Monday, April 21, 2025
முகப்புசெய்திஉயர்நீதிமன்றத்தில் தமிழ் ! திருச்சி, விழுப்புரம் ஆர்ப்பாட்டம் !!

உயர்நீதிமன்றத்தில் தமிழ் ! திருச்சி, விழுப்புரம் ஆர்ப்பாட்டம் !!

-

உயர்நீதிமன்றத்தில் தமிழ்! தமிழக வழக்குரைஞர்களின் போராட்டம் வெல்லட்டும்!

திருச்சி ஜங்சன் காதிகிராஃப்ட் அருகில் 12.09.2013 அன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்

ந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து 348(1) உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் அலுவல் மொழி ஆங்கிலமே என்று கூறுகிறது. அதே நேரத்தில் சரத்து-348(2) மாநில ஆளுநர்கள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் இந்தியையோ அல்லது அந்தந்த மாநிலங்களின் அலுவல் மொழியையோ, உயர்நீதிமன்றங்களின் மொழியாக்கலாம் என்றும் கூறியுள்ளது. அதன் படி 1961-ம் ஆண்டிலேயே மத்திய பிரதேசம், உத்திரப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார் ஆகிய மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களில் அந்த மாநிலங்களின் தாய்மொழியான இந்தி வழக்காடு மொழியாக்கப்பட்டது.

ஆனால், தமிழைச் சொல்லியே ஆட்சியைப் பிடித்த கழங்கள் ஆண்ட தமிழகத்திலோ இன்று வரை தமிழில் வழக்காட முடியாத நிலை நீடிக்கிறது. மிகவும் தாமதமாக 2006ம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் தமிழை தமிழ் நாட்டிலுள்ள உயர்நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக்க ஒருமனதாக தீர்மானம் இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக பாராளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டது. மன்மோகன் அரசு அத்தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதற்கு பதிலாக, உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பியது. ஆனால் அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கேரளத்தைச் சேர்ந்த கே.ஜி. பாலகிருஷ்ணன், இக் கோரிக்கையை ஏற்க மறுத்ததுடன் “வட்டார மொழிகளை நீதிமன்ற மொழிகளாக்க முடியாது. இந்தி வளர்ந்து கனியும் வரை ஆங்கிலம் இருக்கும். அதன் பின இந்தி மட்டுமே உயர்நீதிமன்றங்களின் ஆட்சி மொழியாகும்”, என்று கூறி விட்டார். இந்த உத்தரவைக் காரணம் காட்டி அப்போது தமிழர் ப.சிதம்பரம் தலைமையிலிருந்த உள்துறை தமிழக சட்டமன்ற தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் முடக்கி வைத்த்து. இந்த மோசமான நிலை இன்று வரை நீடிக்கிறது. மக்கள் விரோத நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபடும் போது கூட எவரேனும் அதனை தடுக்க வழக்குப் போட்டால், ”அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது”, என்று சொல்லும் நீதிமன்றங்கள், மக்களுக்கு விரோதமான நடவடிக்கை என்று வந்தால் மூக்கை நுழைத்து இத்தகைய உத்தரவுகளை வழங்குவதை வழமையாக வைத்துள்ளது. நீதிபதிகள் நியமனம் உள்ளிடவற்றில் நீதித்துறைக்கு அதிக அதிகாரம இருப்பதாகக் கூறியும் நாடாளுமன்றம், நிர்வாகம் ஆகியவற்றுக்கு மேலாக இப்படி தனியதிகாரம் நீதித்துறைக்கு அளிக்கப்பட்டிருப்பதை கட்டுப்படுத்த வேண்டும் என்று தற்போது பேசி வரும் அமைச்சர்கள் தற்போதும் தாய் மொழிக்கு விரோதமான நீதிமன்றத்தின் உத்தரவை மட்டும் கேள்விக்குள்ளாக்க மறுக்கிறது.

2010ம் ஆண்டிலேயே மதுரையிலும் சென்னையிலும் மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 25 வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டுமென்று கோரி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார்கள். தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் போராட்டத் தீ பரவுவதைக் கண்டு அதனை கட்டுப்படுத்த அப்போதைய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால் உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாடலாம் என்று வாய்மொழி உத்தரவிட்டார். தமிழில் வழக்கறிஞர்கள் வழக்காடினார்கள். பெரும்பாலான நீதிபதிகள் மகிழ்ச்சியுடன் வாதத்தைக் கேட்டார்கள். ஒரு சில நீதிபதிகள் நக்கலும் நையாண்டியும் செய்து தம் வெறுப்பைக் காட்டினார்கள்.

