Monday, April 21, 2025
முகப்புகட்சிகள்காங்கிரஸ்போலி சுதந்திரமென்று சுவரொட்டி ஒட்டியதற்காக கைது !

போலி சுதந்திரமென்று சுவரொட்டி ஒட்டியதற்காக கைது !

-

________________
கடைசியாக வந்த செய்தி :

தருமபுரி பேருந்து நிலையம் அருகில் துண்டறிக்கை வினியோகித்துக் கொண்டிருந்த விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர் சிவாவை கைது செய்து, இந்திய குற்றவியல் பிரிவு 124A (தேச துரோகம்) உட்பட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சேலம் சிறையில் அடைத்திருக்கிறது போலீஸ்.

போலி சுதந்திரம் என்று ஒரு துண்டறிக்கை வினியோகித்தால் ராஜ துரோகம் என்றால் இது போலி சுதந்திரமா, இல்லை உண்மை சுதந்திரமா?

1947-க்கு முன்பு ஆங்கிலேயர்கள் காலனி எஜமானர்களாக இந்தியாவை ஆண்டார்கள். இப்போது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் தமது விசுவாசமான தரகர்கள் மூலம் இந்திய மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

எனவேதான், போலி சுதந்திரம் என்று சொல்லும் உரிமையைக் கூட இந்த தரகர்களின் அரசு மறுக்கிறது.
___________________

“ஆகஸ்ட் 15 போலி சுதந்தரம்,  இதற்கென்ன கொண்டாட்டம்? தொடங்குவோம் புதியதோர் விடுதலை போராட்டம்”  என்ற முழக்கத்தின் அடிப்படையில் விவசாயிகள் விடுதலை முன்னணியினர் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டாரப் பகுதிகளில் 9 கிராமங்களில் தெருமுனைப் பிரச்சாரம் செய்தனர். ஓட்டுக் கட்சிகளின்  ஊழல்களை அம்பலப்படுத்தி இந்த பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டது.

கிராமத்துக்கான அடிப்படை கட்டுமான வசதிகளைக் கூட செய்து தராத காரணத்தால் கடந்த 10 ஆண்டுகளாக ஓட்டு போடுவதில்லை என்று ஒரு கிராம மக்கள் தெரிவித்தார்கள். எல்லா இடங்களிலும் ஓட்டுக் கட்சிகள் மீது நம்பிக்கையின்மையை மக்கள் வெளிப்படுத்தினார்கள்.

2,000 பிரசுரங்கள் அச்சிட்டு தருமபுரி, பென்னாகரம் பகுதிகளில் வினியோகிக்கப்பட்டன. கையால் எழுதிய 100 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

போஸ்டர் ஒட்டியதாக தருமபுரி அருகில் புலிக்கரை பகுதியைச்  சேர்ந்த விவிமு தோழர் தோழர் ராமலிங்கத்தை போலிசார் கைது செய்து பொய் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். காலில் கல் விழுந்து 2 மாதங்களாக வீட்டு ஓய்வில் இருக்கும் தோழர் ராமலிங்கம் அந்த பகுதியில் விவிமு செயல்பாடுகளில் தீவிரமாக உள்ளதால், அவரை பழி வாங்கும் நோக்கத்தோடு தமிழ்நாடு பொது இடங்களில் தீங்கு விளைவிப்பு, அமைதி குலைப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சேலம் சிறையில் அடைத்திருக்கின்றனர்.

கருத்துரிமை, அரசியல் உரிமை அனைத்தையும் பறிக்கும் இந்த போலீசுதான் இந்த போலி சுதந்திர தினத்தின் ஊர்வலங்களில் விறைப்பாக அணிவகுப்பு செய்து சல்யூட் அடிக்கிறது.  ஒரு சுவரொட்டி ஒட்டுவதற்கு கூட இந்த நாட்டில் உரிமை இல்லை என்றால் பிறகு இதில் என்ன சுதந்திரம் வாழ்கிறது?  போலி சுதந்திரம் என்று ஒரு சுவரொட்டியில் எழுதினால் கைது செய்கிறார்கள் என்றால் பிறகு இது போலி சுதந்திரமா, இல்லை உண்மை சுதந்திரமா?

வினியோகிக்கப்பட்ட துண்டு பிரசுரத்தின் உள்ளடக்கம்

ஆகஸ்ட் 15 போலி சுதந்திரம், இதற்கென்ன கொண்டாட்டம்?
தொடங்குவோம் புதியதோர் விடுதலை போராட்டம்

பிரச்சார இயக்கம்

ன்பார்ந்த உழைக்கும் மக்களே!

காலங்காலமாக செய்து வரும் சடங்கு போல ஆகஸ்ட் 15 வந்தால் கொடியேற்றி இனிப்பு வழங்குகிறார்கள் ஆட்சியாளர்கள். ஆனால் இந்த இனிப்பை சுவைக்கும் பலருக்கும் நம் நாடு வெகு விரைவில் திவாலாக போகிறது என்ற கசப்பான உண்மை தெரியாது.

கடும் பொருளாதார நெருக்கடியை இந்தியா இன்று சந்தித்துக் கொண்டிருக்கிறது. டாலர் கையிருப்பு குறைந்து, வரலாறு காணாத வகையில் ரூபாயின் மதிப்பு சரிந்து விட்டது. ஏற்றுமதி குறைந்து விட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்து விட்டது. அன்னிய கடன் வரலாறு காணாத வகையில் உயர்ந்து விட்டது.

