Monday, April 21, 2025
முகப்புசெய்திதிருச்சியில் BHEL தொழிலாளி ஆரோக்கியசாமி பலி

திருச்சியில் BHEL தொழிலாளி ஆரோக்கியசாமி பலி

-

திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தில் (BHEL) வேலை பார்த்து வந்த மூத்த தொழிலாளி ஆரோக்கியசாமி. கடந்த வியாழன்று (10.10.2013) இரவுப் பணிக்கு வந்த அவரை பணிப் பாதுகாப்பற்ற ஹைட்ராலிக் பிரஸ் வேலையை செய்ய நிர்ப்பந்தித்தது நிர்வாகம். பகலிலேயே பிற தொழிலாளர்கள் இந்த பணி பாதுகாப்பற்ற நிலைமையை சுட்டிக் காட்டி வேலை செய்ய மறுத்து விட்டிருந்தனர். இந்நிலையில் மேலதிகாரிகளின் நிர்ப்பந்தம் காரணமாக வேலையை துவங்கிய ஆரோக்கியசாமி இரவு 7.55 க்கு திடீரென ஹைட்ராலிக் பிரஸில் இருந்து பக்கவாட்டுப் பகுதியில் அதிவேகத்தில் வெளியேறிய வெட்ஜ் மார்பில் சொருகி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

மூத்த தொழிலாளி ஆரோக்கியசாமி
மரணமடைந்த மூத்த தொழிலாளி ஆரோக்கியசாமி

வழக்கம் போல இந்த படுகொலையையும் மறைக்க நிர்வாகம் முயற்சி செய்தது. கடந்த காலத்தில் நிர்வாகம் இப்படி சதி செய்து மறைத்த பல சதி வேலைகளை உணர்ந்திருந்த தொழிலாளர்கள் இம்முறை ஏமாறத் தயாராக இல்லை. பணிப் பாதுகாப்பின்மை, உழைப்புச் சுரண்டல், வேலைச் சுமை, ஆலைச் சாவுகள் ஆகியவற்றுக்கு காரணமான முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு முடிவு கட்ட வேண்டுமென முடிவெடுத்து போராட்டத்தில் குதித்தனர்.

வியாழக்கிழமை இரவு தொடங்கிய போராட்டம் மறுநாள் மதியம் 1.30 மணி வரை நீடித்தது. உயிரிழந்த ஆரோக்கியசாமியின் உடல் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. நிர்வாகம் தொழிலாளர்களை பல வழியில் பிளவுபடுத்த முயன்றது. ஆனால் தொழிலாளர்கள் கடைசி வரை உறுதியாக நிற்கவே நிர்வாகம் தனது பிடிவாதத்தை தளர்த்தியது.

“இத்தொழிலாளியின் உயிர்பலிக்கு காரணமான அதிகாரி மோகன் (AGM) உள்ளிட்ட கீழ்நிலை அதிகாரிகளை பதவி இறக்கம் செய்து வேறு யூனிட்டிற்கு மாறுதல் செய்ய வேண்டும், ஆரோக்கியசாமியின் வாரிசுதாரர் ஒருவருக்கு நிரந்தர வேலை தரவேண்டும், சட்டப்படி அவருக்கு கிடைக்க வேண்டிய பண பலன்களை முழுவதுமாக தரவேண்டும், ஆலையில் பாதுகாப்பற்ற சூழலை சரி செய்யாமல் தொழிலாளர்களை வேலை செய்ய நிர்ப்பந்திக்கக் கூடாது, இரவு பணியின் போது ஆலைக்குள் இருக்கும் மருத்துவமனையில் மருத்துவர் இருப்பதை உத்திரவாதம் செய்ய வேண்டும், இப்போராட்டத்தில் ஈடுபட்ட எந்த தொழிலாளி மீதும் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக்கூடாது” என்ற கோரிக்கைகளை தொழிலாளர்கள் முன் வைத்தனர்.

அவர்கள் முன் வைத்த கோரிக்கைகளில் அதிகாரிகளை பதவி இறக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையைத் தவிர மற்றவைகளை ஏற்பதாக மனிதவள மேம்பாட்டு பொது மேலாளர் பழனிவேல் (HR) மற்றும் பாய்லர் உற்பத்திக் கூட பொதுமேலாளர் தீனதயாளன் ஆகிய இருவரும் எழுத்து பூர்வமாக உறுதிமொழி அளித்தனர்.

பின்னர் மூத்த தொழிலாளி ஆரோக்கியசாமியின் உடலுக்கு தொழிலாளிகள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இப்படி குறைந்தபட்ச உரிமைகளைக் கூட ஒன்றிணைந்து போராடினால்தான் பெற முடியும் என்பதற்கு பாரத மிகுமின் தொழிலாளர்கள் நடத்திய இப்போராட்டமே சாட்சி.

bhel-1

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

செய்தி
பு.ஜ.தொ.மு. – திருச்சி