Wednesday, April 16, 2025
முகப்புஉலகம்ஈழம்எதிர்கொள்வோம் ! - 5

எதிர்கொள்வோம் ! – 5

-

எதிர்கொள்வோம்  ! – 5

“ஈழமும் தேசிய இனப் பிரச்சினையும்” என்ற பெயரில்  சமரன்  வெளியீட்டகம் ஒரு நூல் பதிப்பித்திருக்கிறது. அதில் ஈழம், விடுதலைப் புலிகள் தொடர்பான ம.க.இ.க.வினர் நிலைப்பாடுகள் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆதாரபூர்வமான அந்நூலுக்கு ஏன் இன்னமும் பதிலளிக்கவில்லை? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

ரஜனி திரணகம
விடுதலைப்புலிகளின் பாசிச அரசியலை விமரிசித்து வந்ததற்காக புலி தலைமையால் கொல்லப்பட்ட ரஜனி திரணகம (கோப்புப் படம்).

அந்நூல் இலங்கை மற்றும் ஈழத்தைப் பற்றிய உண்மை விவரங்களைக் கொண்டதே அல்ல என்பதற்குப் பல சான்றுகளைக் கடந்த இரு இதழ்களில் எழுதியிருந்தோம். அந்நூல் மீதான எமது விமர்சனங்கள் மேலும் வரும்; அதில் ஈழம், விடுதலைப் புலிகள் தொடர்பான ம.க.இ.க.வினர் நிலைப்பாடுகள் மீதான விமர்சனங்களுக்கான பதில்களும் இடம்பெறும் என்பதால்தான் ‘தொடரும்’ என்று குறிப்பிட்டிருந்தோம்.

ஆனால், சமரன் குழு தலைவரின் துதிபாடி ஒருவர், எமது பதில்களுக்குக் காத்திருக்காமல், “சமரன் வெளியீட்டில் உள்ள தத்துவார்த்த ரீதியான கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல், ஆண்டு, பெயர் தவறாக உள்ளது என்று சொல்கிறது பு.ஜ. அதைச் சரிசெய்து விட்டால் தனிஈழம் சரி என்று ஏற்றுக் கொள்வீர்களா? புலிகள் பாசிஸ்டுகள் அல்ல! போராளிகள் என்பதை ஏற்றுக் கொள்வீர்களா?” என்றும் ஆமாம், நீங்க எல்லாம் சரியாய் பு.ஜ.வில் போடறீங்க! சமரன் பற்றிக் கட்டுரை வந்துள்ள பு.ஜ.வில் பா.ம.க.வின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செந்தில் என்பதற்குப் பதில் சட்டமன்ற உறுப்பினர் என்று உள்ளது. இதைக்கூட ஒழுங்கா தெரியாத நீங்க பா.ம.க. பற்றிப் பேசலாமா என்று நாங்கள் கேட்கவில்லை” என்றும் “வினவு” இணையதளத்தின் பின்னூட்டத்தின் வழி கேட்கிறார்.

ஐயா, சமரன் குழுவினரே! கேட்கவேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை,கேளுங்கள். தவறைச் சுட்டிய தற்கு நன்றி! திருத்திக் கொள்கிறோம். ஆனால், ஒரு தவறு, மற்றொரு தவறை ரத்து செய்து விடுவதில்லை; இரண்டுமே தவறுகள்தாம். கூடவே, ஒன்றைச் சொல்லவும் விரும்புகிறோம். விவரத் தவறுக்கும், வரலாற்றுத் தவறுக்கும் வேறுபாடு உண்டு. ஈழத்தில் இறுதிக் கட்டப் போரும் இனப்படுகொலையும் எப்போது நடந்தன; ஈழப்போராளிக் குழுக்கள் எல்லாமும் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து வந்தவைதாம்; இலங்கையின் தமிழ் பேசும் மக்கள் ஒரு இனம், இலங்கை இசுலாமிய மக்கள் அனைவரும் தமிழ் பேசுபவர்கள்; 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு 35 விழுக்காடு ஈழத் தமிழர்கள்    மட்டுமே ஆதரவளித்தபோதும்,  அதற்கு 100 விழுக்காடு ஆதரவளித்தாகக் கூறுவது – இவை போன்றவை வெறுமனே ஆண்டு, பெயர் குறித்த விவரத் தவறுகள் அல்ல. பொய்கள், வரலாற்றுத் திரிபுகள்.

இந்தச் சமரன் குழு மட்டுமல்ல, புலி விசுவாச இனவாதிகள் அனைவரின் நோக்கம், எதிர்பார்ப்பு,  கோரிக்கை எல்லாம் இவைதாம்: தனிஈழம் சரி, புலிகள் பாசிஸ்டுகளல்ல; போராளிகள் என்று நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்! ஆனால், இந்த இரண்டு விடயத்திலும் சமரன் குழு வெளியிட்டுள்ள நூல் சொல்வதென்ன? சுயமுரண்பாடு- முன்னுக்குப் பின் முரண்பாடுதான்! அந்நூலை முழுமையாகவும் ஊன்றியும் தர்க்க ரீதியாகவும் படிக்கும் யாரும் இந்த உண்மையை மறுக்க முடியாது.

சமரன் குழு வெளியிட்டுள்ள நூலில் “ராஜீவ் – ஜெயவர்த்தனே துரோக ஒப்பந்தத்தை முறியடிப்போம்” என்ற தனது 1987 ஜூலை கட்டுரையைச் சேர்த்திருக்கிறது. அதில் பின்வருமாறு எழுதியுள்ளது:

‘‘மத்திய, மாநில அரசுகளைப் பெரிதும் நம்பி அவற்றின் உதவியோ ஈழத் தமிழர்களின் உரிமைகளைப் பெற முடியும் என்று இறுதிவரை எண்ணிப் பல ஈழத் தமிழ்ப் போராளிகள் மனம் நொந்து விடுதலை இயக்கங்களை விட்டு வெளியேறினர்.

மாத்தையா
புலித் தலைமையால் ரகசியமான முறையில் படுகொலை செய்யப்பட்ட அவ்வியக்கத்தின் தளபதிகளுள் ஒருவரான மாத்தையா (கோப்புப்படம்).

‘‘இந்திய அரசின் உளவு ஸ்தாபனமான “ரா” திட்டமிட்டு இரண்டு கூட்டணிகளை உருவாக்கியது. அவற்றில் ஒன்று முகுந்தனின் “பிளாட்”, செல்வத்தின் “டெலோ”, பத்மநாபாவின் “ஈ.பி.ஆர்.எல்.எப்.” ஆகியவை அடங்கிய கூட்டணி. மற்றொன்று ராஜனின் “பிளாட்”, டக்ளஸ் தேவாவின் “ஈ.பி.ஆர்.எல்.எப்.” அடங்கிய கூட்டணி. பிரபாகரனின் “எல்.டி.டி.இ.” என்ற அமைப்பும் பாலகுமாரனின் “ஈரோஸ்” என்ற அமைப்பும், தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அரசைச் சார்ந்திருந்தன. இவ்வாறு தமிழக விடுதலைப் போராட்ட அமைப்புகள் மத்திய, மாநில அரசின் செல்வாக்கிற்குள் கொண்டுவரப்பட்டன. இந்திய அரசின் உளவு ஸ்தாபனமான “ரா” முன் கூறப்பட்ட இரண்டு கூட்டணிகளை பிரபாகரனின் “எல்.டி.டி.இ.” என்ற அமைப்புக்கு எதிராகச் செயல்பட வைத்தது. பிரபாகரனின் “எல்.டி.டி.இ.’’ ஜெயவர்த்தனே அரசின்  பாசிச இன ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடக் கூடிய அனைத்துத் தேசிய விடுதலைச் சக்திகளுடன் ஐக்கியப்பட மறுத்தது. பிற அமைப்புகளைத் தடைசெய்தது. இதன் விளைவாக ஈழத் தமிழ்நாட்டில் பிரபாகரனின் “எல்.டி.டி.இ.” நீங்கலாக வேறு எந்த அமைப்பும் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது.”

இவ்வாறு  அந்நூலில் (பக்.122,123) எழுதிய  சமரன் குழு, தொடர்ந்து அப்போது நிலவிய தேசிய, சர்வதேசிய நிலைமைகள் குறித்து அலசல்களை எழுதிவிட்டுப் பின்வருமாறு எழுதியுள்ளது:

‘‘ஈழப் போராளி அமைப்புகள் தேசிய இனவிடுதலை அம்சத்தை மட்டுமே கருத்தில் கொண்டன, ஜனநாயகத்திற்கான (ஜனநாயக உரிமைகளை) போராட்டத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வில்லை. விடுதலை பெற்ற நாட்டில் கட்டவேண்டிய மாற்று ஜனநாயக அரசமைப்பு பற்றிய கண்ணோட்டமில்லை. எல்.டி.டி.இ-யைப் பொருத்த வரை  தனது  செல்வாக்கிற்குட்பட்ட பகுதிகளில் நிலவிக் கொண்டிருந்த அதே அரசுக் கட்டமைப்பைக்  கொண்டும் அதே ஆளும் வர்க்கத்தைச் சார்ந்தும் தனது படைபலத்தைக் கொண்டும் தங்கள் அதிகாரத்தைச் செலுத்தினார்கள்.”

