Monday, April 21, 2025
முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்‘டால்மியா’ முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் !

‘டால்மியா’ முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் !

-

கும்மிடிபூண்டி ‘டால்மியா’ ஆலையின் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிராக புஜதொமுவின் கண்டன ஆர்ப்பாட்டம்!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் இயங்கிவரும் டால்மியா ஆலையின் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிராக ஆலையின் முன்பாக புஜதொமு சார்பில் 29-10-13 அன்று மாலை 5 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆலையில் உள்ளூர் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தொ மு சங்க (LPF)த்தில் நான்கு பேரை கொண்டு நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.தொழிற்சங்க நிர்வாகிகள் நிர்வாகத்துடன் கூட்டு சேர்ந்து தொழிலாளர் விரோத போக்கினை செய்து வருகின்றனர். இதனை முறியடிக்கும் வகையில் பெரும்பான்மை தொழிலாளர்கள் ஒன்றிணைந்து புஜதொமு கிளை சங்கத்தை துவக்கினர். இன்று வரையில் நான்கு பேர் எண்ணிக்கை கொண்ட தொமுச வுடன் மட்டுமே நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

சங்கம் தொடங்கினால் நிர்வாகம் தான் பழி வாங்கும்! ஆனால் இங்கே தொமுசங்க நிர்வாகிகள் தொழிலாளிகள் வீடுகளுக்கு சென்று மிரட்டி வருகின்றனர். தொழிலாளி வேலைக்கு வந்தவுடன் அவரின் வீடுகளுக்கு தொமுச ரவுடிகள் சென்று, “உன் புருசன் உயிரோட இருக்குனும்னா! புஜதொமு சங்கத்திலிருந்து வெளியே வரச் சொல்லு! இல்லையினா அவ்வளவுதான்!” என்று அந்த தொழிலாளியின் மனைவிடம் ’வீரம்’ காட்டியுள்ளனர்.

ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிலைமையோ கொத்தடிமைத்தனமாக உள்ளது. குறிப்பாக வட மாநிலத் தொழிலாளர்களை பயன்படுத்தி உழைப்பை சுரண்டிவருகிறது. குறைந்தபட்ச சமூகநல பாதுகாப்பு திட்டம் கூட, கொடுக்க மறுத்து வருகிறது நிர்வாகம். இவர்களும் புஜதொமு சங்கத்தில் இணைந்து விடுவார்களோ என்று பயந்து ஒவ்வொரு தொழிலாளியிடமும்,”நீ அந்த சங்கத்தில் சேரமாட்டேன் என கடிதத்தில் கையெழுத்து போட்டுகொடு!” என மிரட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் புஜதொமு சங்கத்தினை ஒழித்துக் கட்டவேண்டும். சங்க முன்னணியாளர்களை வேலையை விட்டு அனுப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் நிர்வாகமும்,தொமுசவும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இதனை முறியடிக்கும் வகையில் பகுதியில் சுவரொட்டி ஒட்டி அம்பலப்படுத்தினோம். ஆலையின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினோம்.

திருவள்ளூர் மாவட்ட தலைவர் தோழர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தோழர் விகேந்தர் கண்டன உரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் திரளான தொழிலாளிகள் கலந்து கொண்டு விண்ணதிரும் வகையில் முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தொமுச நிர்வாகிகள் ஒளிந்து கொண்டு பார்த்தனர். உள்ளே வேலை செய்து கொண்டிருந்த நமது தொழிலாளர்கள், “நமது ஆர்ப்பாட்டத்தினை கண்டு நிர்வாகம் டென்சன் ஆகியுள்ளனர்” என்றும் “தொழிலாளிகள் தரப்பில் உற்சாகம் அடைந்ததாகவும்” தெரிவித்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் மாவட்டம்.