Wednesday, April 23, 2025
முகப்புவாழ்க்கைஅனுபவம்நல்லாசிரியர்களை கண்டதில்லை - சுதாகர்

நல்லாசிரியர்களை கண்டதில்லை – சுதாகர்

-

என்னைச் செதுக்கிய ஆசிரியர்கள் – 2

ன்னால் இதுவரை இந்த தலைப்பின் கீழ் ஒரு ஆசிரியரைக் கூட இனம் காண முடியவில்லை. நானும் முயற்சி செய்யாமலில்லை ஆனால் என் முயற்சிகளும் பயனளிக்கவில்லை. என் அம்மாவும் ஒரு ஆசிரியர் எனும் பட்சத்திலும் என்னால் இந்த தலைப்பிற்கு கீழ் அவர்களை எழுத என் மனம் முன் வரவில்லை. காரணம் ஒரு வறுமையான குடும்பத்தில் இருந்து தன் குடும்பத்தின் துன்பங்களுக்கு விடை காண வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டும்,குடும்பத்தை காப்பாற்ற வேண்டும்,தனக்கு வரும் கணவனுக்கு ஒரு வேலைக்கு போகும் வரனாக அமைய வேண்டும் எனும் பெரும்பான்மையோரின் நோக்கங்களைக் கொண்டே அவரும் இயங்கினார் என்பதே காரணம்.

மாணவர்கள்
ஆசிரியர்கள் எல்லோரும் மாணவர்களைக் காட்டிலும் அறிவில் பின் தங்கியவர்களாக, இன்னும் பல படிகள் மேலேற வேண்டியவர்களாக, நடைமுறை அறியாதவர்களாக‌ எனக்கு தோன்றுகிறார்கள்

என்னைப் பொருத்த வரை என் வாழ்நாளில் இதுவரை நான் பார்த்த ஆசிரியர்கள் எல்லோரும் மாணவர்களைக் காட்டிலும் அறிவில் பின் தங்கியவர்களாக, இன்னும் பல படிகள் மேலேற வேண்டியவர்களாக, நடைமுறை அறியாதவர்களாக‌ எனக்கு தோன்றுகிறார்கள். காரணம் அவர்கள்தான் மாணவர்களை விட அதிகமாக பாடபுத்தகங்களோடு, பாட புத்தகங்களை மட்டுமே நம்பி பொழுதைக் கழிக்கிறார்கள். ஒரு சாதாரண விளக்கங்களுக்கு கூட தவறியும் நடைமுறை எடுத்துக் காட்டுகளை எடுத்துக் கொள்வதில்லை. இவர்கள் தவறியும் கற்பித்தலை விட்டு இறங்காதவர்களாக‌, கற்றல் எனும் திறனை வளர்த்துக் கொள்ள தேவை இல்லாதவர்களாக தங்களை உருவகபடுத்திக் கொள்வதில் தவறுவதும் இல்லை.

நான் எல்லா ஆசிரியர்களையும் பொதுமைப்படுத்தவில்லை. நான் இதுவரை அப்படிப்பட்ட யாரையும் சந்திக்கவில்லை.ஆசிரியர்கள் முதலில் படிக்க வேண்டும்.மாற்று சிந்தனைகளுக்கான எந்த ஒரு புத்தகத்தையும் தீண்டுவதே இல்லை. உதாரணமாக அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பின் தந்தை என்று கூட அவர்கள் மாணவர்களுக்கு சொல்லித்தருவதில்லை.அதை திட்டமிட்டு செய்வது ஒரு புறம் இருந்தாலும், அதை அறியாதவர்களாகவே நிறைய ஆசிரியர்கள் காலத்தை ஓட்டுகிறார்கள். கலிலியோ அவர்தான் தொலை நோக்கியை கண்டுபிடித்தார் அதைத் தவிர இவர்கள் அவரைப் பற்றி வேறெதுவும் வாய் கூட திறப்பதில்லை. அதன் பின் ஒளிந்திருக்கும் மதத்தின் பித்தலாட்டங்கள் பற்றியோ,அவருக்கு இழைத்த அநீதியைப் பற்றியோ வாய் திறப்பதில்லை. ஏனென்றால் இவர்களே இன்னும் சகுனம் பார்த்துதான் வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள்.