‘‘ஈழத் தமிழ்நாட்டு  மக்களைப் பல்வேறு அமைப்புகளில் திரட்டியும் அமைப்பு ரீதியாகத் திரட்டப்பட்ட மக்களின் வலிமையைச் சார்ந்து நிற்பதற்கும் மாறாக, வெறும் இராணுவ பலத்தை மட்டுமே (ஆயுதக் குழுக்களின் பலத்தை மட்டுமே) சார்ந்து நின்றனர். விடுதலைப் போருக்கு மக்களை அரசியல்ரீதியில் திரட்டுதல், அமைப்பாக்குதல், ஆயுதம் தரிக்கச் செய்தல் ஆகிய பணிகள் புறக்கணிக்கப்பட்டன.”

‘‘ஈழப் போராளி அமைப்புகள், ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டின் அடிப்படையில் தமது அமைப்புகளைக் கட்டியமைக்க வேண்டும் என்பதைப் புறக்கணித்ததுடன், தமது அமைப்புக்கும் மக்களுக்கும் இடையிலும், தமது அமைப்பிற்கும் பிற விடுதலை இயக்க அமைப்புகளுக்கும் இடையிலும் மேற்கொள்ள வேண்டிய உறவை ஜனநாயக அடிப்படையில் அமைத்துக்கொள்ளவில்லை.”

‘‘பல்வேறு போராளி அமைப்புகளுக்கிடையில் தோன்றிய கருத்துவேற்றுமைகளை, அரசியல் தத்துவப் போராட்டங்கள் மூலம் தீர்க்கவேண்டியவற்றை, இராணுவ நடவடிக்கைகள் மூலம் தீர்வு கண்டனர்.” (பக்.130,131)

மேலும், அந்நூலில் 1990 ஜனவரி தேதியிட்ட சமரன் குழுவின் ஒரு கட்டுரையின் ஒரு பகுதியில்  பின்வருமாறு கூறுகின்றனர்:

‘‘ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் அனைத்து அமைப்புகளையும் ஒன்றுபடுத்துவதற்கும்,  அனைத்து மக்களையும் ஒன்றுபடுத்துவதற்கும் தமிழீழ விடுதலைக்காகப் போராடும் அமைப்புகளின் ஜனநாயகமற்ற அணுகுமுறை தடையாக இருந்து வருகிறது. சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் விடுதலை என்ற அம்சத்தை மட்டுமே கணக்கில் கொண்டு ‘ஜனநாயகம்’ அம்சம் புறக்கணிக்கப்படுமானால், எவராலும் தங்களின் இலட்சியத்தை அடைய முடியாது. சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் இதுவரை விடுதலைப் புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் விடுதலை இயக்கத்தின் வெற்றிக்குப் பெரும்பங்கு ஆற்றியுள்ளது. ஈழத்  தமிழினத்திற்குத் துரோகம் செய்யும் இந்திய அடிவருடிகளை எதிர்த்த அவர்களது இராணுவ நடவடிக்கைகளும் ஏற்கத்தக்கதே! எனினும், சுயநிர்ணய உரிமைக்காகப்  போராடும் பிற அமைப்புகளை எதிர்த்த அவர்களின் ஜனநாயக விரோதப் போக்கும் இராணுவ நடவடிக்கைகளும் தங்களின் இலட்சியத்தை அடைவதற்குத் தடையாகவே இருக்கிறது என்பதை அவர்கள் உணர வேண்டும். ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமையை அவர்களின் தாகமான தமிழீழத்தை அடைவது அவர்களின் விட்டுக் கொடுக்க முடியாத இலட்சியமாக இருக்க வேண்டுமானால், ஒரு ஜனநாயகக் குடியரசை அமைப்பதற்கான ஒரு திட்டத்தை முன்வைத்து, சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் அமைப்புகளையும் ஒன்றுபடுத்த முன்வர வேண்டும். இல்லாவிட்டால், இந்த இராணுவ வெற்றிகள் மட்டுமே அவர்களை இலட்சியத்தை அடைவதற்கு உத்திரவாதம் அளிக்காது எனச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். சுயநிர்ணய உரிமை என்ற முழக்கத்தின் பின்னால், அனைத்துப் போராளிகளும் ஒன்றுபடுமாறு அறைகூவி அழைக்கிறோம்.” (பக். 150,151)

இவ்வாறு “அனைத்து” ஈழப்போராளிகளின் ஒற்றுமைக்கு அறைகூவிய சமரன் குழு ஒரு உண்மையை மறைக்கிறது! அக்காலத்திற்குள்ளும் அதன் பிறகும் “புலிகள் தவிர அனைத்து ஈழப் போராளிக் குழுக்களும்” புலிகளால் ஒன்று அழிக்கப்பட்டு விட்டன, அல்லது தடை செய்யப்பட்டு விட்டன, அல்லது துரோகிகளாகி விட்டன!

