Monday, April 21, 2025
முகப்புஉலகம்ஆசியாபாகிஸ்தானில் பட்டயைக் கிளப்பும் சென்னை எக்ஸ்பிரஸ் !

பாகிஸ்தானில் பட்டயைக் கிளப்பும் சென்னை எக்ஸ்பிரஸ் !

-

ல்லைப் பகுதியில் ஐந்து இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட பிறகு பாகிஸ்தான் படை வீர்ரகள் இந்திய ராணுவ நிலைகளின் மீது தாக்குதல், இந்தியா பதிலடி என்ற செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில் பயங்கரவாதிகள் செய்த கொலை என்று கூறிய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி பின்னர் பாஜக நெருக்குதல் காரணமாக பாகிஸ்தான் இராணுவம் செய்த கொலை என்று மாற்றினார். எனினும் இந்த சம்பவத்திற்கு பிறகு பாகிஸ்தான் வெறுப்பு பார்வை இந்திய ஊடகங்களில் கொடிகட்டிப் பறந்தன.

சென்னை எக்ஸ்பிரஸ்எங்களது பொறுமையை பலவீனமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று நாடாளுமன்றத்தில் எச்சரிக்கிறார் அந்தோணி. பாகிஸ்தானுடன் பிரதமர் பேச்சுவார்த்தைக்கு போக கூடாது எனக் கூறுகிறது பாஜக. எல்லையில் பதட்டம் நிலவுவதான ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகஸ்டு 15 அன்று பிரதமர், குடியரசுத் தலைவர் துவங்கி அனைவரும் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை கொடுத்து ஓய்ந்தனர்.

ஆனால் நேற்று வெளியான ஒரு செய்தி உண்மையில் வேறு விதமாக இருக்கிறது. பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவில் ஓடி, வசூலில் சாதனை படைத்துள்ளதாம். ஆகஸ்டு 9-ம் தேதி ஈத் விடுமுறையில் அங்கு வெளியிடப்பட்ட சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் ஆகஸ்டு 19 -க்குள் கராச்சி நகரில் மட்டும் 40 மில்லியன் ரூபாய்க்கும் மேல் வசூலைக் குவித்து விட்டது என்கிறார், லாகூரில் உள்ள ஐஎம்ஜிசி என்ற பாகிஸ்தானின் பெரிய திரைப்பட விநியோகஸ்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது கத்ரி.

கராச்சியில் எட்டு திரையரங்குகளில் மட்டுமே திரையிடப்பட்டாலும், நாளொன்றுக்கு ஆறு காட்சிகள் வரை நடைபெற்று வருகிறது. பெரும்பாலான இடங்களில் அதிக விலையில் டிக்கெட் விற்கப்பட்டது. இதனாலெல்லாம் கூட்டம் குறைந்து விடவில்லை. மாறாக மற்ற பாகிஸ்தானிய, ஹாலிவுட் படங்களுக்கு வரும் கூட்டத்தை விட அதிக கூட்டத்தை சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்திற்கு பார்க்க முடிகிறதாம்.

”எங்கள் அரசு இந்திய திரைப்படங்களை திரையிட அனுமதித்த காலம் தொட்டு, வெளியான இந்திய படங்களிலேயே இதுதான் அதிக வசூல்” என்று கூறியுள்ளார் கத்ரி. துபாய் வழியாக பாகிஸ்தானுக்குள் இறக்குமதியாகும் இந்தியப் படங்களை, குறிப்பாக இந்தி மசாலாக்களை பாகிஸ்தானிய மக்கள் விரும்பி பார்க்கின்றனர். நகைச்சுவையுடன் கூடிய திரைப்படம் என்று அவர்கள் சொன்னாலும் நமது தமிழ் பதிவர்கள் பலர் இது மரண மொக்கை என்று சொல்லியிருக்கின்றனர்.

எனினும் சென்னை எக்ஸ்பிரஸ் எனும் இந்த மொக்கையே அங்கு பிரபலமாக ஓடுகிறது என்றால் பாகிஸ்தானின் கலை வறட்சியை புரிந்து கொள்ள முடிகிறது. இந்த வறட்சி பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல. நமது தமிழ் பதிவர்கள் கலாய்த்த விஜயின் தலைவா எனும் மொக்கை படம் கேரளாவில் நல்ல வசூலுடன் ஓடுகிறதாம். இவ்வளவிற்கும் நல்ல கலைப்படங்கள் மற்றும் வணிகப்படங்கள் தமிழை விட மலையாளத்தில்தான் அதிகம் வருவதாக விமரிசகர்கள் கூறுவார்கள்.

சென்னை எக்ஸ்பிரஸ்
படம் : நன்றி ஐபிஎன்லைவ்

பாகிஸ்தானில் இதற்கு முன்னர் 2010-ல் சல்மான் கானின் தபாங் திரைப்படம் வசூலில் சாதனை படைத்திருந்த்தை தற்போது சென்னை எக்ஸ்பிரஸ் தகர்த்து விட்டது.

பாகிஸ்தான் முழுக்க கணக்கிட்ட பிறகு இது இன்னும் அதிகரிக்க கூடும் என விநியோகஸ்தர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் தேசபக்தி, பாதுகாப்பு, மதவெறி என இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் சுவரை எழுப்ப இருநாட்டு அரசியல்வாதிகள் மற்றும் மதவெறியர்கள் அயராது பாடுபட்டாலும், மக்கள் அதற்கு பலியாவதில்லை. இதைத்தான் சென்னை எக்ஸ்பிரசின் வெற்றி காட்டுகிறது. இந்தியப் படங்கள் என்றெல்லாம் பாகிஸ்தானிய மக்கள்  ஒதுக்கி விடவில்லை.

இதே போன்று பாகிஸ்தானின் இந்துஸ்தானி கலைஞர்கள் பலரும் வட இந்தியாவில் பெரும் ரசிகர்களை கொண்டிருக்கின்றனர். அவர்களில் சிலர் இங்கே நிகழ்ச்சி நடத்த வரும்போது இந்துமதவெறியர்கள் தடுப்பதோ இல்லை மிரட்டுவதோ வழக்கம்.

இதே போன்று பாகிஸ்தானில் இசுலாமிய மதவெறியர்கள் மட்டும் இந்தியாவை எதிர்த்து தமது அரசியலை வளர்க்க முனைகின்றனர். அதற்கு தோதாக காஷ்மீரில் இந்திய அரசின் வன்முறை காரணமாக இருக்கிறது. இந்தியாவில் சங்கபரிவாரங்கள்தான் பாகிஸ்தான் மீதான வெறுப்பை கட்டியமைப்பதில் முன்னணி வகிக்கின்றன.

ஆனால் மக்களிடம் அத்தகைய துவேஷம் இல்லை என்பதை பாகிஸ்தானில் வெற்றி பெற்றதன் மூலம் சென்னை எக்ஸ்பிரஸ் நிரூபித்திருக்கிறது.

மேலும் படிக்க