- தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்!
- தாது மணல் குவாரிகளை உடனே மூடு!
- தாது மணல் கொள்ளை குறித்த ஆய்வுக்குழு அறிக்கையை உடனே வெளியிடு!
மேற்கண்ட தலைப்பில் 10.12.13 அன்று மாலை 5.30 மணிக்கு கும்முடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் தோழர்.விகந்தர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச் செயலாளர் தோழர் ம.சி.சுதேஷ்குமார் கண்டன உரையாற்றினார்.
கண்டன உரையில், “தூத்துக்குடியில் தாது மணலை கொள்ளையடித்தால் நமக்கென்ன பிரச்சனை என்று நாம் இருக்க முடியாது. கொள்ளையடிக்கப்படுவது மக்களின் பொது சொத்து, எப்படி கும்முடிப்பூண்டி பகுதி நிலத்தடி நீர் பாட்டிலில் அடைக்கப்பட்டு, அம்மா மினரல் வாட்டர் என்ற பெயரில் தூத்துக்குடியில் விற்கப்படுகிறதோ, அது போன்றதொரு கொள்ளைதான் தாது மணல் கொள்ளை. மணலில் உள்ள தாதுக்கள் பிரித்தெடுக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்படுகிறது. பல்வேறு வடிவங்களில் அதுவே திரும்ப லட்ச ரூபாய் பயன்பாட்டுள்ள மருந்தாக நமது நாட்டுக்கு வருகிறது. இப்பொது சொல்லுங்கள் இதில் நமக்கு பங்கு உள்ளதா இல்லையா?” எனக் கேள்வி எழுப்பினார். “பல்வேறு முதலாளித்துவ அடக்கு முறைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் பு.ஜ.தொ.மு இது போன்ற சமூகப் பிரச்சனைகளிலும் தலையிட்டு போராடி வருகிறது” என்பதை வைகுண்டராஜன் செல்வாக்கு மிகுந்த பகுதியில் நடத்திய பொதுக்கூட்டத்தை சுட்டிக்காட்டி பதிய வைத்தார்.
இறுதியாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மணலி பகுதி செயலாளர் தோழர்.செல்வகுமார் நன்றியுரையாற்றிய பின் நிகழ்ச்சி நிறைவுற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் பகுதி மக்களிடையே இப்படி ஒரு பெரிய கொள்ளை நடைபெற்றுள்ளது என்பதையும் இதற்கு காரணம் தனியார்மயக் கொள்கை தான் என்பது பதிவாகியுள்ளது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர்.