மூக்கொண்டப்பள்ளி கடைவீதியில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்
அரசு- பொதுத்துறை வங்கிகளில் ரூ 5 இலட்சம் கோடிக்கு மேல் கடன் மோசடி செய்துள்ள முதலாளிகளின் முகத்தில் காரித் துப்புவோம் என்ற முழக்கத்தின்கீழ் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தமிழ்நாடு முழுவதும் பிரச்சார இயக்கம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஓசூரில் ஆலைவாயில் பிரச்சாரம், தொழிலாளர் குடியிருப்பு பிரச்சாரம், தெருமுனைப் பிரச்சாரம் என்று வீச்சான பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். 07.09.2013 சனிக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் மூக்கொண்டப்பள்ளி குடியிருப்பு பகுதிகளில் தெருமுனைப்பிரச்சாரம் செய்தனர்.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டத் துணைத்தலைவர் தோழர் சின்னசாமி தெருமுனைப் பிரச்சாரத்திற்கு தலைமைத் தாங்கினார். அவர் பேசியபோது, ரூபாயின் வீழ்ச்சி என்பது லாட்டரி சீட்டுபோல இப்போது வீழ்ந்துவருகிறது. பங்குச் சந்தையில் முதலீடு, ரியல் எஸ்டேட் பிஸினஸ், சிறப்புப் பொருளாதாரம், பன்னாட்டு மூலதனத்திற்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு போன்ற மறுகாலனியாக்க நடவடிக்கையினால் புதை சேற்றில் கால் வைத்தாற் போல மேலும் மேலும் ரூபாயின் வீழ்ச்சி என்பது நடந்து நமது இந்திய ரூபாயின் மதிப்பு கழிவறைக் காகிதத்திற்கு சமமாக போக உள்ள அபாயத்தை சுட்டிக் காட்டி எச்சரிக்கை விடுத்துப் பேசினார்.
அடுத்ததாக பேசிய மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் இரா. சங்கர் ரூபாய் வீழ்ச்சியடைந்தால் நமக்கென்ன என்று உழைக்கும் மக்களாகிய நாம் ஒதுங்கியிருக்கமுடியாது. ஏனென்றால் நமது நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இன்றைக்கும் இருந்து வருகின்ற விவசாயத்தை அழித்து அந்நிய மூலதன சுரண்டல் நலனுக்கான பொருளாதாரத்தை ஊக்குவித்து நமது நாட்டையே பாலைவனமாக்கும் ஆட்சியாளர்களின் கொள்கைகளான, முதலாளிகளின் கொள்ளைச் சுரண்டல் நலனுக்கான கொள்கையாக அமுல்படுத்தப்பட்டு வரும் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைக்கு எதிராக பாராளுமன்ற பாதையை கைவிட்டு அதற்கு வெளியே புதிய ஜனநாயக புரட்சிக்கான போராட்ட பாதையில் மக்கள் அணிஅணியாக அணிதிரளவேண்டும் என அறைகூவி அழைத்து உரையாற்றினார்.
பலரும் அருகில் வந்து கூர்ந்து கவனித்துச் சென்றனர். கடைகளில் பிரச்சாரம் செய்தபோது தாராள நிதி தந்தும் தொடர்ந்து விவாதிக்கலாம் என சில இளைஞர்கள் தங்களது முகவரிகளை தாமே முன்வந்து கொடுத்து சந்திக்கவரும்படி கோரிச் சென்றனர்.
மேற்கண்ட வகையில் சிறப்பாகவும் எழுச்சியாகவும் நடைபெற்ற இத்தெருமுனைப்பிரச்சாரத்திற்கு இறுதியாக மாவட்ட செயற்குழுத் தோழர் செந்தில் நன்றியுரையாற்றினார்.
பிரச்சாரத்தின்போது பயன்படுத்தப்பட்ட துண்டறிக்கை செய்தி :
அரசு பொதுத்துறை வங்கிகளில் ரூ 5 இலட்சம் கோடிக்கு மேல் கடன் மோசடி செய்துள்ள முதலாளிகளின் முகத்தில் காறித் துப்புவோம்!
அன்பார்ந்த தொழிலாளர்களே,
தொழிலாளர்களுக்கு வேலைகொடுக்கும் கருணை வள்ளல்கள் என்று முதலாளிகள் பீற்றிக் கொள்கின்றனர். அவர்களது திறமையால்தான் தொழில்வளமும், லாபமும் பெருகி வருவதாகத் தம்பட்டம் அடிக்கின்றனர். மறுபுறத்தில், தொழிலாளிவர்க்கம் உழைக்கத் தயங்குவதாகவும், சங்கம் துவக்கி தொழில் அமைதியைக் கெடுப்பதாகவும் அவதூறு பேசித் திரிகின்றனர் முதலாளிகள். வறுமையில் வாடுகின்ற மக்களுக்கு மானியவிலையில் எதைக் கொடுத்தாலும் மக்கள் சோம்பேறிகளாகிவிடுவார்கள் என்று வாய்க்கொழுப்புடன் பேசுகின்றனர், முதலாளிகள்.
கருணை உள்ளமும், கடும் உழைப்பும், நேர்மையும் ஒருபோதும் முதலாளிகளுக்கு இருந்தது இல்லை. மக்கள் பணத்தையும், அரசு கஜானாவையும் களவாடுவது, மோசடி செய்வது, பொய்க் கணக்கு எழுதி வரி ஏய்ப்பு செய்வது, இரட்டை வேடம் போடுவது, பிறரது உழைப்பை அபகரித்துக் கொள்வது ஆகிய அனைத்து ‘நற்பண்பு’ களுக்கும் சொந்தக்காரர்களே. முதலாளிகள். இதனை தினந்தோறும் நிரூபித்துவரு கின்றனர்.
இந்தியாவின் அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் முதலாளிகள் ரூ 5 இலட்சம் கோடிக்குமேல் கடன் வாங்கி மோசடி செய்துள்ளதாக இந்திய அரசின் புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ – யின் இயக்குநர் ரஞ்சித் சின்கா சமீபத்தில் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட சில பெரிய நிறுவனங்கள் மட்டும் ரூ 1,17,262 கோடிகள் கடன் மோசடி செய்துள்ளதாகவும், மேற்படி கடன் மோசடிகள் திட்டமிட்டு செய்யப்பட்டவை என்றும் சின்கா கூறியுள்ளார்.
முதலாளிகள் திருடி இருக்கின்ற பணம் அனைத்தும் உழைக்கும் மக்களது வங்கி சேமிப்புப் பணமே, இதனைத் திருப்பிக் கட்டமுடியாத அளவுக்கு எந்த முதலாளியும் கஷ்ட ஜீவனம் நடத்தவில்லை. மாறாக, உல்லாச வாழ்க்கை நடத்துகின்றனர். பல்வேறு தொழில்களுக்கு தங்களது சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்துகின்றனர். உதாரணமாக, இந்தியாவின் மிகப்பெரிய சாராய ஆலையை நடத்திவருகின்ற விஜய் மல்லையா, வாங்கிய கடனைத் திருப்பிக் கட்டவில்லை. அவனது விமான நிறுவனத்தில் வேலை செய்த ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளமும் தரவில்லை. ஆனால், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் அவனுக்குச் சொந்தமான பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியை வைத்து குத்தாட்டமும், சூதாட்டமும் நடத்தினான். கடன் வாங்கி டிமிக்கி கொடுத்தவர்கள் பட்டியலில் ஜெயலலிதாவும், டி.ஆர். பாலுவும் அடக்கம்.
வாங்கிய கடனை திருப்பிக்கட்டாத நபர்களது கழுத்தில் துணைடைப்போட்டு இழுத்துச் செல்வதைப் பார்த்திருக்கிறோம். சில ஆயிரம் ரூபாய் கடன் பிரச்சினைக்கே தூக்கில் தொங்கிய ஏழை மக்கள் பலரைப் பார்த்திருக்கிறோம். மானத்துக்கும், மனச்சாட்சிக்கும் அஞ்சுகின்ற பண்பாடு உழைக்கும் மக்களுக்குச் சொந்தமானது. பிறரது உழைப்பைச் சுரண்டியும், ஏமாற்றியும் பிழைப்பு நடத்தும் மானம் கெட்ட பண்பாடே முதலாளிகளின் பண்பாடு. இதனால்தான், ஒரு திருட்டுப் பயலுக்குரிய கூச்சமோ, சொரணையோ இல்லாமல், கோட்டு சூட்டுடன் உலாவருகின்றனர்.