இந்தக் கல்வி முறை மாணவர்களை ஒரு புறம் சுரண்டுகிறது என்றால் அதை கற்றுத் தருகிறோம் என்று ஆசிரியர்களும் மாணவர்களின் அறிவை சுரண்டுகிறார்கள். அதுவும் இன்றைய நிலையில் ஆசிரியர்கள் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும், தன் திறமையை நிறுவனத்திற்கு நிரூபித்து அதன் வழியாக அவர்களின் வருமானத்தையோ,அல்லது பதிவியையோ உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறது. இதனால் மாணவர்களின் தேவையும், அவர்களின் நடைமுறை சிக்கல்களும் புரிந்து கொள்ளப்படாமல் புறக்கணிக்கப்படுகிறது. இந்த முதலாளித்துவ நிறுவனங்கள் இலாபத்தை மட்டுமே எதிர் நோக்கி தங்கள் தொழிலை நடத்துகின்றன.அந்த இலாபத்தின் பங்குதாரர்களாக இங்கு ஆசிரியர்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். இதனை தட்டிக் கேட்க வேண்டிய‌ நடுத்தர ஏழை மக்களிடம் நுகர்வு கலாச்சாரம் நஞ்சாக கலந்து கிடக்கிறது.

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடைமுறை வாழ்க்கையில் புதுவிதமான, மிகவும் உபயோகமான கண்டுபிடிப்புகள் அறிமுகம் செய்யப்படுகிறது. அதில் வரும் பெரும்பாலான கண்டுபிடிப்பாளர்கள் மெத்தப் படிக்காதவர்கள், கல்வியை தொடர முடியாதவர்கள், ஏழ்மையானவர்கள்தான். பிச்சையெடுத்து டெல்லிக்குசென்று சனாதிபதி விருது வாங்கியவர்களும் அதில் உண்டு. இப்படி தேவையானவற்றை புறந்தள்ளி விட்டு மாணவர்களை இந்த நடைமுறையிலிருந்து விலக்கி,அவர்களின் கண்களைக் கட்டி நகர்த்திக் கொண்டு போகும் முதலாளித்துவ கல்வி நிறுவனங்களும் அதன் அடியாட்களாய் ஆசிரியர்களும் மாறிவருவது மிகவும் வேதனைக்குரியது. அரசு ஆசிரியர்கள் வட்டிக்கு விடுவதும், ரியல் எஸ்டேட் தொழில் செய்வதும், இதர வருமானத்திற்கான பகுதி நேர வேலை தேடவும், சொந்த காரியங்களை கவனிக்கவும், குடும்ப பிரச்சனைகளை தீர்க்கவுமே பொழுது கழிகிறது. இதில் நான் பார்த்த ஆசிரியர்கள் ஆம்வே போன்ற பொருட்களை விற்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

குறிப்பாக ஆசிரியர்கள் தங்கள் அறிவுத் தேடலை துரிதப்படுத்த வேண்டும். அவர்கள் மாணவர்களுக்கு கற்பிப்பவர்களாக இருப்பதைக் காட்டிலும் வழி நடத்துபவர்களாக இருக்க வேண்டும். இந்த தலைப்பின் கீழ் எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாவதே ஒவ்வொறு ஆசிரியரின் வெற்றி. ஆனால் அதற்கு அவர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். இது அவர்களை மட்டுமே தனிமைப்படுத்தும் நோக்கம் அல்ல அவர்களின் இன்றைய நிலைக்கு காரணமான முதலாளித்துவ கல்விமுறையை ஒழிக்கவும் நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

– சுதாகர்.