செய்தி: மதுரையில் 75 லட்சம் ரூபாய் செலவில் நிரந்தர சங்கத் தமிழ் காட்சிக் கூடம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
நீதி: அரசுப் பள்ளிகளிலேயே ஆங்கில வழிக் கல்வி அருளிய அம்மா ஆட்சியில் இனி அருங்காட்சியகத்தில் மட்டுமே தமிழ் இருக்கும் !
______
செய்தி: ராமதாஸ், அன்புமணிக்கு பாதுகாப்பு வேண்டும் என பாமக தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இது தொடர்பாக தமிழக அரசு 2 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
நீதி: வன்னியர்கள் மத்தியில் ம.ஐயா, சி.ஐயாக்களுக்கு பாதுகாப்பில்லை என்கிறதோ பாமக?
_____
செய்தி: அனைத்து சமுதாயப் பேரியக்கம் என்ற பெயரில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பல்வேறு சாதி அமைப்புகள் ஒன்று சேர்ந்து சென்னையில் ஆலோசனை நடத்தின. அனைத்து சாதி அமைப்புகளின் துணையோடு தேர்தலை பா.ம.க. சந்திக்க திட்டமிடுவதாக பேச்சு எழுந்துள்ளது.
நீதி: அனைத்து சாதி சங்கங்களுடன் தேர்தலை சந்தித்தாலும், அனைத்து ‘சாதி’ மக்களும் இவர்களுக்கு கரி பூசப்போவது உறுதி!
______
செய்தி: கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டக் களமான இடிந்தகரை, அதன் அருகிலுள்ள கூத்தன்குழி மீனவர் கிராமங்களைச் சுற்றிலும், குறைந்தபட்சம் 5,000 நாட்டு வெடிகுண்டுகள் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் தகவல் வெளியாகியிருக்கிறது.
நீதி: கூடங்குளம் அணு மின்நிலையத்தில் உள்ள குண்டை விடவா?
______
செய்தி: ஐ.பி.எல்., சூதாட்டப் புகார் குறித்து விசாரிக்க பஞ்சாப் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முகுல் முட்கல் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்க உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
நீதி: என்ன குழு போட்டாலும் பிசிசிஐ சீனிவாசனை துரத்தி விட யாருக்கும் துப்பில்லையே!
_____
செய்தி: ஆந்திரத்தைப் பிரிப்பதை எதிர்த்து மின் ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதால் சீமாந்திராவின் 13 மாவட்டங்களும் இருளில் மூழ்கியுள்ளன.
நீதி: தெலுங்கானா, சீமாந்திரா என்று ஊர் இரண்டு பட்டால் ஆளும் வர்க்கத்திற்கு கொண்டாட்டம்தான்!
______
செய்தி: சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் வழங்குவதற்கு ஆதார் அடையாள எண்ணைக் கட்டாயமாக்க வேண்டும் என உத்தரவிடக் கோரி, உச்சநீதி மன்றத்தை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அணுகியுள்ளன.
நீதி: உச்சநீதிமன்றம், அரசு, அரசு நிறுவனங்கள் நடத்தும் இந்த சட்டப் போராட்டம் ஆதாரை கட்டாயமாக்கி மக்களது விவரங்களை உளவு பார்ப்பதற்கும், விற்பதற்குமான கண்ணாமூச்சி ஆட்டம்தான்.
______
செய்தி: இந்தியாவின் அடுத்த பிரதமர் 3-வது அணியில் இருந்தே வருவார் என சமாஜ்வாதி கட்சித்தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார்.
நீதி: பிரதமர் பதவிக்கு ஜெயா நேரடியாக துண்டு போட்டாரென்றால் முலாயம் மூன்றாவது அணி பெயரில் துண்டு போடுகிறார்.
_______
செய்தி: தெலுங்கானா மாநிலம் உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் காரணமாக, சென்னையிலிருந்து ஆந்திரம் செல்லும் பேருந்துகள் வெள்ளிக்கிழமை இயக்கப்படவில்லை. இதனால் திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவத்துக்குச் செல்ல முடியாமல் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
நீதி: ஊர் தீப்பிடிக்கும் போது பிடில் வாசிப்பது நீரோ மன்னனாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை, பக்தர்களாகவும் இருக்கலாம்!
_____
செய்தி: நவம்பர் 11 முதல் டிசம்பர் 4 வரை நடைபெறவுள்ள டெல்லி உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டப் பேரவைத் தேர்தலில், வேட்பாளரை நிராகரிப்பதற்கான ‘நோட்டா’ வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்துகிறது.
நீதி: அரசையும், ஆளும் வர்க்கத்தையும் நிராகரிப்பதற்கு இந்த ‘நோட்டா’ பட்டன் பயன்படாது என்பதை சிட்டிசன்களும் நெட்டிசன்களும் கவனிக்க!
______
செய்தி: அரசியல் சதி காரணமாக லாலுவுக்கு சிறைத் தண்டனை கிடைத்துள்ளது என்று அவரது மனைவியும், பிகார் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி கூறியுள்ளார்.
நீதி: பாவம் மாடுகள்!
______
செய்தி: கழிவறையைச் சுத்தம் செய்பவர்களுக்கு தெய்வீக உணர்வு கிட்டும் என மோடி தெரிவித்துள்ளார். அவருக்கு கழிவறையைச் சுத்தம் செய்த அனுபவம் உண்டா? அந்த உணர்வு கிடைத்ததா என காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கேள்வியெழுப்பியுள்ளார்.
நீதி: ‘அசுரர்களை’ வதம் செய்த தினங்களை கொண்டாடும் மோடிக்கு அந்த தெய்வீக ‘கொலை’ உணர்வு ஏற்கனவே கிடைத்து விட்ட நிலையில் கழிப்பறையின் சாத்வீக தெய்வ உணர்வுக்கு என்ன அவசியம்?
_____
செய்தி: இலங்கையில் மனித உரிமைகள் தொடர்ந்து மீறப்பட்டு வருவதால், அங்கு அடுத்த மாதம் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிப்பதாக, கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் அறிவித்துள்ளார்.
நீதி: பாராட்டுக்கள் பிரதமர் அவர்களே! அதே நேரம் ஈராக்-ஆப்கான் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை நீங்களும் ஆதரித்தீர்கள் என்ற கொலைப் பழி இன்னும் நீங்கவில்லை!
_____
செய்தி: அமெரிக்காவின் வர்ஜின் கேலக்டிக் நிறுவனம் அனேகமாக ஜனவரியில் விண்வெளி சுற்றுலாவை ஜாம்ஜாம் என்று நடத்திவிடும் என்று தெரிகிறது. 600-க்கும் அதிகமானவர்கள் தலா 150 லட்சம் ரூபாய் கட்டிவிட்டு ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.
நீதி: அமெரிக்க போர்களினாலும், முதலாளித்துவத்தின் பட்டினியாலும் ஏழைகள் சாவுப் பயணம் மேற்கொள்கிறார்கள். அதை வேடிக்கை பார்க்கும் அமெரிக்க கொழுப்பு விண்வெளிப் பயணம் போகிறது.
______
செய்தி: டிஎஸ்க்யூ சாஃப்ட்வேர் மற்றும் அந்நிறுவன நிறுவனர் தினேஷ் டால்மியாவுக்கு பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) 7 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. 1998-ம் ஆண்டு முறைகேடான வர்த்தகம் காரணமாக இந்நிறுவன பங்கு விலை அதிகபட்ச விலைக்கு விற்பனையானது.
நீதி: இனி முறைகேடான வர்த்தகத்தை முறைப்படி செய்வார்கள்!
_____