இவை வெறும் பொருளாதார வார்த்தைகள் அல்ல; நம் வாழ்வை துன்பக் கடலுக்குள் இழுத்து செல்ல உள்ள பொருளாதார சுனாமி. ஈழத்து மக்கள் இந்திய அரசின் இரசாயன கொத்துக் குண்டுகளுக்கு பலியானதைப் போல, நம் மீது விழ உள்ள இந்திய அரசின் பொருளாதார கொத்துக் குண்டுகள்.

இந்தியாவின் இன்றைய நெருக்கடிக்கும் அமெரிக்க மற்றும் மேற்கு அய்ரோப்பிய நெருக்கடிக்கும் பல நாடுகள் திவாலானதற்கும் தனியார் மயம், தாராள மயம், உலக மயம் எனும் பொருளாதார கொள்கைகள்தான் காரணம். எனினும் இந்த உண்மையை மறைத்து விட்டு இப்பொருளாதாரக் கொள்கைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தினால்தான் இன்றைய நெருக்கடியை சமாளிக்க முடியும் என்று கூறி மீண்டும் ஈவிரக்கமின்றி ஒரே அடியாக மக்களைக் கொல்லத் துணிகிறது மன்மோகன்-சிதம்பரம்-அலுவாலியா கும்பல். இவர்கள்தான் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை விட கொடிய பயங்கரவாதிகள்.

தொலைபேசித் துறை, ஆயுத தளவாட உற்பத்தி, காப்பீடு, தேயிலை தோட்டங்கள், கூரியர் சேவை, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, விமான போக்குவரத்து, மின்சார சந்தை, சிங்கிள் பிராண்டு சில்லறை வணிகம் உள்ளிட்ட 13 தொழில் மற்றும் சேவைத் துறையில் அந்நிய மூலதனம் புதிதாக நுழைய அல்லது ஏற்கனவே உள்ள தமது மூலதன பங்கை அதிகரித்து கொள்ளை பன்னாட்டு முதலாளிகளுக்கு அனுமதி அளித்து நாட்டையே மறு அடகு வைக்கிறது மன்மோகன்-சிதம்பரம் கும்பல். அது மட்டுமின்றி இவர்களுக்கு சேவை செய்யும் வகையில், இந்த மழைக்கால கூட்டத் தொடரில் உணவு பாதுகாப்பு மசோதா, தேசிய நீர் கொள்கை, விதை மசோதா என பல மசோதாக்களை சட்டமாக்க முயற்சித்து உணவு, தண்ணீர் விதையையும் ஏழைகளிடமிருந்து தட்டிப் பறிக்கிறார்கள்.

ஏற்கனவே கல்வி, மருத்துவம், சுகாதாரம் மற்றும் தொழில்துறைகளில் முதலாளிகளுக்கு சுதந்திரமாக கொள்ளையடிக்க திறந்து விட்டதால்தான், இன்று வறுமையிலும், ஊட்டச் சத்து குறைபாட்டிலும் முதலிடத்தில் உள்ளது இந்தியா. விவசாயம் அழிந்து விட்டது, கல்வி கடைச்சரக்காகி விட்டது. தங்கம், வெள்ளி, நிலக்கரி, பாக்சைட் போன்ற அரிய கனிமவளங்களை பன்னாட்டு முதலாளிகள் கொள்ளை அடிக்க பழங்குடி மக்கள் சொந்த மண்ணிலிருந்து விரட்டி அடிக்கப்படுகிறார்கள். அரை மணி நேரத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறார். மின்வெட்டு, மின் கட்டண உயர்வால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து வருகின்றனர். இந்திய நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க கலாச்சாரமும், மேலை நாட்டு ஆபாச வக்கிர கலாச்சாரமும் இணைந்து பெண்கள் வெளியே நடமாட முடியாத அளவிற்கு கடித்துக் குதறப்படுகிறார்கள். ஏழை எளிய மக்கள் சாதியாலும், மதத்தாலும் பிரிக்கப்பட்டு அன்றாடம் தாக்குதலை சந்தித்து, எந்நேரமும் அச்சத்தில் உறைந்து இருக்கிறார்கள். இவ்வாறு எவ்வித சுதந்திரமும் இன்றி வாழ்வதற்கே உயிரை பணயம் வைத்து வாழ்ந்து வரும் மக்களை மன்மோகனின் இந்த பொருளாதார சீர்திருத்தம் ஒரே அடியாக மரணக் குழியில் தள்ளப் போகிறது. இந்நிலையில் இந்த ஆகஸ்ட்-15 சுதந்திர தின விழா யாருக்கு கொண்டாட்டம்? யாருக்கு சுதந்திரம்?

  • போலி சுதந்திரம், இதற்கேன் கொண்டாட்டம்?
  • “கவர்னர் ஜெனரல்” மன்மோகன் தலைமையில் மறுகாலனியாகிறது நாடு !
  • வளர்ச்சி, வல்லரசு, சுதந்திரம் என்பதெல்லாம் ஃபிராடு
  • உண்மையான சுதந்திரம், சுயசார்பு ஜனநாயகத்திற்காக போராடுவோம்!
  • புதிய ஜனநாயக புரட்சிக்கு அணி திரள்வோம்!
போஸ்டர்
போலீசு கண்டு பதறி, தோழரைக் கைது செய்வதற்கு காரணமான சுவரொட்டி இதுதான்.

தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி.
பென்னாகரம் வட்டம்
தொடர்புக்கு பேச : 9943312467