இந்தியப் பொருளாதாரம் மீட்க முடியாத புதை மணலில் சிக்கியுள்ளது. பொருளாதார சரிவை மீட்டு நிலைப்படுத்தும் பொறுப்பில் இருப்பதற்கு யாரும் விருப்பம் இல்லை. எனினும் அத்தகைய நிபுணர்களும் கூட, அடுப்புக்கு விறகு இல்லை என்றால் வீட்டுக் கூரையை முறித்து பயன்படுத்தச் சொல்லும் அறிவாளிகளாக இருக்கிறார்கள். இருக்க முடியும்.

ஜூன் மாதத்தில் தொழில் துறை சென்ற ஆண்டு ஜூன் மாதத்தை விட 2.2 சதவீதம் சுருங்கியிருக்கிறது. 1.6 சதவீதம் சுருக்கம் என்று அறிவிக்கப்பட்டிருந்த மே மாதத்துக்கான புள்ளிவிபரம் 2.8 சதவீதம் என்று திருத்தப்பட்டிருக்கிறது. சந்தை ஆய்வாளர்கள் ஜூன் மாதம் 1.6 சதவீதம்தான் வீழ்ச்சி இருக்கும் என்று கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.
கார்களின் விற்பனை 7.4 % வீழ்ச்சியடைந்து 1.34 லட்சம் என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது. 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் 1.41 லட்சம் கார்கள் விற்பனையாகியிருந்தன. வணிக வாகனங்களின் மொத்த விற்பனை 14.93 சதவீதமும், கனரக வாகனங்களின் விற்பனை 19.88 சதவீதமும் குறைந்திருந்தன.
வங்கிக் கடன், ஐடி துறை ஊதியங்கள் என்று ஊதிப் பெருக்கப்பட்ட பொருளாதாரத்தில் விற்பனை சூடு பிடித்திருந்த போது, பல ஆயிரம் கோடி ரூபாய்கள் லாபம் குவித்த நிறுவனங்கள், விற்பனை வீழ்ச்சியின் சுமையை தொழிலாளர்களின் தலையில் ஏற்றி தப்பிக்க முயற்சிக்கின்றன. மாருதி சுசுகி தனது மானேசர் டீசல் எஞ்சின் தொழிற்சாலையில் ஒப்பந்தத் தொழிலாளர்களை கால வரையற்ற விடுமுறையில் போகச் சொல்லியிருக்கிறது. டோயோட்டா கிர்லோஸ்கர் ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணியை புதுப்பிக்கப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறது.
இந்த நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் (ஏப்ரல்-மே-ஜூன்) பாரத ஸ்டேட் வங்கியின் வாராக் கடன்கள் ரூ 9,702 கோடி அதிகரித்துள்ளது. முந்தைய காலாண்டு (ஜனவரி-பிப்ரவரி-மார்ச்) அளவை விட இது 19% அதிகம். இது வங்கி கொடுத்துள்ள மொத்தக் கடன்களில் 5.56% ஆகும். இந்த காலாண்டில் இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன்களின் மதிப்பு சென்ற ஆண்டை விட 51% உயர்ந்து ரூ 1.2 லட்சம் கோடியைத் தொட்டிருக்கிறது.

இந்திய தொழில், வணிக நிறுவனங்களின் நிதி நிலைமை தொடர்ந்து சீர்குலைந்து வருவதை இது காட்டுகிறது. ஸ்டேட் வங்கியின் கடன்களில் இந்த காலாண்டில் ரூ 13,766 கோடி மதிப்பிலான கடன்கள் வாராக் கடன்களாக வீழ்ச்சியடைந்திருந்தன. முந்தைய வாராக் கடன்களில் ரூ 1,519 கோடியை மட்டுமே மீட்க முடிந்திருக்கிறது.
ஆனால், வங்கியின் லாப வீழ்ச்சிக்கு, ஊழியர்களுக்கு கொடுக்கும் ஓய்வூதிய செலவு அதிகமானதுதான் காரணம் என்று பாரத ஸ்டேட் வங்கி தலைவர் பிரதீப் சவுத்ரி கூறியிருக்கிறார். வங்கி ஊழியர்களின் வாழ் நாட்கள் 76 வயதிலிருந்து 81 வயதாக அதிகரித்திருப்பதால் இந்த நிலை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். செலவைக் குறைத்து லாபத்தை அதிகப்படுத்த விலைவாசி உயர்வுடன் இணைக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் 2010-லிருந்து ரத்து செய்யப்பட்டது. இனி ஒரு கட்டத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்கள் எப்படி சீக்கிரம் செத்துப் போவார்கள் என்று கணக்கு போடக் கூட ஆரம்பிப்பார்களே ஒழிய, முதலாளிகளின் லாபத்தில் கை வைக்கத் துணிய மாட்டார்கள்.

