Tuesday, April 22, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விசென்னை பல்கலையில் புமாஇமு போராட்டம் !

சென்னை பல்கலையில் புமாஇமு போராட்டம் !

-

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் செய்து தரும் வரை போராடுவோம் !

ல்லூரியில் தண்ணீர் இல்லை, கழிப்பறை இல்லை, வகுப்பறை இல்லை வாத்தியாரும் இல்லை. மாணவர்களின் சிந்தனையை மேம்படுத்த விளையாட்டுப் போட்டிகளையோ, கலாச்சார நிகழ்ச்சிகளையோ நடத்துவதில்லை. மாறாக மாணவர்களை பொறுக்கிகள் ரவுடிகளாக சித்தரிக்கிறது அரசு. இதை அம்பலப்படுத்தும் விதமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அடிப்படை வசதிகளை  செய்து தரக்கோரி மாணவர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்த திட்டமிட்டோம். ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்வந்து கையெழுத்திட்டு ஆதரவளித்தனர்.

மேற்கண்ட கோரிக்களைகளை வலியுறுத்தி சென்னைப்பல்கலை கழக துணைவேந்தரை சந்திக்கத் திட்டமிட்டோம். 08.01.2014 காலை சரியாகப் பதினோரு மணிக்கு

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி வாழ்க!

குடி நீர் இல்லை, கழிப்பறை இல்லை
வகுப்பறை இல்லை இல்லை வாத்தியாரும் இல்லை!
எங்கே போகுது? எங்கே போகுது?
மக்கள் வரிப்பணம் எங்கே போகுது!
கல்விக்கு போதிய நிதி ஒதுக்காமல்
நாடு எப்படி ஆகும் வல்லரசு?

தமிழக அரசே! தமிழக அரசே!
அரசு ……….. கல்லூரிகளில்
அரசு உதவிபெறும் கல்லூரிகளில்
அடிப்படை வசதிகளை உடனே செய்துகொடு!

என முழக்கமிட்டபடியே 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்னைப் பல்கலை கழகத்தினுள் பேரணியாக வந்தனர். “துணைவேந்தரை எல்லோரும் பார்க்க முடியாது” என்று என்று அனுமதி மறுக்கப்பட்டது. மாணவர்களோ தங்கள் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர். பின்னர் துணை வேந்தரைப் பார்க்க மாணவர்கள் சார்பில் 8 பேர் அனுமதிக்கப்பட்டனர். சுமார் 45 நிமிடங்கள் துணைவேந்தர் அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டம் நீடித்தது. துணைவேந்தர் இந்த மனு மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும் கல்லூரிக்கான கல்வித்துறை இயக்குனரை சந்திதத்து முறையிடுங்கள் என்றார்.

“அரசு அடிப்படை வசதிகளை உடனே அனைத்துக்கல்லூரிகளிலும் ஏற்படுத்தவில்லை எனில் அனைத்து கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்களை திரட்டி கல்வி கற்பதற்கான சூழலை உருவாக்குவோம்” என சென்னைக் கிளையின் புமாஇமு செயலர் தோழர் கார்த்திகேயன் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார் .

100 கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் கல்வித்துறை திட்டமிட்டு வியாபாரமாக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் தனியார் மயம்தான். அதனால்தான் அரசுப்பள்ளிகளும் கல்லூரிகளும் திட்டமிட்டு சீரழிக்கப்படுகின்றன. இதற்கு காரணமான தனியார்மயக் கொள்கையை வேரறுக்காமல் அடிப்படைக்கல்வி உரிமையை பெற முடியது. கண்டிப்பாக, அரசின் எருமை மாட்டுத்தோலுக்கு சூடு போடாமல் இனி படிக்கக்கூட முடியாது.

பல்கலைக் கழககத்திற்கு வந்த மாணவர்கள், எப்போது சிலியைப் போல கோடிக்கணக்கில் வீதிக்கு வருகிறார்களோ அன்று தான் கல்விக்கான சுதந்திரம் கிடைக்கும் என்பதுதான் உண்மை.

[படங்களைப் பெரிதாகப்  பார்க்க அவற்றின்  மீது கிளிக் செய்யவும்]

துணை வேந்தரிடம் மனு கொடுத்த பின்னர் போலீசின் அடக்குமுறைக்கு எதிராக சேப்பாக்கத்தில் உண்ணாவிரதமிருந்த ஆட்டோ ஓட்டுனர்களை வாழ்த்தச் சென்றது மாணவர் படை. மாணவர்களைக் கண்டதும் கட்டியணைத்துக் கொண்டார்கள் ஆட்டோ ஓட்டுனர்கள். “எங்களுக்காக நீங்க வந்தது ரொம்ப சந்தோசம்” என்றார்கள்.

“தெருவுக்குத்தெரு வழிப்பறிசெய்யும் திருடனான போலீசு மீது நடவடிக்கை துப்பில்லாத அரசாங்கம் உழைக்கின்ற எங்களின் மீது நடவடிக்கை எடுக்க என்ன அருகதை இருக்கிறது” என்று அரசை காறி உமிழ்ந்தார்கள், “என்னுடைய மனைவியை என்னுடைய ஆட்டோவில் அழைத்து சென்றாலும் கூட அதற்கு மீட்டர் போடு இல்லையென்றால் 2500 ரூ அபராதம் கட்டச் சொல்கிறான் போலீசு, மறுத்தால், இது உன் மனைவியே இல்லைன்னு கேஸ் போடுவேன் என்கிறான். இந்த அநியாயத்தை கேட்க யாருமே இல்லையா?” என்றார் இன்னொரு தொழிலாளி.

இறுதியாய் அவர்களிடம் சொன்னோம் “நமக்கு நடக்கும் அநியாயத்தை வேறு யாரும் தட்டிக்கேட்க மாட்டார்கள், மாணவர்களும் தொழிலாளிகளும் என்றைக்கு ஒன்றிணைந்து அடக்குமுறைக்கு எதிராகப் போராடுகிறார்களோ அன்றைக்குத்தான் நாம் நிரந்தரமாக வெற்றி பெறுவோம். அதற்குத்தான் மாணவர்கள் நாங்கள் வந்திருக்கிறோம்” என்றோம்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த இன்னொருவர் “பச்சையப்பாஸ் காலேஜில் போலீசு உள்ளே புகுந்து அடிச்சான்னா எங்க கிட்ட வந்து சொல்லுப்பா, நம்மளப் போல கஷ்டப்படுறவங்களுக்கு நாம தான் சேர்ந்து போராடணும், நாங்க வரோம்” என்றார் கண்களில் நீர் தளும்ப. அந்தக் கண்ணீரைத் துடைத்த தோழர் கூறினார் “இது அழுவதற்கான நேரமல்ல”.

[படங்களைப் பெரிதாகப்  பார்க்க அவற்றின்  மீது கிளிக் செய்யவும்]

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை