Monday, April 21, 2025

“கொலைக்கடவுளின்” லீலைகள் !

-

நான்கு போலி மோதல் கொலைவழக்குகளில் கைது செயப்பட்டு, பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் குஜராத் அரசின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் டி.ஜி. வன்சாரா, சபர்மதி சிறையிலிருந்து குஜராத் அரசிற்கு அனுப்பியிருக்கும் பதவி விலகல் கடிதம், “சுயநலமும் அதிகாரவெறியும் கொண்ட கீழ்த்தரமான கிரிமினல் பேர்வழிதான் மோடி” என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.  நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சராகப் பதவியேற்ற பின், குஜராத் போலீசு துறையில் தனிக்காட்டு ராஜாவாக கோலோச்சியவர்தான் இந்த டி.ஜி.வன்சாரா.  2002-க்கும் 2006-க்கும் இடைப்பட்ட காலத்தில் குஜராத் போலீசின் குற்றவியல் பிரிவின் துணை கமிசனராகவும், பின்பு கூடுதல் கமிசனராகவும்; தீவிரவாதத் தடுப்புப் படையின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரலாகவும் பதவி உயர்வுகள் பெற்று, மோடியின் அணுக்கத் தொண்டனாக இருந்து சேவை செய்தவர் இவர்.  மேலும், குஜராத்தில் நரேந்திர மோடி ஆட்சியில் நடந்த முசுலீம் படுகொலை, பல்வேறு ‘மோதல்’  படுகொலைகள், தீவிரவாத எதிர்ப்பு என்ற பெயரில் முசுலீம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட அரசு பயங்கரவாத நடவடிக்கைகள் ஆகியவை குறித்த அனைத்து மர்மங்களையும் அறிந்தவர்.  இப்படிப்பட்ட பின்னணி கொண்ட டி.ஜி.வன்சாரா, தனது பதவி விலகல் கடிதத்தை சுய வாக்குமூலம் போலவே அளித்துள்ளார்.

டி.ஜி. வன்சாரா
மோடியின் உத்திரவுப்படி போலி மோதல் படுகொலைகளை நடத்திய காக்கிச்சட்டை கிரிமினல் டி.ஜி. வன்சாரா

‘‘குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு தொடங்கி 2006-ஆம் ஆண்டு வரையிலும் நடந்துள்ள ‘மோதல்’படுகொலைகள் அனைத்தும் மோடி அரசிற்குத் தெரிந்துதான் நடந்தன; மோடி அரசின் ஊக்குவிப்பு மற்றும் வழிகாட்டுதல்களோடுதான் நடந்தன” என்று வன்சாரா தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாலும், அவரது இக்கடிதம் குற்றத்தை உணர்ந்து மனச்சாட்சியின் உறுத்தலால் எழுதப்பட்டுள்ள பாவ மன்னிப்புக் கோரும் கடிதம் கிடையாது.  சோராபுதீன் மற்றும் பிரஜாபதி போலி மோதல் கொலை வழக்குகளில் தன்னைப் போலவே குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட குஜராத் அரசின் முன்னாள் துணை உள்துறை அமைச்சர் அமித் ஷா, மோடியின் தயவால் மூன்றே மாதத்தில் பிணையில் வந்துவிட்டபொழுது, தான் மட்டும் ஏழு வருடங்களாகக் கம்பி எண்ணிக் கொண்டிருப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாமலும்; டெல்லியைக் குறிவைத்து விரைந்து கொண்டிருக்கும் மோடி தனது அரசியல் இலாபத்துக்காகத் தன்னை முற்றிலுமாகவே பலியிட்டு விடுவாரோ என்ற அச்சத்தாலும் எழுதப்பட்டுள்ள கடிதம்தான் இது.

‘‘தான் கடவுள் போல நம்பியிருந்த நரேந்திர மோடி தன்னைக் கைவிட்டுவிட்டதாக”க் கடிதம் முழுவதும் புலம்பித் தள்ளியிருக்கிறார், வன்சாரா.  அதிகாரத்தைக் கைப்பற்றவும், தக்கவைத்துக் கொள்ளவும் எத்தகைய கிரிமினல்தனத்திலும் இறங்கத் தயங்காத ஒரு பாசிஸ்டிடமிருந்து, இதைத் தவிர வேறெந்த யோக்கியதையை எதிர்பார்க்க முடியும்? காரியம் முடிந்தவுடன் யாராக இருந்தாலும் தூக்கிக் கடாசிவிடுவதை மோடி ஒரு கலையாகவே செயல்படுத்தி வருகிறார்.  இதற்கு இன்னொரு உதராணம் மாயாபென் கோத்நானி.

