Saturday, April 19, 2025
முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்ஏழ்மையை அளக்கும் சூத்திரங்கள் : மாயையும் உண்மையும்

ஏழ்மையை அளக்கும் சூத்திரங்கள் : மாயையும் உண்மையும்

-

ஏழ்மையை அளப்பதற்கான அடிப்படையாக பயன்படும் நலவாழ்வு-கோட்பாட்டு குறித்த விமர்சனம் – பிரபாத் பட்நாயக்

ஏழ்மையும் உணவு நுகர்வும்முந்தைய காலகட்டத்தின் பொருட்களும் சேவைகளும் தற்போதைய கால கட்டத்திலும் கிடைக்கின்றன என்ற பொய்யான நலவாழ்வு பொருளாதாரக் கோட்பாட்டின் அடிப்படையை நாம் கை விட்டு விட்டால், வறுமையின் அளவீடு மற்றும் மட்டம் குறித்து முரண்பட்டதாக தோன்றும் பல தகவல்களை ஒருங்கிணைந்த தொடர்ச்சியான கதையாடலாக புரிந்து கொள்ள முடியும். குறைந்த பட்ச கலோரி உட்கொள்தல் உட்பட தேவையான பொருட்களும் சேவைகளும் கிடைப்பது என்று வறுமையை வரையறுத்தால் புதியதாராளவாத இந்தியாவில் வறுமை உயர்ந்து கொண்டே போகிறது என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

பிரபாத் பட்னாயக் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் பொருளாதார ஆய்வுகள் மற்றும் திட்டமிடலுக்கான மையத்தின் சிறப்பு பேராசிரியராக பணியாற்றுகிறார்.

இந்தக் கட்டுரையின் நோக்கம் இந்தியாவில் ஏழ்மையை அளப்பதற்கான அடிப்படையாக பயன்படும் நலவாழ்வு கோட்பாடு (வெறும் சூட்சுமமான கோட்பாடாக இருக்கிறது என்பதால் மட்டுமின்றி) நடைமுறையை பிரதிபலிக்காமல் இருக்கிறது என்ற வகையிலேயே தவறானது என்று நிறுவுவதாகும். பகுதி 1 நலவாழ்வு கோட்பாட்டிற்கும் அதன் மூலம் வறுமையை அளவிடுவதற்கும் பயன்படுத்தப்படும் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அனுமானங்கள் தவறானவை என்று வாதிடுகிறது. பகுதி 2 இந்த அனுமானங்களை விமர்சிக்கிறது. பகுதி 3 இந்தியாவின் வறுமை பற்றிய விவாதம் தொடர்பாக சில முடிவுகளை முன் வைக்கிறது.

1 நலவாழ்வு கோட்பாட்டின் அனுமானங்கள்

அணுகுமுறை

புதிய வறுமைக் கோடு
இதுதான் புத்தம் புது வறுமைக் கோடு. சந்தோஷப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் நீ அதற்கு கீழ் 29.9%தான் இருக்கிறாய்.

இந்தியாவில் பின்பற்றப்படும் ஏழ்மையை அளப்பதற்கான அனைவரும் அறிந்த வழிமுறை பின்வருமாறு. தேசிய மாதிரி கணக்கெடுப்பின் (NSS) மூலம் கிடைக்கும் நுகர்வு செலவுகளின் அடிப்படையில், நகர்ப்புறத்தில் ஒரு நபர் ஒரு நாளைக்கு 2,100 கலோரிகளும் கிராமப்புறங்களில் ஒரு நபர் ஒரு நாளைக்கு 2,400 கலோரிகளும் (பின்னர் 2,200 கலோரிகளாக குறைக்கப்பட்டது) உட்கொள்வதற்கு செய்த செலவுகள் இரண்டு பகுதிகளுக்கான வறுமைக் கோடுகளை குறிப்பதாக கருதப்படுகிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் அந்தந்த பகுதிக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணின் அடிப்படையில் முந்தைய ஆண்டுக்கான “வறுமைக் கோடுகள்” புதுப்பிக்கப்படுகின்றன. இப்படி புதுப்பிக்கப்பட்ட வரையறுப்புக்கு கீழ் வருபவர்கள் ஏழைகளாக கணக்கிடப்படுகிறார்கள். அப்படி கணக்கிடப்பட்ட மக்கள் தொகைக்கும் மொத்த மக்கள் தொகைக்கும் இடையேயான விகிதம் குறிப்பிட்ட ஆண்டுக்கான வறுமை வீதத்தை தருகிறது.

பல்வேறு சரக்குகளுக்கான நிறையூட்டப்பட்ட லேஸ்பியர் விலைக் குறியீட்டு எண் கிராம, நகர்ப்புற பகுதிகளுக்கான விலைக் குறியீட்டு எண்ணாக பயன்படுத்தப்படுகிறது. (2009-10ல் இவ்விரு பகுதிகளுக்கும் பயன்படுத்தப்பட்ட குறியீட்டு எண் மாற்றப்பட்டது. கிராமப் புறத்துக்கு விவசாயத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் என்பதும், நகர்ப்புறத்துக்கு தொழில் துறை தொழிலாளர்களுக்கான விலைக் குறியீட்டு எண் என்பதும் தேசிய மாதிரி கணக்கெடுப்பின் அடிப்படையிலான விலைக் குறியீட்டு எண்ணுக்கு மாற்றப்பட்டது).

வறுமை கழிப்பறை
வறுமைக் கோடு – ஒரு நாளைக்கு ரூ 28 நுகர்வு
அலுவாலியாவின் கழிப்பறை பட்ஜெட் – ரூ 35 லட்சம்.

இதை, எளிதாக புரிந்து கொள்ள Q என்பது ஒரு பொருளை சமூகம் முழுவதும் நுகர்வதன் அளவையும், P என்பது அந்த பொருளின் சராசரி விலையையும் குறிப்பதாகவும், 1 2 என்பவை முதல், இரண்டாம் ஆண்டுகளை குறிப்பதாகவும் வைத்துக் கொள்வோம். முதல் ஆண்டில் ஒவ்வொரு பொருளின் அளவையும் விலையையும் பெருக்கி அனைத்து பொருட்களின் மதிப்பை மொத்தமாக கூட்டுவதை, ∑P1Q1 என்று குறிக்கலாம். இரண்டாவது ஆண்டில் விலைகள் அதிகரித்திருந்தால், ஒவ்வொரு பொருளின் அளவை புது விலையால் பெருக்கி கூட்டினால் அது ∑P2Q1 ஆகும்.

முதல் ஆண்டில் மிகச் சரியாக வறுமைக் கோட்டின் மீது இருக்கும் ஒருவரை எடுத்துக் கொள்வோம் (ஆண்டு 1). அந்த ஆண்டில் அவரது செலவை ∑P1q1 என்று குறிப்பிடலாம். சிறிய ஆங்கில எழுத்து q, தனிநபரின் நுகர்வை குறிக்கிறது. வறுமையை அளக்கப் பயன்படுத்தப்படும் முறையின்படி, 2-வது ஆண்டில் வறுமைக் கோடு ∑P1q1 X ∑P2Q1/∑P1Q1 ஆக இருக்கும். அந்த நபர் (அல்லது வேறு யாராவது) 2-ம் ஆண்டில் செலவழிப்பது, இந்தத் தொகைக்கு மேலே இருந்தால், அவர் ஏழை இல்லை என்று கருதப்படுவார். (வறுமைக் கோட்டுக்கு மேல் அல்லது APL). ஆண்டு 1-ல் சரியாக வறுமைக் கோட்டின் மீது இருந்தவரை எடுத்துக் கொண்டால்,  ∑P2q2 > ∑P1q1 X ∑P2Q1/∑P1Q1 என்று இருந்தால் அந்த நபர் ஏழை இல்லை என்று கருதப்படுவார்.

இந்த வாதத்தில் ஒரு வெளிப்படையான பிரச்சனை உள்ளது. லாஸ்பேர் விலைக் குறியீட்டு எண்ணை கணக்கிடுவதற்கு எடுத்துக் கொள்ளப்படும் பல்வேறு சரக்குகளின் நிறைமதிப்பீடு, வறுமைக் கோட்டில் வாழும் ஒருவரது நுகர்வில் உள்ள சரக்குகளின் நிறை மதிப்பீட்டிலிருந்து வேறுபடலாம். நடைமுறையில், வறுமைக் கோட்டில் உள்ள நபரது செலவு திட்டத்தில் உள்ள சரக்குகளின் நிறை மதிப்புக்கு நெருக்கமான நிறை மதிப்புகளை உடைய விலைக் குறியீட்டு எண்ணை எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த பிரச்சனை சமாளிக்கப்படுகிறது.  இதனால்தான் கிராமப் புற வறுமைக் கோட்டை புதுப்பிப்பதற்கு விவசாய தொழிலாளர்களுக்கான விலைக் குறியீட்டு எண் எடுத்துக் கொள்ளப்படுகிறது (ஏழைகளின் செலவுத் திட்டத்தில் இருக்கும் சரக்குகளின் நிறை மதிப்பும், விவசாயத் தொழிலாளர்களின் சரக்குகளின் நிறை மதிப்பும் ஒன்றாக இருக்கும் என்பது அனுமானம்). அது போல, நகர்ப்புற வறுமைக் கோட்டை புதுப்பிக்க தொழில் துறை தொழிலாளர்களுக்கான விலைக் குறியீட்டு எண் (அதே மாதிரியான அடிப்படையில்) எடுத்துக் கொள்ளப்படுகிறது.

வறுமையும் கல்வியும்இருப்பினும், இந்த வாதத்தில் இன்னும் சிக்கலான இரண்டாவது பிரச்சனை உள்ளது. இரண்டாவது பிரச்சனையை புரிந்து கொள்வதற்காக முதல் பிரச்சனை இல்லை என்றே அனுமானித்துக் கொள்வோம் : அதாவது வறுமைக் கோட்டை புதுப்பிப்பதற்கான லாஸ்பேர் விலைக் குறியீட்டு எண்ணுக்கான சரக்குகளின் நிறை மதிப்பும், ஆண்டு 1-ல் சரியாக வறுமைக் கோட்டில் உள்ளவருடைய நுகர்வுக்கான சரக்குகளின் நிறை மதிப்பும் ஒன்றுக்கொன்று இணையானவை என்று வைத்துக் கொள்வோம். அதாவது இரண்டாவது ஆண்டில் ∑P2q1/∑P1q1 என்று எழுதப்படக் கூடிய விலைக் குறியீட்டு எண்ணினால் வறுமைக் கோடு சரியாக புதுப்பிக்கப்படுகிறது. இந்த சூழலில் ஆண்டு 1-ல் வறுமைக் கோட்டில் வாழ்ந்த ஒரு நபரின் செலவு இரண்டாம் ஆண்டில் ∑P2q2 > ∑P2q1 ஆக இருந்தால் அவர் வறுமைக் கோட்டுக்கு மேல் உயர்த்தப்பட்டு விட்டதாக கருதப்படும். அதாவது, ஆண்டு 1-ல் சரியாக வறுமைக் கோட்டின் மீது வாழ்ந்த ஒருவர் இந்த ஆண்டு விலைகளில் ஆண்டு 1-ல் வாங்கிய அதே பொருட்களை வாங்குவதை விட அதிகமாக செலவழித்திருப்பதால், அவர் இனிமேலும் ஏழை இல்லை.

இந்த முடிவுக்கு பின்புலமான கோட்பாட்டை பின்வருமாறு விளக்கலாம். ∑P2q2 > ∑P2q1 என்று இருக்கும் போது, அந்த நபர் விருப்பப்பட்டால் ஆண்டு 1-ல் வாங்கிய பொருட்களை இந்த ஆண்டும் வாங்கியிருக்க முடியும். அந்த பொருட்களின் தொகுப்பு ஆண்டு 2-ல் அவரது நிதி நிலையின் வரம்புக்குள் உள்ளது. இருந்தும் அந்த நபர் q1 என்ற தொகுப்புக்கு பதிலாக q2 என்ற தொகுப்பை வாங்கியிருக்கிறார். ஏன் என்றால் அவர் q1 ஐ விட q2 ஐ விரும்புகிறார், அதாவது ஆண்டு 1-ல் இருந்ததை விட ஆண்டு 2-ல் அவர் சிறப்பாக வாழ்கிறார் : அவரது வாழ்க்கைச் சூழலில் மேம்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஆண்டு 1-ல் அவர் சரியாக வறுமைக் கோட்டின் மீது இருந்தபடியால், ஆண்டு 2-ல் அவர் வறுமைக் கோட்டுக்கு மேல் நகர்ந்து விட்டதாக கருதப்பட வேண்டும்.

பள்ளிக் கட்டணம்
பள்ளிக் கட்டணத்தை சமாளிக்க வீட்டுச் செலவை குறைத்திருக்கிறோம்.

அனைத்து வறுமை மதிப்பீடுகளுக்கும் அடிப்படையாக இருக்கும் இந்த வாதம் பல அனுமானங்களின் அடிப்படையில் செய்யப்படுகிறது. தனது நலவாழ்வைப் பற்றிய முடிவுகளுக்கான மிகச் சிறந்த முடிவை ஒரு தனி நபரே எடுக்க முடியுமா என்பது போன்ற தத்துவார்த்த விவாதங்களுக்குள் நாம் போகப் போவதில்லை. இந்த வாதத்தின் செல்லுபடித் தன்மைக்கு இன்றியமையாத மிக முக்கியமான அனுமானம், ஆண்டு 1-ல் கிடைத்த பொருட்களின் தொகுப்பு, இந்த ஆண்டும் கிடைக்கிறது என்பதுதான். இந்த அனுமானம் பச்சையான பொய் என்ற ஏழ்மையை மதிப்பிடும் முறை குறித்த நமது ஆட்சேபணை நலவாழ்வு பொருளாதாரத்தின் அடிப்படை முன்வைப்பையே ஆட்சேபிப்பதாகும். ஆண்டு 1-ல் கிடைக்கக் கூடிய சரக்குகள் அடுத்தடுத்த ஆண்டுகளிலும் கிடைக்கின்றன என்பதுதான் அந்த முன்வைப்பு. இந்த முன்வைப்பு தேசிய வருமானத்தை தீர்மானிப்பதற்கும் அடிப்படையாக இருக்கிறது. இந்த முன்வைப்பை ஆய்வு செய்வோம்.

2. அனுமானங்கள் மீதான விமர்சனம்

சிறிதளவு சிந்தித்தாலே இந்த முன்வைப்பின் பொய்மை தெளிவாகிறது. நாட்பட நாட்பட பழைய சரக்குகள் இல்லாமல் போய் அவற்றின் இடத்தை புதிய சரக்குகள் பிடித்துக் கொள்கின்றன. உதாரணமாக, அரை நூற்றாண்டுக்கு முன்பு குழந்தைகள் விளையாடிய மரப் பொம்மைகளின் இடத்தில் பார்பி பொம்மைகள் வந்திருக்கின்றன. இசைத் தட்டுகள், குறுந்தகடுகளுக்கு இடம் விட்டு மறைந்திருக்கின்றன. லாகரிதம் அட்டவணைகள், கால்குலேட்டர்களுக்கு இடம் விட்டிருக்கின்றன, இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், பழைய பொருட்கள் புதிய பொருட்களுக்கு வழி விட்டு ஒதுங்குவதை மட்டும் நாம் கருத்தில் கொள்ளவில்லை. இதை விட வெகு முக்கியமான இன்னொன்றும் நடக்கிறது. நடுத்தர வர்க்கத்தினால் விரும்பப்படும் புதிய சரக்குகள் நடுத்தர வர்க்கத்தின் நுகர்வுக்கான சரக்குகளை மட்டுமின்றி சமூகம் முழுவதுக்குமான பழைய சரக்குகளை இல்லாமல் செய்கின்றன.

வளர்ச்சியின் வறுமைஇதற்கு இரண்டு நடைமுறைகள் பங்களிக்கின்றன. முதலாவதாக, நடுத்தர வர்க்கத்தின் விருப்பங்கள் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளின் வாழ்க்கை முறையால் மாற்றப்படுகின்றன (சமீபத்திய உதாரணமாக பாரம்பரிய மளிகைக் கடைகளுக்கு மாறாக கார்ப்பரேட் சில்லறை விற்பனைக் கடைகளை நாடுவது). இதனால் அவர்கள் வாங்கும் சிறு உற்பத்தியாளர்களின் பொருட்களின் இடத்தை கார்ப்பரேட் பெரு உற்பத்தி பொருட்கள் பிடித்து விடுகின்றன.

ஒரு சிறு உற்பத்தியாளரின் பொருட்களுக்கு சந்தை 100 எண்ணிக்கை இருப்பதாக வைத்துக் கொள்வோம். கார்ப்பரேட் உற்பத்தி பொருளால் இழுத்துச் செல்லப்படும் நடுத்தர வர்க்கத்தினரின் விலகல் மூலம் அவரது சந்தையில் 20 எண்ணிக்கை குறைகிறது என்று வைத்துக் கொள்வோம். சிறு உற்பத்தியாளர்கள் சிறிய அளவு லாபத்துடனேயே வர்த்தகம் செய்வதால், 20% சந்தை இழப்பு கூட செலவுகளை சமாளிக்க முடியாத நிலையை ஏற்படுத்தும், அதாவது அவர் எளிய மறு உற்பத்தியைக் கூட தொடர முடியாமல் போகும். அவர் உற்பத்தி செய்வதையே நிறுத்தி விட்டு வேலை தேடும் தொழிலாளர்கள் கூட்டத்தில் சேர்ந்து விடுவார்.

இந்த நிகழ்முறையின் விளைவாக கார்ப்பரேட் உற்பத்தியிலான மாற்றுப் பொருட்களால் கவரப்படாத சிறு உற்பத்தியாளரது எஞ்சிய 80% முன்னாள் வாடிக்கையாளர்களும் கார்ப்பரேட் பொருட்களை வாங்கும்படி கட்டாயப்படுத்தப்படுவார்கள். நடுத்தர வர்க்கம் கார்ப்பரேட் உற்பத்தி பொருட்களை விரும்புவது அவற்றின் விலை மலிவின் காரணமாக மட்டும் இருக்க வேண்டியதில்லை. பொதுவாக, கார்ப்பரேட் மாற்றுப் பொருள், தான் இடம் பெயர்க்கும் சிறு உற்பத்தியாளரின் பொருளை விட விலை அதிகமானதாக இருக்கிறது. எனவே, மொத்த மக்கள் தொகையும் புதிய கார்ப்பரேட் உற்பத்தி பொருளை, அதிக விலை கொடுத்தாவது வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

நாட்டின் பல பகுதிகளில் மரப் பொம்மைகள், விலை அதிகமான பார்பி பொம்மைகளால் இடம் பெயர்க்கப்பட்டு விட்டன என்ற உண்மை, அனைவரும் முன்னதை விட பின்னதை விரும்புகிறார்கள் என்பதனால் அல்ல. சிலரது விருப்பம் மற்ற அனைவரையும் மாறுவதற்கு கட்டாயப்படுத்துகிறது.

பொது வினியோகத் திட்டம்இரண்டாவது நிகழ்முறை அரசு பொருட்களையும் சேவைகளையும் வழங்குவது தொடர்பானது. நடுத்தர வர்க்கம் அரசு வழங்கும் சேவையை பயன்படுத்துவதிலிருந்து விலகி விட்டால் அந்த சேவையின் தரம் வெகுவாக குறைந்து, மற்றவர்களையும் மாறுவதற்கு கட்டாயப்படுத்துகிறது என்பது பரவலாக தெரிந்த உண்மை. நடுத்தர வர்க்க ரயில் பயணிகள் பாட்டில் தண்ணீர் வாங்க ஆரம்பித்தால், ரயில்வே நிலையங்களில் இலவசமாக குடிதண்ணீர் கிடைக்கும் சேவை முடங்கிப் போய் விடுகிறது. உரக்க புகார் செய்யும், அரசு வழங்கும் சேவையின் தரத்தில் ஏற்படும் வீழ்ச்சிக்கு எதிராக விழிப்பாக செயல்படும் நடுத்தர வர்க்கம் இல்லாமல் இருப்பது, நடைமுறையில் உண்மையான தர வீழ்ச்சிக்கு வழி வகுத்து, அனைவரையும் கார்ப்பரேட் வழங்கும் சேவைக்கு மாற கட்டாயப்படுத்துகிறது. அத்தகைய சேவைகள் அதிக செலவு பிடிப்பவை.

நடுத்தர வர்க்க வாடிக்கையாளர்கள் இந்த மாற்றத்தை செய்ய முடிவு எடுத்ததால், அனைவருமே இந்த விலை உயர்ந்த சேவைகளையும் பொருட்களையும் பயன்படுத்தும் படி மாற கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். தனியார் சேவை வழங்கலை பயன்படுத்துவதோடு இணைந்துள்ள பெருமைக்காக அவர்கள் மாறியிருக்கலாம், அல்லது தனியார் வழங்கும் சேவை உண்மையிலேயே ஓரளவு சிறந்ததாக இருக்கலாம். பொதுச் சேவைக்கும் தனியார் சேவைக்கும் இடையே உள்ள தர வேறுபாடு, நடுத்தர வர்க்கம் மாறுவதன் மூலம் பெருமளவு ஊதிப் பெருக்கப்படுகிறது. அதற்கு பெருமளவு அதிக செலவு ஆனாலும், ஒவ்வொருவரும் அப்படி மாறுவதற்கு கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

இதனோடு தொடர்புடைய மிகத் தெளிவான உதாரணம் உடல் நலத்தோடு தொடர்புடையது. நடுத்தர வர்க்க நுகர்வோர் பொது மருத்துவ வசதியிலிருந்து தனியார் மருத்துவ வசதிக்கு மாறுவது பொது மருத்துவ சேவையின் தரத்தின் வீழ்ச்சிக்கு வழி வகுக்கிறது. இதனால் பொது மருத்துவ சேவை ஏழைகளுக்கும் சாத்தியமற்றதாகவோ, பலன்றறதாகவோ மாறுகிறது. அதிக செலவு பிடிப்பதாக இருந்த போதிலும், அவர்களும் தனியார் மருத்துவ சேவைக்கு மாற வேண்டி வருகிறது. எனவே, தன்னிச்சையான தேர்வாக தோன்றுவது உண்மையில் தன்னிச்சையான தேர்வு அல்ல, கிட்டத்தட்ட அவர்கள் மீது திணிக்கப்படுவது.

விவசாயியின் சுமைஎனவே, முந்தைய கால கட்டத்தில் கிடைத்து வந்த பொருட்கள் இந்த கால கட்டத்திலும் அதே போல கிடைக்கின்றன என்று அனுமானிப்பது நியாயப்படுத்த முடியாததது. மாறாக, இடைக் காலத்தில் அவை மறைந்து போய் விடுகின்றன. இதன் காரணமாக முந்தைய கால கட்டத்தில் கிடைத்த பொருட்கள் தொடர்ந்து கிடைத்திருந்தால் செலவழிப்பதை விட மிக அதிக விலையில் பொருட்களை வாங்குவதற்கு மக்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். மாற்று பொருட்களை அதிக விலையில் வாங்க வேண்டி வருவதால், உண்மையில் அவர்களது நிலைமையில் வீழ்ச்சி ஏற்படுகிறது. ஆனால், எல்லா பொருட்களும் எப்போதுமே கிடைக்கின்றன, எனவே அனைத்து தேர்வுகளும் தன்னிச்சையானவை என்று அனுமானிக்கும் நலவாழ்வு பொருளாதாரவியல் அவர்களது நிலைமை மேம்பட்டு விட்டதாக தவறாக கணிக்கிறது.

முந்தைய ஆண்டில் ஒரு குறிப்பிட்ட அறுவை சிகிச்சையை அரசு மருத்துவமனையில் செய்து கொள்வதற்கு ரூ 2,000 செலவாகிறது என்று வைத்துக் கொள்வோம். அரசு மருத்துவமனை வசதிகள் முடங்கிப் போனதாலும், அத்தகைய மருத்துவமனைகளில் காத்திருப்போர் வரிசை மிக நீளமாகி விட்டதாலும் இந்த ஆண்டில் அரசு மருத்துவமனையில் அந்த சிகிச்சையை செய்து கொள்வது சாத்தியம் இல்லை என்று வைத்துக் கொள்வோம். அதே அறுவை சிகிச்சையை இப்போது தனியார் மருத்துவமனையில் ரூ 50,000 செலவில் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த பெரிய தொகையை செலவழிக்க வேண்டியிருக்கும் ஏழைகள் பல அத்தியாவசிய பொருட்களின் நுகர்வை குறைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். இதன் காரணமாக, அவர்கள் தமது வாழ்க்கைத் தரத்தில் பெருமளவு மோசமடைதலை சந்திக்க வேண்டியிருக்கும். பொது மருத்துவ சேவை கிடைக்காததன் காரணமாக இது நடக்கிறது. ஆனால் வழக்கமான நலவாழ்வு பொருளாதாரம் அவர்களது பொருளாதார நிலைமை மேம்பட்டு விட்டதாக முடிவு செய்யும்.

ஏழை குழந்தைகள்

இதை புரிந்து கொள்வதற்கு முந்தைய ஆண்டிற்கும் இந்த ஆண்டிற்கும் இடையே அறுவை சிகிச்சையின் அரசு மருத்துவமனை கட்டணம் (இரண்டாவது கால கட்டத்தில் இது அரிதாவே கிடைக்கிறது), தனியார் மருத்துவமனை கட்டணம் உள்ளிட்ட அனைத்து விலைகளும் மாறாமல் இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். இந்த இரண்டு கால கட்டங்களுக்கிடையே அந்த நபரின் செலவு ரூ 20,000 அதிகரிப்பதாக வைத்துக் கொள்வோம். கூடவே, இந்த இரு கால கட்டங்களிலும் அவருக்கு அத்தகைய அறுவை சிகிச்சை ஒவ்வொன்று தேவைப்பட்டது என்றும் வைத்துக் கொள்வோம். இந்த இரண்டு கால கட்டங்களுக்கிடையே அந்த நபரின் மருத்துவச் செலவு ரூ 48,000 அதிகரித்திருக்கும். ஆனால், மொத்த செலவு ரூ 20,000 மட்டுமே அதிகரித்திருக்கிறது. மீதி ரூ 28,000 மற்ற பொருட்கள் மீதான அவரது செலவை குறைப்பதன் மூலமே வந்திருக்க முடியும்.

இந்தச் சூழலில் பொதுவான நலவாழ்வு பொருளாதாரம் அந்த நபர் இரண்டாவது கால கட்டத்தில் முதல் கால கட்டத்தை விட நன்றாக வாழ்கிறார் என்று முடிவு செய்யும். ஏனெனில் அனைத்து விலைகளும் மாறாமல் இருக்கும் போது அவரது மொத்த செலவு உயர்ந்திருக்கிறது. உண்மையில், அந்த நபர், முன்பை விட மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். முதல் கால கட்டத்தை விட இரண்டாவது கால கட்டத்தில் அவர் பெறும் பொருட்கள்/சேவைகளின் தொகுப்பு சிறிதாகியிருக்கிறது. பொதுவான நல வாழ்வு கோட்பாடு இரண்டு கால கட்டத்துக்கும் இடையே அரசு மருத்துவமனை சேவைகள் மாறாமல் இருப்பதாக அனுமானித்துக் கொள்வதால் தவறான முடிவை தருகிறது. முதல் கால கட்டத்தின் பொருட்கள்-சேவைகளின் தொகுப்பு, இரண்டாம் கால கட்டத்திலும் கிடைக்கின்றது என்ற அனுமானத்தின் ஒருபகுதிதான் இது. இந்த அனுமானம் செல்லுபடியாகாதது.

3 முடிவுகள்

சமீப காலமாக இந்தியாவில் ஏழ்மை குறித்த ஒரு மகத்தான விவாதம் நடந்து வருகிறது. (2005-ல் இதே தலைப்பில் டேட்டன், கோசல் தொகுத்து வெளியிட்ட ஆய்வுக் கட்டுரைகளில் அடங்கிய விவாதத்திலிருந்து இது பெருமளவு வேறுபட்ட வகையிலானது). இந்தியாவில் அதிகாரபூர்வ வறுமைக் கோடு கலோரி அளவீடுகள் அடிப்படையில் வரையறுக்கப்படுகிறது; புதிய தாராள வாத பொருளாதாரக் கொள்கைகள் கால கட்டத்தில் கிராமப் புறத்திலும் நகர்ப்புறத்திலும் மேலும் மேலும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் அந்தந்த பகுதிகளுக்கு வரையறுக்கப்பட்ட கலோரி அளவீடுகளுக்கு குறைவாகவே நுகர்கின்றனர்; இந்த அடிப்படையில் பார்த்தால் அதிகாரபூர்வ பிரச்சாரங்களுக்கு மாறாக வறுமையின் அளவு அதிகரித்து வருகிறது; அதிகரித்து வரும் ஊட்டச் சத்துக் குறைவு தொடர்பான இந்த தகவலை, ஒரு நபருக்கு ஒரு ஆண்டில் கிடைக்கும் உணவு தானியங்களின் அளவு சுதந்திரத்துக்குப் பிறகு 1980-களின் இறுதியில் உச்சத்தை அடைந்து அதன் பிறகு குறைந்து கொண்டே வருவதுடன் சேர்த்துப் பார்க்கலாம்; என்று தனது 2007, 2010 ஆய்வு கட்டுரையில் பட்னாயக் முடிவு செய்திருந்தார்.

இந்த முடிவு பல்வேறு காரணங்களின் அடிப்படையில் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. அந்த காரணங்களில் எதுவும் ஆய்வு பூர்வமாக நிரூபிக்கப்பபடாதவை.

  1. மக்களின் வாழ்க்கை நிலைமை உயரும் போது உணவு தானியங்கள் உட்கொள்வது குறையும் என்ற வாதம் உணவு தானியங்களின் நேரடி நுகர்வை பற்றி மட்டுமே பேசுவதால் தவறானது. நேரடி, மற்றும் மறைமுக (பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் தானியங்களின் வடிவில்) மொத்த நுகர்வு வருமானம் உயரும் போது தவிர்க்க முடியாமல் அதிகரிக்கிறது என்பது பல நாடுகளுக்கான தரவுகளின் மூலமாகவும், நாடுகளின் குறுக்கு வெட்டு மற்றும் கால வரிசையிலான தரவுகளின் மூலமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. (கிருஷ்ணா ராம் 2013)
  2. கடின உடல் உழைப்பு தேவையில்லாமல் இருப்பதால் குறைந்த கலோரிகள்தான் தேவைப்படுகின்றன என்ற வாதமும் இதே காரணத்துக்காக செல்லுபடியாகாது. உலகம் முழுவதும் ஒருவரது வருமானம் அதிகரிக்கும் போது, உடல் உழைப்பின் தீவிரம் அதிகமாகா விட்டாலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் உட்கொள்ளும் உணவு தானியங்களின் அளவும், நுகரும் கலோரி அளவும் அதிகரித்து வருகிறது.  (உதாரணமாக, ஒரு சராசரி அமெரிக்கர் ஒரு சராசரி இந்தியரை விட தீவிரமான உடலுழைப்பு செய்யா விட்டாலும் கூட 5 மடங்கு அதிக அளவு உணவு தானியங்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் உட்கொள்கிறார்.).
  3. மக்கள் புரதங்களுக்கு மாறிக் கொண்டிருப்பதால் நாம் கலோரி நுகர்வை குறித்து கவலைப்பட வேண்டாம் என்ற வாதமும் தவறானது. ஏனென்றால் கலோரி நுகர்வு வீழ்ச்சியடைந்த அதே கால கட்டத்தில் இந்தியாவில் ஒரு நபருக்கான புரத நுகர்வும் குறைந்து கொண்டு வந்திருக்கிறது.
  4. மக்களின் விருப்பங்கள் மாறுகின்றன. உணவு உட்கொள்வதை விட மருத்துவம் போன்ற சேவைகளை அவர்கள் அதிகம் விரும்பி மாறுகிறார்கள், அதுதான் உணவு தானிய நுகர்வின் வீழ்ச்சிக்கு காரணம் என்ற வாதம் எழுப்பும் கேள்வி : ஒரு குறுகிய காலத்துக்குள், உதாரணமாக 2004-05க்கும் 2009-10க்குன் இடையே கணிசமான மக்கள் தொகை பகுதியினர் கலோரி அளவீட்டுக்கு கீழ் போவதற்கான காரணம் என்ன? விருப்பங்களில் ஏற்படும் மாற்றங்கள் நீண்ட கால நோக்கில்தான் நிகழ்கின்றன. இது போன்று குறுகிய காலத்தில் கலோரி பற்றாக்குறையில் ஏற்பட்ட அதிகரிப்பை அவை விளக்க முடியாது.

ஏழைப் பெண்கள்

அதிகரித்து வரும் ஏழ்மைக்கு எதிரான இந்த வாதங்கள் ஒவ்வொன்றும் நிலை நிறுத்தப்பட முடியாதவை என்றாலும் இந்தக் கேள்வி பலரை குழப்பத்துக்குள்ளாக்குகிறது : தனி நபருக்கான உண்மையான செலவினங்கள் அதிகரித்துள்ள நிலையில் ஏன் கலோரி குறைபாடு அதிகரித்து வருகிறது? இதற்கான எளிமையான விடை, “பாரம்பரிய பொருட்களுக்கு” பதிலாக விலை அதிகமான “நவீன பொருட்களுக்கு” மக்கள் மாற வேண்டியிருக்கிறது என்பதுதான். ஒப்பீட்டளவில் வளமாகியிருக்கும் நடுத்தர வர்க்கத்தின் தேர்வுகளாலும், அரசு தான் வழங்கும் சேவைகளின் தரத்தை சீரழிக்கும் திசையில் செல்வதாலும் இது நடக்கிறது. இதனால், மக்கள் அத்தியாவசிய பொருட்களான உணவு தானியங்கள் போன்றவற்றை குறைவாக நுகர்வதற்கு கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

முந்தைய காலகட்டத்தின் பொருட்களும் சேவைகளும் இந்த கால கட்டத்திலும் கிடைக்கின்றன என்ற நலவாழ்வு பொருளாதார கோட்பாட்டின் பொய்யான அடிப்படையை விட்டு விட்டால், வறுமையின் அளவீடு மற்றும் மட்டம் குறித்த தோற்றத்தில் முரண்பட்டதாக தோன்றும் பல தகவல்களை சரியாக ஒருங்கிணைந்த கதையாடலாக புரிந்து கொள்ள முடியும். ஆரம்பத்தில் முரண்பாடு போல தோற்றமளிக்கும் ஒன்று, அதிகரித்து வரும் தனிநபர் செலவினங்கள் ஒரு பக்கமும் குறைந்து வரும் தனிநபர் கலோரி உட்கொள்ளல் இன்னொரு புறமும் – உண்மையில் அவ்வாறு இல்லை; மாறாக, ஒரு நபருக்கான செலவு அதிகரித்து வருவது போல தோன்றுவதும், குறைந்து கொண்டே வரும் கலோரி உட்கொள்ளலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்தான் என்று புரிந்து கொள்ளலாம்.

குறைந்த பட்ச கலோரி அளவு உள்ளிட்ட தேவையான பொருட்களும் சேவைகளும் கிடைப்பது என்று வறுமைக் கோட்டை வரையறுத்தால், புதிய-தாராளவாத இந்தியாவில் வறுமை உயர்ந்து கொண்டே போகிறது என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

– பிரபாத் பட்நாயக், நன்றி: EPW
தமிழாக்கம்: செழியன்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க