பின்னர் 1990 ஆகஸ்டில், சமரன் குழு எழுதிய ஒரு கட்டுரையின் ஒரு பகுதியில் பின்வருமாறு கூறுகிறது:

‘‘ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்காக விடாப்பிடியாகப் போரிட்டாலும் விடுதலைப் புலிகள் அமைப்பு ஜனநாயக மறுப்பு மற்றும் எதேச்சதிகார முறைகளையே கடைப்பிடித்தது. இந்திய மேலாதிக்கத்தை எதிர்த்து, ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்போருக்கும் மற்றும் பிற ஜனநாயகச் சக்திகளுக்கும் கூட அவர்கள் ஜனநாயக உரிமைகளை மறுத்தார்கள்.

கொல்லப்பட்ட முஸ்லீம்கள்
1991-ஆம் ஆண்டு இலங்கையின் மேற்கு மாகாணத்தில் கொழும்புவிற்கு அருகில் அமைந்துள்ள பள்ளியகோடெல்லா பகுதியைச் சேர்ந்த முசுலீம்கள் மீது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள். இத்தாக்குதலில் 170 பேர் வரை கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது (கோப்புப் படம்).

இத்தகைய புரட்சிகரமான ஜனநாயக சக்திகளின் மீது அடக்குமுறையைத் தொடுத்தார்கள் . ஒரு படையின் சர்வாதிகாரம் (புலிப்படையின் சர்வாதிகாரம்) என்ற  பாசிசக் கொள்கையைச் செயல்படுத்தினார்கள். தங்கள் செல்வாக்கிற்குட்பட்ட பிரதேசங்களில் மக்களிடம் அதிகாரத்தை ஒப்படைக்கவில்லை. மக்கள் கமிட்டிகளுக்கு அதிகாரம் என்ற ஜனநாயக ஆட்சிக்கு மாறாகப் பழைய ஆளும் வர்க்கச் சக்திகளைச் சார்ந்தும் தனது படைபலத்தைக் கொண்டும் இலங்கை பாசிச ஆட்சிக்கு மாறாக, ஒரு இராணுவ அதிகார வர்க்க  ஆட்சிமுறையைச் செயல்படுத்தினர். நிலச் சீர்திருத்தம் மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்நிலைமைகளை அபிவிருத்தி செய்தல் ஆகியவை பற்றி அவர்கள் கவலைப்படவே இல்லை.

கூறப்பட்ட அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால், விடுதலைப் புலிகளின் அமைப்பு தேசிய இன ஒடுக்குமுறையை எதிர்த்து விடாப்பிடியாகப் போரிட்டது. அதே நேரத்தில் அது ஜனநாயக மறுப்பு மற்றும் எதேச்சதிகார முறைகளைக் கடைபிடித்தது என்பதைக் காணலாம். விடுதலைப் புலிகள் அமைப்பு ஜனநாயக மறுப்பு மற்றும் எதேச்சதிகார முறைகளையே கடைபிடிப்பதன் காரணமாகவே அதை இந்திய மேலாதிக்கவாதிகளுடனோ அல்லது பாசிச ஒடுக்குமுறையாளனான பிரேமதாசா அரசுடனோ பாட்டாளி வர்க்க இயக்கம் சமப்படுத்திப் பார்க்கலாமா? கூடாது.”  (பக்.167,168)  என்கிறது, சமரன் குழு.

ஏன் கூடாது? சமரன் குழு எழுதியுள்ள முந்தைய பத்தியிலேயே புலிகளைப் பற்றி அது என்ன கூறுகிறது? ஈழ விடுதலைக்கான நட்புச் சக்திகளுக்குக் கூட புலிகள் ஜனநாயக உரிமைகளை மறுக்கிறார்கள்.  அவர்கள் மீது அடக்குமுறைகளைத் தொடுக்கிறார்கள். புலிப்படையின் சர்வாதிகாரம் என்ற பாசிசக் கொள்கையைச் செயல்படுத்தினார்கள். ஜனநாயக ஆட்சிமுறைக்கு மாறாக பழைய ஆளும் வர்க்கச் சக்திகளைச் சார்ந்தும் தனது படைபலத்தைக் கொண்டும் இலங்கை பாசிச ஆட்சிக்கு மாறாக ஒரு இராணுவ அதிகார வர்க்க  ஆட்சிமுறையைச் செயல்படுத்தினர். புலிகளைப் பற்றி இவ்வாறு சமரன் கூறுவதற்கும் ம.க.இ.க. கூறி வருவதற்கும் என்ன வேறுபாடு என்பதை சமரன் குழுவின் தோழர்கள்தாம் விளக்க வேண்டும்!

