Monday, April 21, 2025
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்நிலக்கரி ஊழலில் முதல் குற்றவாளி பிரதமர்! குஜராத் படுகொலைகளில்?

நிலக்கரி ஊழலில் முதல் குற்றவாளி பிரதமர்! குஜராத் படுகொலைகளில்?

-

“முதல் குற்றவாளி பிரதமர்தான்” என்று தலைப்பு போட்டு முன்னாள் நிலக்கரித் துறை செயலாளர் பி.சி பரேக் கூறியுள்ள கருத்தை வெளியிட்டிருக்கிறது தினமணி.

பி.சி.பரேக்
பி.சி.பரேக்

“நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடக்கவில்லை. அப்படி நடந்ததாகக் கருதினால், அதில் பலரும் ஈடுபட்டுள்ளனர்; குமார்மங்கலம் பிர்லா ஒரு சதியாளர்; இந்த விவகாரத்தை ஆராய்ந்து, பரிந்துரை அளித்த நான் ஒரு சதியாளராக இருக்கலாம்; நிலக்கரித் துறையைத் தம் வசம் வைத்திருந்தவர் என்ற முறையில் இறுதி முடிவெடுத்த பிரதமர் மூன்றாவது சதியாளர்; எனவே, இந்த விவகாரத்தில் சதி நடந்திருந்தால் எங்கள் அனைவரையும் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களாகச் சேர்க்க வேண்டும் .“ என்று கூறியிருக்கிறார் பி.சி.பரேக்.

“எனக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று பிரதமர் இனியும் கூற முடியாது. அவருக்குத் தெரியாமல் தவறு நடந்திருந்தாலும், அவர் அதற்குப் பொறுப்பேற்றாக வேண்டும்” என்று தலையங்கத்தில் பொளந்து கட்டியிருக்கிறது தினமணி.

பரேக் இப்போது என்ன சொல்கிறாரோ அதையேதான் ஆ.ராசா ரொம்ப நாளாக சொல்லிக் கொண்டிருக்கிறார். “அலைக்கற்றை ஏலத்தில் ஊழலே நடக்கவில்லை. அது ஒரு கொள்கை முடிவு. அதனை ஊழல் என்று கூறினால் பிரதமர், நிதியமைச்சர் உள்ளிட்ட பலரும் அதில் சம்மந்தப்பட்டுள்ளனர்” என்பதே ராசா கூறிவரும் கருத்து.

மன்மோகன்சிங்
மன்மோகன்சிங்

ஆனால் “முதல் குற்றவாளி பிரதமர்தான்” என்று தலைப்பு போட்டு இப்படி ஒரு தலையங்கத்தை அன்று தினமணி தீட்டவில்லை. “பிரதமரையே குற்றம் சாட்டுகிறாரே, என்ன திமிர்?” என்று ஊடகங்கள் ராசாவை ரவுண்டு கட்டினர்.

அலைக்கற்றைக் கொள்ளையில் டாடா, அம்பானி போன்ற பெரிய மீன்களைத் தப்பவிட்டு ஷாகித் பல்வா போன்ற சின்ன மீன்களை மட்டும் சிக்கவைக்கும் விதத்திலும், மன்மோகன், சிதம்பரம் போன்ற மேன்மக்களை தப்பவிட்டு, ராசா, கனிமொழி போன்ற கீழ்மக்களை மட்டும் சிறை வைக்கும் விதத்திலும் அன்று ஸ்கிரிப்ட் தயாரிக்கப்பட்டது.

திமுகவை மட்டும் குற்றவாளியாக காட்டுவதன் மூலம், தன்னுடைய தலையைக் காப்பாற்றிக் கொள்வதற்கு காங்கிரசுக்கு இந்தத் திட்டம் பயன்பட்டது. அம்மாவை ஆட்சியில் அமர்த்துவது என்ற தங்களுடைய உடனடி நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு பாஜக, சு.சாமி, சோ உள்ளிட்ட பார்ப்பனக் கும்பலுக்கு இந்தத் திட்டம் பயன்பட்டது..

இன்றைய திட்டம் மோடியைப் பிரதமராக்குவது. இந்த திட்டத்தை நிறைவேற்ற மன்மோகன் சிங்கை குறி வைத்தாக வேண்டும். ஒரு வேளை பிரதமரைக் குற்றம் சாட்டி பரேக் பேசவில்லை என்றாலும், “மன்மோகன்தான் குற்றவாளி” என்று நிறுவும் விதத்தில் குருமூர்த்தியின் ஆய்வுக்கட்டுரை ஒன்று தினமணியில் வெளியாகி இருக்கும்.

“அவருக்குத் தெரியாமல் தவறு நடந்திருந்தாலும், பிரதமர் அதற்குப் பொறுப்பேற்றாக வேண்டும்” என்று தினமணி அய்யர் தலையங்கத்தில் சொல்லியிருக்கிறாரே, இந்த அப்ரோச் நமக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!

வன்சாரா
வன்சாரா

வன்சாரா, வன்சாரான்னு ஒரு குஜராத் டிஐஜி யும், 31 போலீசு அதிகாரிகளும் ஆறு வருசமா உள்ளே கிடக்கிறார்கள். பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி பல அப்பாவிகளை படுகொலை செய்தார்கள் என்பதுதான் அவர்கள் செய்த குற்றம்.

இந்தப் படுகொலைகளை முன் நின்று நடத்திய டிஐஜி வன்சாரா, ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் அவர் கூறியுள்ள கருத்துகள் அச்சு அசலாக அன்றைக்கு ஆ.ராசா சொன்னதைப் போலவும், இன்றைக்கு பரேக் சொல்லியருப்பதைப் போலவும் இருக்கின்றன.

வன்சாரா என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

“குஜராத் உளவுத்துறை போலீசும், சிபிஐ யும் என்னையும் பல போலீசு அதிகாரிகளையும் வெவ்வேறு மோதல் கொலை வழக்குகளில் கைது செய்திருக்கிறது. அவையெல்லாம் போலி மோதல் கொலைகள் என்றும் அவற்றுக்கு நாங்கள்தான் பொறுப்பு என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. அது உண்மையானால், எல்லா மோதல் கொலை வழக்குகளிலும், அத்தகைய கொலைகளை அரங்கேற்றும் கொள்கையை வகுத்துக் கொடுத்தவர்களையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்யவேண்டும். நாங்கள் களத்தில் செயல்படும் அதிகாரிகள். அரசாங்கத்தின் உணர்வுபூர்வமான கொள்கையை நாங்கள் அமல் படுத்தினோம். அவ்வளவுதான். எங்களுக்கு உற்சாகமூட்டி, வழிகாட்டி எங்களது செயல்பாடுகளை நெருக்கமாக மேற்பார்வையிட்டு இயக்கியது குஜராத் அரசுதான்.. ஆகவே இந்த அரசாங்கம் இருக்கவேண்டிய இடம் மும்பை மத்திய சிறை அல்லது அகமதாபாத் மத்திய சிறை என்பதுதான் என்னுடைய ஆணித்தரமான கருத்து”

பரேக் சொல்லியிருப்பதை விடவும், ஆ.ராசா சொல்வதை விடவும், வன்சாரா சொல்லியிருப்பது தெளிவாக இல்லையா? கொள்ளைக்குப் பொருந்தும் நீதி கொலைக்குப் பொருந்தாதோ?

மனுநீதி என்ன சொல்கிறது?

000

வன்சாரா - மோடி
வன்சாரா – மோடி

பின் குறிப்பு : லாலு பிரசாத் சிறை, ரஷீத் மசூத் சிறை, குமார் மங்கலம் பிர்லா மற்றும் பரேக் மீதான வழக்குகள், மன்மோகன் மீது பரேக் குற்றச்சாட்டு, பிர்லா மீது வழக்கு போட்டதற்காக அமைச்சர் ஆனந்த் சர்மா சிபிஐ பற்றி தெரிவித்திருக்கும் விமரிசனம் போன்ற விவகாரங்களைப் பார்த்து, மோடிக்கு லேசாக உதறல் எடுக்கத் தொடங்கியிருக்க வேண்டும்.

“மோடி கைது செய்யப்படலாம்” என்று அச்சம் தெரிவித்து ஏற்கெனவே அருண் ஜெட்லி பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதிவிட்டார். பீதியிலும் பதட்டத்திலும் எழுதப்பட்டிருக்கும் அந்தக் கடிதத்தின் அபத்தங்களை வழக்குரைஞர் முகுல் சின்கா அக்குவேறு ஆணிவேராக பிரித்து அம்பலப்படுத்தியிருக்கிறார். ஜெட்லி மோடிக்காக பிரதமரிடம் அரசியல் முன் ஜாமீன் போட்டிருக்கிறார் என்றும், முன் ஜாமீன் மனுவை அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதே நல்லது என்றும் ஜெட்லியைக் கேலி செய்திருக்கிறார் காங்கிரஸ் பொதுச்செயலர் ஷகில் அகமது.

மோடிக்கும் சிறைக்கும் இடையில் இருப்பது காங்கிரசின் கோழைத்தனம் மட்டும்தான்.