குஜராத்தின் நரோடா பாட்டியா பகுதியில் முசுலீம்களைக் கதறக்கதற படுகொலை செய்த மாயாபென் கோத்நானிக்குத் தனது அரசில் அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்த மோடி, அப்படுகொலை வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட பிறகு, அத்தண்டனையைத் தூக்கு தண்டனையாக அதிகரிக்க வேண்டும் என யோக்கியவானைப் போலக் கோருவதற்குக் கொஞ்சம் கூடத் தயங்கவில்லை.  அவரது அரசு தற்பொழுது இக்கோரிக்கையைக் கைவிட்டு விட்டாலும், மாயாபென் கோத்நானியோடு சேர்த்துத் தண்டிக்கப்பட்ட பாபு பஜ்ரங்கிக்குத் தூக்கு தண்டனை வழங்கக் கோரியிருக்கிறது.  இதன் மூலம் இரண்டு விதங்களிலும் அரசியல் ஆதாயமடைய முயலுகிறார், மோடி.

அமித் ஷா.
போலி மோதல் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, பிணையில் வெளியே வந்துள்ள மோடியின் கிரிமினல் கூட்டாளி அமித் ஷா.

வன்சாராவும் கூட மோடியைப் போலவே கயமைத்தனம் கொண்ட காரியவாதிதான்.  மோடி தன்னைக் காப்பாற்றவில்லை என ஒருபுறம் புலம்பி விட்டு, இன்னொருபுறம் தனது தலைமையில் நடத்தப்பட்ட போலி மோதல் கொலைகளைத் தேசபக்தி நிறைந்த நடவடிக்கைகளாகச் சித்தரித்திருக்கிறார், அவர்.  இப்படுகொலைகளை நடத்தியதன் மூலம் குஜராத் இன்னொரு காஷ்மீராக மாறுவதை தாங்கள் தடுத்திருப்பதாகக் கதையளந்து, தாங்கள் ஏதோ அரசியல் சூழ்ச்சியில் பலிகடா ஆக்கப்பட்டு விட்டதைப் போலக் காட்டி, அனுதாபத்தைப் பெற முயல்கிறார், அவர்.

குஜராத் முசுலீம்களுக்கு எதிராக மிகக்கொடிய படுகொலையை நடத்திய கையோடு, அவர்கள் மீது பல்வேறு விதமான அரசு பயங்கரவாத ஒடுக்குமுறைகளையும் ஏவி விட்டது, மோடி-வன்சாரா கும்பல்.  முசுலீம்களின் குடியிருப்புகளும் வழிபாட்டுத் தலங்களும் போலீசின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டன.  மோடி அரசில் வருவாய்த்துறை இணை அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டியா மர்மமான முறையில் கொலைசெயப்பட்டுக் கிடந்ததைக் காட்டி, பாகிஸ்தானால் பயிற்சி அளிக்கப்பட்ட தீவிரவாதிகள் குஜராத்திற்குள் ஊடுருவி விட்டதாகப் பிரச்சாரம் நடத்தப்பட்டது.  இப்படுகொலையைச் செய்ததாக 12 முசுலீம்களைக் கைது செய்ததோடு, அவர்களைத் தீவிரவாதிகள் என்றும் குற்றஞ்சுமத்தியது, மோடி அரசு.  இம்முசுலீம்கள் கீழமை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டாலும், குஜராத் உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

ஹரேன் பாண்டியா கொலை செய்யப்பட்ட பின்னணியையும், அப்படுகொலையைத் தொடர்ந்து குஜராத்தில் நடந்த பல்வேறு போலி மோதல் கொலைகளையும் இணைத்துப் பார்த்தால்தான் மோடி-வன்சாரா கும்பலின் சதித்தனங்களைப் புரிந்துகொள்ள முடியும்.  முன்னாள் நீதிபதிகள் ஹாஸ்பேட் சுரேஷ், வீ.கிருஷ்ணயர் ஆகியோரைக் கொண்டு தன்னார்வத் தொண்டு அமைப்புகள் அமைத்த  குடிமக்கள் விசாரணை மன்றம் குஜராத் முசுலீம் படுகொலைகள் பற்றி நடத்திய விசாரணையில் ஹரேன் பாண்டியா தானாகவே முன்வந்து சாட்சியமளித்தார்.  அப்படுகொலை தொடங்குவதற்கு முன்பாக உயர் போலீசு அதிகாரிகளை அழைத்து அதிகாரபூர்வமற்ற முறையில் நரேந்திர மோடி நடத்திய கூட்டம் பற்றித்தான் இவ்விசாரணையில் பாண்டியா சாட்சியம் அளித்ததாகக் கூறப்படுகிறது.  இதற்குப் பின்னர்தான் அவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்படுகிறார்.  சாட்சியத்தைக் குற்றவாளிகள்தான் அழிப்பார்கள் என்ற தர்க்கத்தின் அடிப்படையில் பார்த்தால், சந்தேகத்தின் நிழல் மோடி கும்பல் மேல் விழுவதை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.

ஹரேன் பாண்டியா
குஜராத் முசுலீம் படுகொலை குறித்து சாட்சியம் அளித்ததற்காக படுகொலை செய்யப்பட்ட குஜராத் அரசின் முன்னாள் வருவாய்த்துறை இணையமைச்சர் ஹரேன் பாண்டியா.

இத்தர்க்கத்தை ஒதுக்கிவைத்து விட்டால் கூட, ஹரேன் பாண்டியா படுகொலைக்கும் மோடி கும்பலுக்கும் தொடர்புண்டு என்பதை நிரூபிப்பதற்கு வேறு பல  சாட்சியங்களும் உள்ளன.  குறிப்பாக, ஹரேன் பாண்டியாவின் தந்தை, இதனை ஒரு அரசியல் படுகொலை என்றுதான் கூறி வருகிறார்.  இப்படுகொலையோடு தொடர்புடைய முஃப்தி சுபிஃயான் பதான்கியா என்பவரை வன்சாரா தப்பவிட்டு விட்டதாகக் குற்றஞ்சுமத்தியிருக்கிறார், ஹரேன் பாண்டியாவின் மனைவி.  முஃப்தி சுஃபியான் உயிரோடு இருக்கிறானா, இல்லையா என்பதே பெரும் மர்மமாக உள்ளது.

இதுவொருபுறமிருக்க, பாண்டியாவின் கொலைக்கும் உள்ளூர் தாதாவான சோராபுதீனுக்கும் தொடர்பிருப்பதாகச் செய்திகள் வெளிவந்த பிறகுதான், சோராபுதீன், அவனது மனைவி கவுசர் பீ, அவனது அடியாள் பிரஜாபதி ஆகியோர் குஜராத் போலீசாரால் கடத்தி வரப்பட்டு, சோராபுதீன் போலி மோதலில் சுட்டுக் கொல்லப்படுகிறான்.  இப்படுகொலைக்கு நேரடி சாட்சியமாக இருந்த சோராபுதீனின் மனைவி கவுசர் பீ, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, அதன் பின் வலுக்கட்டாயமாக மயக்க மருந்து கொடுக்கப்பட்டுக் கொல்லப்படுகிறார்.  அவரது சடலம் வன்சாராவின் சொந்த கிராமத்தில் இரகசியமான முறையில் எரியூட்டப்பட்டது.  மற்றொரு சாட்சியமான பிரஜாபதியும் குஜராத்-ராஜஸ்தான் எல்லையில் வன்சாராவால் போலி மோதலில் கொல்லப்பட்டான்.

இவர்கள் தவிர, குஜராத்தைச் சேர்ந்த சாதிக் ஜமால் என்ற இளைஞரும்; மும்பையைச் சேர்ந்த கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் உள்ளிட்டு நால்வரும் போலி மோதலில் படுகொலை செய்யப்பட்டு, அவர்கள் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டனர்.  இப்படுகொலை வழக்குகளின் கீழ்தான் வன்சாரா கைது செயப்பட்டுள்ளார்.  இவ்வழக்குகள் குறித்து நடைபெற்றுள்ள பூர்வாங்க விசாரணையில், கவுசர் பீ தவிர பிறர் போலி மோதல் கொலைகள் மூலம் கொல்லப்பட்டிருப்பது நிரூபணமாகியிருக்கிறது.

இஷ்ரத் ஜஹான்
மோடி-வன்சாரா கும்பலால் கடத்தி வரப்பட்டு, போலி மோதலில் படுகொலை செய்யப்பட்ட மும்பையை சேர்ந்த கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான்.

முசுலீம் தீவிரவாதிகளால் மோடியின் உயிருக்கு நிரந்தர அபாயம் இருப்பது போலவும், ஆனாலும் மோடி அது குறித்து அச்சப்படாமல் தீவிரவாதிகளை வேட்டையாடி வருவதாகவும் காட்டி, மோடியின் பிம்பத்தை ஊதிப் பெருக்கவும்; குஜராத் முசுலீம்களை நிரந்தரமாகவே இரண்டாம் தர குடிமக்களாக இருத்தி வைக்கும் நோக்கத்தோடும்தான் இந்த ‘மோதல்’ கொலைகள் நடத்தப்பட்டன.  இந்த உண்மைகள் ஒன்றன்பின் ஒன்றாக அம்பலமான பிறகும், வன்சாரா கொஞ்சம்கூட அசராமல், “பாகிஸ்தானுடன் நீண்ட எல்லையைக் கொண்டிருக்கும் குஜராத், காஷ்மீரைப் போல மாறிவிடாமல் தடுப்பதற்காக, பயங்கரவாதத்துக்கு எதிரான சகிப்புத்தன்மை அற்ற கொள்கை அரசால் வகுக்கப்பட்டது.  அக்கொள்கையின்படிதான் இக்கொலைகள் நடந்தன” எனத் தனது கடிதத்தில் பச்சையாகப் புளுகித் தன்னை நியாயப்படுத்திக் கொள்ள முயலுகிறார்.