வாராக் கடன்களில் பெரும்பான்மை சிறு தொழில்களுக்கும், விவசாயிகளுக்கும் கொடுத்தவையாக இருந்தாலும் பெரு நிறுவனங்களுக்கு கொடுத்த மொத்த கடன்களில் 1.7% வாராக் கடன்கள். பெரு நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட கடன் அதிகம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். நடுத்தர அளவு நிறுவனங்களில் 9.47% வாராக் கடன்கள். அதாவது பல நூற்றுக் கணக்கான சிறு தொழில்களும், சிறு விவசாயிகளும் நொடித்துப் போயிருப்பதோடு பெரு நிறுவனங்கள் செலுத்த மறுக்கும் கடன்களின் அளவு கணிசமாக அதிகரித்திருக்கிறது.
தொழில் துறை வளர்ச்சி வீழ்ச்சியடைந்திருப்பது வாராக் கடன் வீதத்தை மேலும் அதிகப்படுத்தும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். இந்த நிதியாண்டின் இறுதியில் வாராக் கடன்களின் வீதம் மொத்தக் கடன்களில் 3.9% ஆக அதிகரிக்கும் என்றும் 2015-ம் ஆண்டில் அது 4.4%-ஐ தொட்டு விடும் என்றும் எச்சரிக்கிறார்கள்.
இந்த நிலையில் இந்தியாவில் முதலீடு செய்திருந்த அன்னிய நிறுவனங்கள் தீப்பிடித்த கப்பலிலிருந்து பறந்து சென்று விடும் பறவைகள் போல, தமது லாப வேட்டையை பையில் போட்டுக் கொண்டு ஓட்டம் பிடித்திருக்கின்றன.

ஜூன், ஜூலை மாதங்களில் 1,050 கோடி டாலர் (ரூ 62,000 கோடி) பணத்தை மாற்றி எடுத்துச் சென்றிருக்கின்றன. ரூ 45,000 கோடிக்கும் அதிகமான பணம் கடன் சந்தையிலிருந்தும் ரூ 17,000 கோடிக்கும் அதிகமான பணம் பங்குச் சந்தையிலிருந்தும் அள்ளிச் செல்லப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 2-ம் தேதி நிலவரப்படி 1,756 அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் பதிவு செய்து கொண்டிருக்கின்றன. அவற்றில் 6,402 துணைக் கணக்குகள் இயக்கப்படுகின்றன.
இதனால் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகமாகியிருக்கிறது. ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைகிறது. ஜூலை 8-ம் தேதி 1 டாலருக்கு ரூ 61.21 மட்டத்துக்கு வீழ்ச்சியடைந்த ரூபாயின் மதிப்பு இன்னும் பாதாளத்தை நோக்கி பாய தயாராகிக் கொண்டிருக்கிறது.
ஜூலை மாதம் ஏற்றுமதியின் அளவு சென்ற ஆண்டை விட 11.64 % வளர்ந்து 2,500 கோடி டாலர் (சுமார் ரூ 1.5 லட்சம் கோடி) மதிப்பை எட்டியிருக்கின்றது. ரூபாயின் மதிப்பு 10% வீழ்ச்சியடையும் போது ஏற்றுமதிக்கான டாலர் விலைகள் குறைவதால் ஏற்றுமதிகள் அதிகரிப்பதன் வாய்ப்பு ஏற்படுகிறது. இது போக கருப்புப் பணத்தை உள்ளிருந்து வெளியில் அனுப்பவும், வெளியிலிருந்து உள்ளே கொண்டு வரவும் வெளிநாட்டு வர்த்தகம் பயன்படுத்தப்படுவது குறித்து விரிவான ஆய்வுகள் ஏற்கனவே வெளியாகியிருக்கின்றன.
இந்தச் சூழலில் அன்னிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையை திரும்பப் பெறவும், இந்திய ரூபாயின் மதிப்பை தூக்கி நிறுத்தவும் இந்திய நிறுவனங்களை வெளிநாட்டுக் கடன் வாங்க ஊக்குவிக்கப் போவதாக சொல்லியிருக்கிறார் நிதி அமைச்சர் ப சிதம்பரம். இந்த ஆண்டு சுமார் 1,100 கோடி டாலர் மதிப்பிலான அன்னிய நிதியை கொண்டு வருவதற்காக இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டில் கடன் வாங்குவதை ஊக்குவிப்பதாகவும், தங்கம், வெள்ளி போன்ற அத்தியாவசியமில்லாத பொருட்களின் இறக்குமதிக்கான சுங்க வரியை உயர்த்தப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