இந்நிலையில் தற்போது மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞர் தமிழில் வாதாடியதற்காக மணிக்குமார் என்ற நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார். அதனால் போராட்டம் மீண்டும் வெடித்தது. மதுரை வழக்கறிஞர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் பிரச்சார ஊர்வலமாக கிளம்பினார்கள். திருச்சி, பெரம்பலூர், உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், திண்டிவனம், செங்கல்பட்டு, மறைமலைநகர், ஆகிய ஊர்களிலுள்ள நீதிமன்றங்களுக்கு சென்று ஆதரவு திரட்டி சென்னைக்கு சென்று 06.09.2013 அன்று பொதுக் கூட்டம் நடத்தினர். வழியில் 04.09.2013 அன்று அவர்கள் திருச்சி நீதிமன்றத்திற்கு வந்த போது அவர்களுக்கு திருச்சி வழக்கறிஞர் சங்க தலைவர் வீரபாண்டியன் தலைமையில் கரூர் வழக்கறிஞர் சங்க தலைவர் மாராப்பன், மணப்பாறை வழக்கறிஞர் சங்க தலைவர், கும்பகோணம் வழக்கறிஞர் சங்க தலைவர் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பெரும் திரளாக வரவேற்பளித்தனர். மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களும் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர். அந்த ஊர்வலத்தில் திருச்சி வழக்கறிஞர்களும் இணைந்து கொண்டனர்.

தற்போது போராட்டம் தீவிரமடைந்து 16.09.2013 அன்றைய தேதியிலிருந்து சொட்டு தண்ணீர் கூட குடிக்காமல் சென்னையில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக வழக்கறிஞர்கள் அறிவித்துள்ள நிலையில், அப்போராட்டத்தை ஆதரித்து 12.09.2013ம் தேதியன்று காலை 10 மணியளவில் திருச்சி ஜங்சன் காதிகிராப்ட் அருகில் மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர் ஜீவா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. “தில்லையிலே தீட்சிதர் கொட்டமடக்கி, தமிழ் மொழியில் பாடினோம். உயர்நீதிமன்றத்தில், தமிழ் முழங்க போராடுவோம்”, என்ற விண்ணதிரும் முழக்கங்களோடு தொடங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளின் தோழர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

அப்போராட்டத்தைப் பற்றி விளக்கிப் பேசிய மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஆதிநாராயணமூர்த்தி, உச்சநீதிமன்றத்தில் தற்பொழுது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற தமிழர் சதாசிவம், அவர் பொறுப்பேற்ற உடனேயே – யாரும் கோரிக்கை வைக்காத நிலையிலேயே , “உயர் நீதிமன்றங்களில் போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால், தமிழை வழக்காடு மொழியாக ஆக்க முடியாது” என்று கூறினார். ஆனால், வழக்கறிஞர்களாகிய நாங்கள் கூறுகிறோம். தமிழை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக்காமல் தமிழ்நாட்டில் நீதிமன்றங்களையே நடத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று உறுதிபட தெரிவித்தார். மேலும் வழக்கறிஞர்களின் இந்த போராட்டத்தை ஆதரித்துப் போராடும் புரட்சிகர அமைப்புகளுக்கும் திரண்டிருந்த மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

