கடந்த ஆகஸ்டு 21-ம் தேதி இரவு 9 மணிக்கு புனே தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தின் வளாகத்திற்கு வெளியே அந்த சம்பவம் நடைபெற்றது. புனே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ்-இன் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தைச் (ABVP) சேர்ந்த குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் ஐந்து மாணவர்கள் காயமடைந்தனர். தாக்குதலுக்கு காரணமாக ஏபிவிபி சொன்னது, மாணவர்கள் கலை நிகழ்ச்சி என்ற பெயரில் கபீர் கலா மஞ்ச் போன்ற தேசவிரோத, நக்சலைட்டுகளுக்கு மேடை அமைத்து தருகிறார்கள் என்பதுதான்.

சினிமா உலகமே வியந்தோதும் புனே திரைப்படக் கல்லூரியில் மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்து ஒரு சில விதிவிலக்குளைத் தவிர்த்து பிரபலமான சினிமா படைப்பாளிகள் எவரும் இதுவரை வாய் திறக்கவில்லை. அதே நேரம் தில்லி தேசிய நாடகப் பள்ளி, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், அம்பேத்கர் பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களிலிருந்து மாணவர்கள் தமது எதிர்ப்பை குறிப்பிடத்தக்க அளவில் பதிவு செய்துள்ளனர்.
மூடநம்பிக்கை மற்றும் சாதி எதிர்ப்பு போராளியான நரேந்திர தபோல்கர் அதற்கு முந்தைய தினம் தான் புனே நகரத்தில் தனது காலை நடைப்பயிற்சியின் போது சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். அதனை கண்டித்து நகரத்தில் அன்று பல கட்சிகளும் இணைந்து பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. எனவே புனே திரைப்படக் கல்லூரி மாணவர்களும், யுக்பத் என்ற சமூக விவாத அரங்கும் இணைந்து முன்னரே திட்டமிட்டிருந்த ஆனந்த் பட்டவர்த்தனின் ஜெய் பீம் காம்ரேடு ஆவணத் திரைப்படத்தின் திரையிடலை தள்ளிவைக்குமாறு பல்வேறு முற்போக்கு அமைப்புகள் அவர்களிடம் கோரிக்கை வைத்தன. ஆனால் இத்திரையிடல் மற்றும் அதற்கடுத்து கபீர் கலா மஞ்ச் அமைப்பின் சாதித் தீண்டாமைக்கெதிரான சில கலைநிகழ்ச்சிகளும் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததால், அந்த நிகழ்ச்சியை நடத்துவதுதான் தபோல்கருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி எனக் கருதிய அம்மாணவர்கள் நிகழ்ச்சியை தள்ளி வைக்காமல் அன்றே நடத்த முடிவு செய்தனர்.
கூட்டம் மாலை ஐந்து மணிக்கு ஆரம்பித்து எட்டு மணிக்கு கபீர் கலா மஞ்ச் அமைப்பினரின் கலை நிகழ்ச்சியோடு நிறைவடைந்தது. பத்திரிகையாளர்களும், போலீசாரும் வெளியே சென்ற பிறகு, வந்திருந்த 12 ஏபிவிபி நபர்கள் மாணவர்களை அணுகி, எப்படி நக்சலைட்டுகள் என்று சொல்லிக் கொள்பவர்களை நீங்கள் மேடையேற்றலாம் எனக் கேட்கிறார்கள். “நீங்களெல்லாம் கூட நக்சலைட்டுகள் தான்” என்றும் கூறுகிறார்கள். மஞ்ச் அமைப்பினரின் கலைநிகழ்ச்சியானது சாதிக்கு எதிராக இருந்ததாகவும், எனவே அவர்கள் தேச விரோத சக்திகள் தான் என்றும் ஏபிவிபி யினர் கூறினார்கள்.

ஏற்கெனவே கடந்த இரண்டரை ஆண்டுகளாக அரசின் கடுமையான ஒடுக்குமுறை கபீர் கலா மஞ்ச் உறுப்பினர்கள் மீது இருந்து வந்த சூழ்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மேடையேறிய மஞ்ச் கலைஞர்களை பாதுகாக்கும் நோக்கில் அவர்களை மாணவர்கள் பாதுகாப்புடன் வெளியேற்ற முயலும் போது, ஏபிவிபி ரவுடிகள் தாங்கள் வெற்றி பெற்று விட்டதாக கருதி ‘ஏபிவிபி வாழ்க’ என்றும், ‘நக்சல்பாரியே ஓடிப் போ’ என்றும் முழக்கமிட்டுள்ளனர். முன்னதாக கலை நிகழ்ச்சியின் போது தாங்கள் நக்சல்பாரிகளின் வாரிசுகள் என கபீர் கலா மஞ்ச் அமைப்பினர் தங்களை பிரகடனப்படுத்திக் கொண்டனர்.
