1. புதுச்சேரியில் நவம்பர்- 7 ரசிய புரட்சி தின கொண்டாட்டம்!
மனிதகுல வரலாற்றில் சிலர் சுகபோகமாக வாழ்வதற்கு ஏக பெரும்பான்மையினரின் உழைப்பைத் திருடியும், அபகரித்தும், அடக்குமுறை செலுத்தியும், அதிகாரம் செலுத்திய ”அடிமை சமுதாயம்” முதற் கொண்டு, உலகத்தின் கடைசி துரும்பில் இருந்து தாயின் கருப்பை வரை விலை பேசி மனித மாண்பு , பாசம், உணர்வு, நேர்மை என அனைத்தையும் அடித்து நொறுக்கும் இன்றைய முதலாளித்துவ சமுதாயம் வரையில், சுரண்டும் வர்க்கங்களே அதிகார பொறுப்பில் இருந்ததை முதன் முதலில் தகர்த்து அடிமைப்பட்டு கிடந்த மக்களை ஆட்சி அதிகார பீடத்தில் அமர வைத்த நாள் ரசிய புரட்சி தினம்.
இந்நாளை கொண்டாடுவதும், நமது நாட்டிலும் அப்படிப்பட்ட மாற்றத்தை கொண்டுவதற்கான பணியை விரைவாக செய்யவும் இந்நாளை கடைப்பிடித்து வருகிறோம். புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சியில் பு.ஜ.தொ.மு இணை செயலாளர் தோழர். அனந்தகுமார் தலைமையேற்றார். மாணவர்- இளைஞர்களுக்கு சமூக அக்கறை கண்ணோட்டத்தில் கவிதை, பாடல், ஓவியம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பு.ஜ.தொ.மு செ.கு உறுப்பினர் மூத்த தோழர். கருப்பையா பரிசுகள் வழங்கி கெளரவித்தார்.
இதைத் தொடர்ந்து பு.ஜ.தொ.மு மாநில அலுவலகச் செயலாளர் தோழர். லோகநாதன், “மறுகாலனியாக்க சுழலில் நாட்டின் வளங்கள், தொழிலாளர்களின் உரிமைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்படுகிறது. உழைக்கும் வர்க்கத்தின் உயிர்கள் பலியாக்கப்படுகிறது. இதை எதிர் கொள்வதற்கு புரட்சியே தீர்வு” என்று விளக்கினார்.
இறுதியாக பேசிய பு.ஜ.தொ.மு மாநில பொதுச்செயலாளர் தோழர். கலை, “புரட்சிக்கு முந்தைய ரசிய நிலைமைகளையும், புரட்சிக்கு பிந்தைய நிலமைகளையும் விளக்கி பேசி, ஜார் ஆட்சியின் கொடுங்கோன்மை, நிலச்சுவன்தார்கள் மற்றும் முதலாளித்துவம் உழைக்கும் மக்கள் மீது செலுத்திய சுரண்டல், அடக்குமுறைகள் ஆகியவற்றுக்கு முடிவு கட்டியதை போல இந்திய நாட்டில் உழைக்கும் மக்களுக்கு எதிராக இருக்கும் நிலப்பிரபுக்கள், அதிகார வர்க்க தரகு முதலாளிகள் மற்றும் ஏகாதிபத்தியம் போறோர்களை விரட்டியடித்து, நாட்டையும் மக்களையும் விடுதலை செய்ய வேண்டிய கடமை நமக்குத்தான் இருக்கிறது. மதவாதிகளுக்கோ, சாதியவாதிகளுக்கோ, இனவாதிகளுக்கோ, பாராளுமன்ற அரசியல் கட்சிகளுக்கோ அந்த தகுதி கிடையாது! ஏனேன்றால் இவர்கள் முதலாளித்துவ அரசியல் கழிசடைகள். உழைக்கு வர்க்க மக்களின் விரோதிகள். பிற்போக்குவாதிகளின் கைக்கூலிகள். இவர்களை புறக்கணித்து சமுதாயத்தை மாற்றியமைக்கும் புரட்சி பாதையில் அணிதிரள வேண்டும்.
புரட்சி எப்போது நடத்துவது? மாற்றம் எப்போதைக்கு வருவது? என்ற பரவலான விரக்தி, மன சோர்வு, அவநம்பிக்கையை தூக்கியெறிய வேண்டும்.