சிறப்புரையாற்றிய மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் காளியப்பன், “உலகமெங்கும் அந்தந்த நாட்டு மக்கள் பேசும் தாய்மொழியிலேதான் நீதிமன்றங்கள் நடைபெறுகின்றதன. ஆனால் தமிழ்நாட்டில் இருக்கின்ற உயர்நீதிமன்றங்களில் தமிழில் வழக்காட முடியாது என்பதும் மக்களுக்கு புரியாத ஆங்கிலத்தில் வழக்காடுவதும் அவ்வாறு வழக்கு நடத்தி வழங்கப்பட்ட தீர்ப்புகளை மக்கள் மீது திணிப்பதும் மனித உரிமை மீறலாகும். வெள்ளைக்காரனின் ஆட்சியைத் தூக்கியெறிந்த்தாக பீற்றிக்கொள்ளும் நாம் அவனது ஆங்கிலம் நம்மை ஆட்சி செய்வதை இனியும் அனுமதிக்க முடியாது”, என்றார். “2010ஆம் ஆண்டிலேயே போராடி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பாலிடம் உயர்நீதிமன்றத்தில் தமிழில் வழக்கு நடத்தலாம் என்று வாய்மொழி உத்தரவு பெற்று வழக்கறிஞர்கள் முதல்கட்ட வெற்றியடைந்துள்ளனர். அந்த வெற்றியை சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்திக் கொள்ள இப்பொழுது போராடுகிறார்கள். உண்மையான ஜனநாயகம் மலர்வதற்கான பாதையில் இப்போராட்டம் ஒரு மைல் கல்லாகும். புரட்சிகர அமைப்புகளான நாமும் அப்போராட்டத்தில் உடனிருப்போம்”, என்று உரையாற்றினார்.

காலையிலேயே பெய்த லேசான மழைத் தூரலையும் பொருட்படுத்தாமல் பகுதி மக்களும் பயணிகளும் நெருங்கி வந்து கவனித்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஆதரித்தனர். உயர்நீதி மன்றத்தில் தமிழில் வழக்காட வேண்டிய அவசியத்தை உழைக்கும் மக்களிடம் உணர்த்த இந்த ஆர்ப்பாட்டம் உதவியது. விழிப்படையும் மக்கள் உயர்நீதிமன்றத்தில் தமிழ் முழங்கப்படும் வரை ஓயமாட்டார்கள்.

பத்திரிகைச் செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி, திருச்சி

விழுப்புரத்தில் 11/09/2013 அன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

யர்நீதி மன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்க வேண்டும் என வழக்குரைஞர்கள் போராடிக் கொண்டு வருகின்றனர். அந்தப் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில், அவர்களுக்கு ஆதரவாக தமிழகம் தழுவிய அளவில் புரட்சிகர அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக விழுப்புரத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் சேர்ந்து 11-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். இதற்காக காவல் துறையிடம் அனுமதி கேட்டோம். அதற்கு காவல் துறையினர் 25 பேருக்கு மேல் யாரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது, தனி நபர் யாரையும் விமர்சனம் செய்யக் கூடாது என்ற நிபந்தனை விதித்து அனுமதி அளித்தனர்.

ஆர்ப்பாட்ட வேலைகளில் தோழர்கள் மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருந்தனர். மூன்றாயிரம் துண்டு பிரசுரங்கள் பேருந்து, இரயில் நிலையம் என மக்கள் கூடும் இடங்களில் விநியோகித்து பிரச்சாரம் செய்தனர். பொது மக்கள் அனைவரிடமும் சிறப்பான ஆதரவு கிடைத்து. நீதிமன்ற வளாகம் முழுவதும் நோட்டிஸ் வினியோகிக்கப்பட்டது. நகரம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்திற்கு முதல் நாள் இரவு 11 மணிக்கு காவல் துறையிடம் இருந்து நமக்கு அழைப்பு வந்தது. நாளை பிள்ளையார் ஊர்வலம் வரப் போகிறது, நீங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினால் சட்ட ஒழுங்கு பிரச்சனை வரும், ஆகவே உங்களது ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்கிறோம் என்ற மிரட்டினர்.

தோழர்கள் அதை ஏற்க மறுத்து வாதிட்ட பிறகு 15 நிமிடம் மட்டும் நடத்திக் கொள்ள அனுமதித்தனர்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி பொதுக்குழு உறுப்பினர் தோழர் முருகன் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி செயற்குழு உறுப்பினர் தோழர் ரஞ்சித், ஆங்கிலம் கோலோச்சும் உயர்நீதிமன்றத்தில் அதிகம் அல்லல்படும் மக்களின் நிலையையும், ஏன் தமிழ் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் விளக்கி உரை நிகழ்த்தினார்.

கண்டன உரையாற்றிய விவசாயிகள் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் தோழர் அம்பேத்கர், தமிழ் தமிழ் என்று கூப்பாடு போடும் ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகளை அம்பலப்படுத்தி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர். பொதுமக்கள், வக்கீல்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் : புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு