Monday, April 21, 2025
முகப்புசெய்திகோவை: மோடியை எதிர்த்தால் கைது செய் - பாஜக அடாவடி !

கோவை: மோடியை எதிர்த்தால் கைது செய் – பாஜக அடாவடி !

-

கோவை இரத்தினபுரி பகுதியில் 06.10.2013 அன்று புதிய ஜனநாயகம் அக்டோபர் இதழ் விநியோகித்து கொண்டிருந்த 4 தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

மோடி - இந்தியாவின் ராஜபக்சே“மோடி ஒரு பாசிஸ்ட்டு, கொலைகாரன் , கிரிமினல்” என்றெல்லாம் விளக்கி பிரச்சாரம் செய்து தோழர்கள் புத்தக விற்பனையில் ஈடுபட்டிருந்தனர். மோடி கார்ட்டூன் கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் இருந்ததால் புத்தகம் வேகமாக விற்பனையாகி உள்ளது.  அப்போது பாஜக கிரிமினல்கள் போலிசுக்கு போன் செய்து புகார் செய்திருக்கின்றனர். பாஜக கும்பலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தோழர்களை  போலீஸ் ஜீப்பில் ஏற்றி உள்ளனர். தோழர்கள் கையில் இருந்த 100 புஜ பிரதிகளை போலிசு பிடுங்கிக் கொண்டது.

‘மத வெறியை துண்டியது’, ‘மதக் கலவரத்தை துண்டும் விதமாக செயல்பட்டது’, ‘மோடியை பற்றி அவதூறு பரப்பி இலவசமாக புத்தகத்தை விநியோகித்தது’, ‘புத்தகம் வாங்கச் சொல்லி நிர்ப்பந்தித்தது’, ‘தீவிரவாதிகள், நக்சலைட்டுகள்’ என்றெல்லாம் சொல்லி பிணையில் வெளி வர முடியாத வழக்கு போடச் சொல்லி போலிசை மிரட்டியும், நச்சரித்தும் வந்தனர் பாஜகவினர்.

புதிய ஜனநாயகம் முறையாக பதிவு பெற்று வெளிவரும் பத்திரிகை என்பதையும், ஜனநாயக நாட்டில் யாரை பற்றியும் கருத்து சொல்ல உரிமை உள்ளது எனவும், மோடியின் மந்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது மோடி ஒரு கொலைகாரன், கிரிமினல் என்பதைக் காட்டுவதாகவும் , ஆனானப்பட்ட அமெரிக்காவே மோடிக்கு விசா வழங்க மறுத்து வருவதையும் இன்னும் பல்வேறு வகையிலும் விளக்கம் கொடுத்து சரியான அமைப்பாக எப்படி செயல்பட்டு வருகிறோம் என்று ஆய்வாளரிடம் பேசினோம்.

​”எல்லாம் சரி, ஏன் அனுமதி பெற்று பிரச்சாரம் செய்யவில்லை?” என்றார் ஆய்வாளர்.

“இதற்கெல்லாம் அனுமதி பெறத் தேவையில்லை” என்றும் “ஏற்கனவே ​ கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கேட்டும் காவல்துறை மறுத்திருக்கிறது, எங்களது ஜனநாயக உரிமையை மீறி செயல்பட்டிருக்கிறது” எனவும் கூறினோம். ஆனால் எதையும் ஆய்வாளர் காதில் போட்டுக் கொள்ளவில்லை. கமிஷனரிடம் பேசிவிட்டு சொல்வதாக கூறினார்.

கைது செயயப்பட்டதில் ஒருவர் கல்லூரி மாணவர்.  “மாணவரையெல்லாம் அழைத்துக் கொண்டு இந்த வேலை செய்வது சரியா? அவருக்கு வாழ்க்கை இருக்கிறது, எதிர்காலம் இருக்கிறது” என்றார் ஆய்வாளர்.

புஜதொமு
“மக்களின் எதிர்காலம் சூன்யமாகி வருவதால் நாங்கள் களத்தில் இறங்கியிருக்கிறோம்” – புஜதொமு

“மக்களின் எதிர்காலம் சூன்யமாகி வருவதால் நாங்கள் களத்தில் இறங்கியிருக்கிறோம்” என்பதையும் “23 வயதில் பகத்சிங் தூக்கின் முன் நின்றதையும்” விளக்கினோம். உங்களிடம் பேசி ஜெயிக்க முடியாது என்றார் .

பிஜேபிகாரன் பிணையில் வர இயலாத வழக்கு போடச்சொல்லி நச்சரிப்பதாகவும், அனுமதில்லாமல் பிரச்சாரம் செய்தது என்பதற்காக வழக்கு போட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

“யார் நச்சரித்தாலும் வழக்கு போடுவீர்களா? சரி தவறு பார்க்க மாட்டீர்களா?” என்பதற்கு பதில் இல்லை.

சுவரொட்டி ஓட்ட அனுமதி மறுப்பு, மீறி ஓட்டினால் கிழித்தெறிவது, ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், சுவரெழுத்து எழுத தடை, பேருந்து பிரச்சாரத்துக்கு தடை, பகுதி பிரச்சாரத்துக்கு தடை, கேட் கூட்டம் நடத்த, தனியார் இடத்தில் கூட்டம் போட தடை என தடை மேல் தடை விதித்து ஜனநாயக உரிமைகளை காலில் போட்டு மிதித்து வருகின்றது காவல்துறை. கோவையில் நடைபெற்ற கலவரத்தை காரணமாக சொல்கிறது. ஆனால், கலவரத்திற்கு காரணமான இந்து மத அமைப்புகளுக்கு கூட்டம் நடத்த சட்டப்படி அனுமதி வழங்கப்படுகிறது.

B-4, B-11 காவல் நிலையத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாவட்டச் செயலாளர் தோழர் விளவை ராமசாமி, மக்கள் கலை இலக்கிய கழக தோழர் மணிவண்ணன் ஆகியோர் மீது மோடியின் தமிழக வருகையை கண்டித்து சுவரொட்டி ஒட்டியதற்காக வழக்கு, முன்னணியாளர்களைத் தொலைபேசியில் மிரட்டுவது, பீதியூட்டுவது என அரசின் அடக்கு முறை தலைவிரித்தாடுகிறது.

மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அமைப்புகளுக்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. திருச்சியில் மோடியின் வருகையை கண்டித்து நடந்த பொதுக்கூட்டத்திற்கு எத்தனை பேர் சென்றீர்கள்? யார்? யார்? என விசாரித்து வருகிறது உளவுத் துறை. கோவை தொழிலாளர்களின் மத்தியில் , உழைக்கும் மக்கள் மத்தியில், அமைப்பின் வளர்ச்சி பாசிஸ்ட்டுகளுக்கும் , அரசிற்கும் சகிக்க முடியாத ஒன்றாகி வருகிறது.

செப்டம்பர் இறுதியில் வடவள்ளியில் பாஜக பிரமுகர் ராமநாதன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது என செய்தி வெளியானது. மோடி வருகையை எதிர்த்து சுவரொட்டி ஒட்டியவர்கள்தான் ராமநாதன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசினர் என பாலிமர் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. ஆனால்,  அங்கீகாரம் பெறுவதற்காகவும், பிரபலம் அடைவதற்காகவும் தானே வீசிக் கொண்டதாக அக்டோபர் 4 – ம் தேதியன்று ராமநாதன் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்து,  சிறையில் அடைக்கப்பட்டு உள்ளான் . பத்திரிக்கையிலும் செய்தி வெளி வந்து நாறிக் கொண்டிருக்கிறது. கோவையில் ஆர்எஸ்எஸ், பிஜேபி அமைப்புகளை சேர்ந்தவர்களிடையே மோதல் சாதாரண ஒன்றாகி விட்டது. கந்து வட்டி , கட்டப் பஞ்சாயத்து போன்றவற்றில் கொடிகட்டி பறக்கிறது இந்த கும்பல்.

இதை முறியடிக்கும் சக்தி ம.க.இ.க, பு.ஜ.தொ.மு -விடம் இருப்பதால் அதைக் கண்டு பீதியடைகிறது இக்கும்பல். ஜனநாயக உரிமை மறுப்பெல்லாம் ம.க.இ.க, பு.ஜ.தொ.மு அமைப்புக்குத் தானே ஒழிய மற்றவர்களுக்கு இல்லை . 6- ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் பொதுக்கூட்டம் நடத்த உள்ளது.

அரசின் அடக்குமுறையையும் , பாசிசத்தையும் ஒழித்துக் கட்ட களத்தில் இறங்கி வருகின்றன கோவை பகுதி ம.க.இ.க வும் பு.ஜ.தொ.முவும்.

செய்தி :
கோவை பகுதி ம.க.இ.க, பு.ஜ.தொ.மு.