Tuesday, April 22, 2025
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்கழிப்பறை கட்டலைன்னா கலெக்டர் ஆபிசை திறந்து விடு !

கழிப்பறை கட்டலைன்னா கலெக்டர் ஆபிசை திறந்து விடு !

-

திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் மாணவர் விடுதியில் மாணவர்கள் மூன்று ஆண்டுகளாக திறந்த வெளியில் மலம் கழிக்கும் அவல நிலையில் இருந்து வருகின்றனர். இதை தொடர்ந்து மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும் மாவட்ட நிர்வாகம் இதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சிய நோக்குடன் இருந்து வந்தது. இதை கேட்கும் மாணவர்களிடம் எந்த பதிலும் அளிக்காமல் அதிகார வர்க்கத்துக்கே உரிய திமிருடன் அலட்சியமாக நடந்து கொண்டனர்.

விடுதியில் இந்த அவல நிலையைப் பற்றி தி.இந்து நாளிதழ் (12.12.13) கட்டுரையாக வெளியிட்டது. அதன் பிறகும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் அந்த விடுதியில் தங்கியுள்ள நமது மாணவர்கள் பு.மா.இ.மு தோழர்களிடம் தெரியப்படுத்தினர். இதனடிப்பையில் இதை இயக்கமாக எடுப்பது என முடிவு செய்யப்பட்டது. இதில் முதல் கட்டமாக சிதிலமடைந்த கழிவறைகளை சரிசெய்ய கோரி 30*40 என்ற அளவில் 100 சுவரொட்டிகள் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டது.

posterகழிவறையை கட்டித் தர மறுத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் மலம் கழிக்கும் போராட்டத்தை நடத்திடுவோம் என்ற முழக்கம் அடங்கிய சுவரொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி ஒட்டப்பட்டது. இதை பார்த்து பதறிய மாவட்ட ஆட்சியர், காலையில் விடிந்த உடனேயே மாவட்ட உதவி ஆட்சியர் முருகையா, ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர் ரவி, திருச்சி வட்டாட்சியர் ரவிச்சந்திரன், கண்டோன்மெண்ட் காவல் துறை துணை ஆணையர் கணேசன் மற்றும் கீழ்நிலை ஊழியர்கள் அடங்கிய குழுவை விடுதிக்கு அனுப்பி வைத்தார்.

விடுதிக்கு வந்த மாவட்ட உதவி ஆட்சியர் முருகையா சுவரொட்டியைப் பற்றியும், விடுதி நிலைமை பற்றியும் நிமிடத்திற்கு நிமிடம் மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரனிடம் தகவலை தெரிவித்துக் கொண்டே இருந்ததுடன் கீழ் நிலை அதிகாரிகளை விரட்டி வேலை வாங்கினார். அவர் பதட்டத்தின் மூலம் மாவட்ட ஆட்சியரின் அச்சத்தை உணர முடிந்தது.

அதிகாரிகள் குழு பரப்பரப்பாக இயங்கியதோடு மட்டுமல்லாது, மாநகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து துப்புரவுப் பணியாளர்களை வரவழைத்தனர். முதலில் பராமரிப்பில்லாமல் பழுதடைந்து இருந்த கழிவறை சுத்தம் செய்யப்பட்டது. விடுதியில் பழுதடைந்த நிலையில் இருந்த தண்ணீர் குழாய்கள் சரி செய்யும் பணித் துவங்கப்பட்டது. பிறகு விடுதியை சுற்றி மண்டியுள்ள புதர்களை அகற்றும் பணி நடைபெற்றது. புதர்களால் அபாயகரமாக காணப்பட்ட விடுதி வளாகம் தற்போதுதான் உண்மையிலேயே மாணவர் விடுதி போல் காட்சியளிக்கிறது. மேலும் இன்னும் ஒரு வார காலத்திற்குள் முழுமையாக பணிகளை நிறைவு செய்வதாக அதிகாரிகள் மாணவர்களிடம் உறுதி அளித்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

அங்கு வந்திருந்த அதிகாரிகளில் ஒருவர் நமது தோழர்களிடம் “கலெக்டர் ஆபிஸ் குள்ளயே வந்து கக்கூஸ் போவேன்னு சொன்னதுக்கப்புறம் தான் அந்த அம்மாவுக்கே புத்தி வந்திருக்கு. இது எத்தன நாளைக்குன்னு பாப்போம். ஒருவாரம் இப்படியே பரப்பரப்பா வேலை நடக்கும் அப்புறம் பழைய மாதிரிதான் திரும்பவும், நீங்க ஏதாவது போராட்டம் பண்ணாதான் நாங்க வருவோம். இதுதான் வழக்கமா நடக்கும்” என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இந்த பணிகள் நடைபெறுவதைப் பற்றி மாணவர்களிடம் பேசியபோது ‘’இது நாள் வரைக்கும், என்னலாமோ பண்ணிருக்கோம் அப்போலாம் வந்து பேச்சுவார்த்தை நடத்திட்டு போய்டுவாங்க, ஆனால் நீங்க போட்ட ஒரு போஸ்டர்ல இவ்ளோ சீக்கிரம் வேலை நடக்கும்ணு நாங்க எதிர்பார்க்கவே இல்ல! நீங்க செஞ்சதுதான் கரெக்ட்’’ என்று கூறி நமது தோழர்கள் கூடவே அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இறுதியாக மாணவர்களிடம் அமைப்பாக நின்று செயல்படும் போதுதான் நமது வெற்றியை சாத்தியப்பட வைக்க முடியும் என்றும் அதிகாரிகள் வந்தது மட்டும் வெற்றியல்ல இதனைத் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்த மாணவர்கள் என்ற முறையில் ஓரணியில் நின்று செயல்பட வேண்டும். அப்போதுதான் இது போன்ற எருமைத் தோல் அதிகாரவர்க்கத்திற்கு பாடம் புகட்ட முடியும் என்று எடுத்துக் கூறப்பட்டது.

போஸ்டர்

திருச்சி காஜாமலை: அம்பேத்கர் விடுதி கல்லூரி மாணவர்கள் 3 ஆண்டுகளாக திறந்த வெளியில் மலம் கழிக்கும் அவலம்!

சுகாதாரத்தைப் பற்றி வகுப்பெடுக்கும் மாவட்ட ஆட்சியரே!

  • சிதிலமடைந்து பயன்படுத்த முடியாமலிருக்கும் விடுதி கழிவறைகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக புணரமைத்து கொடு!

விடுதி மாணவர்களே!

  • கழிவறையை கட்டித் தர மறுத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் மலம் கழிக்கும் போராட்டத்தை நடத்திடுவோம்!
  • எருமைத்தோல் அதிகாரவர்க்கத்திற்கு பாடம் புகட்டுவோம்!

அம்பேத்கர் விடுதி மாணவர்கள் மற்றும் பு.மா.இ.மு.
திருச்சி மாவட்டம் தொடர்புக்கு 9943176246

தகவல்
பு.மா.இ.மு
திருச்சி.
போன்: 9943176246