Tuesday, April 22, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விசாணிமேடு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் போராட்டம்

சாணிமேடு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் போராட்டம்

-

விழுப்புரம் மாவட்ட அரசுப் பள்ளிகளின் அவலம் – புமாஇமு போராட்டம் என்ற தலைப்பில் சென்ற வாரம் வினவில் வெளியான கட்டுரையை படித்திருப்பீர்கள் !

அதன் தொடர்ச்சியாக விழுப்புரம் மாவட்டம்- கானை ஒன்றியம் –சாணிமேடு கிராமம் அரசு உயர் நிலைப்பள்ளியின் பிரச்சனை தொடர்பாக போராடி தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது.

சாணிமேடு கிராமத்தின் அரசு உயர் நிலைப்பள்ளி 2012-13 -ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பில் 1௦௦% , தேர்ச்சி பெற்ற சிறந்த பள்ளி. இப்பள்ளி போதிய அடிப்படை வசதி இல்லாமல் திணறுகின்றது.

இப்பள்ளி நடுநிலைப் பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளியாக பெயரளவில் தரம் உயர்த்தப்பட்டதே தவிர அதற்கான போதிய அடிப்படை வசதிகள் இல்லை. குறிப்பாக…

  • பள்ளி வளாகத்திற்குள் எந்த நிமிடத்திலும் இடிந்து விழும் நிலையில் தண்ணீர் தேக்கத்தொட்டி மோசமான நிலைமையில் உள்ளது. மாணவர்களும், பெற்றோர்களும் இன்னொரு கும்பகோணம் பள்ளிக் குழந்தைகள் படுகொலையாக இங்கும் நடந்து விடுமோ என்ற பயத்திலேயே பிள்ளைகளை வேறு வழியில்லாமல் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். எனவே வீண் அசம்பாவிதங்கள் அப்பள்ளியில் நடைபெறும் முன்பே உடனடியாக அந்த நீர்த்தேக்கத்தொட்டியை வேறு இடத்திற்கு மாற்றித் தர வேண்டும்.
  • பள்ளிக்கு போதிய ஆசிரியர்கள் மற்றும் போதிய வகுப்பறைகள், ஆய்வக வசதி, கழிப்பறை வசதி, விளையாட்டு மைதானம், கட்டிட வசதி இவைகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கட்டுமானத்தை ஏற்படுத்தித் தர வேண்டும்..

என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி

சாணிமேடு கிராமத்தில் உள்ள 520 பெற்றோர்கள் மற்றும் ஊர்மக்களிடம் கையெழுத்து பெற்று விழுப்புரம் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் இல்லாததால், அதிகாரிகளை அம்பலப்படுத்தி பு.மா.இ.மு சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதற்கும் திமிர் பிடித்த அதிகார வர்க்கம் அசைந்து கொடுக்காததால் எருமைத்தோல் அதிகாரிகளுக்கு உறைக்கும் வண்ணம் பள்ளியை புறக்கணிக்கும் போராட்டத்தை அறிவித்தோம்.

06.01.2014- திங்கள் அன்று பள்ளியை புறக்கணிப்பதென முடிவெடுத்து பெற்றோர்கள், மாணவர்கள், ஊர்மக்கள் அனைவரிடமும் நோக்கத்தை விளக்கி விளக்க பிரசுரத்தை பு.மா.இ.மு சார்பில் விநியோகித்தோம். சுற்று வட்டார கிராமங்களான ஆரியூர், எடப்பாளையம், பெரும்பாக்கம், சோழகனுர், வெங்கந்தூர், ஏழுசெம்பொன் ஆகிய கிராமங்களிலும் மற்றும் விழுப்புரம் நகரத்திலும் ஆதரவு கோரி விநியோகித்தோம். 1௦௦ சுவரொட்டிகளை கிராமங்கள், நகரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கல்வித்துறை அலுவலகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பரவலாக ஓட்டினோம்.

போராட்ட நாளான 06.01.2014- திங்கள் அன்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், ஊர்மக்கள் பள்ளியை புறக்கணிக்கும் போராட்டத்திற்கு காலையிலேயே திருவிழாவில் கலந்து கொள்ளும் உற்சாகத்தோடு பேரணியில் கலந்து கொண்டனர். முழக்கம் ஆரம்பித்தது.

தமிழக அரசே! தமிழக அரசே!
அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்து!,
அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுடமையாக்கு!

பள்ளியின் உள்ளே மாணவர்களின் உயிருக்கு ஆபத்தான நீர்தேக்கத்தொட்டியை உடனே அகற்று!
பள்ளிக்கு போதிய ஆசிரியர்களை நியமி!

போதிய வகுப்பறைகள், ஆய்வக வசதி, கழிப்பறை வசதி, விளையாட்டு மைதானம், இவைகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பள்ளியை கட்டிக்ககொடு!

அருகமைபள்ளி – பொதுப்பள்ளி முறையை அமுல்படுத்து!
அனைவருக்கும் உயர்கல்வி வரை தமிழ்வழியில் இலவசமாக-கட்டாயமாக வழங்கு!