குஜராத்தில் 2002-க்கும் 2006-க்கும் இடைப்பட்ட காலத்தில் 20-க்கும் மேற்பட்ட போலி மோதல் படுகொலைகள் மோடி-அமித் ஷா-வன்சாரா கூட்டணியால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளன.  இவற்றுள் சோராபுதீன், பிரஜாபதி, சாதிக் ஜமால், இஷ்ரத் ஜஹான் போலி மோதல் கொலை வழக்குகளின் கீழ் ஆறு ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்ளிட்டு, 32 போலீசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மேலும் 16 போலி மோதல் கொலை வழக்குகள் குறித்து உச்சநீதி மன்றத்தின் கண்காணிப்பின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாவுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.  மோடி ஒரு கைதேர்ந்த கிரிமினல் என்றால், அக்கிரிமினலுக்கு ஏற்ற ஜோடியாக குஜராத் போலீசு செயல்பட்டுள்ளது என்பதைத்தான் இந்த விவரங்கள் நிரூபிக்கின்றன.

சோராபுதீன்
மோடி-அமித் ஷா-வன்சாரா கும்பலின் ரகசியங்களை அறிந்தவன் என்பற்காகவே போலி மோதலில் கொல்லப்பட்ட உள்ளூர் தாதா சோராபுதீன் (நடுவில்), அப்படுகொலையின் நேரடி சாட்சியம் என்பதற்காகவே கொல்லப்பட்ட சோராபுதீனின் மனைவி கவுசர் பீ (இடது). சோராபுதீன் கொலையின் நேரடி சாட்சியம் என்பதற்காகவே கொல்லப்பட்ட அவனது கையாள் துளசிராம் பிரஜாபதி (வலது).

‘‘மோதல் கொலைகளை நடத்திய போலீசார் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது நியாயமென்றால், இக்கொலைகளை ஊக்குவித்த இந்த அரசாங்கம் இருக்க வேண்டிய இடம் காந்தி நகர் அல்ல; அகமதாபாத்திலுள்ள சபர்மதி சிறைச்சாலை அல்லது நவி மும்பயிலுள்ள தலோஜா சிறைச்சாலைதான் இந்த அரசாங்கத்தின் இடமாகும்” எனத் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார், வன்சாரா.  கிரிமினல் கும்பலுக்குள் சந்தேகமும் நம்பிக்கையின்மையும் வந்துவிட்டால், ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுப்பதில் இறங்குவதில்லையா, அதனை ஒத்தது வன்சாராவின் இந்தச் ‘சாபம்’!

வன்சாராவின் இக்கடிதத்தைச் சட்டப்படியான ஒப்புதல் வாக்குமூலமாக எடுத்துக்கொண்டு மோடியை விசாரணைக்கு அழைக்க முடியும்.  குஜராத்தைச் சேர்ந்த முன்னாள் டி.ஜி.பி.யான ஆர்.பி. சிறீகுமார் இக்கோரிக்கையை பத்திரிகைகள் மூலமாக எழுப்பியிருப்பதோடு, இது குறித்து சி.பி.ஐ. இயக்குநருக்கும் கடிதம் எழுதியிருக்கிறார்.  சி.பி.ஐ., இது குறித்து வன்சாராவிடம் விசாரணை நடத்தியதற்கு அப்பால் நகரவில்லை. இப்போலி மோதல் கொலைகள் பற்றிய விசாரணைகளைக் கண்காணித்து வரும் உச்ச நீதிமன்றமும் குஜராத் உயர் நீதிமன்றமும் இக்கடிதம் குறித்து வாய் திறக்க மறுக்கின்றன.  முதலாளித்துவப் பத்திரிகைகளோ இக்கடிதத்தை ஒரு பரபரப்புச் செய்தியாக வெளியிட்டதோடு, இப்பிரச்சினையை அமுக்கி விட்டன.  இவர்களின் இந்தக் கள்ள மௌனமும் பாராமுகமும் மோடியின் குற்றங்களுக்கு எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல!

செல்வம்
_________________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2013

_________________________________________