Monday, April 21, 2025
முகப்புகட்சிகள்இதர கட்சிகள்முலாயம் சிங் யாதவ் - அசோக் சிங்கால் சந்திப்பு எதற்கு ?

முலாயம் சிங் யாதவ் – அசோக் சிங்கால் சந்திப்பு எதற்கு ?

-

பாரதிய ஜனதா கட்சி இந்த முறை எப்படியாவது மத்தியில் ஆட்சியைப் பிடிக்க பல தகிடுதத்தங்களை செய்து வருகிறது. அதற்கு உதவியாக சங்க பரிவாரத்தை சேர்ந்த விசுவ இந்து பரிஷத், ” ராமர் கோவிலை கட்டுவோம்” என்பதை முன்னிறுத்தி அயோத்தி நோக்கி ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்து வருகிறது. முசுலீம்களின் காவலன் என தன்னைத்தானே பீற்றிக் கொள்ளும் முலாயம்சிங்கின் சமாஜவாதி கட்சியும் அரசியல் ஆதாயம் கருதி இந்துமத வெறியர்களுக்கு சாதகமாகவே காய்களை நகர்த்தி வருகிறது.

விஎச்பி யாத்திரை
விசுவ இந்து பரிஷத், ” ராமர் கோவிலை கட்டுவோம்” என்பதை முன்னிறுத்தி அயோத்தி நோக்கி ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்து வருகிறது.

தற்போது ஆகஸ்டு 25 முதல் செப்டம்பர் 13 வரை அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்ட வலியுறுத்தி 84-கோசி பரிக்ரமா என்ற 84 மைல் பேரணி ஒன்றுக்கு விசுவ இந்து பரிஷத் திட்டமிட்டிருக்கும் சூழலில், முலாயம் சிங்கை கடந்த ஆகஸ்டு 17 அன்று விசுவ இந்து பரிஷத்-ன் அகில உலக பொதுச்செயலாளர் அசோக் சிங்கால் சந்தித்திருக்கிறார்.

இதைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு முலாயம் சிங்-ன் சகோதரரும், மாநில் பொதுப்பணித் துறை அமைச்சருமான சிவ்பால் சிங் யாதவ், “ஜனநாயக நாட்டில் யாரும் யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம்” என்று சந்தர்ப்பவாதத்துக்கு ஜனநாயக விளக்கம் சொல்லியிருக்கிறார்.

பைசாபாத், அம்பேத்கர் நகர், பாஸ்தி, பஹ்ரைச், கோண்டா, பரபான்கி ஆகிய மாவட்டங்களின் வழியாக சுமார் 300 கிமீ தூரம் வரை செல்ல திட்டமிட்டுள்ள இப்பேரணியின் போது 40 பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்றும், எல்லா மாநிலங்களிலிருந்தும் தலா 150 சாமியார்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அயோத்தியில் முடிவடையும் இந்த யாத்திரையில் பல லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

2014 பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற கனவோடு இருக்கும் பாஜக-வின் தேர்தல் அரசியலுக்காக அயோத்தியில் முடியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த யாத்திரை, ஒரு திட்டமிட்ட கலவரத்தை உள்நோக்கமாக கொண்டிருக்கிறது. இதனால் புதிய தலைவலிகளை விரும்பாத மாநில அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாக்கிறோம் என்று பேரணிக்கு தடையை விதிப்பதாக ஆகஸ்டு 19-ல் அறிவித்துள்ளது. அதற்கு காரணமாக மே 9, 2011-ல் அலகாபாத் உயர்நீதி மன்றம் அயோத்தியில் பிரச்சினைக்குரிய இடத்தில் எதுவும் புதிதாக செய்யக் கூடாது என தீர்ப்பளித்திருப்பதையும், உச்சநீதி மன்றம் அதனை வழிமொழிந்ததையும் மாநில அரசின் முதன்மை செயலர் (உள்துறை) ஆர்.எம்.ஸ்ரீவஸ்தா சுட்டிக்காட்டி உள்ளார். இருந்த போதும் தடையை மீறி யாத்திரை நடக்கும் என்று விஎச்பி அறிவித்துள்ளது.

விஎச்பி இன் மூத்த தலைவர் சுவாமி சின்மாயனந்த், “தடை விதித்தால் விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழும்” என அரசை எச்சரிக்கிறார். “முதலில் அனுமதி தந்துவிட்டு அமைச்சர் ஆசம் கானின் தலையீட்டால் தடை விதிக்கிறார்கள்” எனக் முலாயம் சிங் மீது குறை கூறி உள்ளார். இவரது கூற்றை ஆதரித்து பாஜக-ன் வெங்கையா நாயுடுவும், எதிர்த்து ஐக்கிய ஜனதா தளத்தின் சரத் யாதவும் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

தங்களது சந்திப்பில் அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்ட உதவும் வகையில் இசுலாமிய அமைப்புகளுடன் பேச ஏற்பாடு செய்து தருமாறு முலாயம் சிங்கை அசோக் சிங்கால் கேட்டுக் கொண்டார். இதற்கு முலாயம் சிங்கும் சம்மதித்திருக்கிறார். ஆகஸ்டு 19-ம் தேதி அமைச்சர் ஆசம் கான் கோபமடைந்து, “பாபர் மசூதியை இடித்ததற்கு பொறுப்பேற்க வேண்டியவர் அசோக் சிங்கால்” என்பதை முலாயமுக்கு நினைவுபடுத்தினார். மேலும் “முசுலீம்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டுமென்றால் இடிக்கப்பட்ட மசூதியை திரும்ப கட்டுவது பற்றி பரிசீலிக்கப்பட வேண்டும்” என திட்டவட்டமாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த சூழலில் ஆசம் கானின் கூற்றைப் பற்றி கேட்டதற்கு, “ஆசம் கான் கோபமாக எல்லாம் இல்லை. பிரச்சினைகளை எங்களுக்குள் பேசித் தீர்த்துக் கொள்வோம்” எனவும் முலாயம் சிங்கின் சகோதரர் கூறியிருக்கிறார்.

அசோக் சிங்காலின் வகுப்பாத அரசியலின் காரணமாக அவர் மாநிலத்தின் வளர்ச்சிக்கு எதிராக இருப்பதாக சிவ்பால் சிங் யாதவ் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களில் 20 சதவீதம் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களை விட மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் இசுலாமியர்களுக்காக ஒதுக்கப்படுவதாக முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

விஎச்பி
விஎச்பி யாத்திரை (கோப்புப் படம்) : நன்றி என்டிடிவி)

தூங்கிக் கொண்டிருந்த அயோத்தி பிரச்சினையை இதன் மூலம் தூசி தட்டி வெளியே எடுத்து கலவரம் செய்ய காத்திருக்கிறார்கள் சங் பரிவாரங்கள். அதற்கு துணை போகின்றார்கள் உ.பி.-ன் ஓட்டுச்சீட்டு அரசியல்வாதிகள். சமாஜ்வாதிக் கட்சியைப் பொறுத்தவரை ‘இந்துக்கள்’ மற்றும் இசுலாமியர்கள் இரு பிரிவினரது வாக்குகளையும் எப்படி கவர்வது என்ற முறையில் செயல்படுகிறது. பாபர் மசூதி இடிப்பு என்பது ஒரு கிரிமினல் குற்றம், இந்துமதவெறியர்களின் யாத்திரை கலவரத்தை தூண்டும் என்பதை இந்துக்கள், முசுலீம்கள் வாக்குப் பிரச்சினையாக கருதுவதால் இரு பிரிவினரையும் திருப்தி படுத்துவது என்பதே அவர்களது கவலை.

இதன் ஒரு அங்கம் தான் உத்திரபிரதேச மாநிலம் கௌதம புத்தா நகர் மாவட்ட துணை ஆட்சியர் துர்கா சக்தியின் பணி இடை நீக்கம். அரசு புறம்போக்கு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த மசூதியின் சுற்றுச்சுவரை கடந்த மாதம் இடிக்க உத்திரவிட்டதன் மூலம் மதக்கலவரம் ஏற்பட வழிவகுத்த காரணத்துக்காக இந்த இடைநீக்கம் என அரசு தரப்பு கூறியது. ஆனால் தாங்களே ஒத்துக்கொண்டு தான் சுவரை இடித்ததாக மசூதி தரப்பே கூறிய பிறகும், மாநில இசுலாமிய தலைவர்களை வைத்து அவர்களது வாயை அடைக்க வைத்தார் அகிலேஷ் யாதவ். வேண்டுமானால் எல்லா ஐஏஎஸ் அலுவலர்களையும் மத்திய அரசே அழைத்துக் கொள்ளட்டும், எங்களால் தனியாக நிர்வாகம் செய்ய முடியும் என்று மத்திய அரசுக்கு சவால் விட்டார்.