2012-13ம் ஆண்டு இந்திய ரயில்வே பைனான்ஸ் கார்ப்பரேஷன் 100 கோடி டாலர், பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன், இந்தியா இன்ப்ராஸ்ட்ரக்சர் பைனான்ஸ் கம்பெனி ஆகியவை தலா 150 கோடி டாலர் ஆக மொத்தம் 400 கோடி டாலர் (சுமார் ரூ 25,000 கோடி) கடன் பத்திரங்கள் மூலம் திரட்ட உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் 175 கோடி டாலர், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகியவை தலா 100 கோடி டாலர் என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தமது சுழலும் மூலதனத்துக்காக கடன் வாங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இத்துடன் வர்த்தக நிதி திரட்டலையும் சேர்த்து ஆக மொத்தம் 400 கோடி டாலர் (சுமார் ரூ 25,000 கோடி) இந்த கணக்கில் கடன் வாங்கப்படும்.
அதாவது, ரயில்வே, மின் உற்பத்தி, உள் கட்டமைப்பு துறையில் முதலீடு செய்ய, லாபகரமாக இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களிடம் மூலதனம் கைவசம் இருந்தாலும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடம் வாங்குவதன் மூலம் பணம் திரட்டப் போகிறார் சிதம்பரம். அதன் மூலம் நமது உற்பத்தி பற்றாக்குறையை சமாளிக்கப் போகிறார்களாம். இந்தக் கடன்களை தரப் போவது யார்?
அன்னிய நாட்டு அரசு நிதியங்கள் இந்த கடன் பத்திரங்களை வாங்க அனுமதிக்கப் போவதாகவும், பன்னாட்டு நிறுவனங்களின் இந்திய கிளை நிறுவனங்கள் தமது தலைமை நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்க அனுமதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறார் சிதம்பரம். பிற பராமரிப்பு தேவைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள கடன்களையும் சேர்த்து 200 கோடி டாலர் கிடைத்து விடும் என்றும் வெளிநாட்டு இந்தியர்களின் வைப்பு பணத்தின் மூலம் 100 கோடி டாலர் கிடைத்து விடும் என்றும் கூறியிருக்கிறார்.
சிதம்பரத்தின் திட்டப்படி தற்காலிகமாக பிரச்சினையை சமாளித்து விட்டாலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் வாங்கிய கடனுக்கு வட்டியாக தமது லாபத்தை வெளிநாட்டு நிதி நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டி வரும், அப்போது நடப்புக் கணக்கு பற்றாக்குறை இன்னமும் மோசமாகும். ரூபாயின் மதிப்பு இன்னும் வீழ்ச்சியடையும்.
பருவ மழை நன்கு பெய்து விவசாய விளைச்சல் செழித்தால் இந்த நெருக்கடிகளை ஓரளவுக்கு மட்டுப்படுத்தலாம் என்றும் கிராம மக்களின் வாங்கும் சக்தி அதிகமாவதன் மூலம் ஆண்டின் இரண்டாவது பாதியில் வளர்ச்சி மீட்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்று நிபுணர்கள் சொல்கின்றனர். இந்திய பொருளாதாரத்தின் நலன் விவசாயத்தையே சார்ந்திருக்கிறது என்பதை இது மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது. ஆனால் தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் நலனுக்காக இந்திய விவசாயத்தை திட்டமிட்டு அழித்து வருவதால் இவர்கள் நினைக்கும் அளவுக்கு கிராம மக்களின் வாங்கும் சக்தி உயரப்போவதில்லை. அதிகரித்து வரும் விலைவாசி உயர்வினால் ஏற்கனவே செய்யப்பட்ட நுகர்வின் அளவு கூட மேலும் குறைந்து வருவதுதான் யதார்த்தம்.
உள்நாட்டு விவசாயம், உள்நாட்டு தொழில்கள் இவற்றை வளர்ப்பதற்கான கொள்கைகளை செயல்படுத்தாமல் கடன் வாங்கி குடும்பம் நடத்தும் ஊதாரியைப் போல அன்னிய நிதி மூலதனத்தை சார்ந்து நாட்டை மேலும் மேலும் புதைகுழிக்குள் கொண்டு செல்வதுதான் இன்றைய ஆளும் வர்க்கங்களின் பொருளாதாரக் கொள்கையாக இருக்கிறது. இந்தப் பொருளாதாரச் சுமை முதலாளிகளின் தலைகளுக்கு போய்விடக்கூடாது என்பதில்தான் அரசும், வங்கிகளும் கவனமாக இருக்கின்றன. அதனால்தான் விலைவாசி உயர்வு, குறைந்த சம்பளம், வேலையின்மை, அதிக உழைப்பு என்று மக்களின் கழுத்தை சுருக்குகிறது இந்த பொருளாதார நெருக்கடி!
– பண்பரசு.
மேலும் படிக்க
- IIP data shrinks – industry still suffers pain, retail inflation offers hope of monetary easing
- Car sales continue to take downhill course
- Exports in July up 11.64%
- Steps to shore up forex inflows, check deficit
- FIIs pull out 10.5 billion from Indian capital market in June, July
- SBI results show sharp deterioration in health of Indian firms