வேலைப்பறிப்பு, தற்கொலைகள்,ஆலைச்சாவுகளை தீவிரமாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!
ஒசூர் பு.ஜ.தொ.மு.வின் பிரச்சார இயக்கம்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில், “வேலைப்பறிப்பு, தற்கொலைகள், ஆலைச்சாவுகளை தீவிரமாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!” என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆலைவாயில் பிரச்சாரம் என செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஒசூரில் பேடரப்பள்ளி என்ற தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் காலை 10.00 மணியிலிருந்து மாலை 5.00 மணி வரைக்கும் பிரச்சாரம் செய்து மாலை 5.30 மணிக்கு தெருமுனைக் கூட்டம் நடத்தினர். இதில் பெருவாரியான தொழிலாளர்கள், தோழர்கள் கலந்து கொண்டனர்; கூடிநின்று ஆதரவளித்தனர்.
ஓசூரில் பேடர்பள்ளி என்ற பகுதி, ஒப்பந்தத் தொழிலாளர்கள், வெளி மாநிலத்திலிருந்து வந்து தங்கியுள்ள கூலித் தொழிலாளர்கள் குவிந்துள்ள பகுதி. முக்கியமாக எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத, அதிக பின்தங்கிய நிலையில் இருக்கும் ஒரு தொழிலாளர் குடியிருப்புப் பகுதி. அடக்குமுறைகளை சந்திக்கும் தொழிலாளர்கள் கைகால்கள் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் இருக்கும் பகுதி.
ராஜ்சிரியா ஆலையில் வாரம்தோறும் சரியாக பராமரிக்க வேண்டிய பாய்லரை சரியாக பராமரிக்காமல் இருந்ததால், அதனை சுத்தம் செய்ய நிர்பந்திக்கப்பட்ட நாகவேணி என்ற பெண் தொழிலாளி, பாய்லர் வெடித்து இறந்து போனார். இரு குழந்தைகளுக்கு தாயான அவர் இப்பகுதியில் வாழ்ந்தவர். அவரது இறப்பின் போது இழப்பீடு தராமல் ஆலைநிர்வாகம் இழுத்தடித்ததும் அன்று பு.ஜ.தொ.மு. தோழர்கள் தலையிட்டு இழப்பீடு வாங்கிக் கொடுக்க அத்தொழிலாளியின் உடலை ஆலையின் முன்னே போட்டு மக்களைத் திரட்டி போராட்டத்தில் இறங்கியதும் இப்பகுதி மக்களின் அவலநிலைமைக்கு ஒரு சான்று!
இப்பகுதியில் வேலைபறிப்பு, தற்கொலைகள் – ஆலைச்சாவுகள் தீவிரமாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை பற்றி மக்களிடம் பிரச்சாரம் செய்த போது மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. குடும்பத்துடன் வந்து தங்கியுள்ள வெளி மாநில இந்தி பேசும் தொழிலாளர்கள் தங்களது வாழ்க்கைத் துன்பங்களை தோழர்களுடன் பகிர்ந்து கொண்டனர். இவ்வளவு தொலைவு வந்தும் வேலை உத்திரவாதம் இல்லை என்று தெரிவித்து ஆதங்கப்பட்டனர்.
இக்கூட்டத்திற்கு இச்சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர்.செந்தில்குமார் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், நாட்டில் உள்ள எல்லா முதலாளிகளும் உற்பத்திதான் முக்கியம் என்று அபரிதமான உற்பத்தி வாங்கி கொண்டு தொழிலாளர் உழைப்பை திருடுகின்றனர். இதன்மூலம் அவர்களுடைய சொத்தை குவிப்பது மட்டுமல்லாமல் உற்பத்தியான பொருட்கள் சந்தையில் விற்கவில்லை என்று கூறி தொழிலாளர்களை உபரி என்று அறிவித்து ஆட்குறைப்பு செய்கின்றனர்.
