Tuesday, April 22, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கதிருச்சி அரசு விடுதி மாணவர்களை வெளியேற்றிய ஆட்சியரின் அடாவடித்தனம் !

திருச்சி அரசு விடுதி மாணவர்களை வெளியேற்றிய ஆட்சியரின் அடாவடித்தனம் !

-

டந்த டிசம்பர் 24-ம் தேதியன்று திருச்சி காஜாமலை பகுதியலுள்ள அம்பேத்கர் விடுதி மாணவர்களுக்கு கழிவறை வசதி கோரி புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் (இவர் “அம்மா”வோடு நேரடியாக தொலைபேசியில் பேசுமளவிற்கு நெருக்கமானவர்) அம்பேத்கர் விடுதி மாணவர்களுக்கு புத்தாண்டு பரிசு ஒன்றை அளித்திருந்தார். அதாவது board admission தவிர கூடுதலாக தங்கியிருக்கும் மாணவர்களை விடுதியை விட்டே விரட்டியடிப்பது என்பது தான் அது.

trichy-dr-ambedkar-hostelபெரியார் ஈ.வே.ரா கல்லூரி, அரசு கலைக் கல்லூரி, ஜமால் முஹமது கல்லூரி என சுற்றிலும் சுமார் 10,000-க்கும் அதிகமான மாணவர்கள் பயிலும் பகுதியில் இருக்கும் அரசு விடுதியோ ஒன்று மட்டுமே. அதிலும் அனுமதிக்கப்பட்ட அளவு 300 பேர் மட்டுமே. எனவே இந்த வரைமுறையின் கீழ் விடுதியில் இடம் அளிக்கப்படாத மாணவர்களும் சக மாணவர்களுடன் தங்கி படித்துக் கொண்டிருந்தனர். இப்போது,  விதிமுறைகளை காரணம் காட்டி சுமார் 150 மாணவர்களை வெளியே விரட்டி அடித்திருக்கின்றனர்.

விழுப்புரம், பெரம்பலூர் போன்ற தொலைதூரங்களில் உள்ள கிராமப்புறங்களில் இருந்து இங்கே படித்து வந்த மாணவர்கள் விடுதியை விட்டு வெளியேற்றிய பின்னர் அங்கிருந்த மண்மேடுகள், பெரியார் கல்லூரி விளையாட்டுத்திடலின் பின்புறம் மறைவாக உள்ள பகுதிகள், விளையாட்டரங்க படிக்கட்டுகளிலும் தஞ்சம் புகுந்தனர்.

விஷயம் அறிந்து தலையிட்ட பு.மா.இ.மு தோழர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். போலிஸ் மற்றும் உளவுத் துறையினர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் விடுதிக்குள் புகுந்து அடாவடியாக மாணவர்களை வெளியேற்றியதோடு, “அவர்களுக்கு ஆதரவாக போராடினால் board admission மாணவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்” என மிரட்டியதாகவும் மாணவர்கள் கூறினர்.

செய்வதறியாது திகைத்த மாணவர்களில் பலர் நடுத்தெருவில் நிற்கும் நிலையில் படிப்பை விட்டு சொந்த ஊருக்கு சென்று விட்டனர். பஸ்ஸுக்கு கூட காசில்லாதவர்கள் கலங்கி நிற்க, சிதறிய மாணவர்களை ஒன்றிணைத்து சுமார் 20 பேருடன் 02/01/2014 அன்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினோம்.

எந்த உருட்டல் மிரட்டல்களுக்கும் அஞ்சாமல் பு.மா.இ.மு தலைமையில் போராடியதால் அருகிலுள்ள பள்ளி மாணவர் விடுதி ஒன்றில் தற்காலிகமாக தங்க ஏற்பாடு செய்வதாகவும், ஊருக்கு சென்றுவிட்ட மாணவர்கள் மீண்டும் வந்த பின் 06/01/2014 அன்று மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி மீதமுள்ள மாணவர்களையும் விடுதியில் சேர்த்து கொள்ளவது பற்றி முடிவெடுக்கலாம் என்ற அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக முடித்துக் கொள்ளப்பட்டது.

06/01/2014 அன்று அம்பேத்கர் விடுதியின் அனைத்து வாயில்களும் சங்கிலியால் பூட்டு போட்டு காவலுக்கு ஆட்கள் நிறுத்தியிருந்தனர். யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. எனவே இந்த அடாவடித்தனத்தை முறியடிக்க பு.மா.இ.மு தோழர்கள் தலைமையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அத்துமீறி உள்ளே நுழைந்தனர். வார்டன் மற்றும் காவலுக்கு நின்றவர்களுடன் வாக்குவாதம்-தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

“என்ன அடாவடித்தனம் செய்றிங்களா? மிரட்டுகிறீர்களா?”என்றார் வார்டன். அதற்கு நம் தோழர்கள் “ஆமாம் மிரட்டுகிறோம், எங்கள் உரிமையை தடுக்க நீ யார்?” என சீறினர்.

