கம்போடியாவின் ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் கடந்த டிசம்பர் 25-ம் தேதி முதல் ஊதிய உயர்வு கேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். குறைந்த பட்ச ஊதியத்தை ஏப்ரல் மாதம் முதல் 19% மட்டும் உயர்த்துவதாக (மாதம் $95 – ரூ 5,890) கம்போடிய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து இந்த வேலை நிறுத்தம் தொடங்கியது.
தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் நல அமைப்புகளின் கூட்டமைப்பு கம்போடிய ஆயத்த ஆடை தொழிலாளர்களின் குறைந்த பட்ச வாழ்க்கைக்கு மாதம் $283 (ரூ 17,546) தேவை என்று மதிப்பிட்டுள்ளது. சுமார் 500 தொழிற்சாலைகளைச் சேர்ந்த 3.5 லட்சம் ஊழியர்கள் தமது ஊதியத்தை $160 (ரூ 9,920) ஆக உயர்த்தக் கோரி போராடினர்.
“பிப்ரவரி மாதம் முதல் $100 (ரூ 6,200) வழங்குவதாகவும், அதை ஏற்றுக் கொண்டு தொழிலாளர்கள் மரியாதையாக வேலைக்குத் திரும்ப வேண்டும்” என்ற அரசின் மிரட்டலை புறக்கணித்து போராட்டம் தொடர்ந்தது. கடந்த வெள்ளிக் கிழமை (ஜனவரி 3-ம் தேதி) தலைநகர் நோம்பென்னில் வெங்ஸ்ரெங் பகுதியில் கூடியிருந்த தொழிலாளர்களை தாக்குவதற்கு ஆயுதப் படைகளை அனுப்பியது அரசு. தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 4 தொழிலாளர்களை கொன்றன அரசு படைகள். பல டஜன் தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து ஆயுதம் ஏந்திய ராணுவ வீரர்கள், எந்திர துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட ஜீப்பில் தெருக்களில் ரோந்து வருகின்றனர்.
கம்போடியாவில் செயல்படும் சுமார் 800 ஆயத்த ஆடை மற்றும் காலணி நிறுவனங்களில் வேலை செய்யும் 6 லட்சம் தொழிலாளர்களில் பெரும்பான்மையினர் பெண்கள். இந்நிறுவனங்கள் அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்கின்றன. 2013-ம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் கம்போடிய ஆயத்த ஆடைத் துறை முதலாளிகள் $5.1 பில்லியன் (ரூ 31,620 கோடி) ஏற்றுமதி வருமானம் ஈட்டினர். இது 2012-ம் ஆண்டின் முதல் 11 மாதங்களின் ஏற்றுமதி மதிப்பை விட 22% அதிகமாகும்.
வேலை நிறுத்தத்தின் காரணமாக தமக்கு பெருமளவு இழப்பு ஏற்பட்டதாக புலம்பி வந்த ஆயத்த ஆடை முதலாளிகளின் சங்கம் இந்த கொடூர அடக்குமுறையைத் தொடர்ந்து ஜனவரி 6-ம் தேதி முதல் தமது தொழிற்சாலைகள் இயங்க ஆரம்பித்து விட்டதாக மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறது. தொழிலாளர்களின் உயிர்களையும், உரிமைகளையும் நசுக்கி தமது பணம் ஈட்டும் உரிமை நிலைநாட்டிய கம்போடிய அரசை இந்த முதலாளிகள் போற்றி மகிழ்கின்றனர். ஆனால் அந்த மகிழ்ச்சி நிலையானதல்ல என்பதை கம்போடிய தொழிலாளி வர்க்கம் விரைவிலேயே நிரூபிக்கும்.
மேலும் படிக்க








படங்கள் : நன்றி RT.com