இப்படி இசுலாமிய காவலனாக காட்ட வேண்டிய அவசியம் அதற்கு முன் இந்துமத வெறியன் ஒருவனுக்கு மாநில அரசு சட்டத்தை மீறி கருணை காட்டியதால் தான். வேறு யாருமல்ல, நேருவின் குலக்கொழுந்து வருண் காந்திதான் அது. அப்பன் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறு அடி பாயும் போலும். மிசா காலகட்டத்தில் புது தில்லியில் இசுலாமியர்களை கொடூரமாக துன்புறுத்திய சஞ்சய் காந்தியின் அருமந்திர புத்திரன் 2009 தேர்தலில் பிலிபத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார். “இந்துக்களுக்கு எதிராக எவனாவது பேசினால் கையை வெட்டுவேன், தலையை வெட்டுவேன்” என்றெல்லாம் திமிராகப் பேசியது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகவே அவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. பர்க்கரோ நீதிமன்றத்தில் சரணடைய வந்தபோது அவர் நடத்திய வன்முறை கலவரம் பற்றியும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் பிலிபித் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கவும் பட்டார். இந்த வழக்குகளில் இருந்து பிலிபித் நீதிமன்றத்தால் இவர் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.

முலாயம்
இவர்கள் இந்துமதவெறியர்களது மறைமுக கூட்டாளிகளாகவும் இருக்கிறார்கள்.

போலீசும், அரசு வழக்கறிஞர்களும் அனைத்து சாட்சிகளையும் மிரட்டி அனைவரையும் பிறழ் சாட்சிகளாக மாற்றி விட்டனர். அப்போது வருணுக்கு பாதுகாப்பு அளித்த போலீசு அதிகாரி தனது சாட்சியத்தில் “வருண் அப்படி பேசிய எதனையும் தான் கேட்கவில்லை” என்று பல்டி அடித்தார். தனது குரல் மாதிரியை நீதிமன்றத்துக்கு தர வருண் மறுத்து விட்டார். அவரது ஒலிப்பதிவை ஆய்வு செய்த அதிகாரி நீதிமன்றத்துக்கு நேரில் வரத் தேவையில்லை என்று கூறிவிட்டார் அரசு வழக்கறிஞர். 2012ல் சமாஜ்வாதி ஆட்சிக்கு வந்தவுடனே இந்த வழக்குகளை இழுத்து மூட முயற்சித்தபோது முசுலீம்களின் கடும் எதிர்ப்பு காரணமாக வேறு வழியில்லாமல் வழக்கை நடத்தியது அரசு. ஆனால் அந்த லட்சணம் தெகல்கா அம்பலப்படுத்திய பிறழ் சாட்சியங்கள் பற்றிய கட்டுரைகளில் கடந்த மே மாதம் வந்து சந்தி சிரித்தது. இதனால் ஆத்திரமடைந்த இசுலாமிய மக்களை திசைதிருப்ப ஒரு பலிகடா தேவைப்பட்டது. அதற்கு தோதாக கிடைத்தவர்தான் துர்கா சக்தி என்ற ஐஏஎஸ் அதிகாரி.

இப்படி தொடர்ச்சியாக மாற்றி மாற்றி ஊதி விடுவதன் மூலம் மதவெறிக்கு எண்ணெய் ஊற்றும் வேலையை தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று அறிவித்துக் கொள்பவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். அதில் முலாயம் சிங் முதன்மையானவர். சமூக நீதிக் கட்சிகள் என்று சொல்லிக் கொள்பவர்களெல்லாம் இப்படித்தான் பித்தலாட்டம் செய்கிறார்கள். இவர்களது அணுகுமுறைதான் இந்துமதவெறியர்களை சித்தாந்தரீதியில் பலமாக்குவதற்கு உதவி செய்கிறது. அந்த வகையில் இவர்கள் இந்துமதவெறியர்களது மறைமுக கூட்டாளிகளாகவும் இருக்கிறார்கள்.