இவற்றையெல்லாம் மறைத்து விட்டு, “ஜனநாயக மறுப்பு மற்றும் எதேச்சதிகார முறைகள்” என்று எவ்வளவு மென்மையாகச் சொல்லுகிறார்கள்!  ஆனால், புலிகளோ தொழிலாளர், ஜனநாயக மற்றும் மாற்று  அமைப்புகளைத்  தடை செய்தார்கள்; தங்களுக்குக் கீழ்ப்படியாதவர்களைக் கடத்திச் சித்திரவதை செய்து – கழுத்திலே ‘டயரை’ப் போட்டு நடுத்தெருவில் உயிரோடு கொளுத்தினார்கள்; இட்லரின் நாஜி படையைப் போல குரூரமாகக் கொன்றார்கள். சந்தேகத்துக்குரியவர்கள், துரோகிகள் என்று கூறி சக போராளிகளையே படுகொலை செய்தார்கள். ஜனநாயகப் போராளி ரஜினி திரணகம போன்றவர்கள் என்ன துரோகம் செய்தார்கள்? புலிகளின் பாசிசப் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் என்பதற்காக எதிர்த்தார்கள்!

ஈழத்தில் வாழும் இசுலாமியரை வெளியேறுமாறு கெடுவைத்து, மசூதிக்குள் புகுந்து புலிகள் பயங்கரவாதப் படுகொலைகள் புரிந்தார்கள். இத்தகைய பாசிச அட்டூழியங்களை சிங்கள அரசு இலங்கை முழுவதும் செய்தது என்றால், புலிகள் தங்கள் கைகள் நீளும் இடங்களில் எல்லாம் – வெளிநாடுகளில் கூடச் செய்தார்கள். இப்படிப்பட்ட புலிகளின் ஆதிக்கத்தின் கீழ் ஈழம் அமைந்திருந்தால் ஈழத் தமிழர்களின் கதி என்னவாகியிருக்கும்! நல்வினைப் பயனாக ஈழத் தமிழர்கள் தப்பித்தார்கள்!

இருப்பினும், புலிகளை பாசிச ஒடுக்குமுறையாளனான இலங்கை பாசிச அரசுடன் பாட்டாளி வர்க்க இயக்கம் சமப்படுத்திப் பார்க்கக் கூடாது என்பதற்கு சமரன் குழு சொல்லும் நியாயவாதம் என்ன?

1) ‘புலிகளின் ஜனநாயக மறுப்பு மற்றும் எதேச்சதிகார முறைகள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தினாலும், வளர்ச்சியைப் பாரதூரமாகத் தடைப்படுத்தினாலும், வெற்றிகளின் அளவைக் குறைத்தாலும், இழப்பை ஏற்படுத்தினாலும், உலக நிலைமைகள் காரணமாக பெரும் படைபலம் படைத்த பெரும் நாடும் மக்கள் யுத்தத்தை நசுக்க முடியாது என அனுபவங்கள் காட்டுகின்றன. விடுதலைப் போராட்டம் மெதுவானதாக இருந்தாலும் முன்னேற்றமடைவது சாத்தியம்.’ (பக்.168)

2) ‘விடுதலைப் புலிகள் ஒரு புரட்சிகர யுத்தத்தின் நடுவில் உள்ளனர். புரட்சி யுத்தம் என்பது நஞ்சைப் போக்கும் எதிர் நஞ்சு. அது எதிரியின் நஞ்சைப் போக்குவது மாத்திரமல்ல. நமது சொந்த அழுக்கைக் கூட (விடுதலைப் போராளிகளின் அழுக்கைக் கூட) சுத்திகரிக்கிறது.’

3) “நீதியான ஒவ்வொரு புரட்சி யுத்தத்துக்கும் பிரம்மாண்டமான ஆற்றல் உண்டு. அது பல பொருட்களை மாற்றக் கூடியது. பாதையைத் திறக்கக் கூடியது (மாவோ)”  (மாவோவை இதைவிடக் கேடாகப் பயன்படுத்த முடியுமா!-பு.ஜ.) ஈழத் தமிழரின் இந்திய ஆக்கிரமிப்பாளரை எதிர்த்த யுத்தம் ஈழம், இலங்கை, இந்தியா ஆகிய மூன்று நாடுகளையும் மாற்றக் கூடியது. விடுதலைப் புலிகள், (இந்திய மேலாதிக்கத்தை எதிர்த்த யுத்தத்திலும் ஐக்கிய முன்னணியிலும் அழுத்தமாக நின்றால் பழைய இந்தியா, புதிய இந்தியாவாக மாறுவதும், பழைய இலங்கை  புதிய இலங்கையாக மாறுவதும், ஒடுக்கப்பட்ட ஈழத் தமிழ் தேசிய இனம் ஒரு விடுதலை பெற்ற இனமாக மாறுவதும் சாத்தியமானதே.

‘‘ஆகையால் விடுதலைப் புலிகள் ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் ஊன்றி நிற்கும் வரை, அவர்களை ஒடுக்குமுறை யுத்தத்தை நடத்துபவர்களுடன் சமப்படுத்திப் பார்க்காமல் தேசிய ஒடுக்குமுறையை எதிர்த்த போராட்டத்தில் அவர்களுடன் ஒற்றுமையையும் அவர்களின் ஜனநாயக மறுப்பு மற்றும் எதேச்சதிகாரப் போக்குகளை எதிர்த்த போராட்டமும்தான் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் அணுகுமுறையாக இருக்க வேண்டும். தேசிய இன ஒடுக்குமுறையை எதிர்த்த போராட்டத்தில் அவர்களுடன் ஒரு குறிப்பான திட்டத்தின் அடிப்படையில் ஐக்கிய முன்னணியைக் கட்டுவதைப் பாட்டாளி வர்க்கம் தனது செயல் தந்திரமாகக் கொள்ள வேண்டும்.” என்கிறது சமரன் குழு.

இங்கே புலிகளுடன் ஐக்கியமும் போராட்டமும் என்ற அணுகுமுறையைப் பாட்டாளி வர்க்கம் மேற்கொள்ள வேண்டும் என அறைகூவல் விடும் சமரன் குழு அதே கட்டுரையின் அடுத்த ஐந்தாம் பக்கம் தொடங்கிப் பின்வருமாறு எழுதுகிறது:

“ஈழத் தமிழினம் தேசிய இன விடுதலை யுத்தத்தில் ஊன்றி நிற்பதிலுள்ள பிரச்சினை, விடுதலைப் புலிகள் அமைப்பு மட்டுமே யுத்தத்தைத் தனியாக நடத்துகின்றது. இதுவே அதன் பலமும் பலவீனமும் ஆகும்.”

அதற்குக்காரணம், “பிற அமைப்புகள் மக்களிடமிருந்து தனிமைப்பட்டுச் சிதறுண்டு போய் விட்டன. இதன் காரணமாக விடுதலைப் புலிகள் தனித்து நின்று போரிடுவது ஈழத் தமிழின விடுதலை யுத்தத்தில் ஊன்றி நிற்பதற்குச் சாதகமானதே தவிர, பாதகமானதல்ல. விடுதலைப் புலிகள் அமைப்பு தனித்து நின்று போரிடுவதற்கு மற்றொரு காரணம் அவ்வமைப்பின் ஜனநாயக மறுப்பு மற்றும் எதேச்சதிகாரப் போக்கும், அதன் ஒரு படையின் ஆட்சி அல்லது அனைத்து அதிகாரத்தையும் தனது ஏகபோகமாக்கிக் கொள்வது என்ற பாசிசக் கொள்கையும் ஆகும்.”

‘‘இதன் விளைவாகவே இன்றைய விடுதலைப் போரில் பங்காற்ற வேண்டிய புரட்சிகரச் சக்திகளும் ஜனநாயகவாதிகளும் இதில் பங்குகொள்ள முடியாமல் தடுக்கப்பட்டுள்ளனர். பரந்துபட்ட மக்களும் கூட ஜனநாயக மறுப்பின் காரணமாக (அமைப்பு ரீதியாகத் திரண்டு தங்களின் விடுதலைக்குப் போராட முடியாமல்) அமைப்பு ரீதியாகத் திரட்டப்பட்டு அவ்வமைப்புகளின் பலத்தைச் சார்ந்து போரிடுவதற்கு வாய்ப்பு மறுக்கப்படுவதால் தங்களின் விடுதலைக்காகப் போரிட முடியாமல் வெறும் பார்வையாளர் நிலையில் வைக்கப்படுகின்றனர். எந்தவொரு தேசிய விடுதலை யுத்தமும் ஒரு மக்கள் யுத்தமாகும்.(!). எனவே இக்கொள்கை ஈழத்  தமிழினம் தேசிய இன யுத்தத்தில் ஊன்றி நிற்பதற்குப் பாதகமான ஒன்றாகவும் சமரசத்திற்குப் பணிந்து போவதற்கு வாய்ப்பை உருவாக்கும் ஒன்றாகவும் இருக்கிறது.

‘‘இதைப் போலவே இலங்கை அரசின் பாசிச ஒடுக்குமுறையால் அவதியுறும் மலைவாழ் மக்களையும் (மலையகத் தமிழர்கள்) சிங்களத் தேசிய இனத்தின் உழைக்கும் மக்களையும் அவ்வரசை எதிர்த்த போராட்டத்தில் ஒன்றுதிரட்டுவதற்கும் அக்கறையற்று இருப்பதற்குக் காரணமாக உள்ள குறும் (குறுகிய) தேசியவாதக் கண்ணோட்டமும் அனைத்து ஜனநாயகச் சக்திகளையும் விடுதலைப் போருக்குத் தடையாக இருப்பதுடன், அவர்களை எதிரி தன்பின்னால் திரட்டிக் கொள்வதற்கான வாய்ப்பை அளிக்கின்றது.  ஆகையால், குறும் தேசியவாதமும் தேசிய விடுதலை யுத்தத்தில் ஊன்றி நிற்பதற்குத் தடையாகவும் எதிரியுடன் சமரசம் செய்துகொண்டு பணிந்து போவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது…

‘‘விடுதலைப் புலிகள் அமைப்பு நீண்டகால யுத்தத்தைக் கடைபிடிப்பது போற்றத் தகுந்ததே என்றாலும், தேசிய விடுதலைக்கான நீண்ட யுத்தம் ஒரு  புரட்சிகர யுத்தம் என்ற முறையில் அதற்கு ‘ஒரு மார்க்சிய அரசியல் மார்க்கத்தோடு “ஒரு சரியான மார்க்சிய இராணுவ மார்க்கம் தேவை” என உலகம் கண்டுள்ள புரட்சிகர யுத்தங்களின் படிப்பினையை அவ்வமைப்பு இன்றுவரை பார்க்கத் தவறுகிறது. ஆகவேதான் அவ்வமைப்பு கடைப்பிடிக்கும் நீண்டகால யுத்தமுறைக்கு முரண்பட்டதாக அது கடைப்பிடிக்கும் அரசியல் மார்க்கம் இருக்கிறது.”

‘‘எனவே(!),  ஈழத்  தமிழ் தேசிய இனத்தைச் சேர்ந்த பாட்டாளி வர்க்க இயக்கத்தினரும் ஜனநாயக சக்திகளும் பிரேமதாசா அரசின் இன ஒடுக்குமுறையை எதிர்த்து இந்நீதியான போரில் ஊக்கமாகப் பங்கு கொள்வதுடன்  விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவளிப்பதும் அவர்கள் கடமையாகும். அதே நேரத்தில், சமரசப் போக்குகளைத் தோற்கடிப்பதற்காகவும் ஈழத் தேசிய இனத்தின் அரசியல் முன்னேற்றத்துகாகவும் புலிகள் அமைப்பின் ஜனநாயக மறுப்பு மற்றும் எதேச்சதிகாரப் போக்குகளை  எதிர்த்தல், மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகப் பாடுபடுதல் போன்றவற்றிற்கு தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுவோர் அனைவருக்கும் ஆயுதம் ஏந்தும் உரிமை இருக்க வேண்டும்.” (பக்.175-177)

ஈழ விடுதலைப் புலிகள் மற்றும் பிற ஈழப் போராளிக் குழுக்கள் பற்றியும்; ஈழத்  தமிழ் தேசிய இனத்தைச் சேர்ந்த பாட்டாளி வர்க்க இயக்கத்தினரும் ஜனநாயக சக்திகளும் ஈழ விடுதலை புலிகளுடன் எத்தகைய உறவும் அணுகுமுறையும் மேற்கொள்ளக் கடமைப்பட்டவர்கள் என்றும் 1990-ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் சமரன் குழு எழுதியவற்றில் பொருத்தமான பல பகுதிகளை இங்கே எடுத்துக் காட்டியுள்ளோம். (இவை தவறாக மேற்கோள் காட்டப்பட்டிருப்பதாக அக்குழு பித்தலாட்டவாதம் செய்யக் கூடும். அதனால் சந்தேகம் கொள்ளும் வாசகர்கள் அந்நூலை முழுமையாகவே படித்தறியலாம்).

