இந்து மதப் புராணக் கதையான மஹாபலி சக்கரவர்த்தி வதத்தில் வாமன அவதாரத்தில் வந்த பெருமாள் எடுத்து வைத்த மூன்றாவது அடி முக்கியமானது. அந்த மூன்றாவது அடிதான் மஹாபலியின் தலையில் இறங்கியது. வங்கித் துறையைத் தனியார்மயமாக்குவதிலும் அப்படிபட்டதொரு மூன்றாவது அடியை எடுத்து வைத்திருக்கிறது, மன்மோகன் அரசு. முதல் அடியில், வங்கித் துறையில் தனியார் நுழைய அனுமதிக்கப்பட்டனர்; இரண்டாவது அடியில், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் பங்குகள் தனியாருக்கு விற்க அனுமதி அளிக்கப்பட்டது. மூன்றாவது அடியில், கார்ப்பரேட் நிறுவனங்கள் நேரடியாகவே வங்கிகளைத் திறந்து கொள்ள அனுமதி அளித்து, இதன் மூலம் வங்கிகள் தேசியமயமாக்குவதற்கு முன்பிருந்த நிலையை – வங்கித் துறையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் கோலோச்சும் நிலையை மீண்டும் உருவாக்க முனைந்திருக்கிறது, காங்கிரசு அரசு.

26 இந்தியத் தரகு முதலாளித்துவ நிறுவனங்கள் அனுமதி வேண்டி விண்ணப்பித்திருப்பதாகவும், தகுதி வாய்ந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வங்கிகளைத் திறந்துகொள்ள உரிமம் வழங்கும் உற்சவம் ஜனவரி 1, 2014 முதல் தொடங்கி விடுமென்றும் செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த 26 நிறுவனங்களுள் டாடா, பிர்லா, எல் அண்ட் டி, ரிலையன்ஸ், டி.வி.எஸ். ஆகிய தொழில் குடும்பங்கள் மட்டுமின்றி, நவீனமான முறையில் கந்துவட்டித் தொழிலை நடத்தி வரும் முத்தூட் பைனான்ஸ் உள்ளிட்டுப் பல்வேறு ”பிளேடு” கம்பெனிகளும் அடங்கியுள்ளன.
நிதித்துறையில் அரசின் கட்டுப்பாட்டை முற்றிலுமாக ஒழித்துக்கட்டி விட்டு, அதனை முழுமையாகத் தனியார்மயமாக்க வேண்டும் என்று சர்வதேச நிதி நிறுவனங்களும், தர மதிப்பீட்டு நிறுவனங்களும் நெருக்கடி கொடுத்து வருகின்றன. அவர்களைத் திருப்திப்படுத்தும் நோக்கத்தோடுதான் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி வங்கித் துறையில் மூன்றாம் கட்ட தாராளமயத்தை அமலாக்க முயலுகிறது, காங்கிரசு கும்பல். இந்த உண்மையை மறைத்து விட்டு, ”வங்கிச் சேவை இன்னும் இந்திய கிராமங்களை முழுமையாகச் சென்றடையவில்லை. அதனை நிறைவு செய்யும் நோக்கத்தில்தான் வங்கித் துறையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் நுழைவதற்கு அனுமதி அளித்திருப்பதாக” நாடகமாடுகிறது, மைய அரசு. வங்கித் துறையில் கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதிப்பதால் வாடிக்கையாளர்களுக்குத் தரமான சேவை கிடைக்கும்; அத்துறையில் நவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்படும் எனப் பின்பாட்டு பாடுகிறார்கள், தனியார்மயத்தின் ஆதரவாளர்கள்.
இதே வாதத்தை முன்வைத்துதான் தனியார் வங்கிகளுக்கு அரசு அனுமதி அளித்தது. அவ்வங்கிகள் கடனை வசூலிக்க குண்டர் படையை அறிமுகம் செய்து வைத்து, தமது ‘சேவை’யை மேம்படுத்தின. ”இந்தியாவில் செயல்பட்டு வரும் 12 தனியார் வங்கிகளுக்கு நாடெங்கிலும் 15,630 கிளைகள் இருந்தாலும், இதில் 2,699 கிளைகள்தான் கிராமப்புறங்களையொட்டி அமைக்கப்பட்டிருக்கிறது” என நிதி அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு சுட்டிக் காட்டியிருக்கிறது. ”50 சதவீதத்திற்கும் மேலான தனியார் வங்கிகள் 2010-11ஆம் ஆண்டில் விவசாயத்திற்கு ஒரு பைசா கூடக் கடனாக வழங்கவில்லை; பொதுத்துறை வங்கிகள் வழங்கியிருக்கும் மொத்தக் கடனில் 30 சதவீதம் மட்டுமே விவசாயத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது” என இந்திய ரிசர்வ் வங்கி பிலாக்கணம் பாடியிருக்கிறது.
