Monday, April 21, 2025
முகப்புசெய்திவிபத்தில் கொல்லப்பட்ட தொழிலாளிக்கு நீதி கேட்டு முற்றுகை !

விபத்தில் கொல்லப்பட்ட தொழிலாளிக்கு நீதி கேட்டு முற்றுகை !

-

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகில் உள்ள ஜனப்பன்சத்திரம் கூட்ரோட்டில் உள்ள சிப்காட்டில் இந்தியாவிலேயே மீன்வலை தயாரிப்பில் முன்னணி நிறுவனமான சூப்பர்ஃபில் நிறுவனம் 20 வருடமாக இயங்கி கொண்டு இருக்கிறது. புதுச்சேரியிலுள்ள இதன் துணை நிறுவனத்தில் கடந்த 05/09/13 அன்று இரவு 10.05-க்கு இயந்திரத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த குணசேகரன் என்ற தொழிலாளிக்கு விபத்து ஏற்பட்டது. அதன்பின் அத்தொழிலாளியை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தபோது, அங்கிருந்த மருத்துவர்கள் இனி எதுவும் செய்ய முடியாது எனவும் வேறு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்படியும் கூறினாரகள். பின்னர், சென்னை அப்பல்லோ மருத்துவனையில் சேர்த்தபோது, அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டு விட்டதாகக் கூறினர்.

மக்கள் சக்திஇவ்வளவு நடந்த பின்பும் மருத்துவச் செலவுக்கு , தொழிற்சாலை நிர்வாகம் நிதியுதவி எதுவும் செய்யவில்லை. அதைப் பற்றிக் கேட்ட போதும் அக்கறையின்றி செயல்பட்டனர்.

இந்நிறுவனத்தில் கடந்த 2001 – ல் தொழிலாளர்கள் சிஐடியூ சங்கம் தொடங்கிய போது, நிர்வாகம் கொடூரமாக ஒடுக்கியது. அச்சமயத்தில் புதுவைக்கு மாற்றலாகிப் போனவர்தான் இந்த குணசேகரன். அதன் பிறகு ஏறக்குறைய 6,7 வருடங்களாக அவர்கள் சங்கத்தைப் பேச்சே எடுக்கவில்லை. பல்வேறு அடக்குமுறைகளுக்கு ஆளானபோதும், அத்தொழிலாளர்கள் வாய் திறந்து பேசவில்லை.

இதே பகுதியில் கெம்பிளாஸ்ட் என்னும் பைப் தயாரிக்கும் நிறுவனத்தில் பு.ஜ.தொ.மு சங்கம் துவங்கியபோது, பிரசுரம் வினியோகித்துக் கூட்டம் நட்த்தியபோது நாம் கொடுத்த பிரசுரத்தைக் கூட சீண்டவில்லை. அதற்குப் பதிலாக முதலாளியை எதுவும் செய்யமுடியாது என்று கூறினர். இச்சூழலில்தான் நமது பு.ஜ.தொ.மு மாநில இணைச்செயலாளர் சுதேஷ்குமார் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் இறந்த தகவல் கிடைத்தது. இப்பிரச்சனையில் அடுத்த கட்டமாக கிராம மக்கள் ஒன்றிணைந்து சூப்ப்ர்ஃபில் நிறுவனத்தை முற்றுகையுடுவோமென நாம் வழிகாட்டுதல் கொடுத்தோம்.

அவ்வழிகாட்டுதல் படி, 10.09.2013 அன்று காலை கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட மக்கள் ஆலையை முற்றுகையிடத் திரண்டனர். இம்முற்றுகைப் போராட்டத்தில் மாநில இணைச்செயலர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட்த்தைச் சேர்ந்த தோழர்களும் மக்களோடு கலந்து கொண்டனர். அம்மக்கள் ஆலை நுழைவாயிலைத் திறந்து கொண்டு அலைகடலென அந்நிறுவனத்தின் அலுவலகத்திற்கு உள்ளே சென்று நிர்வாக இயக்குனரை வெளியே இழுத்துக் கொண்டு வந்து, மூளைச்சாவு ஏற்பட்ட குணசேகரனுக்கு நியாயம் வேண்டுமெனக் கேட்டனர். ஆனால் அதிகாரி, எனக்கு அதிகாரமில்லை என்றான்.

அதன் பிறகு மக்கள், நிறுவனத்தின் உள்ளே சென்று வேலைசெய்து கொண்டிருந்த தொழிலாளர்களைத் தடுத்து நிறுத்தி, ஆலையை விட்டு வெளியே அனுப்பி ஆலையை இழுத்து மூடினர். பேச்சுவார்த்தை நடத்த முன்வராத அதிகாரிகளை கண்டித்து, மக்கள் ஆங்காங்கே தமது குமுறல்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். இச்சமயத்தில் பு.ஜ.தொ.மு தோழர்கள் முழக்கமிட்டு, சிதறிக்கிடந்த மக்களை ஒன்றிணைத்தனர். மேலும் இதையொட்டி, ஆலை அலுவலகத்திற்குள்ளேயே அமர்ந்து போஸ்டர்களைக் கையால் எழுதி, ஆலை வாயிலில் ஒட்டினர்.

போராட்டத்தைக் கண்டு அஞ்சி நடுங்கிய ஆலை நிர்வாகிகள், காவல்துறைக்குத் தகவல் கொடுத்து, வரவழைத்து தம்மைப் பாதுகாத்துக் கொண்டனர். இருந்த போதும் மக்களின் கோபத்தைப் பார்த்த போலீசே, ஆலை அதிகாரிகளைப் பேச்சுவார்த்தை நடத்தக் கோரினர். வேறுவழியில்லாத நிர்வாகம் மக்கள் முன்னே பேச்சுவார்த்தைக்கு முன்வந்த்து. இப்பேச்சுவார்த்த்கையில் பு.ஜ.தொ.மு மாநில இணைச்செயலர் மற்றும் கிராமப் பிரதி நிதிகள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் இறுதியில் மூளைச்சாவு ஏற்பட்ட குணசேகரனுக்கு இழப்பீடாக ரூபாய் 30 லட்சத்தையும், இதுவரை அவரது மருத்துவத்திற்கு செலவான தொகையையும் தருவதாக ஒப்புக்கொண்ட்து.

எந்தப் பாதையில் போராட வேண்டுமென்ற வழிகாட்டுதலையும், அரசியல் நம்பிக்கையையும் விதைத்தால் மக்கள் சக்தி முன் எப்பேர்ப்பட்ட கொம்பனும் மண்டியிட வேண்டும் என்பதை மீண்டுமொருமுறை வரலாற்றில் பதிய வைத்துள்ளனர்.

தகவல் : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் மாவட்டம்