Monday, April 21, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விமாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்த புமாஇமு விண்ணப்பம்

மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்த புமாஇமு விண்ணப்பம்

-

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சென்னைக் கிளைச்செயலர் தோழர்.கார்த்திகேயன் தலைமையில் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் சுமார் 300 பேர் சென்னையில் இயங்கும் அரசுப் பள்ளிகளின் பராமரிப்பை மேம்படுத்தக் கோரி மாநகராட்சி மேயருக்கு விண்ணப்பம் கொடுத்தனர்.

அனுப்புனர்
வ.கார்த்திகேயன்,
சென்னைக்கிளைச் செயலர்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
எண்.41, பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை.95
பேச : 9445112675

பெறுநர்
உயர்திரு. மேயர் அவர்கள்,
சென்னை மாநகராட்சி.

ஐயா வணக்கம்,

பொருள் : எழும்பூர், புலியூர் மற்றும் அமைந்த கரையில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் அடிப்படைவசதிகளை செய்து தரக் கோருதல்….

கல்வி என்பது   மனிதனை பண்படுத்துவது, கல்வி என்பது மனித குலம் இன்று பெற்றுள்ள முன்னேற்றத்திற்கு சொந்தமானது. வெறும் கற்களை உருட்டிக் கொண்டிருந்த மனிதனின் தொடர்ச்சியான விடாப்பிடியான தேடுதல்தான் சக்கரத்தினை உருவாக்கியது. அது ஒரு கல்வி. வேட்டையாடி காட்டுமிராண்டியாக இருந்த மனிதன்  நாகரீகமடைந்தவனாக மாறினான் என்றால்  அது பலர் பெற்ற அனுபவங்களின் தொகுப்பு. மனிதன் தன்னுடைய தேவையை உற்பத்தி செய்வதுதான் கல்வி.

ஆனால் கல்வி என்பது ஒரு  காலத்தில் ஆதிக்க சாதிகளின் கைப்பிடியில் இருந்தது. உழைக்கும் மக்களின் உழைப்பில், அனுபவத்தில் உருவான கல்வி குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே கிடைத்தது. அதை மீறி கல்வியை கற்க முனைந்த உழைக்கும் வர்க்கத்தினை சேர்ந்தவர்களுக்கு நாவினை அறுத்தல், காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றுதல், மரண தண்டனை வரை அத்தனை கொடுமைகளும் நடந்தன. இதை எதிர்த்து அனைவருக்கும் தரமான -கட்டாய – இலவசமாக தாய்மொழியில் அறிவியல் பூர்வமாக கல்வி இருக்க வேண்டும் என்பதற்காக பெரியார், அம்பேத்கர் முதல் இன்னும் எண்ணற்ற பெரியோர்கள் போராடியதன் விளைவாகவே அரசுப் பள்ளிகள் கிடைத்தன. மக்களின் உழைப்பில், அவர்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட அரசுப் பள்ளிகள்தான் எண்ணற்ற அறிஞர்களையும் ஆய்வாளர்களையும் உருவாக்கின.

அப்படிப்பட்ட அரசுப் பள்ளிகளின் நிலை இன்று பரிதாபத்துக்குரிய வகையில் உள்ளது. அடிப்படை வசதிகள் இல்லாமல் , போதிய ஆசிரியர்கள் இல்லாமல் இருப்பதால்  அரசுப் பள்ளிகள் மூடப்படுகின்றன. இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தனியார் பள்ளிகள் புற்றீசல் போல பெருகி கல்விக் கட்டணம் என்ற பெயரில் மக்களை சுரண்டி கொழுக்கின்றன. ஏழை மாணவர்களுக்கு அரசுப் பள்ளிகள் ஒன்றுதான் கல்வி கற்க இருக்கும் ஒரேஇடம் . அதுவும் மூடப்படுவதால், அவர்கள் சிறு வயதிலேயே வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இருக்கும் அரசுப் பள்ளிகளிலும் தேவையான அளவில் கழிவறை இருப்பதில்லை. இதனால் பெண் குழந்தைகளை பெற்றோர்கள் குறிப்பிட்ட வயதிற்கு மேல் பள்ளிகளுக்கு அனுப்புவதில்லை. இதனால் பெண்களின் படிப்பு பாதியில் நிறுத்தப்படுகிறது.  குடிதண்ணீர் வசதி, ஆய்வக வசதி, விளையாட்டு மைதான வசதி, கலைத் திறமையை ஊக்குவிக்கும் வசதி போன்றவை இல்லாத நிலைதான் அரசுப் பள்ளிகளில் காணப்படுகிறது. படிப்பதற்கான சூழல் இல்லாத போது ஒரு மாணவனால் கல்வியை எப்படி கற்க முடியும்? இதுவே இடை நிற்றலுக்கு முக்கியக் காரணமாக அமைகிறது. இவ்வளவு பிரச்சினைகள் இருந்த போதிலும் அரசுப்பள்ளி மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டுத் தேர்விலும் சிறப்பான முறையில் மதிப்பெண் பெறுகிறார்கள்.