விண்ணதிர முழக்கங்களை முழங்கிக்கொண்டு ஊர் முழுவதும் ஊர்வலமாக சென்றனர். அந்த முழக்கத்தின் ஓசையால் கவரப்பட்டு வயல்வெளிகளில் இருந்தும், பக்கத்துக்கு கிராமங்களில் இருந்தும் மக்கள் வந்து ஆர்வமாக கலந்து கொண்டனர். ஊர்வலம் பள்ளியை அடைவதற்குள் ‘சட்டம் ஒழுங்கின் காக்கிசட்டை நாயகர்கள்’ குவிக்கப்பட்டனர். இந்த பூச்சாண்டிகளை பற்றி நாம் ஏற்கனவே அவர்களுக்கு விளக்கி இருந்ததால் அதைப் பற்றியெல்லாம் துளி கூட கவலைப்படாத மாணவர்களும், பெற்றோர்களும், இளைஞர்களும் ஊர்வலத்தின் முடிவில் பள்ளியின் வாயிலில் திரளாக திரண்டு நின்று அரசுப்பள்ளிகளை திட்டமிட்டே நாசமாக்கும் அரசுக்கு எதிராகவும், கல்வித்துறையை கண்டித்தும் முழக்கமிட ஆரம்பித்தனர்.

ஆரம்பத்திலிருந்தே நயவஞ்சகமாக போராட்டத்தை ஒடுக்கி விடலாம் என்று மனப்பால் குடித்த காவல்துறை ஒன்றும் செய்ய முடியாமல் திணறி நின்றனர். காலை 8.30 மணிக்கு ஆரம்பித்த போராட்டம் மதியம் 1.00 மணிவரை நீடித்தது. அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வந்து நம்முடைய கோரிக்கைகளை தீர்த்தாலொழிய பள்ளிக்குள் வரமாட்டோம் என்ற கருத்தில் மாணவர்களும், பெற்றோர், இளைஞர்களும் நம்முடன் உறுதியாக களத்தில் நின்றனர்.

ஊர்மக்களின் நலனுக்கு இதுவரை ஒன்றுக்கும் பயன்படாத ஊர் பஞ்சாயத்து தலைவரையும், ஆரம்பத்தில் வந்தவுடன் தேவையில்லாமல் வாய் உதார் விட்டு நம் தோழர்களிடமும், பிறகு மக்களிடமும் வாங்கி கட்டி பல்பு வாங்கிய வருவாய்த்துறை அதிகாரியையும் மட்டும் வைத்து போலித்தனமாக, பேருக்கு பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சனையை தீர்ப்பது போல் நடித்து சலசலப்பை உண்டு பண்ணிய போலிசின் நரித்தனத்தை,  மக்களை நம்முடன் இணைத்துக் கொண்டு அதிகாரிகளின் முகத்தில் கரியை பூசினோம். நம்மை அவ்வளவு சீக்கிரத்தில் கலைத்து விடமுடியாது என்று தீர்க்கமாக உணர்ந்த பிறகு விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் மேற்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜஸ்டின்ராஜ் தலைமையில் மேலும் போலிசை குவிக்க ஆரம்பித்தனர். எந்த சலசலப்பிற்கும் அஞ்சாமல் முன்னைக் காட்டிலும் வேகமாக மாணவர்கள் முழக்கமிட ஆரம்பித்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

அதற்கு பிறகுதான் தாசில்தார், வட்டார வளர்ச்சி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி, கிராம நிர்வாகத் தலைவர் என்று அனைத்து அதிகாரிகளும் வந்து சேர்ந்தனர். ஏற்கனவே இங்குள்ள நிலையை காவல்துறை அவர்களுக்கு முன்னமே விளக்கி இருக்க வேண்டும். அவர்கள் வந்த உடனே சாக்கு போக்கு ஏதும் சொல்லாமல் பிரச்சனையை தீர்ப்பதற்கான வேலையை ஆரம்பித்தனர்.

  1. விரிவான அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய பள்ளிக்கூடத்தை வகையில் கட்டுவதற்கான இரண்டு ஏக்கர் நிலத்தை மக்களுடன் விவாதித்து அடையாளம் கண்டு, 6 முதல் 8 மாதத்திற்குள் கட்டித்தருவதாக முதல் உறுதியை அளித்தனர்.
  2. மூன்று மாதத்திற்குள் இடிந்து விழும் நிலையில் உள்ள நீர்தேக்கதொட்டியை புதிதாக கட்டிவிட்டு இதை இடித்து தள்ளுவதாக வாக்குறுதி அளித்தனர். மக்களிடம் இந்த முடிவை அறிவித்து அவர்கள் ஏற்றுக்கொண்ட பிறகு போராட்டம் வெற்றிகரமாக முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 5௦௦ மக்களுக்கு மேல் கலந்து கொண்ட இப்போராட்டத்தை ஆரம்பித்திலிருந்தே பிசிபிசுத்து போக வைக்க தன்னால் ஆன அனைத்தையும் காவல் துறையின் ஸ்பெஷல் பிராஞ்ச், கியு பிராஞ்ச் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் தீயாய் வேலை செய்து பார்த்தனர். தனித்தனியாக மக்களை பிரிக்க முயற்சி செய்து தோல்வியே கண்டனர்.

