Tuesday, April 22, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கநமது எம்ஜிஆரோடு போட்டிபோடும் தினமணி !

நமது எம்ஜிஆரோடு போட்டிபோடும் தினமணி !

-

நேற்றைய (21.8.2013) தினமணியின் முதல் பக்கத்தில் “மருத்துவக் கல்வியில் வணிகமயமாக்கலை ஒழிக்க வேண்டும் – எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஜெயலலிதா” என்று கொட்டை எழுத்து தலைப்புடன் ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. நேற்று சென்னைப் பல்கலைக் கழக வளாகத்தில் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக் கழகத்தின் வெள்ளி விழா பட்டமளிப்பு விழா ஆளுநர் ரோசய்யா தலைமையில் நடந்தது. இந்த விழாவில் ஜெயலலிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார். அதைத்தான் கல்வியில் வியாபார மயத்தை ஒழிக்க வேண்டும் என்று அவர் பேசியதாக தினமணி செய்தி வெளியிட்டிருக்கிறது.

தூங்கும் அமைச்சர்கள்
ஜெயலலிதாவின், “தாலாட்டு’ பேச்சில், அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த முன்னாள்அமைச்சர், கோகுல இந்திரா, அமைச்சர்கள், சின்னையா, நத்தம் விஸ்வநாதன், சுப்பிரமணி, ரமணா.

ஏற்கனவே சமூகநீதி காத்த வீராங்கனை, ஈழத்தாய், நெய்வேலி பங்குகளை விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததன் மூலம் தனியார்மய எதிர்ப்பு போராளி என்று ஏகப்பட்ட பட்டங்களை சுமக்க முடியாமல் பாராட்டு மழையில் சிரமப்படும் ஜெயலலிதாவை தனியார் கல்வியை எதிர்க்கும் போராளியாகவும் ஆக்கினால் என்ன என்று நினைத்தார்களோ என்னமோ! சரி, தலைப்பில் தினமணி அப்படிப் போட்டிருப்பதால் புரட்சித் தலைவி உண்மையிலேயே என்ன பேசினார் என்று செய்திக்குள் நுழைந்து பார்த்தால் அப்படி ஒன்றுமே இல்லை.

நிகழ்ச்சியில் யார் யார் பங்கேற்றார்கள் என்பதையும், ஜெயலலிதாவின் உரையையும் சுருக்கமாக ஆனால் சாரமாக குறிப்பிட்டிருக்கும் தினமணியின் முழுமையான செய்தியை படித்த பிறகும் தலைப்பில் குறிப்பிட்டிருப்பதைப் போல கல்வியில் வியாபாரத்தை ஒழிக்க வேண்டும் என்று ஜெயலலிதா பேசியதாக ஒரு வார்த்தை கூட இல்லை.

சரி தினமணி தவிர தினமலர், தினத்தந்தி போன்ற பத்திரிகைகள் என்ன போட்டிருக்கிறார்கள் என்று பார்த்தால் அங்கேயும் இந்த கருத்து இல்லவே இல்லை. தினமலர் வெளியிட்டிருக்கும் செய்தியின் தலைப்பு “சுகாதாரத்தின் தலைநகராக சென்னை உருவாக்கப்படும்”. அடிக்கடி ஜெயலலிதாவின் காலில் விழுவதாலும், அவர் கார் வரும் போது மணிக்கணக்கில் குனிந்து வரவேற்பதாலும், கூடவே அவரது எழுதி வைத்து பேசப்படும் பேச்சை அடிக்கடி கேட்க நேர்வதாலும் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றுவிட்ட அமைச்சர்கள் சின்னையா, நத்தம் விஸ்வநாதனை போன்றோரை படமெடுத்து நுட்பமாக கவனித்து பதிவு செய்திருக்கும் தினமலர் செய்தியில், தினமணி குறிப்பிடும் விசயம் தலைப்பிலும் இல்லை, உள்ளேயும் இல்லை. ஆனால் தினமணி குறிப்பிடாமல் விட்டு விட்ட, மறைத்துள்ள ஒரு செய்தி தினமலரில் வந்திருக்கிறது.

ஜெயலலிதா தனது உரையில் “தனியார் மருத்துவ கல்லூரிகள், தரமான கல்வி வழங்குகின்றனவா என்பதையும், அதன் செயல்பாடுகளையும், பல்கலைக் கழகம் கவனிக்க வேண்டும்” என்று பேசியுள்ளார். அதாவது இங்கிருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் தரமாக செயல்படவேண்டும் என்றுதான் அவர் பேசியுள்ளாரே அன்றி அவற்றை ஒழிக்க வேண்டும் என்று அல்ல. மேலும் தனியார் கல்லூரிகள் தரமாக இருந்தால்தான் அரசு கல்லூரிகளை விடுத்து மக்கள் தனியார் கல்லூரிகளின் சேர்வார்கள் என்பதாலும் ஜெயலலிதா அவ்வாறு பேசியிருக்கிறார். இது உண்மையில் கல்வியில் தனியார்மயத்தை ஆதரிக்கும் பேச்சே அன்றி எதிர்க்கும் ஒன்றல்ல.

வைத்தி
வைத்தி அவர்கள் தினமணி ஆசிரியர் வேலையை விட்டு விட்டு நமது எம்.ஜி.ஆரில் வேலைக்கு சேர்ந்துவிடலாம்.

இருந்தும் தினமணி இப்படி ஒரு பொய்த் தலைப்பை துணிந்து போடவேண்டிய அவசியம் என்ன? ஒரு வேளை நமது எம்ஜிஆரை விட நாங்கள்தான் ஜால்ராவில் நம்பர் 1 என்று காட்டுவதற்காக இருக்குமோ? இல்லை ஜெயலலிதா பேசும் போது தினமணியும் அமைச்சர்களோடு சேர்ந்து தூங்கிவிட்டு தூக்க கலக்கத்தில் இப்படி ஒரு தலைப்பு வெளியிட்டார்களா? மேலும் இது தினமணியின் முதல் பக்கத்தில் வந்திருப்பதால் ஆசிரியர் வைத்தியின் பார்வை பட்டே வந்திருக்கும். அதன்படி நிருபர்கள் சரியாக எழுதிக் கொடுக்க வைத்தி தனது அம்மா அடிமைத்தன போதையில் தடுமாறி இப்படி ஒரு தலைப்பு வைத்தால் அம்மா மனம் குளிர்வார் என்று வைத்து விட்டாரா?

ஜெயலலிதாவுக்கு இப்படி ஒளிந்து மறைந்து சொம்படிப்பதற்கு பதிலாக வைத்தி அவர்கள் தினமணி ஆசிரியர் வேலையை விட்டு விட்டு நமது எம்.ஜி.ஆரில் வேலைக்கு சேர்ந்துவிடலாம் அல்லது தினமணியையே அ.தி.மு.க. வின் அதிகாரபூர்வ ஏடாக மாற்றி விடலாம். பிறகு நமது எம்ஜிஆரையெல்லாம் நாங்கள் விமரிசிக்க மாட்டோம் அல்லவா!

 

பின்குறிப்பு: வினவில் இப்படி ஒரு கட்டுரை வருவது தெரிந்தோ என்னமோ தினமணி இணைய தளத்தில் அந்த செய்தியை தூக்கி விட்டார்கள். ஆனால் அச்சு தினமணியில் அது அப்படியே இருக்கிறது.