வங்கிக் கடன் மோசடி மட்டுமின்றி, பல தொழிலாளர்களது கூலியையும் திருடிக்கொள்ளும் ஈனப்பிறவிகளே, முதலாளிகள். சில நாட்களுக்கு முன்பாக சென்னை அண்ணாசாலையில், மிகப் பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டுமானத்தின் 12 வது மாடியிலிருந்து குதிக்கமுயன்றார், மணிகண்டன் என்கிற தொழிலாளி. மேற்படி கட்டுமானத்தைச் செய்துவரும் இடிஏஸ்டார் குரூப்பில் சப்காண்ட்ராக்ட் வேலை செய்த மணிகண்டனுக்கும், ஏனைய சில தொழிலாளர்களுக்கும் பல மாதங்களாக சம்பளமே தராததால் தற்கொலைப் போராட்டம் நடத்துகின்ற நிலைக்குத் தள்ளப்பட்டார். அந்தத் தொழிலாளி.
கோவையில் ஏ.ஜி.ஸ்பின்னிங் மில்லில் சுமங்கலித் திட்டம் என்கிற கொத்தடிமைத் திட்டத்தில் இரவு-பகல் பாராமல் வேலை செய்தபோது சாந்தி என்கிற சிறுமியின் கை துண்டாகிப் போனது. இதன் பிறகு அந்தச் சிறுமியை வேலையை விட்டே துரத்தினான், முதலாளி. பல போராட்டங்களுக்குபிறகே சாந்திக்கு சொற்ப நிவாரணம் கிடைத்தது. ஒசூர் பிரீமியர் மில்லில் கையைப் பறிகொடுத்த மாலதி என்கிற தொழிலாளிக்கு அந்த அற்ப நிவாரணமும் கிடைக்காமல் போராடி வருகிறார்.
மணிகண்டனும், சாந்தியும் கடலில் ஒருசில துளிகள் மட்டுமே, இலட்சக் கணக்கான துயரக் கதைகள் வெளி உலகுக்கு வராமலேயே போய்விட்டன. தொழிலாளியை சுரண்டாமல் முதலாளிவர்க்கத்தால் வாழமுடியாது. பொதுச்சொத்தை திருடாமல் முதலாளிகளால் கெ கொழுக்கமுடியாது. அடக்குமுறைகளை செய்யாமல் அவர்களால் பாதுகாப்பாக இருக்கமுடியாது. இதற்காக எத்தனை பெரிய கொடூரத்தையும் செய்யத் தயங்காத மாபாவிளே, முதலாளிகள். சட்டத்தில் ஓட்டை போட்டு பதுங்கிக் கொள்ளுகின்றன. முதலாளித்துவப் பெருச்சாளிகள்.
சட்டமும், அரசு கெடுபிடிகளும் முதலாளிகளுக்கு எதிரில் மண்டியிட்டுக் கிடக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தேனி மாவட்டம் போடி நகரில் உள்ள அரசு வங்கியான ஸ்டேட் வங்கியானது, சில மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களின் புகைப்படங்களை பிளக்ஸ் பேனர் போட்டு விளம்பரம் செய்துள்ளது. இந்த மாணவர்கள் சில ஆயிரம் ரூபாய் கடனுக்காக போட்டோவைப் போட்டு அவமானப்படுத்திய வங்கிகள், பல இலட்சம் கோடிகளை மோசடி செய்த முதலாளிகளது பட்டியலை வெளியிட்டார்களா? போட்டோக்களை அச்சடித்து அம்பலப்படுத்தினார்களா? ஒருத்தன் பெயரைக்கூட வெளியில் சொல்லாமல் அமுக்கி வைத்துள்ளார்கள். ஏழைக்கு ஒரு நீதி! முதலாளிக்கு ஒரு நீதி! இதுதான் முதலாளிகளின் மனுநீதி!
கடன் மோசடி செய்கின்ற முதலாளிவர்க்கம், தொழிலாளிவர்க்கத்தைப் பார்த்து சோம்பேறிகள் என்று சொன்னால் செருப்படி கொடுப்போம். தொழிலாளி வர்க்கத்தை அடக்கியும், சுரண்டியும் வருகின்ற முதலாளிவர்க்கம், தொழிலாளிவர்க்கத்தையும், தொழிற்சங்க இயக்கத்தையும் வன்முறையாளர்கள் என்று அவதூறு செய்வதற்குப் பதிலடி கொடுப்போம். நாட்டையே சூறையாடிக் கொழுத்துத்திரியும் முதலாளித்துவ ஒட்டுண்ணிக் கும்பல்மீது, பார்க்கும் இடத்தில் எல்லாம் காறித்துப்புவோம்!
இவண்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்கள்.
தொடர்புக்கு ; 9788011784, ஓசூர்.
——————————————————————————————————————————-