையும் பார்க்கிறோம். தொலைக்காட்சி கலந்துரையாடலில் முன்னாள் AERB தலைவர் டாக்டர். கோபாலகிருஷ்ணன் கூடன்குளம் அணுவுலை பாதுகாப்பு குறித்த நியாயமான கேள்விகளை எழுப்பும்போது ‘இந்து’ ராம் ‘அதெல்லாம் அமைச்சர் நாராயணசாமி ஆய்வு செய்துவிட்டார். எல்லாம் சரியாத்தான் இருக்கு’ என்கிறார். கூடன்குள அணுவுலையின் தரமற்ற உதிரிபாகங்கள் குறித்து டாக்டர் கோபாலகிருஷ்ணன் இந்தியன் எக்ஸ்ப்ரஸில் எழுதும் வரை அதுகுறித்து வாயே திறக்காத அணுசக்திதுறையையின் திருட்டுத்தனத்தைத் தட்டிகேட்காமல் சமாளிக்கிறார். இளவரசன் சாவிற்கு அரசியல் கட்சிகள் எப்படி எதிர்வினையாற்றின என்ற NDTV கேள்விக்கு ‘அது குறித்து எந்த கருத்தும் கூற மறுக்கிறார். இவர் தான் இந்திய செய்தித்துறையின் உண்மையான முகம் என்று சொல்லலாம்.
இலக்கியவாதிகள் தனி ரகம். அணுஉலைஎதிர்ப்புப் போராட்டங்களைப் பற்றி தினமலரில் சாருநிவேதிதா சாடுகிறார். வெளிநாட்டில் இருந்து காசு வருது என்கிறார். ஆதாரத்தை காட்டுய்யா என்றவுடன் மன்மோகனும் நாராயணசாமியும் இந்த ‘வெளிநாட்டுச் சதி’ குற்றச்சாட்டுகளை அமுக்கி வாசித்த நேரத்தில் தான் சாரு தினமலரில் வாந்தியெடுக்கிறார். இந்த ஒசிக்குடி ஒலக எழுத்தாளர்களையும் கருணாநிதி கனிமொழி கும்பலையும் வசதியாக மறந்து விட்டு பொத்தாம்பொதுவாக புலம்புகிறார் மனுஷ்யபுத்திரன்- ‘என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்’ என்று . இப்படியாப்பட்ட இலக்கியவாதிகளையும் இன்டெலிஜென்சியாவையும் வரமாகப் பெற்றிருக்கிற சூழ்நிலையில் தான் நமக்கு வினவு எப்போதையும் விட இன்னும் அதிகமாக தேவைப் படுகிறது.
சாதீய மதவாத முதலாளித்துவ எதிர்ப்பினூடாக தனிப்பட்ட வாழ்வில் ஆணாதிக்க எதிர்ப்பு சுயவிமர்சனத்தையும், பிற்போக்குத்தனத்தோடு தகவமைத்துக்(reconcile) கொள்ளாமல் இருக்கத் தேவையான துணிவையும் வினவு கற்றுத்தருகிறது என்பதுதான் எனது அனுபவம்.
கட்டுரைகளில் சில மிகைப்படுத்தல்களையும் பரபரப்புக்களையும் தவிர்க்கவேண்டும். அரசியல் தத்துவக் கட்டுரைகளை எழுதவேண்டும் விவாதங்களையும் ஊக்குவிக்கவேண்டும். இந்த நூற்றாண்டில் மார்க்சிய லெனினிய கோட்பாடுகளின் ஆகுமை (feasibility) குறித்தும் எழுதவேண்டும்.
செய்தியாளர்களாக கருத்துச்சொல்லிகளாக மட்டும் இராமல் களத்திலும் தொடர்ந்து போராடி வருகிற கொள்கைச் செம்மை தான் வினவு தோழர்களைச் சிறந்த முன்னுதாரணங்களாக நம்முன் நிறுத்துகிறது. வினவு தோழர்களுக்கும் சக வாசக நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.
– பரமேசு