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான பள்ளிகளும் மேற்சொன்ன குறைபாடுகளுடன் செயல்படுகின்றன. குறிப்பாக எழும்பூர், வீராசாமித் தெரு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியானது பத்து வருடங்களுக்கு முன்னர் 300-க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் போதிய ஆசிரியர்கள்,  தலைமை ஆசிரியர் என சிறப்பாக செயல்பட்ட பள்ளியாகும். அதில் அப்பகுதியைச் சுற்றி உள்ள ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்தனர். ஆனால் இன்று 100-க்கும் குறைவான மாணவர்களே படிக்கின்றனர். 4 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களும் இரண்டு அல்லது மூன்று வகுப்புக்களை இணைத்து பாடம் நடத்துகின்றனர். பள்ளியில் போதிய கழிவறை இல்லை, இருக்கும் கழிவறைகளோ பராமரிப்பு இல்லாமல் இருக்கின்றன. குடி தண்ணீர் வசதி இல்லை. விளையாட்டு மைதானம் இல்லை. பள்ளியில் புதர்கள் சுற்றி மண்டிக் கிடக்கின்றன.

இப்பள்ளிக்கு எதிரில் உள்ள ஆரம்பப்பள்ளி 4 வருடங்களுக்கு முன்னர் இழுத்து மூடப்பட்டு தற்போது பாழடைந்த கட்டிடமாக உள்ளது. இதனால் இப்பகுதியைச் சேர்ந்த ஏழை மக்கள் தங்கள் குழந்தைகளை வேறு வழியின்றி தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். அத்தனியார் பள்ளிகளோ இதைக் காரணம் காட்டி கல்விக் கட்டணத்தை உயர்த்தி கொள்ளையடிக்கின்றன.

புலியூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1500  மாணவர்கள் படிக்கின்றனர். சுற்று வட்டாரப் பகுதியினைச் சேர்ந்த மாணவர்கள் இப்பள்ளியில் படிக்கின்றனர். 1500 மாணவர்கள் படிக்கும் பள்ளியில் 10 கழிவறைகளே உள்ளன. அவையும் பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. குடிப்பதற்கு தண்ணீர் வசதி என்பதே இல்லை. விளையாட்டு மைதானம் இல்லை. விளையாட்டுப் பொருட்கள்இருந்தாலும் அவை மாணவர்களுக்குக் கொடுப்பதில்லை.

மேலும் அமைந்த கரையில் உள்ள, மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2500 மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளி மிகவும் பெயர் பெற்றது. மாங்காடு, திருவேற்காடு, பல்லாவரத்திலிருந்து என 30 கி.மீ தொலைவிலிருந்து வந்து கூட மாணவிகள் படிக்கின்றனர். 2500மாணவிகள் படிக்கும் பள்ளியில் 8 கழிவறைகளே உள்ளன. அவைகளும் பராமரிப்பு இன்றி உள்ளன. அதனால் பல பெண்கள் தங்கள் படிப்பை நிறுத்திக் கொண்டதாக கூறியுள்ளனர். குடி தண்ணீர் வசதி போதிய அளவில் இல்லை. தற்போது உள்ள தண்ணீர் தொட்டியை சரியாக பராமரிக்காததால் அதில் புழுக்கள் இருக்கின்றன. இதனால் மாணவிகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகின்றனர்.

எழும்பூர் வீராசாமித்தெரு மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, புலியூர் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளி மற்றும் அமைந்தகரை –மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் உள்ள அடிப்படைப் பிரச்சினைகளை சரி செய்து மாணவர்களுக்கு படிக்கின்ற சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதை இப்பகுதி மக்களும் மாணவர்களும் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

ஆகவே மக்களின்,மாணவர்களின் இந்த நீண்ட நாளைய கோரிக்கையை பரிசீலித்து உடனடியாக நிறைவேற்றித் தருமாறு இப்பகுதி மக்களின்,மாணவர்களின் சார்பில் தங்களை கோருகிறோம்.

நன்றி !

இவண்
வ.கார்த்திகேயன்,
சென்னைக்கிளைச் செயலர்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
பேச : 9445112675

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க