பரிசீலனையில் உள்ள மேற்படி விடயங்களில் சமரன் குழுவின் பார்வையில் ஏதாவது தர்க்க நியாயம் உள்ளதா?  மேற்படி பகுதிகளில் விடுதலைப் புலிகள் பற்றி சமரன் குழு கூறியுள்ள கருத்துக்கள் – மதிப்பீடுகளுக்கும், வந்துள்ள முடிவுகளுக்கும் ஏதாவது பொருத்தப்பாடு உள்ளதா? புலிகளின் அரசியல்  நடத்தை பற்றி ம.க.இ.க. வின் கூற்றுக்களை ஆருடங்கள் என்று சமரன் குழு கிண்டல் செய்கிறது!  ஆனால், ‘புலிகளின் யுத்தம் எதிரியின் நஞ்சைப் போக்குவது மாத்திரமல்ல, புலிகளின் அழுக்கைக் கூட சுத்திகரிக்கும்; அது ஈழம், இலங்கை, இந்தியாவைக் கூட மாற்றக் கூடியது’ என்று சமரன் குழு சொன்ன ஆருடங்கள் என்னவாயின?

‘‘புலிகளுடன் ஒரு குறிப்பான திட்டத்தின் அடிப்படையில் ஐக்கிய முன்னணியைக் கட்டுவதை பாட்டாளி வர்க்கம் தனது செயல்தந்திரமாகக் கொள்ள வேண்டும்” என்று சொன்ன  சமரன் குழு,   இத்தகைய அணுகுமுறையை தான் விடுதலைப் புலிகளுடன் மேற்கொண்டதாக” (!) அதன் அனுபவத்தை மே,2013 – இல் பின் வருமாறு குறிப்பிடுகிறது:

‘‘ஆனால், அத்தகையதொரு ஐக்கிய முன்னணியை  அமைக்க முடியாமல் போனதற்கு விடுதலைப் புலிகளின் எதேச்சதிகாரப்போக்கு ஒரு காரணம் என்றால், விடுதலைப் புலிகள் தேசிய விடுதலைக்காகப் போராடுவதை அங்கீகரித்து ஜனநாயகத்திற்காக அதனுடன் போராடுவது என்ற  ஐக்கியம், போராட்டம் என்ற  அணுகுமுறையைக் கடைப்பிடிக்காதது போன்ற புரட்சிகர ஜனநாயக சக்திகளின் ஆழ்ந்த தவறும் ஒரு காரணமாகும். அதற்காக ஈழ விடுதலைப் போர் கொடுத்துள்ள விலை மிகமிக அதிகமானது. வரலாற்றிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பும், பிற புரட்சிகர ஜனநாயக சக்திகளும், ஒரு சரியான பாடத்தைக் கற்க வேண்டும்.” (பக். xvi)

(சமரன் குழுவுக்குத்தான் என்னவொரு பெருந்தன்மை! புலிகளுடன் ஐக்கிய முன்னணி அமைக்க முடியாமல் போன ஆழ்ந்த தவறுக்குத் தண்டனையாகத் தாமும் புலிகளைப் போலவே கோடு போட்டுக் கொள்கிறார்கள்; இப்படியாக, புரட்சிகர ஜனநாயக சக்திகளின் வரிசையில் அணிவகுக்கிறார்கள்!)

பாசிச இலங்கை அரசையும் விடுதலைப் புலிகளையும் சமமாகப் பார்க்கக் கூடாது என்பது ம.க.இ.க. வுக்கு எதிராக சமரன் குழு வைக்கும் இரு விமர்சனங்களில் ஒன்று. ஆனால், பாசிசப் படுகொலைகளுக்குப் பலியான ‘புரட்சிகர ஜனநாயக சக்திகளை’ யும் அவற்றை நிகழ்த்திய விடுதலைப் புலிகளையும் இங்கே சமமாக வைக்கிறது, சமரன் குழு. இது என்ன தர்க்க நியாயமோ!

விடுதலைப் புலிகளைப் பற்றிய சமரன் குழுவின் மேற்படி கருத்துக்களை நினைவில் வைத்து கொள்ளுங்கள். அவை, ஈழத் தேசிய இனப் பிரச்சினையிலும் விடுதலைப் புலிகளைப் பற்றியும் ம.க.இ.க.-வின் நிலைப்பாடுகள் மீதான சமரன் குழுவின் விமர்சனங்களிலுள்ள ஓட்டாண்டித்தனங்களை, அவதூறுகளை, பித்தலாட்டங்களை, தொடரும் எமது அம்பலப்படுத்துதல்களைப் புரிந்து கொள்ள உதவும்.

(தொடரும்)
________________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2013
________________________________________