புதுச்சேரியில் 60, 70 வருடம் பாரம்பரியம் என்று சொல்லிக் கொள்ளுகிற கட்சிகள், தொழிற் சங்கங்கள் யாராலும் சாதிக்க முடியாதவைகளை எல்லாம் நாம் 6- ஆண்டுகளில் சாதித்து இருக்கிறோம்! தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளை நிலைநாட்டி இருக்கிறோம். மக்களின் பல கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுத்து இருக்கிறோம். முதலாளிகள் நம்மை கண்டு அஞ்சுகிறார்கள், அரசு அதிகாரிகளை மக்களுக்காக வேலை செய்ய வைக்கிறோம், இது உங்களுக்கு தெரிந்தவைகள்தான். எப்படி நடந்தது? நம்மிடம் எம்.எல்.ஏ வோ, மந்திரியோ, அரசின் அதிகார பொறுப்புகளோ, ராணுவ பலமோ ஏதும் இல்லை, ஆனாலும் மக்களின் கோரிக்கைகளை நம்மால் நிறைவேற்ற முடிக்கிறது என்றால் அதற்கு காரணம் நம்மிடமுள்ள மகத்தான பாட்டாளி வர்க்க அரசியல். இதை அடிப்படையாகக் கொண்ட மக்கள் சர்வாதிகார மக்கள் திரள் வழி போராட்டம்; இதன் மூலம் இந்த அரசை நிர்ப்பந்தித்து மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம்.
ஒரு மாநிலத்தின் வெவ்வேறு பகுதியில் உள்ள தொழிலாளர்களை ஒன்றிணைத்து இயங்கும் பு.ஜ.தொ.மு என்கிற ஒரு மக்கள் கமிட்டியால் இவ்வளவு சாதிக்க முடிகிறது என்றால். கிராமங்கள் தோறும், நகரங்கள் தோறும் மக்கள் சர்வாதிகார கமிட்டிகளை கட்டினால் என்ன நடக்கும் என்பதை யோசித்து பாருங்கள்? அரசை நிர்ப்பந்தித்த நிலை மாறி, அரசை கைப்பற்றும் நிலைவரும். இதுதான் புரட்சி. இதற்கான வேலைகளில் நாம் உறுதியாக நிற்க, இந்த புரட்சி தினத்தில் உறுதி ஏற்போம்”
என்று பேசினார்.
இறுதியாக கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் மாட்டுக் கறி உணவு வழங்கப்பட்டு, சர்வதேசிய கீதத்துடன் கூட்டம் முடிந்தது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
இவண் :
பு.ஜ.தொ.மு- புதுச்சேரி
2. கும்மிடிப்பூண்டியில் 96-வது நவம்பர் புரட்சி நாள் விழா
96-வது நவம்பர் புரட்சி தின விழா கும்முடிப்பூண்டி பகுதியில் SMV மஹாலில் நடத்தப்பட்டது. தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் தோழர். விகந்தர் தலைமை உரையாற்றினார்.
தனது தலைமை உரையில், ரஷ்ய புரட்சி நாளை நாம் உயர்த்தி பிடிக்க வேண்டிய அவசியமென்ன என்று தொடங்கி, இது தொழிலாளி வர்க்கம் அரசாள வந்த நாள், முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டிய நாள் என்றும் அத்தகைய பயங்கரவாதத்தை நாமும் நாள்தோறும் சந்தித்து வருகிறோம் அதை முறியடிக்க வேண்டியுள்ளது என்று தனது தலைமை உரையை நிறைவு செய்தார்.
இணைப்பு சங்கத் தொழிலாளிகள் இருவரின் முற்போக்கு கவிதைகள் அனைவரையும் ஈர்த்தது. முதன் முறையாக தங்களின் கவிதைக்கு அங்கீகாரம் கிடைத்த மகிழ்ச்சியில் திகைத்து நின்றனர் தோழர்கள். சிறுவர்களுக்கான நிகழ்ச்சியில், புரட்சிகர பாடல்களும், பாரதிதாசன் கவிதையும், திருக்குறளும் அச்சமின்றி மேடையில் வாசித்து காட்டி பார்வையாளர்களை அசத்தினர் சிறுவர்கள்.
பிரச்சாரக்குழுவின் ”ஆதார்” நாடகம், மின்சார அட்டை, பால் அட்டை, மருத்துவ அட்டை, என அனைத்து அட்டைகளையும் கொடுத்து சுரண்டும், ஆளும் வர்க்கத்தை ஒழித்து கட்ட பு.ஜ.தொ.மு உறுப்பினர் அட்டையை வாங்க வேண்டும் என்று வலியுருத்திய நாடகம் பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது.
