Monday, April 21, 2025
முகப்புசெய்திஉயர்நீதிமன்றத்தில் தமிழ் ! கோவையில் ஆர்ப்பாட்டம் !!

உயர்நீதிமன்றத்தில் தமிழ் ! கோவையில் ஆர்ப்பாட்டம் !!

-

யர்நீதி மன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்க வேண்டும் என வழக்குரைஞர்கள் போராடிக் கொண்டு வருகின்றனர். அந்தப் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில், அவர்களுக்கு ஆதரவாக தமிழகம் தழுவிய அளவில் புரட்சிகர அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவையில் மக்கள் கலை இலக்கிய கழகம் , புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகள் சேர்ந்து 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். இதற்காக காவல் துறையிடம் அனுமதி கேட்டபொழுது விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் இருக்கு சட்ட ஒழுங்கு பிரச்சனை வரும் என்று கூறிவிட்டனர். 17-ம் தேதி அனுமதி வாங்கி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம் .

ஆர்ப்பாட்ட வேலைகளில் தோழர்கள் மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருந்தனர். மூன்றாயிரம் துண்டு பிரசுரங்கள் பேருந்து, இரயில் நிலையம் என மக்கள் கூடும் இடங்களில் விநியோகித்து பிரச்சாரம் செய்தனர். பொது மக்கள் அனைவரிடமும் சிறப்பான ஆதரவு கிடைத்து. நீதிமன்ற வளாகம் முழுவதும் நோட்டிஸ் வினியோகிக்கப்பட்டது. நகரம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய மக்கள் கலை இலக்கிய கழக செயலர் தோழர். மணிவண்ணன் தனது உரையில், தமிழ் நாட்டில் தமிழை வழக்காடு மொழியாக்க போராடும் நிலையில் இருப்பதையும், அதற்கு இந்தியா தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இருப்பதையும் சுட்டிக்காட்டி உலக நாடுகள் அனைத்திலும் அவரவர் தாய் மொழியில் நீதிமன்றங்கள் நடைபெறும் போது தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் அவ்வுரிமை மறுக்கப்படுவது பற்றி ஓட்டுப்பொறுக்கிகள் வாய்திறக்காமல் மவுனம் சாதிக்கும் அயோக்கியத்தனத்தையும் அம்பலப்படுத்தினார்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி செயலாளர் தோழர் விளவை ராமசாமி சிறப்புரையாற்றிய தனது உரையில் வழிபாட்டு உரிமை முதல் கல்வி, வழக்காடும் உரிமை வரை தாய் மொழி திட்டமிட்டு மறுக்கப்படுவதை சுட்டிக்காட்டி தாய்மண், தாய் மொழி சார்ந்த உணர்ச்சிகளை அறுத்தெறிந்து விட்டு பொம்மைகளைப் போல வாழ்கின்ற மனிதர்களை உருவாக்கி சொரணையற்ற சமூகத்தை படைக்கும் சதியினை அம்பலப்படுத்திப் பேசினார்.

இதற்காகவே திட்டமிட்டு தாய் மொழிக்கல்வி லாயக்கற்றது என்ற கருத்தினையும் உழைப்பினை கேவலமாகக் கருதும் மனப்பான்மையையும் தனியார்மயம் தன் சுரண்டலுக்காக ஏற்படுத்தி வருவதையும் அதன் விளைவாகவே வெளி நாட்டு பல்கலைகழகத்திற்கு அனுமதியளிப்பதையும் வெளிநாட்டுக் கம்பெனிகள் வரைமுறையின்றி கொள்ளையடித்தும் தன்னைக் காப்பாற்ற அவை வெளி நாட்டு வழக்குரைஞர்களை இங்கு வாதாடவைக்க முயலும் இந்த நிலையில் தமிழக வழக்குரைஞர்களின் இந்தப் போராட்டம் உரிமைக்கான போராட்டம், தன்மானத்திற்கான போராட்டம், அதற்கு புரட்சிகர அமைப்புக்கள் தொடர்ந்து போராடும் என்பதையும் பதிவு செய்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

செய்தி :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை பகுதி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க