Monday, April 21, 2025
முகப்புஉலகம்அமெரிக்காஅமெரிக்கா ஒட்டுக் கேட்பதில் பொருளாதார துறையும் உண்டு !

அமெரிக்கா ஒட்டுக் கேட்பதில் பொருளாதார துறையும் உண்டு !

-

லக அமைதி, உள்நாட்டு பாதுகாப்பு, ஜனநாயகத்தை பரப்புதல் போன்ற ‘உயர்ந்த’ நோக்கங்களோடு செயல்பட்டும் வரும் அமெரிக்க அரசின் உளவுத் துறை பிரேசில் நாட்டு அதிபரின் தகவல் பரிமாற்றங்களையும் அந்நாட்டு எண்ணெய் நிறுவனத்தின் கணினிகளையும் ஊடுருவி ஒட்டு கேட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

கிளென் கிரீன்வால்ட்
ஸ்னோடன் ஆவணங்களை வெளியிடும் கார்டியன் பத்திரிகையாளர் கிளென் கிரீன்வால்ட் (படம் : நன்றி தி இந்து).

அமெரிக்க உளவுத் துறையின் கண்காணித்தல் குறித்த தகவல்களை அதன் முன்னாள் ஒப்பந்த ஊழியர் எட்வர்ட் ஸ்னோடன் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியதும் ‘பயங்கரவாதிகளின் குண்டுகளிலிருந்து பாதுகாப்பதற்காக, உங்களை உளவு பார்க்கிறோம்’ என்று அமெரிக்க குடிமக்களிடமும், ‘உலகை அமைதிப் பூங்காவாக பராமரிக்க மற்ற நாட்டு குடிமக்களின் தகவல் பரிமாற்றங்களையும் ஒட்டுக் கேட்கிறோம்.’ என்று மற்ற நாடுகளிடமும் சப்பைக் கட்டியது அமெரிக்க அரசு.

கூடவே, ‘என்ன தகவலை பரிமாறிக் கொள்கிறீர்கள் என்றெல்லாம் பார்க்கவில்லை, தகவல் பரிமாற்ற நேரம், தொடர்புள்ள நபர்கள், இடம் போன்ற குறிப்புகளை மட்டும்தான் சேகரித்தோம்’ என்று நம்ம லெட்டரை அமெரிக்கா படிப்பதா என்று கோபப்பட்டவர்களிடம் விளக்கம் சொன்னது அமெரிக்கா.

தன்னுடைய லாபத்துக்காக, அடுக்கடுக்கான பொய்களின் அடிப்படையில், ஈராக்கின் மீது போர் தொடுத்து, குண்டு மழை பொழிந்து, பல ஆயிரம் மக்களை கொன்று குவித்து, பல லட்சம் மக்களை காயப்படுத்தி நாச வேலை புரிந்தது அமெரிக்க அரசு. ஈராக்கின் எண்ணெய் வளங்களை கைப்பற்றுவதன் மூலமும், போர் மற்றும் மறுகட்டமைப்பு ஒப்பந்தங்களிலும் லாபம் குவித்தன அமெரிக்க நிறுவனங்கள். அமெரிக்க அரசியலும், அமெரிக்க நிறுவனங்களின் பொருளாதார சுரண்டலும் ஒன்றிடமிருந்து ஒன்று பிரிக்க முடியாமல் பிணைந்தவை என்பதற்கான சமீபத்திய உதாரணம் இது.

ஆனால், அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பு ‘மின்னணு தகவல் பரிமாற்றம் உட்பட, எந்த வகையிலும் பொருளாதார, வணிக நோக்கங்களுக்காக உளவு பார்க்கவில்லை’ என்றும் எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்று விளக்கம் அளித்திருந்தனர் அமெரிக்க தலைவர்கள்.

இப்போது அந்த கடைசி கோவணமும் அவிழ்ந்து முழுக்க அம்மணமாக நிறுத்தப்பட்டிருக்கிறது அமெரிக்கா. ஸ்னோடன் வெளியிட்ட ஆவணங்களில் அடங்கியுள்ளதாக கடந்த ஞாயிற்றுக் கிழமை குளோபோ தொலைக்காட்சியில் வெளியான  அறிக்கையின்படி அமெரிக்க அரசு பிரேசில் நாட்டில் எண்ணெய் கிணறு ஏலம் தொடர்பான தகவல்களை திரட்டுவதற்காக அந்நாட்டு பிரதமர் டில்மா ரோசப், அவரது ஆலோசகர்கள், பெட்ரோபிரேஸ் எண்ணெய் நிறுவனம் ஆகியவற்றின் மின்னஞ்சல்கள், தொலைபேசி உரையாடல்கள், இணைய பரிமாற்றங்களை இடை மறித்து ஒட்டுக் கேட்டிருக்கிறது.

