மிழகத்தில் அரசுப்பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாததாலும், போதிய அடிப்படை வசதிகள் இல்லாததாலும் கடந்த பல ஆண்டுகளாக கல்வித்தரம் வெகுவாக பாதிப்படைந்து வருகிறது. தரமான கல்வி வழங்குவதை அதிகாரிகளும் கண்காணித்து உத்திரவாதப்படுத்த தவறுகின்றனர். இதனால் பல மடங்கு கட்டணத்தில் பெற்றோர்கள் தனியார் பள்ளிகளுக்கு போக நிர்பந்திக்கப்படுகின்றனர்.

2012-2013 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம் வெளியிட்டிருக்கும் அறிக்கையின் படி தமிழகத்தில் 16 பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை. 2,253 பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர்தான். 16,421 பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். மேலும் நூறு மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையில் நான்கரை லட்சம் மாணவர்கள் கல்வி பயிலும் அவலமான சூழலில் அரசுப்பள்ளி மாணவர்கள் உள்ளனர்.

மேலும் உச்ச நீதிமன்ற உத்தரவான அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை வசதி கட்டாயம் என்ற உத்தரவு பெரும்பான்மையான பள்ளிகளில் நடைமுறைப் படுத்தப்படாமல் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. இவற்றை மக்களுக்கு பிரச்சாரம் செய்து மாற்றி அமைக்க செய்யும் விதமாக

புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி சார்பில் 21.09.13-சனியன்று விழுப்புரம், கே.கே.ரோட்டில் அமைந்துள்ள ஆனந்தா திருமண நிலையத்தில்

  • “அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்து!’, அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுடமையாக்கு!”
  • “பொதுப்பள்ளி-அருகமைப்பள்ளி முறையை அமல்படுத்து!”
  • “அனைவருக்கும் உயர்கல்விவரை தமிழ்வழியில் இலவசமாக கட்டாயமாக கல்வி வழங்கு!”

-என்ற முழக்கங்களின் அடிப்படையில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தினோம். மாணவ-இளைஞர்கள் மற்றும் ஆசிரியர்கள், கல்வியில் அக்கறை உள்ளவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பிரச்சார இயக்கத்தை நடைமுறைக்கு கொண்டு செல்லும் விதத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் குறிப்பாக விழுப்புரம் நகரம் மற்றும் விழுப்புரத்தை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில்

  • போதிய ஆசிரியர்களை நியமித்தல்
  • மாணவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர்- கழிப்பறை- ஆய்வகம்- நூலகம்- சுற்றுச்சுவர்- விளையாட்டு மைதானம் ஆகிய வசதிகளை ஏற்படுத்தி தருதல்
  • போதிய வகுப்பறைகள்
  • பள்ளி வளாகத்திற்குள் மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கட்டுமானங்களை அகற்றுதல்!

போன்ற அடிப்படை வசதிகள் கோரி கடந்த மூன்று மாத காலமாக புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி(பு.மா.இ.மு) சார்பில் “அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்து!“, “அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுடமையாக்கு!” என்ற முழக்கத்தின் அடிப்படையில் பிரச்சார இயக்கத்தை இக்கல்வியாண்டு தொடங்கி நடத்தி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக தமிழகத்தின் கல்வி மாவட்டங்களின் பட்டியலில் கிட்டத்தட்ட கடை நிலையில் இருக்கும் விழுப்புரம் மாவட்டத்தின் சில பள்ளிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை கடந்த ௦4-11-2013 அன்று கொடுத்தோம். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி

  • சாணிமேடு கிராமத்தை நானூறுக்கும் மேற்பட்ட பெற்றோர்களும், மாணவர்களும், ஊர்ப்பெரியோர்களும்…
  • எடப்பாளையம் கிராம மேனிலைப்பள்ளியில் பயிலக்கூடிய சுற்று வட்டார கிராமங்களான எடப்பாளையம், திருவாமாத்தூர், வெங்கந்தூர், ஆரியூர், சாணிமேடு, ஆசாரங்குப்பம், சோழம்பூண்டி, சோழகனூர், ஆகிய கிராமங்களை சேர்ந்த ஐநூறுக்கும் மேற்பட்ட பெற்றோர்களும் மற்றும்
  • கீழ்ப்பெரும்பாக்கம், வி.மருதூர் ஆகிய நகர்பகுதிகளை சார்ந்த எழுநூறுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் – மாணவர்கள் – பொதுமக்களிடமிருந்து

கையெழுத்து பெறப்பட்டது.

மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்ட மனுவின் விவரம் கீழ்வருமாறு…

1) அரசு உயர் நிலைப்பள்ளி –சாணிமேடு கிராமம்

2012-13 -ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பில் 1௦௦% ம், தேர்ச்சி பெற்ற சிறந்த பள்ளியான இப்பள்ளி போதிய அடிப்படை வசதி இல்லாமல் திணறுகின்றது.

இப்பள்ளி நடுநிலைப் பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளியாக பெயரளவில் தரம் உயர்த்தப்பட்டதே தவிர அதற்கான போதிய அடிப்படை வசதி இல்லை. குறிப்பாக…

  1. பள்ளி வளாகத்திற்குள் எந்த நிமிடத்திலும் இடிந்து விழும் நிலையில் தண்ணீர் தேக்கத்தொட்டி மோசமான நிலைமையில் உள்ளது. மாணவர்களும், பெற்றோர்களும் இன்னொரு கும்பகோணம் பள்ளிக் குழந்தைகள் படுகொலையாக இங்கும் நடந்து விடுமோ என்ற பயத்திலேயே பிள்ளைகளை வேறு வழியில்லாமல் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். எனவே வீண் அசம்பாவிதங்கள் அப்பள்ளியில் நடைபெரும் முன்பே உடனடியாக அந்த நீர்த்தேக்கத்தொட்டியை வேறு இடத்திற்கு மாற்றித்தரவேண்டும்.
  2. பள்ளிக்கு போதிய ஆசிரியர்கள் மற்றும் போதிய வகுப்பறைகள், ஆய்வக வசதி, கழிப்பறை வசதி, விளையாட்டு மைதானம், கட்டிட வசதி இவைகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கட்டுமானத்தை ஏற்படுத்தித் தர வேண்டும்..

2) அரசு மேனிலைப்பள்ளி –எடப்பாளையம் கிராமம்

2012-13 -ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பில் 91% மும், 12-ம் வகுப்பில் 96% தேர்ச்சி பெற்ற சிறந்த பள்ளியான இப்பள்ளி போதிய அடிப்படை வசதி இல்லாமல் திணறுகின்றது.

  1. அறையாண்டுத் தேர்வே நெருங்கி விட்ட நிலையில் மேனிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில மொழி ஆசிரியரே இல்லாமல் இந்த ஆண்டு தேர்ச்சி அடைவோமா என்ற கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர். எனவே இப்பணியிடம் உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.
  2. இப்பள்ளியில் மிகவும் அடிப்படை வசதியான கழிப்பறை வசதி இல்லை. இதனால் மாணவர்கள் கழிப்பிடதிற்க்காக வெளியே அலைவது என்ற நிலை உள்ளது. மாணவிகளுக்கு போதிய அளவில் கழிப்பறை இல்லை. அவ்வசதி உடனடியாக ஏற்படுத்தித் தரவேண்டும்.
  3. பெரிய பள்ளி வளாகத்தில் சமூக விரோத சக்திகள் யார் வேண்டுமானாலும் எந்த வகுப்பறைக்குள்ளும் நுழைந்து விடலாம் என்ற அளவில் சுற்றுச் சுவரே இல்லாமல் பாதுகாப்பற்ற சூழலில் பள்ளி உள்ளது. சுற்றுச் சுவர் உடனே கட்டித் தரப்படவேண்டும்.
  4. சுற்று வட்டார கிராமங்களில் இருந்து மாணவர்கள் எடப்பாளையம் பள்ளிக்கு வருவதற்கு போதிய பேருந்து வசதிகள் இல்லாமல் அவதிப்படுகின்றனர். பல மாணவர்கள் நடந்தே வருகின்றனர். பேருந்து போக்குவரத்துக்கான சாலையில் இருபுறம் அடர்த்தியான முட்புதர்கள் வளர்ந்து இடையூறாக உள்ளன. குண்டுங் குழியுமாய் மோசமாக பதிக்கப்பட்ட நிலைமையில் உள்ளன. இந்நிலை அவசரமாக மாற்றியமைக்கப்படவேண்டும்..

3) அரசினர் மேனிலைப்பள்ளி- கீழ்பெரும்பாக்கம், விழுப்புரம் நகரம்.

2012-13 -ம் கல்வியாண்டில் 10- வகுப்பில் 86% மும், 12- வகுப்பில் 94% தேர்ச்சி பெற்ற சிறந்த பள்ளியான இப்பள்ளி போதிய அடிப்படை வசதி இல்லாமல் திணறுகின்றது. குறிப்பாக

  1. கிட்டத்தட்ட ஆயிரம் மாணவர்கள் பயிலக்கூடிய இப்பள்ளியில் பாதிக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கட்டிட வசதி இல்லை. பெரும்பான்மை மாணவர்கள் மரத்தடியிலும், வெயிலும், கடும் சிரமத்துடன் கல்வி பயில்கின்றனர். மழைக்காலங்களில் மாணவர்கள் நிலைமை இன்னும் மோசம். இந்நிலை உடனடியாக மாற்றி அமைக்கப்படவேண்டும்.
  2. ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டுள்ளது. இவை உடனே களையப்படவேண்டும்.
  3. பள்ளிகளில் கழிப்பறை குறித்த உச்சநீதி மன்ற உத்தரவு இந்த பள்ளியில் கடுகளவு கூட அமுல்ப் படுத்தப்படவில்லை. கிட்டத்தட்ட ஆயிரம் மாணவர்களுக்குமே கழிப்பறை இல்லை. கழிப்பறைக்காக மாணவர்கள் சுவர் எகிறி குதித்து புதர்களுக்கு ஓடுகின்றனர். மாணவிகளின் நிலையோ சொல்லில் அடங்காத் துயரம்… பள்ளிக்கு வந்தால் திரும்பவும் வீட்டிற்கு சென்றால்தான் அவர்களால் இயற்கை உபாதைகளை கழிக்க முடியும். மேலும் மாத விடாய்க் காலங்களில் மாணவிகள் படும்பாடு கொடூரம்! இப்பிரச்சனையை போர்க்கால அடிப்படையில் தலையிட்டு தீர்க்கப்படவேண்டும் என கோருகிறோம்.
  4. போதிய குடிநீர் மற்றும் விளையாட்டு மைதானம் போன்ற அடிப்படை வசதிகளும் இல்லை.

எனவே கீழ்ப்பெரும்பாக்கம் மேனிலைப்பள்ளியை நவீன முறையில் அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட பள்ளியாகக் கட்டித்தர வேண்டும் என கோருகிறோம்.

4) காமராஜர் அரசினர் மேனிலைப்பள்ளி – விழுப்புரம் நகரம்.

  1. இப்பள்ளியில் வகுப்பறைகள் பற்றாக்குறை உள்ளது. மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து பயில்வது போன்ற காட்சிகள் பல பத்திரிக்கைகளிலும் செய்தியாக வந்துள்ளது. ஆனால் நிலைமை மாறவில்லை.
  2. பள்ளியில் போதிய கழிப்பறைகள் இருந்தும் அதை பராமரிக்க போதிய துப்புரவு பணியாளர் இல்லாததால் மாணவர்களை அனுமதிக்காத சூழல் உள்ளது. இதனால் அடிப்படை சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
  3. வரலாற்று சிறப்பு மிக்க விளையாட்டு மைதானத்தை பள்ளி கொண்டிருந்தாலும் அதனால் எந்த பிரயோஜனமும் பள்ளிக்கு இல்லை என்ற நிலையே தொடர்கிறது. பத்தாண்டுகளுக்கு முன் அனைத்து விளையாட்டுகளுக்கும் பயன்பட்ட விளையாட்டு மைதானம் இன்று அறிவிக்கப்படாத திறந்த வெளி பாராக, சமூக விரோதிகளின் இரவுப் புகலிடமாக மாறி உள்ளது. இப்பிரச்சனையை தீர்க்க விளையாட்டு மைதானத்தை நவீன முறையில் சீரமைத்து, சுற்றுச் சுவர் எழுப்பி, அனைத்து விளையாட்டுகளின் பயிற்சி மையமாக ஒருங்கிணைந்த வகையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும்

5) நகராட்சி உயர்நிலைப் பள்ளி – பூந்தோட்டம், விழுப்புரம் நகரம்.

இப்பள்ளி 2012-13 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் 100% -ம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

இப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் விடா முயற்சிக்கு, கடும் உழைப்பிற்கு இப்பள்ளி எடுத்துக்காட்டு. அப்படி சாதித்த பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லை. போதிய வகுப்பறைகள் இல்லாமலேயே இச்சாதனை எட்டப்பட்டுள்ளது. மேலும் விளையாட்டு மைதானம் என்ற ஒன்றே இப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தெரியாத நிலைமை உள்ளது. விளையாட்டு மைதானம் ஏற்படுத்தி தரவேண்டும்.

______________

இந்த விவரங்களை கொண்ட மனு கொடுத்தது மட்டும் இன்றி மூன்று முறை இப் பிரச்சனைகளுக்காக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது

பு.மா.இ.மு நடத்திய தொடர் இயக்கத்தின் காரணமாக விழுப்புரம் நகரத்தில் 956 மாணவர்கள் படிக்கும் கீழ்பெரும்பாக்கம் அரசு பள்ளியில் கழிப்பறைகள் மாணவிகளுக்காக கட்டப்பட்டுள்ளது. மேலும் எடப்பாளையம் மேல் நிலை பள்ளியில் இரண்டு கழிப்பறைகள் மாணவிகளுக்கு கட்டப்பட்டுள்ளது. மாணவர்களின் அடிப்படை வசதிகளுக்கும் தரமான கல்விக்கும் நடத்தும் போராட்டத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க வெற்றி மட்டுமே. அடுத்தடுத்த கோரிக்கைகளுக்கான போராட்டங்களில் பு.மா.இ.மு முனைப்புடன் ஈடுபட்டுள்ளது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இவண்

புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
விழுப்புரம். தொடர்புக்கு.99650 97801