2009-ம் ஆண்டுக்கு பின் உலகம் முழுவதிலும் உள்ள பல நாடுகளில் சாதாரண மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்க மறு புறம் உலக கோடீஸ்வரர்களின் பட்டியல் இரட்டிப்பாகி உள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடி, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வங்கிகளின் பொருளாதார வீழ்ச்சி, திவாலான டெட்ராயிட் போன்ற நகரங்கள், கடும் பொருளாதார வெட்டுகள், அமெரிக்காவில் குறைக்கப்பட்ட ஏழைகளுக்கான இலவச உணவு சீட்டுகள், பொருளாதார சிக்கன நடவடிக்கையால் மக்கள் நலத் திட்டங்களுக்கு வெட்டு, விலை வாசி உயர்வு என்று உலகின் பெரும்பானமையான மக்கள் வீதிக்கு வந்து விட மறுபுறம் இந்த பொருளாதார நெருக்கடி ஏற்படுத்திய சூதாட்டம் பல புதிய கோடீஸ்வரர்களை உருவாக்கியுள்ளது. வெல்த எக்ஸ் மற்றும் யுபிஎஸின் 2013-ம் ஆண்டுக்கான சர்வே முடிவுகள் இதை தெரிவிக்கின்றன.
உலகம் முழுவதிலும் கடந்த ஆண்டு மாத்திரம் சுமார் 226 பில்லியன் டாலர் (ரூ 13.56 லட்சம் கோடி) பணம் அவர்களின் சொத்தில் புதிதாக சேர்ந்துள்ளது. 2009-ம் ஆண்டு உலகின் கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு 3.1 ட்ரில்லியன் டாலராக (ரூ 180 லட்சம் கோடி) இருந்தது, ஆனால் சமீபத்திய ஆய்வில் அது இரண்டு மடங்காகி 6.5 ட்ரில்லியன் டாலர்களாக (ரூ 390 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது.
இவர்களின் மொத்தப் பணத்தை கொண்டு அமெரிக்காவின் நிதி பற்றாக்குறையை 2024-ம் ஆண்டு வரை நிரப்ப முடியும். இவர்களின் மொத்த வருமானம், அமெரிக்கா, சீனா தவிர்த்த எந்த ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாக உள்ளது.
உலகின் பணக்காரர்கள் எந்தத் துறையில் புதிதாக இவ்வளவு அதிக பணம் ஈட்டி இருக்கிறார்கள் என்ற தகவல் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும். 17 சதவீதம் பேர் நிதி நிறுவனம் மற்றும் வங்கித் துறையில் பணத்தை ஈட்டி உள்ளார்கள். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நிதி நிறுவனங்களும் வங்கிகளும் திவாலாகியதும், அரசு அந்நிறுவனங்களுக்கு ‘பெயில் அவுட்’ என மக்கள் வரிப் பணத்தை வாரி வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
2009-ம் ஆண்டுக்கு பின் சுமார் 810 பேர் புதிய பணக்காரர்களாக இந்த அதிஉயர் குழுவில் இணைந்துள்ளனர். இப்பொழுது இந்த எண்ணிக்கை 2,170 பேர் ஆகியுள்ளது. இது 2020-ம் ஆண்டுக்குள் 3,900 பேராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் மாத்திரம் 515 பேர் பெரும் கோடீஸ்வரர்களாக உள்ளனர். சீனாவில் 157 பேரும், ஜெர்மனியில் 148 பேரும், இங்கிலாந்தில் 135 பேரும், ரஷ்யாவில் 108 பேரும் பெரும் பணக்காரர்களாக உள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள 515 பேரின் மொத்த சொத்து மதிப்பை கூட்டினால் சுமார் 2 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு வருகிறது. இந்த பணத்தை வைத்து அமெரிக்காவில் அடுத்த 100 ஆண்டுகளுக்கு ஏழைகளுக்கு இலவச உணவு சீட்டுகளை வழங்கலாம். 2013-ம் ஆண்டு அமெரிக்க அரசிடம் போதிய நிதி இல்லை என்று இந்த இலவச உணவு சீட்டுகள் வழங்கப்படுவது குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஆசியாவில் அதிகமாக புதிய கோடீஸ்வரர்கள உருவாகியுள்ளனர். குறிப்பாக சீனாவில். ஐரோப்பிய யூனியனில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை பழைய அளவை விட குறைந்துள்ளது. அமெரிக்காவில் அதே அளவு உள்ள நிலையில் பிரேசில் போன்ற லத்தின் அமெரிக்க நாடுகளில் இந்த வளர்ச்சி மெதுவாக உள்ளது.