கிராமப்புற சிறு விவசாயிகளுக்கும் சிறுதொழில்களுக்கும் கடன் வழங்குவதை விட, ஆடம்பர நுகர்பொருட்களுக்கும், வீடு வாங்குவதற்கும் கடன்கள் கொடுப்பதற்குத்தான் வங்கிகள் முன்னுரிமை தருகின்றன என்பது வெளிப்படையாகத் தெரியும் நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்கள் கிராமப்பற மக்களின் நிதித் தேவையை ஈடு செய்யும் விதத்தில் தமது வங்கிகளை நடத்துவார்கள் என மைய அரசு கூறுவதை அப்பாவிகள் கூட நம்ப மாட்டார்கள்.
வங்கிகளைத் திறக்கவுள்ள கார்ப்பரேட் கும்பல் விவசாயத்திற்குக் கடன் வழங்குவதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். இவ்வங்கிகளில் போடப்படும் பணம் பாதுகாப்பாக இருக்குமா என்பதுதான் முக்கியமான கேள்வி. இந்திய நடுத்தர வர்க்கப் பிரிவு, தமது பணத்தை கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்குகளிலோ அல்லது அக்கம்பெனிகள் வெளியிடும் கடன் பத்திரங்களிலோ முதலீடு செய்வதை விட, வங்கிகளில் சேமிப்பதைத்தான் நம்பகமானதாகக் கருதுகிறது. இப்பிரிவின் இந்த மனநிலையைத் தனியார்மயத்தால் கூட மாற்ற முடியவில்லை. இந்நிலையில் அவர்களின் பணத்தைச் சேமிப்பாகப் பெற்று, அதனைப் பங்குச் சந்தைக்கு மடைமாற்றி விட கார்ப்பரேட் கும்பலுக்கு வங்கி என்ற குறுக்கு வழி திறந்து விடப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளில் கடனை வாங்கிவிட்டு ஏப்பம் விட்டதில் முன்னணியிலிருப்பது கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் என்பது அம்பலமாகி, அம்மோசடிகள் குறித்து இப்பொழுது சி.பி.ஐ. விசாரணை நடந்துவரும் வேளையில் வங்கிகளைத் திறந்துகொள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது திருடன் கையிலே பெட்டிச் சாவியைக் கொடுப்பதற்கு ஒப்பானது.
அப்படிப்பட்ட மோசடிகள் நடைபெறாத வண்ணம் தடுக்கும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டிருப்பதாகச் சமாதானம் சொல்கிறது, மைய அரசு. இதைக் கேட்கும்பொழுது கள்ளன் பெருசா, இல்லை காப்பான் பெருசா என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்டுப் பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் 7,500 கோடி ரூபாயைக் கடனாக வாங்கி, அதனைக் கட்டாமல் ஏமாற்றி வரும் விஜய் மல்லையாவைச் சட்டம் என்ன செய்து விட்டது? அதிக வட்டி தருவதாக ஆசை காட்டிப் பொதுமக்களிடமிருந்து பெற்ற சேமிப்புகளை ஏப்பம் விட்ட, தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு நிதி நிறுவன அதிபர்கள் ஆயுள் தண்டனைக் கைதியாக அடைக்கப்பட்டிருக்கிறார்களா? அல்லது, ஏமாந்தவர்களுக்கு அவர்களின் பணம்தான் முழுமையாகக் கிடைத்து விட்டதா?
பங்குச் சந்தை ஊழல், 2ஜி ஊழல், நிலக்கிரி ஊழல் எனப் பல்வேறு ஊழல்களின் ஊற்றுக்கண்ணாக இருந்துவரும் கார்ப்பரேட் கும்பல், ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கோடி ரூபா பெறுமான வரி மோசடிகளில் ஈடுபட்டு வரும் கார்ப்பரேட் கும்பல், வங்கிகளை நாணயமாக நடத்தும் என்பதற்கு ஏதேனும் உத்தரவாதமுண்டா? வங்கிகள் அரசுடமை ஆக்கப்படுவதற்கு முன்பாக, கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தி வந்த வங்கிகளில் நடந்த மோசடிகளைக் கணக்கில் கொண்டால், எப்பேர்பட்ட அபாயத்தை மீண்டும் இந்திய மக்களின் தலையில் சுமத்த காங்கிரசு கும்பல் தயாராகி வருகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
-குப்பன்
_____________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2013
_____________________________