“நண்பர்கள், எதிரிகள், அல்லது பிரச்சனைகள்?” என்ற பட்டியலில் பிரேசில் நாட்டை முதலாவதாக வைத்து அதன் தகவல் தொடர்புகள் ஒட்டுக் கேட்கப்பட்டிருக்கின்றன. அந்த பட்டியலில் இந்தியா எகிப்துக்கு பின் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஈரான், மெக்சிகோ, சவுதி அரேபியா, சோமாலியா, துருக்கி, யேமன் ஆகிய நாடுகளும் பட்டியலில் உள்ளன.

டில்மா ரோசெஃப்
ஒட்டுக் கேட்கப்பட்ட டில்மா ரோசெப்

இந்தியா முக்கியமான கண்காணிப்பு இலக்காக அடையாளம் காணப்பட்டிருப்பதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. மும்பையை மத்திய கிழக்கு நாடுகளுடனும், சென்னையை தென் கிழக்காசிய நாடுகளுடனும் இணைக்கும் இணைப்பு தடங்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன.

பிரேசில் அதிபர் டில்மா ரோசப் தகவல் பரிமாற்றங்கள் செய்து கொள்ளும் முறைகளையும்  அவரது ஆலோசகர்களை பற்றியும் புரிதலை மேம்படுத்திக் கொள்வது அமெரிக்க உளவு அமைப்பின் நோக்கம் என்று ஒரு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இன்னொரு ஆவணத்தில் பிரேசில் அதிபருக்கும் அவரது ஆலோசகர்களுக்கும் இடையேயான உறவு வலைப்பின்னல் காண்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, பிரேசில் அரசின் செயல்பாட்டை புரிந்து கொள்வதற்கான உளவுத் துறையின் முயற்சிகள் வெற்றியடைந்தன.

யாரை ஒட்டுக் கேட்க வேண்டும் என்று முடிவு செய்து, அவர்களது தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் ஆகியவற்றை திரட்டிய பிறகு, சிம்ப்ரி, மெயின்வே, டிஷ்ஃபயர் என்ற மூன்று கணினி மென்பொருட்களை பயன்படுத்தி கவனம் செலுத்த வேண்டிய தகவல் தொடர்புகளை அடையாளம் கண்டு கொள்கிறது அமெரிக்க உளவு அமைப்பு.

பிரேசிலில் சமீபத்தில் 10,000 கோடி பீப்பாய் கொண்டதாக மதிப்பிடப்படும் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெயன்ட் லீப்ரா வயல் என்று சொல்லப்படும் பகுதியில் மட்டும் 1,200 கோடி பீப்பாய் எண்ணெய் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது மட்டுமே அமெரிக்காவின் 2 ஆண்டுகள் எண்ணெய் தேவைகளை நிறைவு செய்ய போதுமானது. இந்த எண்ணெய் வயல் அடுத்த மாதம் ஏலம் விடப்பட உள்ளது.

இந்த ஏலத்தை குறி வைத்து பிரேசில் நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோபிரேசின் கணினிகளையும் தேசிய பாதுகாப்பு அமைப்பு ஊடுருவியிருக்கிறது. பெட்ரோபிரேஸ் பகுதியளவு தனியார் மயப்படுத்தப்பட்ட பொதுத்துறை நிறுவனம். அதன் ஆண்டு லாபம் $12,000 கோடி (ரூ 7.2 லட்சம் கோடி). ஆழ்கடல் எண்ணெய் அகழ்வாராய்ச்சியில் உலகிலேயே முன்னிலை வகிக்கும் நிறுவனம் அது. ரியோ கடற்கரைக்கு அருகில் அது கண்டறிந்த எண்ணெய் வளங்கள், பிரேசிலை உலகின் முன்னணி எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாக மாற்றியுள்ளன.

பெட்ரோபாஸ்
பெட்ரோபாஸ் நிறுவனத்தின் எண்ணெய் தளத்தில் வேலை செய்யும் தொழிலாளர் (படம் : நன்றி தி இந்து).

