செய்தி: உத்தர்கண்டின் விவசாயத்துறை அமைச்சர் நடத்திய விருந்தில், விவேகானந்த கந்தூரி எனும் மூத்த காங்கிரசுத் தலைவரும், ஒரு தொண்டரும், காங்கிரசு எம்எல்ஏ குன்வார் பிரணாவ் சிங்கால் துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்தார்கள்.
நீதி: பரவாயில்லையே, வேட்டியை மட்டும் கிழித்துக் கொள்ளும் தமிழக காங்கிரசுக் கோஷ்டிகள்தான் உண்மையான அஹிம்சாவாதிகள்!
_____
செய்தி: நிலக்கரித்துறை அமைச்சகம் சமீபத்தில் சிபிஐக்கு சில ஆவணங்களைக் கொடுத்தாலும் ரிலையன்ஸ், டாடா, ரதி ஸ்டீல் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆவணங்கள் இன்னும் கிடைக்கவில்லை.
நீதி: ஏலம் எப்படி நடக்கவேண்டும் என்று எகத்தாளம் போட்ட கார்ப்பரேட் எஜமானர்களுக்கு ஆவணங்களை ஏப்பம் விடத் தெரியாதா என்ன?
_____
செய்தி: ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட இரு நோயாளிகள் சிகிச்சைக்கு பிறகு இறந்து போனார்கள்.
நீதி: இனி மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகள் தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்பதற்கான முன்னோட்டமா ?
_____
செய்தி: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு அக்டோபர் மாதம் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
நீதி: பாலியல் வன்கொடுமை செய்யும் ஆசிரியர்கள், சாமியார்கள், போலீசிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள மக்களுக்கு பயிற்சி கொடுக்குமா இந்த அரசு?
______
செய்தி: பெரியாரின் 135-ஆவது தினத்தையொட்டி சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவரது படத்துக்கு மரியாதை செலுத்தினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
நீதி: சாமி முன்னாடி சீட்டு போட்டு கட்சிப் பெயரை தேர்வு செய்தவரும், முகூர்த்தம் பார்த்து மைக் முன்னாடி கட்சி பெயரை அறிவித்தவரும் செலுத்தும் மரியாதையைக் காண பெரியார் இல்லை என்பதால் ஆனந்தக் கண்ணீர் விடுவோம்.
______
செய்தி: திமுகவை யாராலும் அழிக்க முடியாது என்று சென்னையில் நடந்த முப்பெரும் விழாவில் கருணாநிதி கூறினார்.
நீதி: தலை முதல் வால் வட்டம் வரை குடும்ப அரசியல் கோலேச்சும் போது திமுகவை ஆள் வைத்து அழிக்க வேண்டிய அவசியமில்லையே தலைவா?
______
செய்தி: சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையின் அனைத்து வாயில்களும் காலை 9 மணி முதல் மாலை 6.30 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என்று உயர்நீதிமன்ற பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது.
நீதி: நீங்க எப்ப வேணா திறங்க, மூடுங்க! ஆனா அந்த கேட்டுக்கு பின்னாடி நீதி கிடைக்கும் என்பதற்கு என்ன கியாரண்டி யுவர் ஆனர்!
______
செய்தி: அரசின் அடக்குமுறைக்கு எதிராக திமுக, தேமுதிக உள்பட அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
நீதி: அடிபடுவதற்கு முன்னாடி ஆணவம்! இப்ப அரவணைப்பு கேட்குதோ?
______
செய்தி: அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வலியுறுத்தி பார்வையற்ற பட்டதாரிகள் சென்னை வேப்பேரியில் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
நீதி: பார்வையற்றவர்களுக்கு கூட வேலை வழங்கத் துப்பில்லாத இந்த அரசை புரிந்து கொள்ளும் பார்வை பலருக்கும் இல்லாத போது பாவம் அந்த பாமரர்கள்!
______
செய்தி: தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் நிகழாண்டு ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதி: சென்ற ஆண்டுகளில் வேலைக்கு தெரிவாகியும் வேலை கிடைக்காத வெயிட்டிங் லிஸ்டையும் வெளியிடுவீர்களா சாஸ்த்திரி அவர்களே?
______
செய்தி: போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வரும் ஆய்வில், பெர்மிட் இல்லாத மேலும் 166 ஆட்டோக்கள், செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நீதி: அந்த ஆட்டோக்களின் உரிமையாளர்களில் போலிஸ்காரர்கள் எத்தனை பேர் ஆர்டிஓ சார்?
______
செய்தி: சிவசேனா கட்சியின் கோவை நகர நிர்வாகி வீட்டின் மீது முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசியதாக விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த 8 பேரை போலீசார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
நீதி: இனிமேலாவது பெட்ரோல் குண்டு வீசுறது நம்ம பாய்ங்க இல்ல, பரிஷத் குண்டனுங்கோங்கிறதை புரிஞ்சுக்குங்க மக்களே!
_____
செய்தி: திருப்பதியில் உள்ள விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்துறை இணை அமைச்சர் வேணுகோபால் தெரிவித்தார்.
நீதி: இனி ஃபாரினிலிருந்து வரும் என்ஆர்ஐ பக்த கோடிகள் ஃபிளைட்டிலேயே வந்து மொட்டை போட்டு, நாமம் இட்டு, கோவிந்தாவும் போடலாம்!
______
செய்தி: பிறந்த நாளையொட்டி தனது தாயிடம் ஆசி பெற்றார் குஜராத் முதல்வரும் பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி.
நீதி: கலவரத்தில் கொல்லப்பட்ட இசுலாமிய மக்களது தாய்மார்களின் சாபமும் உங்களுக்குத்தான் மோடி!
_____
செய்தி: பாஜகவினர் பணக்காரர்களுக்காகப் பாடுபடுகின்றனர். ஆனால் நாங்கள் ஏழைகளுக்காக உழைக்கிறோம் – ராகுல் காந்தி.
நீதி: எப்படி? வறுமைக்கோடு ரெடி பண்ணி ஏழைகளை அழித்ததீர்களே அதுவா?
______
செய்தி: கடந்த 1971-ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடந்த போர்க்குற்ற வழக்கில் ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர் அப்துல் காதர் முல்லாவுக்கு மரண தண்டனை வழங்கி அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நீதி: ‘இன்ஷா அல்லா!’
______
செய்தி: 28 வயது யோகா டீச்சரான பெண் தன்னிடம் நகை பறித்தவனை விரட்டிப் பிடித்து போலீசில் ஒப்படைப்பதற்கு உதவியிருக்கிறார்.
நீதி: திருடனை பிடிக்கணும்னா போலீசை நம்பாதே! போலீசை நம்பினா பறிகொடுத்தது கிடைக்கும்ணு நம்பாதே!
_____