அடுத்ததாக எழுச்சியுரையாற்றிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் சோவியத் ரஷ்யா எத்தகையதொரு முன்னேற்றத்தை கண்டது, தொழிலாளர்களின் ஆட்சியதிகாரத்தில், மாணவர்களுக்கு கட்டாய இலவச கல்வியும், அனைவருக்கும் வேலையும், அளித்து ஒரு மகத்தான சாதனையை செய்தது ரஷ்ய பாட்டாளி வர்க்கம். நம் நாட்டிலுள்ள முதலாளித்துவ கொடுங்கோன்மையையும் வேரறுத்து ஒரு சமூக மாற்றத்தை நிகழ்த்த வெண்டியது நம் அனைவரின் முன்னுள்ள கடமையாகும் என்றுரைத்தார்.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் மாவட்ட பிரச்சார குழு இந்து மத பயங்கரவாதத்தை திரை கிழித்தும், ரஷ்ய புரட்சி நாளை உயர்த்திப் பிடித்தும் பாடல்களை பாடினர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறுவர்களுக்கும், புதிய முயற்சி செய்த தோழர்களுக்கும், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் தோழர். சுப.தங்கராசு பரிசு கோப்பைகளை வழங்கி உற்சாகப்படுத்தினார்.
250-க்கும் மேற்ப்பட்ட தொழிலாளிகள் தம் குடும்பத்துடன் கலந்து கொண்ட இந்த விழா, தொழிலாளிகளிடமும், அவர்தம் குடும்பத்தினரிடமும் உற்சாகத்தை தந்துள்ளது. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மணலி பகுதி செயலாளர், தோழர். சொ.செல்வகுமார் நன்றியுரைக்கு பின் பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருவள்ளூர் மாவட்டம்.- 9445389536
3. நமக்கும் வேண்டும் நவம்பர் புரட்சி – பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை
96-ம் நவம்பர் புரட்சி தினத்தை உயர்த்திப் பிடிக்கும் வகையில் மக்கள் கலை இலக்கியக் கழகம், பெண்கள் விடுதலை முன்னணி, மனித உரிமைப் பாதுபாப்பு மையம் ஆகிய அமைப்புகள் இணைந்து சென்னையில் நவம்பர் 7 அன்று நடத்திய இந்நிகழ்ச்சிக்கு ம.க.இ.க. தோழர் வாசு வரவேற்புரை ஆற்றினார். சென்னை ம.க.இ.க. செயலர் தோழர் வெங்கடேசன் தலைமையில் தியாகிகளுக்கு வீர வணக்கத்துடன் கூட்டம் துவங்கியது. தனது தலைமை உரையில், நவ-7 புரட்சியின் அனுபவங்களை படிப்பினையாக எடுத்துக் கொண்டு இந்தியாவில் நாம் நடத்த வேண்டிய புரட்சியின் அவசியம் பற்றி கூறினார்.
அதைத் தொடர்ந்து பெண்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாத சமூக சூழலை, வெளிப்படுத்தினால் எப்படி இருக்கும் என்பதனை வசனம் இல்லாமல் உடல்மொழியின் மூலம் நாடகமாக நிகழ்த்திக் காட்டினர் பெ.வி.மு. தோழர்கள்.
அதே போல் ம.உ.பா.மைய தோழர்கள் நடத்திய நாடகத்தில் பள்ளிகளில் தனியார் கட்டணக் கொள்ளைக்கு நீதிமன்றமே துணை நிற்பதை அம்பலப்படுத்திக் காட்டினர். வழக்கறிஞர்களே சட்டம் அனைவருக்கும் சமம் அல்ல என்பதை நடித்துக் காட்டியது வரவேற்பைப் பெற்றது.
அடுத்ததாக கனல் மணக்கும் பூக்களாய் கவிதை பாடிய பெ.வி.மு. தோழர் செல்வி ”பெட்டிப் பாம்பல்ல பெண்ணே பெரும் புயல் நீ” என்கிற தலைப்பிலும், ”புதிய சமூகத்தையே கவிதையாய்ப் படைப்போம்” என்கிற தலைப்பில் இளம் தோழர் கவியும், ம.க.இ.க. தோழர் வாசு ”உள்ளத்தை உடலை உயிரைச் சுருக்காதே, புரட்சிக்கும் குறைவாக எதையும் ஏற்காதே” என்கிற தலைப்பிலும், ” புரட்சித் தீ இனிக்கும்” என்கிற தலைப்பில் தோழர் வெங்கடேசனும் கவிதை வாசித்தனர். தோழர்களின் கன்னி முயற்சிக்கு அரங்கமே கரவொலியால் வாழ்த்துக் கூறியது.
”சின்னப் பிள்ளைகளில் இப்படி ஒரு துடிப்பா?” இளந்தோழர்களின் போராட்ட அனுபவம் பற்றி பேட்டி கண்டனர். “அப்பொழுது சமச்சீர் கல்வி வேணுன்னு சரியான விசயத்துக்கு போராடினாக் கூட போலீஸ் நம்மளத்தான் அடிக்கிறார்கள். இவங்க நமக்கானவங்க இல்லன்னு அப்பத்தான் புரிஞ்சது. அவங்களுக்கு நாம ஏன் பயப்படணும்” என்று சொல்லி பார்வையாளர்களுக்கும் தைரியமூட்டினர்.