அத்துடன் முன்னணியில் நின்ற கிஸ்லே திவாரி என்ற மாணவரை ஏபிவிபி யினர் தாக்கவும் ஆரம்பிக்கின்றனர். ஸ்ரீராம் ராஜா என்ற மாணவரை ஹெல்மெட்டால் தலையில் தாக்குகின்றனர். அவர் தலையில் ரத்தம் வர ஆரம்பித்தவுடன் “ஜெய் நரேந்திர மோடி”, “ஜெய் ஸ்ரீராம்” என்று முழக்கமிட்டதுடன் மாணவர்களையும் அப்படி முழக்கமிடவும் வற்புறுத்தி இருக்கின்றனர். அப்படி சொல்லாதவர்கள் எல்லாம் நக்சலைட்டுகள்தான் என்றும் தீர்மானமாகக் கூறியுள்ளனர். தாங்கள் கலைஞர்கள் என்றும், கட்சி அரசியலை சாராதவர்கள் என்றெல்லாம் மாணவர்கள் எவ்வளவோ எடுத்துக் கூறிய போதிலும் அதையெல்லாம் ஏபிவிபி யினர் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. மதவெறி போதையால் ஆடும் வானரங்களிடம் வார்த்தைகளுக்கோ இல்லை வாய்மைக்கோ என்ன மதிப்பிருக்கும்?
அஜயன் அதத், அன்சர் ஷா, சமீன் ஆகிய இன்னும் 3 மாணவர்களும் தாக்கப்பட்டனர். தாக்குதலை வளாகத்திற்கு வெளியே வந்த பிறகுதான் இந்து மதவெறியர்கள் துவக்கியுள்ளனர். அதுவரை வாய்ச்சண்டை போட்ட படியே மாணவர்களை வெளியே வர வைத்து, கொண்டு வந்திருந்த கொடி என்ற பெயரிலான குண்டாந்தடிகளால் அவர்களைத் தாக்கியுள்ளனர். சிவிலியன் உடையில் வந்த போலீசுக்காரர் ஒருவர் நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்னரே கலைஞர்களை நோட்டமிட்டு விட்டு, பின்னர் தாக்குதல் நடக்கும்போது ஏபிவிபி அமைப்பினருடன் இருந்திருக்கிறார். ஆனால் மாணவர்கள் மீது அவர்கள் நடத்திய தாக்குதலை அவர் தடுக்க முற்படவில்லை. இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மாணவர்கள் மீதான வழக்கில் அவர்கள் சட்ட விரோதமாக கூடியிருந்ததாகவும், கலவரம் செய்ததாகவும் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இத்தாக்குதலில் இந்துமத வெறியர்களுக்கு ஆதரவாகத்தான் போலீசே செயல்பட்டுள்ளது என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.
புனே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் சங்கம், “நாங்கள் எந்த அரசியல் இயக்கத்தையும் சார்ந்தவர்கள் அல்ல. இசை, நடனம், திரைப்படம் என ஊடகங்கள் வழியாக எங்களது கருத்துக்களை சொல்ல சுதந்திரம் உள்ளதாக நம்பும் படைப்பாளிகள் நாங்கள். மைய நீரோட்டத்தில் கலக்காத, அதை எதிர்த்து செயல்படும் தனிநபர் அல்லது அமைப்பை தேச விரோத சக்தி என வரையறுக்க ஆரம்பித்தால் எப்படி பாசிசம் வளரும் என்பதற்கு சரியான உதாரணம் தான் தபோல்கரது படுகொலை. இக்கொலைக்கும், மாணவர்கள் மீதான தாக்குதலுக்கும் எதிராக அரசு இயந்திரம் நடவடிக்கை எடுக்க தவறி விட்டது. கருத்துரிமைக்கு எதிரான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்” என்று தனது அறிக்கையில் கூறியுள்ளது.