அதற்கு உதாரணமாக ஒசூர் கமாஸ் வெக்ட்ரா ஆலையையே சொல்லலாம். 12/(3)ஒப்பந்தத்தில் 34 நிரந்தரத் தொழிலாளர்களைக் கொண்டு 2 வண்டிகள் உற்பத்தி செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், தற்போது 21 தொழிலாளர்களைக் கொண்டு 4 வண்டிகள் உற்பத்தி செய்து தரவேண்டும் என ஆலை நிர்வாகம் தொழிலாளர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. முக்கியமாக தொழிலாளர்களை பழிவாங்கும் நோக்கில் 2 சங்க நிர்வாகிகள் பணிநீக்கம், லே-ஆப்., ட்ரான்ஸ்பர், சம்பள வெட்டு போன்ற தாக்குதல்களை தொடர்ந்து தொடுத்து வருகிறது. இது கமாஸ் வெக்ட்ரா ஆலைக்கு மட்டுமல்ல எல்லா ஆலைகளிலும் உள்ள நிலைமை.
ஒரு புரட்சிகர சங்கமாக இருப்பதால் இவ்வாலை நிர்வாகத்தின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு போராடி வருகிறோம். அந்த வகையில் தொழிலாளர்களும் தங்கள் ஆலைகளில் தொடுக்கப்படும் அடக்குமுறைகளுக்கு எதிராக புரட்சிகர சங்கமான பு.ஜ.தொ.மு.வில் இணைந்து செயல்பட வேண்டும் என்று அறைகூவி பேசினார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர்.சங்கர் விளக்க உரையாற்றினார். “பயங்கரவாதம் என்றால் குண்டு போட்டு பல நூறு மக்களைக் கொல்வதை மட்டும்தான் பயங்கரவாதம் என்று கருதுகிறோம். ஆனால், வேலை தேடி பிழைப்பிற்காக வந்தத் தொழிலாளர்களை அவர்கள் வாழ்க்கைக்கு எந்த உத்தரவாதமும் அளிக்காமல், அவர்களை மிரட்டி, மன உளைச்சலுக்கு ஆட்படுத்தி, அவர்களைக் கொடுமைப்படுத்தி, அற்ப கூலி கொடுத்து, அவர்களைச் சுரண்டுவதும், இதற்கான தொழிலாளர்கள் உயிரிழப்பு, உடல் உறுப்புகள் பாதிப்பு, மனநிலை பாதிப்படைந்து துன்பப்படுவதும் பயங்கரவாதமே. இது முதலாளித்துவ பயங்கரவாதம்!
டி.வி.எஸ். குழுமத்தின் ஒரு பகுதியான சுந்தரம் கிளேட்டான் என்ற ஆலையில், 660 டன் அழுத்தம் கொண்ட மோல்டிங் மிசின் உள்ளது. இரண்டு கைகளால் இயக்கும் தன்மை கொண்ட அந்த இயந்திரம், சென்சார் கதவுகளைக் கொண்டது. 8 மணிநேரத்தில் 240 – 250 பொருட்களை மட்டுமே உற்பத்தி செய்யும் வகையில் இந்த இயந்திரம் வடிவமைப்புக் கொண்டது. ஆனால், அதிக உற்பத்தி செய்வதற்காக இரு கைகளால் இயக்கும் பாதுகாப்புத் தன்மையை நீக்கியது ஆலை நிர்வாகம். இதனால், 5 நிமிடங்கள் மிச்சமாகும் எனவும், சென்சார் கதவுகளை நீக்கினால் மேலும் 5 நிமிடங்கள் மிச்சமாகும் எனவும் திட்டமிட்டு இவற்றை நீக்கி, இயந்திரத்தின் வேகத்தை அதிக்கப்படுத்தியது. இதனால், ஒரு நாளைக்கு 300 – 360 பொருட்கள் உற்பத்தி செய்யும் வகையில் மாற்றப்பட்டது.