அதனால் விரக்தியின் விளிம்பிற்கே போன அவர்கள் மக்கள் எல்லோரும் கலைந்து போன பிறகு, அனைவரிடம் விடை பெற்று கிளம்பி வரும் வழியில் திருட்டுத்தனமாக நம்முடைய தோழர்களை மட்டும் கைது செய்ய முயற்சித்தனர். மக்கள் இந்த செய்தியை கேள்விப்பட்டு காட்டுத்தீ போல சம்பவ இடத்தில் திரள ஆரம்பித்ததும், காவல் துறை மிரள ஆரம்பித்தது.

குறிப்பாக பெண்கள் “எங்கள் பிள்ளைகளின் உயிருக்கும், கல்வி உரிமைக்கும் போராடிய தோழர்களை கைது செய்வதாக இருந்தால் முதலில் எங்களை கைது செய். மூன்று மாதமாக எங்கள் ஊர் பிரச்னை தீர்ப்பதற்க்கு அந்த பிள்ளைகள்தான் இரவு பகலாக மழையில் எல்லாம் நனைந்து வேலை செய்தார்கள்” என்று எதிர்ப்பு தெரிவித்து போராட ஆரம்பித்ததோடு நம்முடைய தோழர்களை பார்த்து, “நீங்கள் எங்கள் வீடுகளுக்கு செல்லுங்கள்” என்று தோழர்களை பாதுகாப்பாக அவர்கள் வீட்டில் அமர வைத்துவிட்டு உடனடியாக போனில் தகவல் தெரிவித்து அனைத்து இளைஞர்களையும் ஒன்று திரட்டி காவல் துறையின் அராஜகத்திற்கு எதிராக கேள்விகளை கேட்டு போராட ஆரம்பித்தனர்.

ஆரம்பத்தில் மக்கள் கொஞ்சம் பேர் இருக்கும்போது ஊராட்சி மன்ற துணைத்தலைவரை ஆபாசமாக பேசிய விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் குமார், மக்கள் ஏராளமாய் திரண்டு அவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் குமாரின் மற்றும் காவல்துறையின் ‘பெருமைகளை’ மக்கள் மொழியில் எடுத்து விட்டதும், விட்டால் போதும் என்று இரண்டு இன்ஸ்பெக்டர்களும் இரண்டு சுமோக்களையும், சகாக்களையும் அள்ளிக் கொண்டு பிடரியில் அடிபட்டது போல் ஓடி சேர்ந்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

பிறகு நம்மிடம் வந்த மக்கள் உற்சாகமாக “இனிமேல் எங்களுக்கு கவலை இல்லை. இனி அனைத்து பிரச்சனைகளையும் நாங்களே எதிர்த்து போராடுவோம். கேள்வி கேட்போம்” என்று  நமக்கு உணவு ஏற்பாடு செய்து, “சற்று நேரம் கழித்து செல்லுங்கள். வழியில் உங்களை கைது செய்தால் எங்களுக்கு தகவல் சொல்லுங்கள். இந்த ஊரே விழுப்புரத்தை மறித்து போராடும்” என்று ஊக்கப்படுத்தும் உற்சாக வார்த்தைகளால் வழியனுப்பி வைத்தனர்.

ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை போராட்டத்தில் நம்முடன் நின்று சுறுசுறுப்பாகவும், உற்சாகத்துடனும் முழக்கங்கள் போட்ட நம் அரசியல் பிரசாரத்தால் கவரப்பட்ட பக்கத்து ஊரை சேர்ந்த வயதான பாட்டி ஒருவர் இறுதியாக நம்மிடம் “தருமபுரி பாலனை போன்று உறுதியாக போராடினீர்கள், வாழ்த்துக்கள்! அதேசமயம் அரசையும், அதிகாரிகளையும் எதிர்க்கும் போராட்டத்தில் நம்மோடு நிறைய பெண்களையும், இளைஞர்களையும் அரசியல் உறுதியோடு இணைத்துக்கொண்டால் தான் நாம் நிறைய வெற்றியை பெறமுடியும். அதை நோக்கி நகருங்கள்!” என்று அறிவுரையோடு வாழ்த்துக்களை சொன்னார்.

“உழைக்கும் மக்களுக்கு புரட்சியாளர்கள் பாதுகாப்பு! புரட்சியாளர்களுக்கு என்றென்றும் உழைக்கும் மக்களே பாதுகாப்பு! ” என்ற வரலாற்று உண்மையை சாணிமேடு கிராம உழைக்கும் மக்களின் போராட்டம் இன்னொருமுறை அழுத்தமாக பதிவு செய்துள்ளது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இவண்

புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
விழுப்புரம். தொடர்புக்கு.99650 97801