இதற்கிடையில் கடந்த ஆகஸ்டு 25-ம் தேதி மாலையில் இத்தாக்குதலை கண்டித்து மாணவர்களும், ஜனநாயக சக்திகளும் புனே திரைப்படக் கல்லூரியில் இருந்து தபோல்கர் சுட்டுக்கொல்லப்பட்ட ஓம்கரேஸ்வரர் பாலம் வரை ஊர்வலம் செல்ல திட்டமிட்டனர். காவல்துறை சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அனுமதி மறுத்தது. சமூக விரோத சக்திகள் ஊர்வலத்தில் புகுந்து மாணவர்களை தாக்கும்போது தங்களால் பாதுகாப்பு அளிக்க முடியாது எனக் கூறி அனுமதியை மறுத்தது காவல்துறை. மாணவர்கள் வீதியில் இறங்க தயாரான பிறகு கடைசியில் காவல்துறை அனுமதி தர வேண்டியதாயிற்று.
பாசிச சக்திகளுக்கு எதிராக ஜனநாயக உரிமையை நிலைநாட்டிட, தபேல்கரின் கொலை மற்றும் மாணவர்கள் மீதான தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த மௌன ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்களும், பல ஜனநாயக சக்திகளும் கலந்து கொண்டனர். ஊர்வலத்தின் இறுதியில் பேசிய மாணவர் கிஸ்லே திவாரி, பிறரது கருத்துக்களை வெளியிட விடாமல் தடுக்கும் முயற்சியில் வலதுசாரிகள் இருப்பது நாடறிந்த உண்மை என்றும், அவர்களது அடாவடித்தனத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதிபடக் கூறினார். இது போன்ற சிறிய தாக்குதலை எதிர்க்க தவறினால் தபோல்கர் போன்றவர்களை நாம் இழக்க வேண்டியதிருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
தபோல்கரை போன்றவர்களை இழப்பது மட்டுமின்றி, சாமான்ய இந்து பக்தர்களை தீவிரவாத பீதியூட்டி மதவெறியர்களாக மாற்றி வருவதன் ஒரு அங்கம்தான் இந்த தாக்குதல். மக்களுக்காக போராடும், தேச விடுதலைக்காக போராடும் ஜனநாயக சக்திகளை, சாதியை எதிர்ப்பதால் தேச விரோதி என்றும், நரேந்திர மோடி வாழ்க எனச் சொல்லாவிட்டால் தீவிரவாதி என்றும் முத்திரை குத்தி பிரச்சாரம் செய்யும் சங் பரிவார கும்பலின் முயற்சிதான் இந்த தாக்குதல்.
கடந்த வாரம் அகமதாபாத் நகரில் நடந்த பாகிஸ்தான் ஓவியர்களின் கண்காட்சி மீதான தாக்குதல் சம்பவம், தலித் பேராசிரியர் ஒருவர் சாதிரீதியான ஒடுக்குமுறையை விமர்சித்து வகுப்பறையில் பேசியதற்காக வெளியே தாக்கப்பட்டது, பால் தாக்கரே மரணத்திற்கு பிந்தைய தங்களது முகநூல் கருத்துக்காக இரு இளம்பெண்கள் கைது செய்யப்பட்டது என இந்து மதவெறியர்களும், காவல்துறையும் தொடர்ந்து நடத்தி வரும் பாசிச கூட்டணியின் விளைவுகளில் ஒன்றுதான் இந்த ஏபிவிபி தாக்குதல். இத்தகைய தாக்குதலின் ஒரு அங்கமாகத்தான் இந்துமத வெறியர்கள் தற்போது உத்திர பிரதேசத்தில் ஆடத் துவங்கியுள்ள ராமர் கோவில் கட்டுதற்கான யாத்திரையாகும்.
எனவே மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் ஓட்டுச்சீட்டு அரசியலின் மூலம் இந்துமத வெறியர்களை தனிமைப்படுத்தலாம் என்று நினைத்தால் அது இத்தகைய தாக்குதல்களை தடுத்து நிறுத்தாது. ஏனெனில் இந்துமத வெறியர்கள் எக்காலத்திலும் ஜனநாயகம், நீதிமன்றம், சட்டம் போன்றவற்றை மயிரளவிலும் மதிப்பதில்லை. ஆகவே இந்தியாவை பிளக்கும் இந்த மதவெறியர்களை வீதியில் இறங்கி நேருக்கு நேர் எதிர் கொண்டு தாக்குதல் தொடுக்க வேண்டும் என்று கூறும் புரட்சிகர சக்திகளின் வழிமுறைதான் காலம் கோரும் வழிமுறை.
– வசந்தன்.
மேலும் படிக்க