- இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது!
- காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தாதே!
- காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்தே இலங்கையை வெளியேற்று!
தஞ்சை பனகல் கட்டிடம் அருகில் ஆர்ப்பாட்டம்
நாள் : 2013 நவம்பர் 14
நேரம் : மாலை 6 மணிக்கு
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

காமன்வெல்த் நாடுகள் கூட்டமைப்பு என்பதே அடிமை நாடுகளின் கூட்டமைப்பாகும். அன்று இங்கிலாந்தின் கீழ் அடிமைகளாக இருந்த இந்தியா, இலங்கை உள்ளிட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட நாடுகளின் ஒன்றிணைந்த கூட்டமைப்பே காமன்வெல்த் கூட்டமைப்பாகும். இக்கூட்டமைப்பின் மாநாடு இலங்கையில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இக்கூட்டமைப்பு நாடுகள் சேர்ந்து நடத்திய காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இந்தியாவில் நடத்தப்பட்டதை நாம் அறிந்திருப்போம். அரை வயிற்றுக் கஞ்சிக்குக் கூட வக்கற்ற இந்திய நாட்டில், உழைக்கும் மக்களின் வரிப்பணம் சுமார் 75,000 கோடி ரூபாயை வாரியிறைத்து, ஊதாரித்தனமாக இதற்கு செலவிட்டதை நாம் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. காமன் வெல்த் கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கிடையே இது போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவதைப் போல வர்த்தகம், தொழில்துறை தொடர்பான மாநாடும் நடத்தப்படுவது வழக்கம். தற்போது நடைபெறவுள்ள இந்த மாநாடு இலங்கையில் நடத்தப்படுவதும், அதன் தலைவராக இரண்டு ஆண்டுகளுக்கு இராஜபக்சே நியமிக்கப்பட இருப்பதும் திட்டமிட்ட சதிச் செயலாகும்.
முள்வேலி முகாமில் அடக்குமுறைகளை தொடர்ந்து ஏவி விட்டு, போர் முடிந்த பிறகும் இராணுவ ஆக்கிரமிப்பை வாபஸ் பெறாமல், ஈழத் தமிழ் பகுதிகளை தனது இராணுவ சர்வாதிகாரத்தின் கீழ் வைத்துக் கொண்டு பெயரளவிற்கு வடக்கு மாகாணத் தேர்தலை நடத்தி ஒரு கைக்கூலி அரசு அங்கே உருவாக்கப்பட்டுள்ளது. போருக்குப் பின் உள்நாட்டில் ஜனநாயகம் பூத்துக் குலுங்குவதாக இராஜபக்சே கூறி வருகிறார். தற்போது சர்வதேச ரீதியில் தனக்கென அங்கீகாரத்தை பெற முயற்சிக்கும் குறுக்கு வழியாக, காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தி, இலங்கையில் இயற்கை வளங்களையும், மனித உழைப்பையும் பன்னாட்டு முதலாளிகளுக்கு படையல் வைப்பதன் மூலம், தனது போர்க்குற்றங்களை நீர்த்துப் போக வைக்க இராஜபக்சே மேற்கொள்ளும் சதிச்செயலே இது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஈழத்தில் தற்போது உண்மை நிலையே அகோரமாக உள்ளது. போரினால் பாதிக்கப்பத்த இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் போரின் உச்சகட்ட கொடுமையின் விளைவாக நடைப்பிணமாக வாழ்கின்றனர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெறும் பொட்டல் காடாய், சுடுகாடாய் தான் வாழ்ந்த இடத்தைப் பார்த்து பைத்தியம் பிடித்து அலைகின்றனர்.
இந்த பேரவலத்தை மறைத்து இராஜ பக்சேவுக்கு புனிதப்பட்டம் கொடுக்கத்தான் இம்மாநாடு நடத்தப்படுகிறது. மாநாட்டின் மூலம் சர்வதேச நாடுகளுடன் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். இதன் பிறகு இராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிப்பது மற்றும் சர்வதேச நீதி விசாரணைக்குட்படுத்துவது போன்ற கோரிக்கைகள் எல்லாம் செல்லாக் காசாகிப் போகும். இதை கணக்கில் கொண்டுதான் இம்மாநாட்டைப் புறக்கணிக்க கோருகிறோம்.
தமிழர்களின் உணர்வை மதித்துதான், பிரதமர் மன்மோகன் சிங் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்று பெருமையாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், தனிப்பட்ட முறையில், பிரதமர், இராஜபக்சேவுக்கு ‘மன்னிப்பு’ கடிதம் எழுதுகிறார். இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவிருக்கின்றனர். இது அயோக்கியத் தனமில்லையா? மேலும், காமன்வெல்த் என்ற அடிமை நாடுகளின் கூட்டமைப்பையே கலைக்க வேண்டும் என்பதே சரியான கோரிக்கை என்ற போதிலும், இந்தியா இம்மாநாட்டை புறக்கணிப்பதன் மூலம் இராஜபக்சேவை சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்துவதற்கான துருப்புச் சீட்டாக இதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த கோரிக்கையின் வரம்பு அவ்வளவே.
இவ்வாறு நாம் கோருவதால், போரை உடனிருந்து வழிகாட்டி இயக்கிய இந்தியாவின் தவறுகள் மறைக்கப்படுவதை நாம் அனுமதிக்க முடியாது. எனவே, இராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவித்து தூக்கிலிட வேண்டும். அவனது பங்காளியான இந்திய அரசும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். தமிழீழ பகுதிகளில் நிரந்தரமான நிறுத்தப்பட்டிருக்கும் சிங்கள இராணுவத்தை வாபஸ் பெறுவது, தமிழீழ பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்துவது, அகதிகளின் மீள் குடியேற்ற பிரச்சனை என ஒரு நீண்ட நெடிய போராட்டத்தை நாம் நடத்த வேண்டியுள்ளது. இத்தகையதொரு போராட்டத்தில் நீங்களும் கைகோர்க்க அழைக்கிறோம்.
இவண்
மக்கள் கலை இலக்கியக் கழகம் – 9443157641
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி – 9943494590
விவசாயிகள் விடுதலை முன்னணி – 7502607819, 9362704120
தஞ்சை-திருவாரூர்-நாகை மாவட்டங்கள்.