வார்டன் பின்வாங்க, உள்ளே இருந்த வட்டாட்சியர் ரவி பதறிப் போய் “என்னால் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன், ஆட்சியரை சந்திக்க வேண்டுமானால் ஏற்பாடு செய்கிறேன்” என்று கூறி அழைத்துச் சென்றார்.

ஆட்சியர் அலுவலகத்திலோ, “மேடம் மீட்டிங்கில், காத்திருங்கள்” என்றனர். அலுவலக வளாகத்தில் கொட்டும் பனியில் மாணவர்கள் காத்திருக்க வெளியே வந்த மாவட்ட ஆட்சியரோ அடுத்து அமைச்சரை பார்க்க போவதாக கூறி காரில் ஏற முற்பட்டார். (பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதால் அனைத்து மாவட்டங்களிலும் விலையில்லா பொருட்கள் வழங்கும் நடவடிக்கையை முடுக்கிவிட அமைச்சர்களுக்கு ஜெ., உத்தரவிட்டுள்ளதால் அதற்காக அமைச்சர்களுடன் சந்திப்பாம்..) “அம்பேத்கர் விடுதி மாணவர்கள?” என்று முகம் சிவந்த ஆட்சியரிடம் 8 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றாதது குறித்து முறையிட்டனர் மாணவர்கள்.

“இவர்கள் என்னை கேரோ செய்து பேசிக் கொண்டிருகின்றனர், இங்கே தனியே விட்டு அங்கே எல்லாரும் என்ன செய்றிங்க” என்று ஆட்சியர் சீற பதறி வந்தனர் பிற அதிகாரிகள்.

“நீங்கள் ஏதுவாக இருந்தாலும் D R O விடம் பேசுங்கள்” என்று கூறி விட்டு காரில் ஏறி பறந்து விட்டார். D R O, தாசில்தார், டெபுடி கலெக்டர், போலிஸ் உயரதிகாரிகள், உளவுத்துறையினர் உள்ளிட்டோர் தலைமையில் பேச்சுவார்த்தை துவங்கியது.

மாணவர்களுக்கு தங்குவதற்கு விடுதி கொடுக்க வேண்டும் என்ற தங்கள் தரப்பு நியாயத்தை முன்வைத்து பேசியபின், “ஆட்சியர் தன் நடவடிக்கையில் உறுதியாக இருப்பதால் இனிமேல் செய்வதற்கு ஒன்றுமில்லை” என்றார் D R O.

கோரிக்கைகள் நிறைவேற்றிட குறிப்பான பல வழிமுறைகள் இருப்பதாக ஆதரங்களுடன் நமது தோழர்கள் சுட்டிக்காட்ட, “அதெல்லாம் கோப்புகளை பார்வையிடாமல் எதுவும் சொல்ல முடியாது” என மறுத்து விட்டார்.

வெளியேற்றப்பட்டவர்களுக்கு மாற்று ஏற்பாடு, புதிய கூடுதல் விடுதி கட்டிடம் என நாமும் தொடர்ந்து பேச பேச்சுவார்த்தை இழுபறியானது.

ஒரு கட்டத்தில் நம்மை மிரட்டும் தொனியில் காவல்துறை இணை ஆணையர் மிரட்ட, “நிர்வாகத்துடன் நாங்கள் பேசிக் கொண்டிருகிறோம். உங்களுக்கு இங்க என்ன வேலை? நீங்கள் ஏன் இதில் தலை இடுகிறீரிகள்?”என்று எதிர்த்து கேட்டோம்.

“நீங்கள் கேட்பதெல்லாம் நடக்குற காரியமா, ஆகுறத பேசுப்பா” என்று கேலி செய்யும் விதமாக அவர் பேசினார்.

“தமிழக முதல்வர் வந்தால் இரண்டே நாளில் பல கிலோமீட்டர் சாலையை உடனே உங்களால் போட முடியும போது இது மட்டும் ஏன் சாத்தியம் ஆகாது ?”என்று நாம் கேட்டது தான் தாமதம், அதிகாரிகள் போலிஸ் உட்பட அனைவரும் பதற்றமாகி, “நீங்கள் அரசியல் எல்லாம் பேசக்கூடாது” என்று தடுத்தனர்.

“நாங்கள் உரிமைகளை கேட்கிறோம்” என்று வாதிட பேச்சுவார்த்தை முறிந்து போனது.

மாணவர்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தபோது பெரும் போலிஸ் பட்டாளமே குவிக்கப்பட்டிருந்தது.

“அடுத்து என்ன செய்ய போகிறிர்கள்?” என்று உளவு பிரிவு போலிசார் நச்சரிக்க தொடங்கினர்.

“வேறென்ன போராட்டம் தான் “என்று பதிலளித்து வெளியேறினோம்.

அடுத்த சிலமணி நேரங்களில் பு.மா.இ.மு செயலரின் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போலிஸ் இன்ஸ்பெக்டர், பேச்சுவார்த்தைக்கு வந்த மாணவர்களுக்கு மட்டும் விடுதியில் தங்க ஏற்பாடு செய்து தருவதாக மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து இருப்பதாகக் கூறினார்.

நாமோ அடுத்த கட்ட போராட்டத்திற்காக திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம்.

தகவல்
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
திருச்சி – 9943176246.