அமெரிக்கா, ஐரோப்பா, சீனா உள்ளிட்ட முன்னணி நாடுகள் இந்த எண்ணெய் வயல்களை கைப்பற்ற போட்டி போடுகின்றன. இந்தியாவின் ஓஎன்ஜிசி ஏற்கனவே இரண்டு எண்ணெய் வயல்களில் இடம் பிடித்திருக்கிறது. இனி வரும் ஏலங்களிலும் பங்கேற்க திட்டமிட்டிருக்கிறது. அந்த வகையில் இந்திய அரசு மற்றும் ஓஎன்ஜிசி தகவல் பரிமாற்றங்களையும் அமெரிக்கா ஒட்டுக் கேட்டிருக்கும் என்று நம்பலாம்.

பிரேசிலில் எண்ணெய் எடுப்பது மட்டுமின்றி, உலகெங்கும் யார் யாருக்கு என்ன பணம் அனுப்புகிறார்கள் என்பதும், எப்படி செலவழிக்கிறார்கள் என்பதிலும் அமெரிக்க உளவுத் துறை மூக்கை நுழைத்திருக்கிறது.

212 நாடுகளில் உள்ள 10,000 வங்கிகளுக்கிடையேயான பணப் பரிமாற்றங்களை கையாளும் ஸ்விப்ட் வலையமைப்பின் நிதி பரிமாற்ற விபரங்களையும் அமெரிக்க உளவுத் துறை கண்காணித்து வருகிறது. ஏடிஎம்-கள் வழியாக பணப் பரிமாற்றம் செய்து கொள்ளும் பாதுகாக்கப்பட்ட பரிமாற்ற இணைப்புகளையும் உடைத்து தகவல்களை ஒட்டுக் கேட்டிருக்கிறது அமெரிக்க கூட்டாளியான பிரிட்டிஷ் உளவுத் துறை. “பறக்கும் பன்றி (Flying Pig)”, “ஹஷ் பப்பி (Hush Puppy)” போன்ற மென்பொருட்கள் மூலம் பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்துக்காக பயன்படுத்தப்படும் TLS/SSL வலையமைப்பையும் பிரிட்டிஷ் உளவுத் துறை ஊடுருவியிருக்கிறது. வங்கி கணக்கு நிர்வாகம், இணையத்தில் பொருட்கள், சேவைகளுக்கு பணம் கொடுத்தல், ஏடிஎம்-மில் பணம் எடுத்தல், கடன் அட்டையில் பொருள் வாங்குதல் போன்ற பரிமாற்றங்களும் இந்த முறையில் பாதுகாக்கப்படுகின்றன.

அமெரிக்க அரசின் போலி ஜனநாயக ஆடைகள் மேலும் மேலும் உரிக்கப்பட்டு அம்மணமாக்கப்பட்டாலும் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் ஆட்சியாளர்கள், “பேரரசரின் புதிய உடைகள் பிரமாதம்” என்று தொடர்ந்து புகழ் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இதுநாள் வரை அரசியல் அரங்கில் மட்டும் இருந்ததாக அறியப்பட்ட ஒட்டுக் கேட்பு தற்போது பொருளாதார துறையிலும் இருப்பதாக விரிந்திருக்கிறது. ஏகாதிபத்திய முதலாளிகளின் நலனுக்காக எல்லா நாடுகளில் உள்ள அரசு, பொதுத்துறை நிறுவனங்களோடு முதலாளித்துவ நிறுவனங்களும் ஒட்டுக் கேட்பில் வருவது தெரிகின்றது. பன்னாட்டு முதலாளிகள் பயன்படுத்தும் கட்டணத்தை அமெரிக்காவிடம் கொடுத்து விட்டு தங்கள் சுரண்டலை அதிகப்படுத்துவதற்கு இது உதவி செய்யும்.

மட்டுமல்ல, உலகமயத்திற்கு எதிரானவர்கள் யார், வால்மார்ட்டை வரவிடாமல் பேசுபவர்கள் யார், என்ன அமைப்புகள் என்பது துவங்கி இவர்களது மேலாதிக்க திட்டம் இன்னும் பல்வேறு பரிமாணங்களோடு செயல்படும். அமெரிக்கா இராணுவரீதியில் செய்யும் மேலாதிக்கத்திற்கு இந்த ஒட்டுக்கேட்பு முறை ஒரு தேர்ந்த அடியாள் வேலையைச் செய்கிறது. ஜனநாயகம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புவர்கள் அமெரிக்காவின் ஒட்டுக் கேட்பை ஆராயுங்கள்.

மேலும் படிக்க