Monday, April 21, 2025
முகப்புஉலகம்ஆசியாகுடிநீருக்காக போராடிய சிங்கள மக்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு !

குடிநீருக்காக போராடிய சிங்கள மக்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு !

-

லங்கையில் குடிநீர் மாசுபடுவதை எதிர்த்து போராடிய மக்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் கொல்லப்பட்டனர், 50-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இராணுவம்தென் இலங்கையில் கொழும்பிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடம் கம்பக மாவட்டத்தைச் சேர்ந்த வெலிவெரியா. வெலிவெரியாவிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் டிப்ட் புராடக்ட்ஸ் என்ற கையுறை தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்தத் தொழிற்சாலை இலங்கையின் மிகப்பெரிய பன்னாட்டு பெருநிறுவனங்களில் ஒன்றான ஹேலீஸ் குழுமத்தைச் சேர்ந்தது.

கையுறை தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுநீர் கலப்பதால் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் மாசுபட்டு வந்திருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணையை உள்ளூர் நீதிமன்றம் ஒன்று ஆகஸ்ட் 22-ம் தேதிக்கு ஒத்தி வைத்து விட்டது.

இதனால் வெறுப்படைந்த 12 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான மக்கள் கடந்த வியாழக் கிழமை மாலை 5 மணிக்கு சுத்தமான குடிநீர் கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொழும்பு-கண்டி சாலையில் போக்குவரத்தை தடுத்து நிறுத்தினர். ஆம்புலன்ஸ், பள்ளி வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.

காயமடைந்தவர்.
ஆயுதப் படைகளின் தாக்குதலில் காயமடைந்த ஒருவர்.

நிலைமையை கட்டுப்படுத்த போலீசும் இராணுவமும் அழைக்கப்பட்டன. பெலும்மகர சந்தியில் கூடியிருந்த மக்களை உடனே கலைந்து போகும்படி எச்சரித்த இராணுவ அதிகாரி அதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டார். இதில் 17 வயதான அகிலா தினேஷ் என்ற மாணவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.

தாக்குதலிலிருந்து தப்பித்து அருகில் இருந்த கிருத்துவ தேவாலயத்தில் புகுந்த மக்களைத் துரத்திக் கொண்டு நுழைந்த ஆயுதப் படைகள் அங்கு இருந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலரை மேலும் தாக்கியதாக போதகர் லக்பிரியா நோனிஸ் தெரிவித்திருக்கிறார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 19 வயதான ரவிஷான் பெரேரா சனிக்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தார். 29 வயதான நிலந்த புஷ்பகுமார ஞாயிற்றுக் கிழமை கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இன்னும் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்ட அகிலா தினேஷின் இறுதி ஊர்வலம் வெலிவெரியா மயானத்தில் ஞாயிற்றுக் கிழமை நடத்தப்பட்டது. இதை ஒட்டி கிராமத்தில் பெரும் எண்ணிக்கையிலான பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டிருந்தன.

சர்ச்
தேவாலயத்திலும் தாக்குதல்.

இலங்கையில் உள்நாட்டுப் போர் நடத்துவதற்காக தமது கைகளில் அதிகாரங்களை குவித்து, அரசு நிர்வாகத்தை இராணுவ மயமாக்கி வைத்திருக்கின்றனர் ஆளும் ராஜபக்சே குடும்பத்தினர். மக்களை பாதிக்கும் தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகளை எதிர்த்துப் போராடும் மக்கள் மீது ஆயுத அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகின்றனர். தமது உரிமைகளுக்காக போராடிய சிறுபான்மை தமிழ் மக்களை ஒடுக்குவதற்கான போரில் உதவி செய்த பன்னாட்டு நிறுவனங்கள், அந்த உதவிகளுக்கு விலையாக இப்போது இலங்கை முழுவதும் பொருளாதார சுரண்டலை நடத்திக் கொண்டிருக்கின்றன. அவற்றை பாதுகாத்து நிற்க வேண்டியது இலங்கை அரசின் கடமையாக மாறியிருக்கிறது.

‘போராட்டம் நடந்த தினத்தன்று சர்ச்சைக்குரிய தொழிற்சாலையிலிருந்து மூன்று கொள்கலன் வாகனங்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக அரசின் உயர்மட்டத்திலிருந்து வந்த உத்தரவின்படியே இராணுவத்தினர் மோசமாக நடந்துகொண்டனர்’ என்று அப்பிரதேசத்துக்கு சென்றுவந்த இதர கட்சித் தலைவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இலங்கையை சூழ்ந்திருக்கும் அமெரிக்க, ஐரோப்பிய, சீன, இந்திய பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலை எதிர்த்து அனைத்து இன மக்களும் இணைந்து போராடுவது அவசியம். நேற்று தமிழ் மக்களை கொன்று குவித்த சிங்கள அரசு இன்று வாழ்வுரிமைக்காக போராடும் சிங்கள மக்களையும் கொல்கிறது. பாசிச ராஜபக்சே கும்பலை எதிர்த்து நடத்தும் போராட்டம் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, சிங்கள மக்களுக்கும் அவசியம் என்பதை அவர்களே உணர்ந்திருப்பார்கள். ஏனென்றால் சிங்கள இனவெறி பாசிசம் என்பது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, சிங்கள உழைக்கும் மக்களுக்கும் எதிரிதான்.