இதில் பணிபுரிந்து வந்த முத்து என்ற தொழிலாளி இந்த வேகத்திற்கு வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார். இதனால், மிசினை இயக்கிக் கொண்டிருந்த போது, தலை முதல் இடுப்பு வரையிலான பகுதி இயந்திரத்தில் நசுங்கி கோரமான முறையில் உயிரிழந்தார். இதனை விபத்து என்று ஆலைநிர்வாகமும் போலீசும் சொல்கின்றனர். ஆனால், இது திட்டமிட்ட படுகொலை! இந்த படுகொலையை குண்டு வைக்கும் பயங்கரவாதிகளைப் போலவே பக்காவாக திட்டமிட்டு முதலாளிகள் செய்துள்ளனர். இன்றும் செய்துவருகின்றனர்.
ஒசூர் குளோபல் ஃபார்மாடெக் என்ற ஆலையில் கண் பார்வையற்ற தொழிலாளி 18 ஆண்டுகளாக வேலை செய்துவந்தார். அவரை வேலையைவிட்டு வெளியேற்றியது ஆலை நிர்வாகம். இதனால், மனமுடைந்துபோன அத்தொழிலாளி, தற்கொலை செய்துகொண்டார்.
ஒசூர் அசோக்லேலாண்டு ஆலையில் 599 தொழிலாளர்களை ஆலையில் இருந்து இடமாற்றம் செய்து அடக்குமுறையை ஏவியுள்ளது. இந்தத் தொழிலாளர்கள் வேலை செய்த இடங்களில் எல்லாம் இன்று ஒப்பந்தத் தொழிலாளர்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர்கள் அற்பக்கூலிக்கு வேலைக்கு அமர்த்தப் பட்டுள்ளனர். இவர்களுக்கு எந்த சட்ட பாதுகாப்பும் இன்று வழங்கப் படுவதில்லை.
முதலாளிகளுக்கு கோடிக்கணக்கில் வரிச்சலுகை கொடுக்கிறது இந்த அரசு. ஆனால், தொழிலாளர்களுக்கும் சிறுதொழிலுக்கும் எந்தவித உரிமைகளையும் கொடுப்பதில்லை. மக்களுக்கு வழங்கிவரும் உணவுப் பொருட்களில் அரசின் பங்காக இருந்த மானியத்தை வெட்டி வருகிறது. இதனால் கடுமையான விலைவாசி உயர்வை சந்தித்து வருகிறோம்.
முடிவாக நிரந்தரத் தொழிலாளர்கள் மட்டும் சங்கமாக செயல்பட முடியும் எனக் கருதுகின்றனர். அதற்கு இன்று முதலாளிகள் பல நெருக்கடிகளைக் கொடுத்துவருகின்றனர். ஆனால், பிரச்சனை நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல. எல்லா தொழிலாளர்களுக்கும் பிரச்சனை உள்ளது. இதனால் பயிற்சி தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள், நிரந்தரத் தொழிலாளர்கள் என எல்லா தொழிலாளர்களும் ஒரு அமைப்பாக திரண்டு போராடினால்தான் உரிமைகளைப் பெற முடியும். அந்தவகையில் செயல்படும் பு.ஜ.தொ.மு.வில் தங்களை இணைத்துக்கொள்ளுங்கள்” என்று அறைகூவி பேசினார்.
இறுதியாக, மாவட்டத் துணைத் தலைவர் தோழர்.சின்னசாமி நன்றியுரையாற்றினார்.
ஒசூரில் அடுத்த தெருமுனைக் கூட்ட நாட்கள் மற்றும் இடங்கள்
- 16-10-2013 மாலை 5 மணிக்கு – மூக்கொண்டப்பள்ளி
- 18-10-2013 மாலை 5 மணிக்கு – பத்தளப்பள்ளி
- 22-10-2013 மாலை 5 மணிக்கு – சூசூவாடி
செய்தி :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கிருஷ்ணகிரி – தருமபுரி – சேலம் மாவட்டங்கள்.
பதிவு எண் 24/KRI
தொடர்புக்கு: செல்-97880 11784 – ஒசூர்.