வளர்ந்து வரும் இந்த பெரும் கோடீஸ்வரர்கள் பணத்தை பூட்டி வைப்பதில்லை. போதுமான அளவு ஆடம்பரமாகவே வாழ்கிறார்கள். இவர்கள் சராசரியாக 2.1 குழந்தைகள் பெற்றிருக்கிறார்கள். 15 சதவீதம் பேர் 4 முதல் 5 குழந்தைகளும், சிலர் 8 முதல் 9 குழந்தைகளும் பெற்றிருக்கிறார்கள். மத்திய கிழக்கு நாட்டை சேர்ந்த ஒரு பெரும் கோடீஸ்வரருக்கு 25 குழந்தைகள் உள்ளன.
இந்த பணக்காரர்கள் தங்கள் குடும்பத்துடன் ஆடம்பரமாக வாழ தனியாக கோடிகளில் பெரிய வீடுகள் வாங்குவது மட்டுமல்லாமல், குவிந்து கிடக்கும் பணத்தில் சொந்தமாக தீவு, ஆடம்பர கப்பல்கள், ஜெட் விமானங்களை வாங்கிக் களிக்கிறார்கள். கோடீஸ்வரர் ஒருவர் சராசரியாக 20 மில்லியன் டாலர் (சுமார் ரூ 120 கோடி) மதிப்புள்ள 4 வீடுகளை சொந்தமாக வைத்திருக்கிறார். பெரும்பாலான கோடீஸ்வரர்கள் நிதிமூலதன பெரு நகரங்களில் வசிக்கிறார்கள். 96 பேர் நியூ யார்க் நகரிலும், 75 பேர் ஹாங்காங்கிலும், 74 பேர் மாஸ்கோவிலும், 67 பேர் லண்டனிலும் வசிக்கிறார்கள்.

மக்கள் தொகையில் 1 சதவீதம் கூட இல்லாத இந்த கூட்டத்திடம் தான் பெரும்பான்மை பணம் குவிந்துள்ளது. அமெரிக்க வால்வீதி ஆக்கிரமிப்பு போராட்டக்காரர்கள், நாங்கள் 99 சதவீதம் , நீங்கள் 1 சதவீதம் என்று வைத்த முழக்கம் சரியானது தான். இவர்கள் ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்கள், ஆனால் 99 சதவீத மக்கள் என்ன சாப்பிட வேண்டும், என்ன பார்க்க வேண்டும்? எப்படி வாழ வேண்டும், எப்படி சாக வேண்டும் என சகலத்தையும் தீர்மானிப்பவர்கள் இவர்கள் தான்.
இந்தியாவில் 2013 ஆண்டு சர்வே படி 103 பெரும் கோடீஸ்வரர்கள் உள்ளனர். இவர்களின் மொத்த சொத்து மதிப்பின் கூட்டுத் தொகை 180 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ 10.8 லட்சம் கோடி). பல தொழில் குழுமங்கள் மற்றும் மருந்து பொருட்கள் தயாரிப்புத் துறையில் பெரும் பணம் ஈட்டப்பட்டுள்ளது.
2ஜி ஊழல் பணம் எங்கே போனது? ஸ்விஸ் வங்கியில் உள்ள பணம் எங்கே போகிறது? ஊழல் பணமெல்லாம் எங்கே குவிகிறது? கூடங்குளம் அணு உலை ஏன் வலுக்கட்டாயமாக திறக்கப் படுகிறது? யாருடைய லாபத்துக்காக? ஒடிசாவின் பாக்சைட் வளங்களின் லாபம் யாருக்கு போகிறது? சப் பிரைம் கிரைஸிஸ் என்ற பொருளாதார நெருக்கடியின் பின் சூதாடப்பட்ட எண்ணற்ற மக்களின் வங்கி வைப்புத் தொகை எங்கே போனது? மக்களின் ஓய்வுதிய வைப்பு நிதி எங்கே போனது? இனி இந்தியத் தொழிலாளர்களின் ஓய்வூதிய பணம் எங்கே போகும்? அதிக போக்குவரத்து கட்டணம், அதிக மின் கட்டணம், தண்ணீருக்கு காசு, மருத்துவம் மற்றும் கல்விக்கு காசு, விலைவாசி உயர்வு என மக்கள் மீது சுமத்தப்படும் மொத்த சுரண்டலும் எங்கே போகிறது? எங்கே போகப் போகிறது?
விடை மேலே தான் உள்ளது. அந்த வரிகளை மீண்டும் ஒரு முறை பார்க்கலாம்
“2009-ம் ஆண்டுக்கு பின் சுமார் 810 பேர் புதிய பணக்காரர்களாக இந்த அதிஉயர் குழுவில் இணைந்துள்ளனர். இப்பொழுது இந்த எண்ணிக்கை 2,170 ஆகியுள்ளது. இதுவே 2020-ம் ஆண்டுக்குள் 3,900 பேராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”
மேலும் படிக்க