நிகழ்ச்சியின் இடை இடையே பெ.வி.மு., ம.க.இ.க. தோழர்கள் பாடல்கள் பாடினர். ”பாட்டாளியின் ரத்தம் படிந்து சிவந்திருக்குது எம் கொடி, நெஞ்சில் உறுதி கொண்டு நாங்கள் முன்னேறிச் செல்கிறோம்” என்கிற பாடல் வரிகளுடன் கலை நிகழ்ச்சிகள் முடிந்தன.
அடுத்ததாக உரையாற்றிய பெ.வி.மு. தோழர் அமிர்தா “புரட்சியில் பெண்கள்” என்கிற தலைப்பில் பெண்களின் பங்கு இல்லாமல் எந்த போராட்டமும், புரட்சியும் வெற்றி பெற்றதில்லை என்பதை எடுத்துரைத்தார்.
இறுதியாக சிறப்புரை ஆற்றிய தோழர் துரை.சண்முகம் ”ரசியப் புரட்சி வேண்டும் தொடர்ச்சி ” என்கிற தலைப்பில் பேச்சை துவங்கினார். “நவ-7 புரட்சி வீரம், தியாகம் பெருமைக்கு மட்டுமல்ல அழகியலுக்கும் நவ-7 தான். அழகாக தீட்டிய ரசிய புரட்சியை ரசிக்க வேண்டும். சோசலித்தில் எப்படி உயர்வாக மனிதர்கள் வாழ்ந்தனர்” என்பதை சில சம்பவங்களாக தொகுத்து பேசினார்.
“பத்திரிக்கைகளில் நவ-7 புரட்சி தினத்தை வெளியிடாதது பற்றி கூறி, இதை நாம்தான் உழைக்கும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்” என்றும் கூறினார்.
“இந்தியாவில் ஒரு புரட்சியை நடத்துவதற்கு நாம் தயாராக வேண்டும். ரசியாவிலும் போல்ஷ்விக்குகள் சிறிய அளவில் இருந்துதான் பின் புரட்சியை நடத்திக் காட்டினர், அப்படி நாமும் சாதிக்க முடியும். உழைக்கும் மக்களோடு உறவு கொள்ளாமல் புரட்சியோடு எப்படி உறவு கொள்ள முடியும். செயல்படுவோம், புரட்சியை சாதிப்போம்” என்கிற நம்பிக்கையை விதைத்து தனது உரையை முடித்தார்.
இறுதியாக ம.உ.பா.மை தோழர் சரவணன் நன்றி உரை கூறினார்.
இந்நிகழ்ச்சியில் 300 பேர் கலந்து கொண்டனர். வந்திருந்தவர்களுக்கு மாட்டுக்கறி உணவு வழங்கப்பட்டது. ”புரட்சி மகிழ்ச்சி” என்பதை வெளிப்படுத்தி கூட்டம் நிறைவுற்றது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
பெண்கள் விடுதலை முன்னணி
சென்னை
4. கோவில்பட்டியில் நவம்பர் 7 – ரசிய சோசலிச புரட்சி தெருமுனைக் கூட்டம்.
கோவில்பட்டி அருகே முருக்கலான் குளம் கிராமத்தில் விவசாயிகள் முன்னணியின் சார்பில் ரசிய சோசலிச புரட்சி கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த பகுதியில் செயல்படும் சிபிஎம், சிபிஐ கட்சியினர் கடந்த 20 ஆண்டுகளாக ஒரு முறை கூட நவம்பர் 7 விழா கொண்டாடியது இல்லை என்ற சூழலில் விவசாயிகள் விடுதலை முன்னணியின் சார்பில் விழா எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.
விவசாயிகள் விடுதலை முன்னணியின் பகுதி தலைமை தோழர் சக்தி, ரசிய புரட்சியை பற்றியும், சிபிஎம்,சிபிஐ நிலைப்பாடு பற்றியும், ஈழப் போராட்டம் பற்றியும் பேசினார். தோழர்கள் கருப்பசாமி, இன்னாசிராஜ் ஆகியோர் உழைக்கும் மக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றும் ஆயுதமேந்திய புரட்சிதான் தீர்வு என்று உரையாற்றினார்கள்.
இறுதியாக புரட்சிகர பாடல்கள் பாடப்பட்டன. கூட்டத்தின் இறுதியில் வெடி வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
தகவல் :
விவசாயிகள் விடுதலை முன்னணி,
கோவில்பட்டி